karunananthanபேராசிரியர் கருணானந்தம் விளக்குகிறார் ராகுல் சாங்கிருத்தியாயன் எழுதிய ‘வால்கா முதல் கங்கை வரை’ ஒரு வரலாற்று ஆவணமா?

‘வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலி லிருந்து வாசகர் ஒருவர் 11 கேள்விகளை கேட்டுள்ளார். அதற்கு 'குலுக்கை' யுடியூப் சேனலிற்கு,  பேராசிரியர் கருணானந்தம் அளித்த பதில்.

‘இந்த கேள்விகளைப் பார்த்தால் ஒரு முடிவிற்கு வந்துவிட்டு அந்த முடிவு சரியல்லவா?’ என்று கேட்பதைப் போல இருக்கிறது. ஆனாலும் அதை அவர் கேள்வி கேட்கும் பாணியாக எடுத்துக் கொள்கிறேன். விளக்கங்களைப் பெறுவதற்காக அப்படி கேள்வி எழுப்பியுள்ளதாக நான் கருதுகிறேன். கேள்வி கேட்டவருக்கு எனது நன்றி.

முதலில் நான் ஒன்றை விளக்கிவிட நினைக்கிறேன். நான் அடிப்படையில் ஒரு வரலாற்று ஆசிரியர். 56 ஆண்டுகள் நான் இந்தப் பணியில் இருந்து வருகிறேன். ஒரு வரலாற்று ஆசிரியருடைய நோக்கம் என்பது பழமையை புனிதப்படுத்துவது அல்ல. என்றோ நடைபெற்ற நிகழ்வுகளை நியாயப்படுத்துவது அல்ல.

யார் செய்திருந்தாலும்; எப்படி செயப்பட்டிருந்தாலும் உள்ளதை உள்ளதாக பார்ப்பதுதான் வரலாற்று ஆசிரியரின் நோக்கமாக இருக்க முடியும். கேள்விகளுக்கு எனது விளக்கங்கள் வரலாற்று ஆசிரியரின் பார்வைகள்; அவை வரலாற்றின் பக்கங்கள். யாரையும் சிறப்பிக்கிற, புனிதப்படுத்துகிற நோக்கங்கள் இல்லை.

அப்படி புனிதப்படுத்து கிறவர்கள் வரலாற்று ஆசிரியராக இருக்க முடியாது. இதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். வள்ளுவர் நமக்கு ஒரு வழியை காட்டியிருக்கிறார். ‘எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு’.

இராகுல சாங்கிருத்தியாயன் ஆனாலும் சரி, ஆர்.சி. மஜூம்தார் ஆனாலும் சரி அல்லது டி.டி. கோசாம்பியாக இருந்தாலும் ரொமிலா தாப்பராக இருந்தாலும் சரி, பெயர்களைப் பார்த்து மலைத்துப் போகிறவர்கள் அல்ல வரலாற்று ஆசிரியர்கள்.

அந்த படைப்பாளர்களை போற்றுகின்றோம். அந்த படைப்புகளையும் நாம் ஊடுருவிப் பார்க்கின்றோம். படைப்பாளிகள் மீது நமக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர்களது புலமையை பாராட்டுகின்றோம்.

அதே சமயத்தில் அவர்கள் சிறந்த புலவர்கள். உதாரணத்திற்கு இராகுல சாங்கிருத்தியாயன் சிறந்த மொழியியல் அறிஞர். சமஸ்கிருத மொழியில் மிக பாண்டித்தியம் பெற்றவர்.

சமஸ்கிருத பண்டைய தொன்மையான இலக்கியங்களை மிக ஆழமாக ஆராய்ந்தவர். அவர் வரலாற்றுப் பார்வையில் சில  நூல்களையும் எழுதியுள்ளார்.

அந்த இராகுல சாங்கிருத்தியாயன் மீது மரியாதை உண்டு. ஏனென்றால் ஆர்.சி. மஜூம்தார் போலவோ அதற்கு முன்னர் இருந்தவர்களைப் போலவோ அன்றி இந்த வேத கால ஆரியரிடமும் சில கேள்விக்குரிய நடவடிக்கை இருந்தன பன்பாட்டு முரண்பாடுகள் இருந்தன என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டவர்கள் அவர்கள்.

எனவே அவர்களை முற்போக்கு அல்லது இடதுசாரி வரலாற்று ஆசிரியர்கள் என்ற அந்தப் பட்டியலில் சேர்ப்பது உண்டு. இராகுல சாங்கிருத்தியாயன் மட்டுமல்ல, டி.டி.கோசாம்பி, ஆர்.எஸ்.சர்மா, டி.எஸ் ஜா,ரொமிலா தாப்பர் ஆகியோரும் அந்த பட்டியலில் வருகிறார்கள்.

ரொமிலா தாப்பரை விட்டுவிட்டுப் பார்த்தால் அனைவருமே பிறப்பால் இன்றைய ஜாதியக் கட்டமைப்பால் 'பிராமணர்கள்'. பிராமண அறிஞர்கள் வரலாற்று ஆய்வாளர்களாக நம்முன் வருகிறார்கள்.

அவர்கள் சுய விமர்சனம் செய்து கொள்ள தயாராக இருப்பவர்கள். டி.டி.கோசாம்பி ஆரிய நாகரிகத்தை விமர்சனம் செய்திருக்கிறார். ஆரியர்களை புனிதப்படுத்துவதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த அளவில் அவர்களது நேர்மையை நாம் பாராட்டுகிறோம்.

இராகுல சாங்கிரித்தியாயனைப் பொறுத்தவரை அவர் “பிராமணராக” இருந்தாலும் பௌத்தத்தின் மீது ஈடுபாடு கொண்டவர். பிராமணிய விழுமியங்களை அவர் கேள்விக்குள்ளாக்கியதும் உண்டு. ஆயினும் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்; மிகவும் முற்போக்கு சிந்தனை கொண்ட வரலாற்று ஆசிரியர்கள் என்று கருதப்படுகிற இவர்கள் இந்தியா ஒரு பன்முகத் தன்மை கொண்ட நாடு என்பதை மறுக்கவில்லை.

இன்னும் கூட சொல்லப்போனால் ஜவஹர்லால் நேரு கூறியதைப் போல ‘India is land of diversity’ என்பதை ஒப்புக் கொண்டவர்கள். ஒரே இந்தியா என்று அவர்கள் கூறியது கிடையாது. அந்த முறையில் இந்துத்துவவாதிகளிடமிருந்து அவர்கள் வேறுபடு கிறார்கள். பல பண்பாடு, பல நாகரிகம், பல மொழி கொண்ட ஒரு நாடாக இந்தியாவை ஏற்றுக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் அவர்களிடையே கருத்து ஒற்றுமை நமக்கும் உள்ளது. ஆனால் ஒற்றை வரியில் இந்தியா பன்முகத்தன்மை உடையது என்று கூறியவர்கள் இந்திய வரலாறுகளை படைக்கின்ற போது வைதீகப் பண்பாட்டைத் தவிர பிற பண்பாட்டிற்கு உரிய இடம் அளிக்காதது ஏன் ? என்ற கேள்வி நம்முன்னால் இருக்கிறது.

அவர்களது படைப்புகளைப் பார்க்கின்ற போது இந்திய வரலாறு என்பது வேதத்தில் துவங்கி வேதத்தின் நீட்சியாகத் தான் எழுதப்பட்டிருக்கிறது. ஏனையப் பண்பாடுகளைப் பற்றி அக்கறை எடுத்துக் கொள்ளவில்லையா அல்லது தெரியவில்லையா என்று நமக்குப்  புரிய வில்லை.  இன்னும் சொல்லப் போனால் நான் குறிப்பிட்ட இந்த ஆசிரியர்கள் அனைவருமே, தென்னகத்தின் வரலாற்றுக் கூறுகளைப் பற்றி கவலைப்படாதவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

டி.டி. கோசாம்பி தமிழ்ப்பண்பாட்டைப் பற்றி கூறவேயில்லை. தமிழ் இலக்கியங்களை அவர் கருத்தில் கொள்ளவில்லை. இதே முறையில் தான் டி.என்.ஜா போன்றவர்களும் இருக்கிறார்கள்.

ஆகவே அவர்கள் ஒற்றை வரியில் பன்முகத்தன்மையை ஏற்றுக் கொண்டவர்கள்; படைப்புகளைத் தருகின்ற போது, படைக்கின்ற இந்திய வரலாற்றுப் பண்பாடு அல்லது வரலாற்றுத் தொடர்ச்சியினை ஒற்றைப் பண்பாட்டுத் தொடர்ச்சியினைப் போலவே படைத்திருக்கிறார்கள்.

இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா அல்லது காலத்தின் கோளாறா என்பது நமக்குப் புரியவில்லை. சில தகவல்களை தெரிந்து கொண்டால் தான், கேள்வி கேட்பவரால் கேள்விக்கான விளக்கங்களை சரியான மனநிலையில் புரிந்து கொள்ள முடியும்.

ஏன் இராகுல சாங்கிருத்தியாயன்  எழுதிய புதினத்துக்கு ‘வால்காவிலிருந்து கங்கை வரை’  என்ற தலைப்பு தரப்பட்டது? ‘வால்கா’ என்பது இரஷ்யாவில் ஓடுகின்ற ஒரு நதி. அந்த நதிக்கரையில் ஒரு இனம் இருந்ததா? இல்லை.

வால்காவின் நதிக்கரையில் ஒரு இனம் இருந்ததாக வரலாற்றில் இதுவரை பதியப்படவில்லை. பிறகு ஏன் வால்கா என்ற பெயரை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள்? இது ஏறக்குறைய காலனி ஆதிக்க இந்திய வரலாற்றுத் துவக்கம் எப்படி இருந்ததோ அப்படி  இருக்கிறது.

இந்தியா விடுதலை அடைந்தபோது சோஷலிச சித்தாந்தத்தின் மீது நமக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. சோஷலிசப் புரட்சி ஏற்பட்ட சோவியத் மீது நமக்கு மிகுந்த பற்று இருந்தது. சோவியத் யூனியன், பல இக்கட்டான சூழ்நிலையில் நமக்கு துணை புரிய முன்வந்தது. ஆனால் கம்யூனிச முறையை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை.

சோஷலிசத்தை வற்புறுத்திய பண்டித நேருகூட கலப்புப் பொருளாதாரத்தைத்தான் இங்கே ஏற்றுக் கொண்டார். இங்கு, தனியார் துறை, அரசுத்துறை, பொதுத் துறை என்று  ஒரு கலப்புப் பொருளாதாரத்தைக் கொண்டு வந்தார்.

மற்றொன்று இந்த ஜனநாயக முறையை குலைத்துவிட்டு சோஷலிசத்தை பெறுவதை அவர் விரும்பவில்லை. எனவே தான் அவர் அந்த காலகட்டத்தில் ‘ஜனநாயக சோஷலிசம்’ என்ற ஒரு புதிய கருத்தை முன்வைத்தார்.

ஜனநாயக உரிமை, பாராளுமன்ற உரிமைகளை வைத்துக் கொண்டு சோஷலிச சித்தாந்தத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதே அவரது போக்காக அமைந்தது. அந்த சமயத்தில் இந்தியாவிற்கும் சோவியத் யூனியனிற்கும் நட்புறவு பெருகுகிற சூழ்நிலை இருந்தது.

அப்போது சோவியத் யூனியன்  ஒரு வல்லரசாக அதாவது அமெரிக்காவைப் போல;  இருபெரும் வல்லரசுகளில் ஒரு வல்லரசாக இருந்தது. இந்தியா அணிசேரா நாடுகளின் பட்டியலில் தலைமையில் இருந்தது.

அப்போது இந்தியா - சோவியத் நட்புறவுக் கழகம் இங்கே தொடங்கப் பட்டது. பண்பாட்டுத் தொடர்புகள் பற்றி இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கலாச்சாரக் குழுக்கள் அனுப்பப்பட்டன.

இந்த சூழ்நிலையில் பொதுவுடமைத் தத்துவத்தைப் பேசிய பெரும்பாலானோர் இயல்பாகவே “பிராமணர்” களாக  இருந்தனர். சோவியத் யூனியனிற்கு கொண்டு செல்லப்பட்ட இந்தியப் பண்பாடு மகாபாரதம், இராமாயணம், வேதம் என்பனவற்றைத் தழுவி இருந்ததை குறிப்பிட்டாக வேண்டும்.

பிரிட்டிஷ் ஆதிக்க காலத்தில், இந்தோ ஆரியர்கள், இந்தோ அய்ரோப்பியர்கள் என்று சொல்லிக் கொண்டு தொன்மையில் ஆரியர்களும் அய்ரோப்பி யர்களும் எப்படி இனத்தால் ஒரே பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டார்களோ அதேபோல 1950களில் புதிய அனுகுமுறை ஏற்பட்டது.

இரஷ்யர்களும், ஆரியர்களும், இந்தியர்களும் மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக இரஷ்யாவை மிக நெருக்கமாக காண்பிப்பதற்காக அங்கே இருந்த ஒரு வால்கா நதியை இங்கே தலைப்பாக எடுத்துக் கொள்ள வேண்டியதாகி இருந்தது.

இது  அரசியல் சூழலால் ஏற்பட்ட ஒரு நிலைமை. மற்றபடி வால்கா நதி என்பது, ஒரு பெரிய நாகரிகத்தைக் கொடுத்த  ‘நைல்’ நதி, சிந்து நதி, ஹுவாங்கோ நதியைப் போலவோ எந்த ஒரு பெரிய நாகரிகத்தையும் கொடுத்த நதி அல்ல.

ஆரியர்களின் தோற்றத்தைப் பற்றி பல ஆய்வுகள் இருக்கின்றன. சில ஆய்வுகள் அவர்கள் மத்திய ஆசியாவிலிருந்த வந்தவர்கள் என்று கூறுகிறது. வேறொரு ஆய்வு அவர்கள் உக்ரைன் பகுதியிலிருந்து வந்ததாகக் கூறுகிறது. தென் இரஷ்யாவிலிருந்து வந்ததாகவும் ஒரு ஆய்வு உள்ளது.

யூரல் மலைப் பகுதிகளிலிருந்து வந்ததாகவும் ஆய்வுகள் இருக்கின்றன. இறுதியாக ‘ஸ்காண்டிநேவியப் பகுதிகள்’ டென்மார்க், பின்லாந்து, ஆகிய துருவப்  பகுதிகளிலிருந்து வந்ததாகவும் சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆரியர்களின் தோற்றம் என்பது துருவப் பகுதியில் ஏற்ப்பட்டது என்றார் திலகர் (இவர் இந்தியாவை இந்து நாடாக்க துடித்த சித்பவன் பார்ப்பனர்).

அங்குதான் நீண்ட இரவுகளும் நீண்ட பகல்களும் ஏற்படுகின்றன. சூரியன் நான்கு அல்லது அய்ந்து மாதங்களுக்கு மறையாமல் இருக்கும். மறைந்தால் சூரியன் மீண்டும் வருவதற்கு நான்கு அல்லது அய்ந்து மாதங்கள் ஆகும். இந்த ஒரு புவியியல் அமைப்பு என்பது துருவப் பகுதியில் தான் உள்ளது. வேதங்களில் குறிப்பிடப்படுகிற நீண்ட இரவு, நீண்ட பகல் என்பது அந்தப் பகுதிகளுக்குப் பொருந்தும் என்று திலகர் கூறினார். அந்த அடிப்படையில் பார்த்தாலும் வால்காவிலிருந்து அந்த நாகரிகம் துவங்கவில்லை.

வால்காவிலிருந்து வடக்கே இருக்கின்ற ஆர்டிக் பகுதியில் துவங்கியிருக்க வேண்டும். வால்கா முதல் கங்கை வரை என்ற புத்தகம் வரலாற்று நூல் அல்ல என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சில வரலாற்றுப் புரிதல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட புதினம் அது. பல நிகழ்வுகளை (Episodes) தொகுத்து;  வரலாற்றை நீண்ட இடைவெளி விட்டு தொகுத்துக் கொடுத்த நூல் அது.

ஆரியர்களின் தோற்றம், வளர்ச்சி இறுதியில் அது இந்தியாவில் எப்படி முடிகிறது என்பதைக் கூறுகிற நூலாக அது அமைந்தது. அதை எப்படி நாம் கூறலாம்? ஏறக்குறைய ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் போல, ‘சிவகாமியின் சபதம்’ போல அல்லது ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நாடகம் ‘முத்தரா இராட்சசம்’ போல இதை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாடகம் அல்லது புதினம் எழுதப்படுகின்ற போது அதை எழுதுகிறவருக்கு சில உரிமைகள் உண்டு.

புதிய கதாபாத்திரங்களை சேர்க்க முடியும், புதிய கோணங்களை இவர்களாகவே சித்தரிக்க முடியும், புதிய சூழல்களை இவர்களின் கருத்திற்கேற்ப, நோக்கத்திற்கேற்ப இவர்களாகவே உருவாக்கிக் கொள்ள முடியும். அவையெல்லாம் வரலாற்று உண்மைகளாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய அவசியம் கிடையாது.

நாம் இந்த இராகுல சாங்கிருத்தியாயனை கதைத் தொகுப்பை எழுதிய வராகப் பார்க்கிறோம். ஆனால் நான் பார்க்கிற இராகுல சாங்கிருத்தியாயன் கதாசிரியர் அல்ல. ஒரு வரலாற்று ஆசிரியர் என்று பார்க்கிறேன். வரலாற்று முடிவுகளை எடுக்கின்ற போது வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட புத்தகங்களை எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர புதினங்களை எடுத்துக் கொள்வது வரலாற்றிற்கு ஒவ்வாமை என்பதை நான் வாசகருக்கு எடுத்துக் கூற விரும்புகிறேன்.

‘பொன்னியின் செல்வனை’ வைத்துக் கொண்டு இராஜ இராஜ சோழன் வரலாற்றைப் படைக்க முடியாது. சிவகாமியின் சபதத்தை வைத்துக்  கொண்டு நாம் பல்லவர்களின் வரலாற்றைப்

படைக்க முடியாது. இதைப்போல இராகுல சாங்கிருத்தியானின் வால்கா முதல் கங்கை என்பது ஒரு குறிப்பிட அரசியல் சூழ்நிலையில், குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்தின் அரசியல் பின்னணியில் பழைய நிகழ்வுகளில் சிலவற்றைத் தொகுத்து, சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுப்பது என்பது அவரது கருத்தியலை சார்ந்த உரிமை, அவரது சமூக பின்னணியைப்  பொறுத்தது.

சில நிகழ்வுகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை கதை வடிவில் கொடுத்துள்ளார். அந்தக் கதைகளை அப்படியே வரலாறாக எடுத்துக் கொண்டு அதன்மீது இந்தக் கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன என்பதை நான் புரிந்து கொண்டுள்ளேன்.

இனி வாசகர் எழுப்பிய கேள்விகளுக்கான விளக்கங்களைப் பார்ப்போம்.

(தொடரும்)

- பேராசிரியர் கருணானந்தம்

Pin It