“மனிதருக்கும் மனிதருக்குமிடையே, மனிதருக்கும் இயற்கைக்குமிடையே, நகரத்திற்கும் கிராமத்திற்கு மிடையே, அறிவியலுக்கும் சமூகத்திற்குமிடையே, சமூகத்திற்கும் அரசுக்குமிடையே ஒத்திசை, கூட்டுறவு”.

“பழங்காலத்தில், மனிதர் தங்களுடைய ஆபத்தான வாழ்வைத் தக்க வைத்துக்கொள்ள, தனித்தனியே அலைந்து திரிந்தனர். அந்தச் சூழல் நிலையில் சமூகத்தை உருவாக்க வாய்ப் பில்லை. நதிக்கரை நாகரிகங்களில் உணவு நிரந்தரமாக அபரிமிதமான பின்னர் பெரும் நாகரிகங்கள், முறைப்படுத்தப்பட்ட சமூகங்கள் பிறந்தன...... இன்று இவர்கள் (மனிதர்) மிகப் பெரிய அளவில் கூடிப் பெரும் சமூகங்களை உருவாக்கி விட்டனர்...... ஆனால் ஒவ்வொரு வரும் தனித்தனியே பொருள் தேடி அனுபவிக் கின்றனர். உடைந்து போன சமூக வாழ்வைச் சேர்ப்பது, கிராமத்திற்கும் நகரத்திற்குமிடையே, வர்க்கங்களுக்கும் மக்களுக்குமிடையே, அதிகார ஆணவத்திற்கும் தோழமையுணர்விற்கு மிடையே ஏற்பட்டுள்ள பிளவை நீக்குவது, ஒத்திசைவை ஏற்படுத்துவது தான் நம்மை எதிர் நோக்கியுள்ள பணி” (நகரமும் கிராமமும் - சிட்டி அண்டு வில்லேஜ் 1928).

I

இரவீந்திரநாத் தாகூரின் படைப்பாற்றலில் மக்களிடம் அதிகம் வலியுறுத்தப்படாத அம்ச மொன்று உண்டு; அது சமூகம், பொருளாதாரம் குறித்த அவருடைய தத்துவம். ஆனால், அவரைப் பொதுவாக அடையாளப்படுத்தும் தளங்களை எவ்வளவு வளப்படுத்தினாரோ, அதே அளவு இவ் விரண்டு தளங்களையும் செழுமைப்படுத்தினார் தாகூர். இந்த நாட்டின் சமூக, அரசியல், பொருளாதார மறுமலர்ச்சியில் தாகூருக்கு நிலைத்த, நீடித்த அக்கறை இருந்தது. தன்னுடைய நீண்ட, சுறுசுறுப்பான வாழ்க்கை முழுவதும் அவருடைய கட்டுரைகளிலும், கடிதங்களிலும், பேச்சுகளிலும் மட்டுமின்றி,

பல நாவல்களிலும், நாடகங்களிலும், கவிதை களிலும், பாடல்களிலும் இந்த அக்கறையை வெளிப்படுத்தினார்.

ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு - 1884 முதல் - அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்கான தேசிய போராட்டத்தின் போக்கை தாகூர் உன்னிப்பாகக் கவனித்து வந்தார்; நேரடிப் பங்கேற்பின் மூல மாகவும், தன்னுடைய எழுத்தின் மூலமாகவும், தன்னுடைய ஆளுமையின் மூலமாகவும் அதனை வழிவகுத்தார். பல்வேறு பிற பணிகளுக்கிடையேயும், சமூக அமைப்பு மற்றும் அதன் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்கும், சமூக, பொருளாதார வளர்ச்சிக்கான வழிமுறைகளைக் கூறுவதற்கும், இக்கருத்துக்களில் சிலவற்றைக் களத்தில் பயன்படுத்தி சோதனை செய்வதற்கும் நேரம் கண்டார். (இதனால்தான் மகாத்மா காந்தி தாகூரை “மாபெரும் காவலர்” - கிரேட் செண்டினல் - என்றழைத்தார்). தாகூரின் செயல்பாடுகளில் பல அன்றைய நிகழ்வுகளின் நெருக்கடிகளால் தோன்றியவை. மனிதரின் செயல் பாடு மற்றும் நிறுவனங்களின் பொருளாதார, சமூக அம்சங்கள் குறித்த தெளிவான நிலைப்பாடும், ஆழமான தத்துவப் பார்வையும் இந்த அறிவு ஜீவிக்கு இருந்ததை இவருடைய கருத்துக்கள் உறுதி செய்கின்றன.

தாகூரின் பொருளாதார, சமூக தத்துவங்களைச் சுருக்கி வரையறை செய்வது எளிதல்ல. இவற்றின் மூல ஆதாரங்கள் பல - பெரும்பாலானவை இன்னும் வங்காள மொழியில் மட்டுமே இருக்கின்றன; இவற்றின் கூறுகள் வெவ்வேறு; பின்புலங்களும், தாக்கங்களும் மிக நெடியவை. இவற்றால் ஏற்படும் தடைகளையும், சிரமங்களையும் அறிந்திருந்த தாகூர் இது குறித்து எச்சரிக்கையும் செய்தார் : “ஒருவர் என்னுடைய கருத்துக்களை ஆய்வு செய்து அவற்றின் உள்ளேயுள்ள என்னுடைய அரசியல், சமூக, சமய தத்துவங்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வதாகக் கேள்விப்படும்போது என்னுடைய கருத்துக்களுடன் அவருடைய கருத்துகளும் நிச்சயம் கலந்துவிடும் என்று எனக்குத் தெரியும்” (கலந்தர் 1933). இந்த அபாய எச்சரிக்கை இருப்பதால், சமூகம், பொருளாதாரம் குறித்து தாகூரின் சிந்தனைகளில் காணப்படும் இரு முக்கிய கூறுகளை மட்டும் இக் கட்டுரையில் விவாதிப்பதுதான் சரியாக இருக்கும்.

II

தாகூரின் சமூகம் பற்றிய சிந்தனைகளும், பொருளாதாரம் பற்றிய சிந்தனைகளும் ஒன்றோ டொன்று தொடர்புடையவை. இதனால்தான் சமூக சுதந்திரத்தையும், பண்பாட்டு வளர்ச்சியையும் தவிர்த்த அரசியல் விடுதலையையும், முன்னேற்றத்தையும் அவரால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. இதையும் தாண்டி, பொருளாதார சுதந்திரத்தையும், தனிநபர் சுதந்திரத்தையும் தன்னுடைய விடுதலைக் கோட் பாட்டில் சேர்த்துக் கொண்டார். தேசியவாதம், தேசக் கட்டமைப்பு, சுயாட்சி, ஏகாதிபத்தியம், அரசு, மக்களாட்சி, சர்வாதிகாரம், சர்வதேசம் ஆகியவை குறித்த அவருடைய அரசியல் கட்டுரைகள் அனைத்திலும் இச்சிந்தனைகளின் ஓட்டம் காணப் படுகிறது.

தாகூரின் அரசியல் உள்ளடக்கிய சமூக தத்துவம் மூன்று கூறுகளை உள்ளடக்கியது. சமூகம், நாகரிகம் குறித்த இந்திய கருத்தியல்களின் அடிப்படையாக இருக்கும் ‘உண்மை’, ‘அழகு’, ‘ஒத்திசைவு’ ஆகியவை பற்றி தாகூரின் ஆழமான அபிமானமும், புரிதலும் இந்த சிந்தனைகளின் கருவைத் தந்தன. மேற்கத்தியம் வடிவத்தைத்தான் தந்தது; மனிதப் பண்பு மற்றும் செயல்பாட்டின் போக்கும், இயற்கை உலகுடன் இவைகளுக்கிருந்த உறவும் மூலப் பொருளைத் தந்தன.

தாகூரின் சமூகத் தத்துவத்தின் மையக் கருத்து ‘சமாஜ்’ அல்லது சமூகம். ‘சுதேசி சமாஜ்’ (1904) கட்டுரையில் இக்கருத்து முதன்முதலில் முழுமை யாக வரையப்பட்டது. துடிப்புடைய உயிராக, அதனுள்ளே வாழும் தனிநபர்களின் வாழ்வாதாரப் பண்பாட்டு, ஒழுக்க, ஆன்மிகத் தேவைகளை உறுதி செய்யும் அடிப்படைத் தேவையாக சுதேசியத்தைப் பார்த்தார்: மக்களின் நாகரிக வளர்ச்சியை முன் னெடுப்பதுதான் ‘சமாஜின்’ நோக்கம்; உயிருள்ள சமூகத்தை நிலைநிறுத்தி, வழி நடத்திச் செல்லும் பொறுப்பு வலுவான, தன்னம்பிக்கையுள்ள, பிறரைச் சார்ந்திராத தனி மனிதருக்குத் தான் உண்டு. அரசுக் கென்று தன்னுள்ளடங்கிய அதிகாரமெதுவும் கிடையாது; சமூகம் தந்துள்ள பொறுப்பைச் செயல்படுத்தும் புற அமைப்புதான் அரசு; அதன் அதிகாரமும், பொறுப்புகளும் மக்களிடமிருந்து பெறப்படுவன. சமூகத்தைக் கட்டுப்படுத்தும், சமூகத்திற்குத் தலைமையேற்கும் அமைப்பாக அரசு மாறுவதற்கு அனுமதிக்கக்கூடாது. அரசின் பணி, பாதுகாப்பு தருவது; வளர்ச்சிப் பணியும், உருவாக்கும் பொறுப்பும் சமூகத்திற்குரியவை. இந்திய நாகரிகமும், சிந்தனையும் கடந்த காலத்தில் இத்தகைய சமூக அமைப்பைத்தான் வளர்க்க முயற்சி செய்தன. தனிநபர் மற்றும் சமூக செயல்பாட்டின் மூன்று விதிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அமைப்பு பிசிரின்றிச் செயல்படும். முதலாவதாக, தன்னுடைய வலுவின் மீது நம்பிக்கை கொள்ளவும், தன்னுடைய திறனை மட்டும் சார்ந்திருக்கவும் தனிநபர் ஊக்குவிக்கப்படுகிறார். இரண்டாவதாக, உயிருள்ள ஒரு சமூகத்தின் உறுப்பினராக இருப்பது தனிநபரின் தெரிவு அல்ல; சமூகத் தேவை; மற்றவர் மீது நம்பிக்கை வைப்பதற்கும், கூட்டாகச் செயல் படுவதற்கும் இந்த உணர்வு பயன்படும். இதனைக் கொண்டே சமூகத்தில் தனிநபரின் பங்கும், நிலையும் முடிவு செய்யப்பட்டது. மூன்றாவதாக, சொத்து, அதனை அனுபவிக்கும் முறை குறித்த தனிநபரின் கண்ணோட்டமும், நடத்தையும் சமூகத்தின் பொது நலன் மற்றும் சமூகப் பொறுப்பால் வடிவமைக்கப்பட்டது.

நாளடைவில் இந்தக் கண்ணோட்டமும் பொது நலனும் சீரழிந்து, சிதைந்து, அதன் சாரம் செத்துப் போயிற்று. இந்த இழி நிலையை ஆராய்ந்த தாகூர் இதற்குக் காரணமான மூன்று வரலாற்றுக் காரணிகளைக் கண்டுபிடித்தார். மையப்படுத்தப் பட்ட, நிறுவனமயமாகி விட்ட பெரிய அளவிலான உற்பத்தி முறை முதல் காரணம். மேற்கிலிருந்து இந்தியாவிற்குள் வந்த இந்த அமைப்பு, சீரற்ற ஒருதலைப் பட்சமான நகர்ப்புற, தொழில் மைய வளர்ச்சியை ஊக்குவித்தது. இதனால் பணம் சம்பாதிப்பதற்கும், ஆடம்பரங்களை அனுபவிப் பதற்கும் உருவான புதிய வாய்ப்புகளைப் பயன் படுத்திக் கொள்வதற்காக மக்கள் கிராமங்களை விட்டு வெளியேறி நகர்ப்புறங்களை நாடினர். நீண்ட நாள் நடைபெற்ற இந்த நகரம் நோக்கிய குடியேற்றம், கிராம மக்களைப் பலவீனமாக்கியது; அவர்களின் சுயசார்பையும், வலுவையும் குறைத்தது.

அடுத்து, லாப நோக்கையும், ‘தனிநபர் திருப்தியையும்’ வலியுறுத்திய இந்தப் புதிய பொருளாதார முறை, இந்தச் சமூக அமைப்பின் வேரை வெட்டி அழித்தது. “கடந்த காலத்தில், நம் நாட்டிலாவது, பணக்காரன் - ஏழை இடையே இவ்வளவு பெரிய இடைவெளி இல்லை. செல் வத்துக்குக் கடைசி முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது இதற்கு ஒரு முக்கிய காரணம்.

பணக்காரர் தங்களுடைய சமூகக் கடமை களை ஏற்றுக் கொண்டது மற்றொரு காரணம். பொருள் மக்களுக்கிடையே தடைகளை உருவாக்க வில்லை; மாறாக, பல்வேறு சமூக உறவு வகை களுக்குக் காரணமாகயிருந்தது” என்று 1928இல் எழுதினார்.

ஒரு பக்கம், நகரங்களில் சமூக வாழ்வின் மறைவும், அங்குப் பரவிய புதிய அன்னிய சூழ்நிலையும் தான் சமூக அக்கறையும் பொறுப்புணர்வும் வலுவிழந்து போனதற்குக் காரணம். மற்றொரு புறம், நலி வடைந்த நிலையில் கிராம மக்கள் தங்களுடைய சமூகக் கண்ணோட்டத்தை இழந்துவிட்டனர். பிறர் நலன் என்ற சிந்தனை மாறி, தன் நலன் காப்பதே நோக்கமாகிவிட்டது. “சிறியதாக இருந்தாலும், நம்மிடமிருந்த கிராம அமைப்பு தான் நம்முடையது” என்று தாகூர் வலியுறுத்தினார். ஆனால் சமூகக் கடமை, சமூகப் பொறுப்பு என்ற உள் விசையால் அது இயக்கப்பட்டது நின்று போயிற்று.

மூன்றாவது, பிரிட்டிஷாரின் நுழைவால் அரசு கொடுமையான அடுக்குமுறை கொண்ட எங்கும் பரவிய வடிவமாகியது. சமூகத்தின் அதிகாரம் பிரிட்டிஷ் அரசின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. படிப்படியாக, சட்டங்களும் உத்தரவுகளும் கட்டுப் படுத்தும், வழிநடத்தும் கருவிகளாயின. வெளிப் புற சக்திகளுக்கு தனிநபர் அடிமைகளாயினர். சமூகம் தன்னுடைய சுய செலுத்து விசையை இழந்தது.

மேற்கை இப்படிக் கண்மூடித்தனமாகப் பின் பற்றும் போக்கு பரவலாகி வருவதைக் கண்ட தாகூர், மேற்கத்திய கோட்பாட்டின் பொருத்தம், திறன் குறித்து சந்தேகங்கள் எழுப்பினார். ‘முன்னேற்றம்’ என்ற சித்தாந்தத்தின் மேல் இருந்த நாட்டம் மேற்கை உண்மை வாழ்வாலிருந்தும், நாகரிகத்திலிருந்தும் விலக்கிக் கொண்டு செல்கிறது என்றெண்ணினார். இதனால் மனிதருக்கும் மனிதருக்கும், மனிதருக்கும் இயற்கைக்கும் இடையே மோதல் உருவாவதைக் கண்டார். சமயத்தின் பிடி தளர்ந்து வருவது தான் இதன் முக்கிய காரணம் என்றும் கண்டுபிடித்தார். மனிதரையும் சமூகத்தையும் உள்ளிருந்து வழி நடத்தி, வாழ்வு தருவது தான் ‘தர்மம்’ என்பது தாகூரின் கருத்து. தாகூரின் ‘தர்மம்’, வழக்கமான இறையியல் கோட்பாடுகள் பொருள் கூறும் தர்மத்தில் இருந்து வேறுபட்டது. சமூகத்தில் உயிருள்ள விசையாக இருக்க வேண்டிய மனிதாபிமான கோட்பாடு தான் ‘மக்களின் சமயம்’. இது தான் தாகூரின் ‘தர்மம்’. ஆனால், (சமயத்தின் பிற கூறுகள் குறித்து தாகூர் கொண்டிருந்த மற்ற கருத்துக் களுடன் மேற்கூறிய கருத்தை இணைத்துக் குழப்பி விடக்கூடாது.)

தன்னுடைய வாழ்க்கையின் பிற்பகுதியில் அரசின் பங்கு பற்றிய கேள்வியில் தன்னுடைய நிலையைத் தாகூர் சற்று மாற்றிக் கொண்டார். புதிய உலகில் அரசு ‘எதிர்வினைப் பாதுகாப்பு’ பணிகளை மட்டும் செய்ய வேண்டுமென்று எதிர் பார்ப்பது நடைமுறைக்கு ஒத்துவராதென்பது தாகூரின் கருத்து.

‘அரசின் அரசியல்’ இதையும் தாண்டிச் செயல்பட வேண்டும்; சமூகம் இன்னும் சிறப்பாக செயல்பட அதற்குத் தேவையான வளங்களை அரசு தர வேண்டுமென்பதையும் ஒத்துக்கொண்டார். ஆனால், ‘எந்தச் சூழலிலும், அரசு சமூகத்தின் மேல் தன்னைத் திணித்துக்கொண்டு, சமூகத்தைக் கட்டுப் படுத்தக் கூடாது’ என்ற தன்னுடைய அடிப்படை நிலைப்பாட்டில் எந்த சமரசத்தையும் தாகூர் ஏற்றுக் கொள்ளவில்லை.

III

சமூகம், அரசியல் குறித்த தன்னுடைய தத்துவங் களை முறைப்படுத்தி, அடிக்கடி வலியுறுத்திக் கூறிய அளவிற்குப் பொருளாதாரம் குறித்து தாகூர் விளக்க வில்லை. குடிசைத் தொழில்களுக்குப் புத்துயிர், விவசாய வளர்ச்சி பற்றியும், இயந்திரத் தொழிற் சாலைகள் தொடங்குவது பற்றியும் கூட தாகூர் தன்னுடைய ஆரம்பக்கட்ட எழுத்துக்களில் குறிப் பிட்டார். மையப்படுத்தப்படாத முறையில் வளர்ச்சி வர வேண்டுமென்றார்; உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி, கிட்டத்தட்ட கூட்டுறவு அமைப்பின் அடிப்படையில் வரும் வளர்ச்சியை விரும்பினார்.

ஆனால், பிற்கால எழுத்துக்களில் - 1930களில் - பொருளாதார விஷயங்களில் தாகூர் ஆழமான கவனம் கொண்டது தெரிகிறது.

“பொருளாதார முயற்சிகளும், செயல்பாடு களும் மனிதருக்கு இயற்கையாகவே அமைந்த குணம்” என்று ‘உண்மையின் அழைப்பு’ (சத்யர் அகவன்) என்ற கட்டுரையில் குறிப்பிட்டார். மனிதரின் நிலையையும், வாழும் சூழலையும் மேம் படுத்த வேண்டுமென்ற வேட்கையால் இம்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன; பல்வேறு சூழ்நிலை களின் தன்மை, தேவைகளுக்கேற்ப பொருளாதார முறைகள் உருவாக்கிக் கொள்ளப்பட்டன. ஆனால், தொழில் வளர்ச்சி காலத்தில், பொருளாதாரத்திற்கு சமூகக் கண்ணோட்டம் கொடுக்கப்படாமல் போனது துன்பத்தைத் தந்தது.

பொருளாதார அமைப்பிற்குத் தாகூர் பரிந்துரை செய்த வழிகாட்டு நெறிகளைச் சுருக்கமாக விவாதித்து இக்கட்டுரையை முடிக்கலாம்.

போட்டியை அடிப்படையாகக் கொண்ட கோட்பாட்டை முன் வைக்கும் பொருளாதார அமைப்பைத் தாகூர் எதிர்த்தார். “இன்றைய காலத்தில் ஒருபுறம் கட்டுப்பாடில்லாமல் தனிநபர் பொருள் சேர்ப்பதற்கு இக்கோட்பாடு அதிகார பலத்தைத் தந்துள்ளது” என்று குறிப்பிட்டார். (ரஷ்யாவில் இருந்து கடிதங்கள் - லெட்டர்ஸ் ஃபிரம் ரஷ்யா 1932). மற்றொரு பக்கம், நிறை வடையாத பேராசை, பொறாமையையும், இணைக்க முடியாத இடைவெளியையும் ஏற்படுத்திவிட்டது. இவ்வாறு, கூட்டுறவைப் புறம் தள்ளிவிட்டு வகுப்புகள், நாடுகளுக்கிடையே மோதல்களை அதிகப்படுத்தி விட்டது இந்தப் போட்டி. தாகூரைப் பொறுத்த வரை, உலகில் அமைதியையும், சமூகத்தில் தனி நபருக்கு சுதந்திரத்தையும், மகிழ்ச்சியையும் தருவதற்கு உதவி செய்யும் பொருளாதார முறை தான் முழு மையான பொருளாதார முறை. பொருளாதார, சமூக உறவுகளில் வழிகாட்டும் கோட்பாடாகக் கூட்டுறவை ஏற்றுக்கொண்டால் தான் இந்நிலை சாத்தியமென்று பலமுறை தன்னுடைய கட்டுரை களில் குறிப்பிட்டார்: “நம்முடைய கிராமங்களிலும், நாட்டிலும் பொருள் சேர்க்கும் முயற்சியில், பொருளைப் பிரித்துக் கொள்ளும் பணியில் கூட்டுறவு வெற்றி பெறட்டும்.”

அடுத்து, இன்று பொருளாதார, சமூக அதிகாரங்கள் மையப்படுத்தப்படுவதில் ஏற்படும் ஆபத்துக்களைத் தெளிவாக தாகூர் கண்டார். அறிவியலும், இயந்திரமும் மனிதருக்குப் பெரும் வலுவைக் கொடுத்துள்ளன. ஆனால் “இந்த வலு வெகு சில தனிபரின் ஏகபோக உரிமையாகிவிடாமல், பலருக்கும் பயன்பட வேண்டும்..... அனைத்து மனிதருக்கும் இது பயன்படும் போது பொற்காலம் திரும்ப வரும்.” எனவே அறிவியலுக்கும், இயந் திரத்திற்கும் எதிரானவரல்ல தாகூர்; இவற்றின் வன்மையான, அழிக்கும் கூறுகள் கட்டுக்குள் வைக்கப்பட வேண்டுமென்பதே அவர் கருத்து. இதனால் தான், உற்பத்தி முறை மையப்படுத்தப் படாமல், கிராமங்களெங்கும் பரவியிருக்க வேண்டு மென்று தன் வாழ்நாளெல்லாம் வேண்டினார். அதே போல், கிராமங்கள் - நகரங்களுக்கு இடையே சமன் நிலை இருக்க வேண்டுமென்றார்.

இறுதியாக, தனிநபர் சொத்துக்கெதிரானவர் அல்ல தாகூர். ஆனால், பொருளை அனுபவிப்பதில் சமூகக் கட்டுப்பாடு அவசியமென்பதற்குத் தீவிர ஆதரவளித்தார்: “தனிநபர் சொத்து இருக்கலாம்; ஆனால் கட்டுப்பாடில்லாமல் அதை அனுபவிக்கலாம் என்பதை ஓரளவு கட்டுப்படுத்தப்பட வேண்டும். அளவுக்கதிகமான உபரி, மக்களுக்குச் செல்ல வேண்டும்.” தனிமனிதரின் ‘தான்’ என்பதையும் சமூகத்தில் ‘மற்றவர்’ என்பதையும் அடையாளம் காண வேண்டிய தேவையை தாகூர் தத்துவார்த்தமாக வலியுறுத்தினார். ‘மற்றவர்’ தேவைக்கு அதிகம் கொடுக்க வேண்டுமென்ற உயர் கருத்தை முன் வைத்தார்.

மேற்கூறியவற்றைத் தாண்டி இக்கட்டுரையில் அதிகம் விவரிக்க முடியாது. பொருளாதார வளர்ச்சியைக் கணக்கில் கொண்ட தாகூரின் விருப்பத் திட்டங்கள் பல உண்டு; முக்கியமாக, கிராமங்களின் மறுவாழ்விற்காகப் பல யதார்த்தத் திட்டங்கள் இருந்தன. இங்கே சுட்டிக்காட்டியவாறு, தாகூரின் கருத்துக்களும், செயல்பாடுகளும் ஒன்று இணைந்திருந்தன. மனிதருக்கும், மனிதருக்கு மிடையே, மனிதருக்கும், இயற்கைக்குமிடையே, நகரத்திற்கும், கிராமத்திற்குமிடையே, அறிவியலுக்கும், சமூகத்திற்குமிடையே, சமூகத்திற்கும் அரசுக்கு மிடையே இருக்க வேண்டிய ஒத்திசையும் கூட்டுறவும் தான் தாகூரின் தத்துவம்.

ஜே.பி.பட்டாச்சார்ஜி

தமிழில் : ரகு அந்தோணி

Pin It