farmers protest at delhi 361‘டெல்லியில் பல்லாயிரம் விவசாயிகள் திரண்டு நடத்தி வரும் போராட்டம் உலகின் கவனத்தையே ஈர்க்கத் தொடங்கியிருக்கிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஒன்றிய ஆட்சி கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று நடக்கும் இந்தப் போராட்டம், இது வரை நாடு காணாத ஒன்று என்றே கூற வேண்டும்.

பா.ஜ.க.வின் மோடி ஆட்சிக் காலம் தொடங்கியதிலிருந்து பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்காமல், உரிமையைப் பறிக்கும் சட்டங்களைத் திணித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

அந்த சட்டங்களை எதிர்ப்பே இன்றி அனைவரும் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். எதிர்ப்புக் குரல் வந்தால் ‘தேச விரோதிகள்’, ‘அரசியல் சதி’ என்று குற்றம் சாட்டி ஒடுக்குமுறை சட்டங்களை ஏவி எதிர்ப்புக் குரலை நசுக்குகிறார்கள். இப்போது விவசாயிகளிடம் இதே அணுகுமுறையைப் பின்பற்றும்போது அது பலிக்காமல் போய்விட்டது.

முதலில் விவசாயம் மாநில அரசுகளின் உரிமைப் பட்டியலில் இருக்கும் போது ஒன்றிய அரசு தலையிட்டு மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து இந்தச் சட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறது. இதைத் தட்டிக் கேட்கக் கூட துணிவில்லாத அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, சட்டத்தை வரவேற்கிறது.

முதல்வர் பழனிச்சாமி, விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் சட்டம் என்கிறார். அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான எஸ்.ஆர். பாலசுப்ரமணியம், மாநிலங்களவையில் இந்த சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். அது கட்சியின் கருத்து இல்லை என்று கூறி விட்டார்கள். சந்தையில் விவசாய உற்பத்திப் பொருள்களுக்கான குறைந்தபட்ச விலையை இந்தச் சட்டத்தில் உறுதி செய்யப்படவில்லை என்பது விவசாயிகளின் நியாயமான அச்சம்.

விவசாயி தனது உற்பத்திப் பொருளை இந்தியாவில் எந்தப் பகுதிக்கும் சென்று விற்கலாம்; விலையை அவர்களே நிர்ணயிக்கலாம்; பெரும் தொழில் நிறுவனங்கள் விவசாயப் பொருள்களை வாங்கலாம்; அதற்கான ஒப்பந்தத்தை விவசாயிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் செய்து கொள்ளலாம்; ஒப்பந்தத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் மீறினால் சட்டப்படி மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்ய உரிமை உண்டு என்றெல்லாம் இந்தச் சட்டம் கூறுகிறது.

இந்தச் சட்டப் பிரிவுகளுக்குள் நுழைந்து கொண்டு சட்டங்களுக்கு ஆதரவாக வாதாடுகிறார்கள். இதில் அடிப்படையான ஒரு கேள்வி இருக்கிறது. இந்த நாட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களும் விவசாயிகளும் சம வலிமையுள்ளவர்களாக இருக்கிறார்களா? சட்டம் வழங்கிய உரிமைகளை சமமாகப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புகள் இரு பிரிவினருக்கும் சம அளவில் இருக்கிறதா என்பதுதான் அடிப்படை கேள்வி.

கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கிகளில் வாங்கிய பல்லாயிரம் கோடி ரூபாய் கடனை அரசே முன் வந்து இரத்து செய்ய முடியும். மாணவர்கள் கல்விக்கு வாங்கிய கடன் தொகையை மத்திய தரப் பிரிவினர் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாவிட்டால், வங்கி ‘அடியாட்களை’ அனுப்பி மிரட்டும்; உடைமைகளை பறிமுதல் செய்யும்; கார்ப்பரேட் நிறுவனத்திடம் பேரம் பேசக் கூடிய வலிமையும் ஒப்பந்தத்தை மீறும்போது அவர்களை எதிர்த்து சட்டரீதியாகப் போராடும் வலிமையும் விவசாயத்தை வேறு வழியின்றி ‘கட்டி அழுது’ கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு உண்டா என்ற அடிப்படையான கேள்விக்கு ஆட்சியாளர்களிடமிருந்து பதில் இல்லை.

விவசாய விற்பனை சந்தையில் கார்ப்பரேட் நுழைந்து விட்டால் பிறகு அரசு விவசாயிகளுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் பாதுகாப்புக்கான கட்டுப்பாடுகள் படிப்படியாக தளரும், விவசாய நிலங்களே ஒரு கட்டத்தில் கார்ப்பரேட்டுகளிடம் அடகுக்கோ விற்பனைக்கோ போய் விடும் என்ற விவசாயிகளின் நியாயமான அச்சத்தை மறுக்க முடியுமா என்று கேட்கிறோம்.

விவசாயமும் சரி; விவசாயப் பொருள் விற்பனை சந்தையும் சரி; இந்தியா முழுமைக்கும் ஒரே தன்மையானது அல்ல; மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. ஆனால் ‘ஒரே நாடு; ஒரே சந்தை’ என்ற ஒற்றைத் தேச முழக்கத்தில் விவசாயத்தையும் கொண்டு வருகிறது ஒன்றிய ஆட்சி.

அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலிலிருந்து வெங்காயம், உருளைக் கிழங்கு போன்றவற்றை நீக்கியதோடு, மின்சார திருத்தச் சட்டம் வழியாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் நீக்கம் செய்யப்படும் ஆபத்துகளையும் விவசாயிகள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

குறைந்த அளவு நிலம் வைத்துள்ள விவசாயிகள் எண்ணிக்கைதான் இங்கே அதிகம். வசதி படைத்த பெருமளவில் நிலம் வைத்துள்ள விவசாயிகள் இந்த சிறு விவசாயிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும் 1970ஆம் ஆண்டு பசுமைப் புரட்சித் திட்டம் வந்த பிறகு பெரும் நில விவசாயிகள், விவசாயம் தொடர்பான தொழில்களில் முதலீடு செய்து சிறு விவசாயிகளை, தங்கள் மூலப் பொருள்களுக்கும் வேலை வாய்ப்புக்கும் பெரும் விவசாயிகளை சார்ந்து நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளியிருப்பதையும் இதன் வழியாக ஜாதியப் பாகுபாடுகள் உள்ளீடாக செயலாற்றிக் கொண்டிருப்பதையும் புதிய வேளாண் சட்டங்களில் இந்த சிறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், விவசாயக் கூலிகளின் பாதுகாப்புகளுக்கான பிரிவுகள் எதுவும் இடம் பெறாமல் இருப்பதையும் ஆங்கில ஏடுகளில் ஆய்வாளர்கள் எழுதும் பல கட்டுரைகள் சுட்டிக்காட்டி வருகின்றன.

ஒரே நாடு ஒரே கல்வி; ஒரே நாடு ஒரே மதம்; ஒரே நாடு ஒரே வரி; ஒரே நாடு ஒரே மொழி; ஒரே நாடு ஒரே ரேஷன் என்று பன்முகத் தன்மையை அழித்து ஒற்றை இந்தியாவை நோக்கி நாட்டை இழுத்துச் செல்லும் பார்ப்பனிய மதவாத அதிகார சக்திகள் இப்போது ‘ஒரே நாடு; ஒரே விவசாய சந்தை’ என்கிற திட்டத்துக்கு நகர்ந்துள்ளனர்.

நாட்டை அதிபர் ஆட்சி முறைக்குக் கொண்டு செல்வதற்காகச் சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் விவசாயிகளின் நேர்மையான இந்தப் போராட்டத்தை, விவசாயத்தையும் கடந்து பார்ப்பனிய மதவாதப் பிடிக்குள்ளிருந்து மக்கiளை விடுவிக்க

விரும்பும் ஒவ்வொரு தேசிய இனமும் ஆதரிக்கக் கடமைப்பட்டுள்ளன.

- விடுதலை இராசேந்திரன்