மாணவர் கழகக் கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை (2)

பொதுவுடைமைக் கொள்கைக்கு எதிராகவும் இனவெறிக் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கவும் உருவான கருத்தாக்கங்களே பாசிசம் -நாசிசம்-ஜியோனிசம்-பார்ப்பனியம் என்று பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் விளக்கினார்.

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் 27.09.2020 அன்று மாலை 6 மணியளவில், பெரியார் 142ஆவது பிறந்தநாள் விழா கருத்தரங்கம், “திராவிடம் தந்த கல்விக் கொடை, அதை சிதைக்க விடாது நம் பெரியார் படை” என்ற தலைப்பில் இணையவழியில் நடைபெற்றது. கருத்தரங்கத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்  ஆற்றிய உரை. சென்ற இதழ் தொடர்ச்சி.

ஜியோனிசம் பேசிய யூதர்கள், இஸ்லாமியர்கள் ஆண்டு கொண்டிருந்த பாலஸ்தீன நாட்டில் உள்ள நிலங்களை உலகம் முழுவதிலும் உள்ள யூதர்கள் பெரும் தொகை கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி பிறகு சட்ட விரோதமாக தங்களுக்கென்று “இஸ்ரேல்” என்ற நாட்டை உருவாக்கிக் கொண்டார்கள். 

ஹிட்லர், யூதர்களை வெறுக்கும் கொள்கையைக் கொண்டிருந்தார். எனவே இஸ்லாமி யர்களை வெறுக்கும் ஜியோனிச கொள்கையைக் கொண்ட நாடாக மாறியது. இஸ்ரேல் பார்ப்பனியம் ஜியோனிசத்தோடும் கைகோர்த்து நட்புறவை வளர்த்துக் கொள்வதற்கு திட்டமிட்டு அதற்கான முயற்சிகளை பார்ப்பனியம் தொடங்கியது.

யூதர்கள் பேசிய இனப் பெருமையை ஹிட்லர் பேசிய இனப் பெருமையை முசோலினி போற்றிய இனவெறி இராணுவக் கட்டமைப்பை அப்படியே பார்ப்பனியமும் பேசுகிறது.

“மனித சமூகம் தழைக்க வேண்டும் என்பதற்காகவே வந்த ஆரியர்களாகிய நமக்கு, தொடக்கம் என்ற ஒன்றே கிடையாது. நமது இனம் எப்போது தோன்றியது என்பதை வரலாற்று ஆசிரியர்களாலேயே கண்டறிய முடியவில்லை. நம்மைத் தவிர மற்றவர்கள் இரண்டு கால் பிராணிகள்; அறிவற்றவர்கள்; மிலேச்சர்கள்; அவர்களிடமிருந்து நம்மைத் தனிமைப்படுத்தும் அடையாளமே ஆரியர்” என்று ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை உருவாக்கிய கோல்வாக்கர் எழுதி வைத்துள்ளார். (நூல்: Bunch of thoughts)

சொல்லப்போனால் பாசிசம் உருவாவதற்கு முன்பே வேதகாலத்தில் இதைவிட கொடூரமான 'பார்ப்பனியம்' என்ற சித்தாந்தத்தை வேத கால பார்ப்பனர்கள் இந்த சமூகத்தில் உருவாக்கிக் கொண்டுவிட்டார்கள்.

தங்களுக்கென்று ஒரு நாடு இல்லாவிட்டாலும் எந்த நாடாக இருந்தாலும் அந்த நாட்டினுடைய சமுதாய விதிகளை, சமுதாய கொள்கைகளை சமூக அமைப்பை நாங்கள் தான் நிர்வாகிப்போம், எங்களுக்கு அடிமைப்பட்டு நாங்கள் கூறுகிற வர்ணாஸ்ரம தர்மத்தின் கீழ் தான் ஒவ்வொரு பிரிவினரும் வாழ வேண்டும் என்று கூறி அதை மீறுகிறவர்களுக்கு சாஸ்திரப்படி என்ன தண்டனை என்று வரையறுத்து, இவை கடவுளால் படைக்கப்பட்ட கட்டளைகள் என்று மக்களை அச்சுறுத்தி இந்த கட்டளைகளை மீறுவதற்கு என்ன தண்டனை என்பதற்கு மனுசாஸ்திரங்களை உருவாக்கி நாட்டை ஆண்டு கொண்டிருந்த மன்னர்களை தங்கள் வசப்படுத்திக் கொண்டு தங்களுடைய பார்ப்பனிய சித்தாந்தத்தை அரசுகளின் வழியாக அதிகாரத்தின் வழியாக தாங்கள் பதவிக்கு போகாமலே அடக்கி ஒடுக்குகின்ற ஒரு மோசமான கொடூரமான அமைப்பை பாசிசத்திற்கு முன்பே இந்த நாட்டில் உருவாக்கியது பார்ப்பனியம். பார்ப்பனியம் என்பது பாசிசத்தின் தாய். (Mother of fascism is Brahmanism)

மூஞ்சே, முசோலினியை சந்தித்தது போலவே மற்றொரு வரலாற்று நிகழ்வும் நடந்தது. இஸ்ரேல் நாடு உருவானதை உலகத்தில் எந்த நாடும் அங்கீகரிக்க வில்லை. அது சட்ட விரோதமாக உருவாக்கப்பட்ட நாடு. அய்க்கிய நாடுகள் சபையும் அங்கீகரிக்கவே இல்லை. இந்தியாவும் நீண்ட நெடுங்காலமாக அங்கீகரிக்கவில்லை; தூதரக உறவும் இல்லை. இந்தப் பின்னணியில் 1977ஆம் ஆண்டு இந்தியாவில் மொராஜி தேசாய் ஆட்சியில் ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்தது.

அப்போது அந்த அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் வாஜ்பாய். வாஜ்பாயும் மொரார்ஜிதேசாயும் சேர்ந்து கொண்டு இந்தியா அங்கீகரிக்காத, இந்தியாவில் தூதரகம் துவங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட அந்த இஸ்ரேல் நாட்டினுடைய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ‘மோஷி தயான்’ என்பவரை சந்திப்பதற்கு இரகசியமாக திட்டமிட்டார்கள்.

இந்தியா அங்கீகரிக்காத நாடு ; ஆனால் அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவிற்கு வருகிறார். அவர் வருவது என்பதே சட்டவிரோதம். அவர் வேறு ஒரு பெயரில் போலியான ‘கவுட் சீட்டை’ (பாஸ்போர்ட்) எடுத்துக்கொண்டு இந்தியாவிற்கு, ஒரு பயணிகள் விமானத்தில் மும்பையில் வந்து இறங்கினார்.

அப்போது இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த வாஜ்பாய், போலி பாஸ்போர்ட், போலிப் பெயருடன் இந்தியா அங்கீகரிக்காத நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரை மும்பையில் அரசாங்கத்தின் விமானப் படையை அனுப்பி வரவேற்றார்கள். அவரை வாஜ்பாயும் மொரார்ஜி தேசாயும் மூன்று முறை சந்தித்துப் பேசி ‘நீங்கள் இஸ்லாமிய வெறுப்பில் தீவிரமாக இருக்கும் காரணத்தினால், இஸ்ரேலுக்கு எதிர்காலத்தில் நாங்கள் ஆதரவைக் கொடுப்போம்’ என்ற உறுதியை அந்த சந்திப்பில் வெளிப்படுத்தினார்கள். பாசிசம், நாசிசம், ஜியோனிசம் ஆகியவற்றுடன் மிக நெருக்கமான தொடர்பை இந்துத்துவா பேசுகிற பார்ப்பனியம் வைத்துக் கொண்டே இருந்திருக்கிறது.

இன்றைக்கு நடந்து கொண்டிருக்கின்ற மோடியுடைய ஆட்சி, பாசிசம் நாசிசம் கூறிய  கொள்கை களை நாடாளுமன்றம் வழியாக எப்படி செயல்படுத்த லாம் என்பதற்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டே இருக்கிறது.

நாடாளுமன்றம் என்ற அமைப்பைப் பயன்படுத்தி அதில் மெஜாரிட்டி பலம் கிடைத்தவுடன், தங்களுடைய பெரும்பான்மை எண்ணிக்கையை பயன்படுத்தி அவசர சட்டங்களைக் கொண்டு வந்து மாநிலங்களுடைய அடையாளங்களை முற்றாக அழித்து விடுவது, மாநிலங்கள் என்ற ஒன்றே இந்த நாட்டில் இருக்கக் கூடாது பெயரளவில் வேண்டுமானால் மாநிலங்கள் இருக்கலாம்.

ஆனால் அவற்றிற்கு உரிமைகளோ, அடையாளங்களோ இருக்கக் கூடாது என்பதற்கான முயற்சிகளை அவர்கள் துவங்கிவிட்டார்கள். அதற்காக மாநிலங்களுக்கென்று ஒரு கல்விக் கொள்கை இருக்கக் கூடாது; அதை நாங்கள் தான் தீர்மானிப்போம் என்று தேசிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்தார்கள்.

மாநிலங்களுக்கென்று வரி விதிப்புக் கொள்கை இருக்கக் கூடாது; அதையும் நாங்கள் தான் தீர்மானிப்போம் என்று கூறி ஜி.எஸ்.டி. வரியைக் கொண்டு வந்தார்கள். ஒரே நாடு ஒரே ரேசன் என்ற கொள்கையும் கொண்டு வந்தார்கள். இப்போது விவசாயத்தை அழித்து இந்தியா முழுவதும் ஒரே சந்தை என்று ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். மாநிலங்களின் உரிமையில் இருந்த விவசாயம் தொடர்பான வர்த்தக உரிமை பறிக்கப்பட்டு விட்டது.

கல்லூரிக் கல்வி என்பது முழுவதுமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சேர்க்கப் பட்டுவிட்டது. தற்போது, இந்தியா முழுவதும் ஒரே பண்பாடு அது சமஸ்கிருத பண்பாடு என்பதற்காக பார்ப்பனர்களைக் கொண்டு ஒரு குழுவை அமைத்து அதை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

மாநில உரிமைகளின் கீழ்  இருக்கக்கூடிய மின்சாரக் கொள்கையான மின்சார உற்பத்திக் கொள்கைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. மாநிலங்களினுள் இருக்கக்  கூடிய பல்வேறு சுற்றுச்சூழல் உரிமைகளை பறித்து, இனி நாங்கள் தான் முடிவெடுப்போம் என்று கூறுகிற அளவிற்கு மத்திய அரசு சட்டங்களை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது.

அவர்கள் தற்போது செய்து கொண்டிருக்கிற முக்கியமான நடவடிக்கை என்னவென்று கூறினால், இந்தியாவை ஒரு ஒற்றை ஆட்சியாக மாற்றினால், ஒற்றை ஆட்சியின் கீழ் ஒரே தேசம் ஒரே பண்பாடு என்பதை உருவாக்கி மொழி வழியாக உருவாகியிருக்கிற மாநிலங்களை சிதைத்து விட்டால் இந்தியாவை ஒரு இந்து இராஷ்டிரம் அல்லது பார்ப்பனிய இராஜ்ஜியமாக மாற்றுவதற்கு வசதியாக அமைந்துவிடும், அதற்குத் தடையாக இருப்பது, தனித்தனியாக இருக்கிற மொழி வழி மாநிலங்கள், மாநிலங்களுக்கான தனித்துவமான அடையாளங்கள். இவைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்து அதை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இதற்கு மாற்றாக இந்தியா ஒரே தேசமல்ல பல்வேறு இனக் குழுக்கள் கொண்டது தான் இந்தியா என்று கூறுவதற்கு வந்த கொள்கை கோட்பாடுதான் திராவிடம் என்ற சித்தாந்தம்.

இந்தியா சுதந்திரத்திற்காக போராடிய அந்த நேரங்களிலேயே, பார்ப்பனிய மற்றும் பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டமாக அது துவங்கிவிட்டது. திலகர் போன்றவர்கள் அப்போது காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தாங்கி, இந்தியாவை இந்துக்களின் நாடாக, வேதங்களின் நாடாக மாற்ற வேண்டும் இது ஆரியர்களின் நாடு என்று அவர் தலைமை தாங்கி வழி நடத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் அதே காலகட்டத்தில் இந்து மகாசபையும் காங்கிரசும் கைகோர்த்துக் கொண்டு இரண்டு பேரும் இந்தியாவை ஒரு இந்து இராஜ்ஜியமாக மாற்ற முயன்று கொண்டிருந்தார்கள்.

காங்கிரஸ் கட்சி முழுவதும் பார்ப்பனர்கள் பிடியில் இருந்து கொண்டு இருந்தது. திலகர் மறைவிற்கு பிறகு காந்தி சுதந்திர போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். காந்தி அப்போது சில மாற்றங்களை செய்தார். திலகர் பேசிய இஸ்லாமிய வெறுப்பை அவர் கைவிட்டு விட்டு இஸ்லாமியர்களையும் சுதந்திர போராட்டத்தில் இணைத்துக் கொள்வேன், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 'ஹரிஜன்' என்று பெயர் சூட்டி அவர்களுடைய உரிமைகளுக்காகவும் போராடுவேன் என்று அனைவரையும் இணைத்து காந்தி போராடத் தொடங்கினார். திலகர் போன்றவர்கள் உருவாக்கிய இந்து இராஷ்டிரத்திற்கு காந்தியின் கொள்கை எதிராக அமைந்துவிட்டது என்ற காரணத்தினால் தான் கோட்சே துப்பாக்கியால் காந்தியின் உயிரைப் பறித்தார் என்பது வரலாறு.

இதே காலகட்டத்தில் தான் காங்கிரஸ் கட்சியின் தலைமை பார்ப்பனர் தலைமை ஆகிவிட்டது என்ற காரணத்தினால் தான் பெரியார் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். வடக்கே இந்து இராஷ்டிரம் பார்ப்பனர்களின் குரல் கேட்டது என்றால், தென்னகத்தில் திராவிடம் என்ற குரல் ஒலித்தது.

அது இந்து இராஷ்டிரத்திற்கு எதிராக சமூகநீதி என்ற இட ஒதுக்கீட்டை முன்னிறுத்தி, சமூக சமத்துவம் என்ற ஜாதி ஒழிப்புக் கொள்கையை முன்னிறுத்தி, சமூகத்தை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிற பார்ப்பன எதிர்ப்பை முன்னிறுத்தி இந்த திராவிடக் கோட்பாடு என்பது தமிழகத்தில் சுயமரியாதை இயக்கமாக அதன்பின் திராவிடர் கழகமாக அதற்கு முன் இருந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கமும் சுயமரியாதை இயக்கமும் இணைந்து கருக்கொண்டு உருப்பெற்று உருவானது.

திராவிடம் என்ற கோட்பாடு பார்ப்பனியம் அமைக்க இருக்கின்ற இந்து இராஷ்டிரத்திற்கு எதிரான கோட்பாடு, இதற்கான பின்னணி சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிற காலத்திலேயே உருப்பெற்று விட்டது.

அதனுடைய தொடர்ச்சியாகத்தான் இப்போது இந்தியா முழுவதும் இந்து இராஷ்டிரமாக உருவாக்குகிற முயற்சியில் இந்த பாசிச சக்திகளான பார்ப்பனிய சக்திகள் மோடி ஆட்சியினர் நடத்திக் கொண்டிருக்கிற போது இந்தியாவின் தென்னகத்தி லிருந்து எழுந்த பெரியாரின் திராவிடம் என்ற குரல் அந்தக் குரல் ஒன்றுதான் இன்றைக்கும் எதிர்ப்பாக இருக்கிறது.

இந்தியாவில் இஸ்லாமியர்களை ஒழிப்பதற்கு அவர்கள் பல்வேறு திட்டங்களை தீட்டிக் கொண்டு செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தைப் பொருத்த வரை இஸ்லாமியர் எதிர்ப்பு என்பதை அவர்கள் பின்னுக்கு தள்ளிவிட்டு பெரியார் எதிர்ப்பை முன்னிறுத்துகிறார்கள். பெரியார் எதிர்ப்பு, பெரியார் இயக்க எதிர்ப்பு, திராவிடர் இயக்க எதிர்ப்பு வழியாகத்தான் இங்கே தாங்கள் இந்து இராஷ்டிரத்திற்கான கதவை திறந்து விட முடியும் என்பதற்கான முயற்சிகளில் தான் இங்கே அவர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்து இராஷ்டிரம் பேசுகிற அந்த கும்பலுக்கும், பெரியார் இயக்கம் பேசுகிற திராவிடத்திற்கும் உள்ள வேறுபாடுகளை நாம் பார்க்க வேண்டும். நாம் ஏன் பார்ப்பன எதிர்ப்பை பேசுகிறோம்? ஹிட்லர் யூத இனத்தை அழித்து ஆரிய பெருமையை பேசினார். நாமும் பார்ப்பன எதிர்ப்பை பேசுகிறோம்; ஆனால் ஹிட்லர் பேசியதைபோல ஒரு இன வெறுப்பில் பெரியார் பேசவில்லை.

பெரியாரியம் இந்த நாட்டில் கேட்டது என்னவென்றால், பார்ப்பனர்கள் அவர்களுக்கு உரிய உரிமையை அவர்கள் வைத்துக் கொள்ளட்டும், மற்றவர்களுக்கும் சமமான உரிமையை வழங்குங்கள் என்றுதான் கேட்டாரே தவிர பார்ப்பனர்களை அடியோடு அழித்துவிட்டு பார்ப்பனர் அல்லாதோர் நாட்டை உருவாக்க வேண்டும் என்று பெரியார் கூறவில்லை.

நாசிசமும், பாசிசமும் வன்முறையை கையில் எடுத்ததைப் போல, பெரியார் இயக்கம் ஒரு காலத்திலும் வன்முறையை கையில் எடுத்ததில்லை. பெரியார் கடவுள் மறுப்பு, மத மறுப்பு கொள்கையை பேசினார். ஏன் பேசினார் ? இந்த பாசிச பார்ப்பனியத்தின் நச்சு சிந்தனை கடவுளின் வழியாக மக்களின் மூளைக்குள் நுழைந்து மூளைச் சலவை செய்து கொண்டிருக்கிறது. எனவே இந்த மக்களை மூளைச் சலவை செய்து காப்பாற்றி பார்ப் பனிய அடிமைச் சின்னங்களிலிருந்து வெளி யேற்றவே பெரியார் கடவுள் மறுப்பைப் பேசினார்.

(தொடரும்)

- விடுதலை இராசேந்திரன்