funeralபிறப்பும், இறப்பும் உலகத்தின் அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஒன்று. அதனை எம்மால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும் நம்மைவிட்டு நிரந்தரமாகப் பிரிந்து செல்லும் அன்புக்குரிய உறவுகளின் இறப்புத் துயரத்தை பலரால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

அதன்விளைவுகள் உள, உடல் மாற்றங்களையும் பாதிப்புக்களையும் ஏற்படுத்துகின்றன. அந்தவகையில் இறப்பு என்பது உடலில் இருந்து ஆன்மா பிரிந்து செல்வதையே குறிப்பிடுகின்றது. இதனை மரணம் எனவும் அழைப்பர். மரணமானது இயற்கை மரணமாகவோ அல்லது அகால மரணமாகவோ நிகழலாம்.

மரணத்துயர் என்றால் என்ன என வரையறுப்போமாயின் பெரும்பாலும் இழப்பினைத் தொடர்ந்து அதுவும் அன்புக்குரியவரின் மறைவினைத் தொடர்ந்து ஏற்படுவதாகும். இது இழவிரக்கம் எனவும் அழைக்கப்படுகின்றது. இது எல்லோருக்கும் ஏற்படும் சாதாரண நிகழ்வு. ஆனால் ஒருசிலரில் இதன் தாக்கம்

அசாதாரண நிலையினை அடையலாம். இவ்வாறு மரணத்துயரில் உள்ள மக்களது பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கான தீர்வாக மரணச்சடங்குக் கிரியைகளைப் பின்பற்றுவதன் மூலம் அந்தத்துயரத்திற்குரிய தீர்வினைப் பெறமுடியும் என்பதாக அமைகின்றது. அதாவது மதசடங்குக் கிரியைகளைப் பின்பற்றுவதன் மூலம் துயரத்தினைக் குறைத்துக் கொள்ளமுடியும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

மாறாக மேற்கூறப்பட்ட மதச் சடங்குக் கிரியைகளைப் பின்பற்றாத விடத்து பாரிய உளவியல் தாக்கங்களுக்கு உட்படுகின்றனர். அதாவது குற்றஉணர்ச்சி போன்ற மனவடுக்களுக்கு உள்ளாகின்றனர். எனவே இத்தகைய உள, உடல் பிரச்சினைகளுக்கு மக்களுக்கு மரணமும் மரணத்துயரும் உளத்தாக்கத்தை ஏற்படுத்துவதோடு அதனை கவனியாது விடும்போது உளநோய், மனச்சோர்வு போன்ற உளரீதியான பிரச்சினைகள் ஏற்பகின்றன.

முதன்மை நோக்கமாக மரணத்துயரில் இருப்பவர்கள் மத மரணச் சடங்குக் கிரியைகள் ஒழுங்குமுறையாகச் செய்வதனூடாக அவர்கள் மரணத் துயரிலிருந்து மீண்டெழுவதனைக் கண்டறிதல், மத மரணச்சடங்குக் கிரியைகள் செய்யாமல் தற்பொழுதும் மரணத்துயருடன் இருப்பவர்களைக் கிரியைகள் செய்வதை ஊக்குவித்தல். இழப்புத்துயர் உள்ளோரின் உளநலத்தினை அறிதல் போன்றன உளநலச் சிகிச்சை மற்றும் ஆற்றுப்படுத்தலாகும்.

மத மரணச் சடங்குக்கிரியைகள் ஒழுங்கு முறையாக செய்பவர்கள் அதனை செய்யாதவர்களைவிட விரைவாக மரணத்துயரிலிருந்து மீண்டெழுகின்றனர். சமூக கூட்டிணைவு, ஆதரவு என்பன மரணத்துயரினைக் குறைக்கின்றது. இறுதி மரணக்கிரியைகளில் மனம்விட்டு அழுது புலம்பல் அவர்களின் மனப்பாரத்தினைக் குறைக்கும் அத்துடன் உடல், உளத்தூய்மையை ஏற்படுத்துகின்றன.

மரணமும் மரணத்திற்குப் பிந்திய துயரமும்

மதத்தில் காணப்படும் மரணச் சடங்குக் கிரியைகள் எவ்வாறு துயர் நிவாரணியாகச் செயற்படுகின்றது. இழப்புத் துயர் நீண்டு செல்லும்போது மிகையாக வெளிப்படுத்தப்படும் போதும் அது நோயியல் வலுநட்டம் பெறுகின்றது. இந்நிலை அசாதாரணமானதே.

இத்தகைய நிலைமைகளில் பீதி மற்றும் இழப்பினை நினைவுகூறும் பொருட்களைத் தவிர்த்தல் பயன்தரும்.

சிலசந்தர்ப்பங்களில் இழவிரக்கத் தொழிற்பாடு அதிகரித்து மிகையான கோபாவேசத்திற்கு உட்பட்டவர்களாகக் காணப்படலாம். மேலும் சில சந்தர்ப்பங்களில் தொழிற்பாடு மந்தமாகி எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கிக் காணப்படலாம். இப்படியான சந்தர்ப்பங்களில் தன்னை அழித்தல் மற்றும் தற்கொலை எண்ணங்களால் பாதிக்கப்பட்டிருப்பார். தன்னம்பிக்கை இழந்து காணப்படும் சந்தர்ப்பங்களும் உண்டு. எந்தத் தூண்டுதலிற்கும் துலக்கமற்றுக் காண ப்படும் சந்தர் ப்பங்களும் உண்டு .

இத்தகையவர்களுக்குக் கண்டிப்பாக உளநலச் சிகிச்சைகள் வழங்கப்படுதல் வேண்டும். சில சந்தர்ப்பங்களில் 'மரணத்துயர்' வெளிப்படுவதற்குத் தாமதமாதலும் நோயியல் வலுவூட்டம் பெறுவதற்குக் காரணமாக அமையலாம். நோயியல் வலுவூட்டம் பெறுவதற்கு வேறு அனேக காரணிகளும் உள்ளன.

  1. திடீரென ஏற்படும் இழப்பு
  2. மிக நெருங்கிய உறவின் இழப்பு
  3. இழப்புக்குள்ளானவர் அந்த உறவில் பெருமளவு தங்கியிருத்தல்
  4. இழப்பிற்குப் பின்னர் பாதுகாப்பற்ற உணர்வில் இருத்தல்
  5. இழப்பின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாமை
  6. இழப்புடன் வேறுபல பாதகமான நிகழ்வுகள் ஏற்படல்
  7. இழப்பிற்கு உட்பட்டவர் சமூக ஆதரவினை இழந்திருத்தல்

இத்தகைய சந்தர்ப்பங்களில் பெருமளவில் இழவிரக்கம் நோயியல் வலுவூட்டம் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் அண்மைக்கால உள்நாட்டு யுத்தம், அனர்த்தங்களில் உறவுகளை இழந்தவர்கள் மேற்குறிப்பிட்ட காரணிகளைப் பெருமளவில் கொண்டுள்ளனர். எனவே, அவர்களில் உளநோயியல் வலுவூட்டம் ஏற்படக்கூடிய ஏதுநிலை காணப்படுகின்றது

இழப்புக்கள் ஏற்படும்போது அதிலும் குறிப்பாக எதிர்பாராத இழப்புக்கள் ஏற்படும்போது பெரும் அதிர்ச்சிக்குட்படுகின்றனர். இழப்பினை மறுதலித்து அதனை ஏற்றுக் கொள்ள முடியாத தொருநிலையில் காணப்படுவர். அந்த இழப்பினைத் தாங்க முடியாததால் கடும் கோபத்திற்குள்ளாகிக் காணப்படுவர்.

அதிலும் சிலகாலம் அந்த மனிதனைத் தேடுதலில் ஈடுபடுவர். பிற இடங்களிலும் மக்கள் கூட்டங்களிலும் அவரைத் தேடுவர். அதிலும் அவர்கள் உயிருடன் இருப்பது போன்ற உணர்வு அவர்களது உருவங்கள் தெரிவது போலவும் அவர்கள் உரையாடுவதைப் போலவும் தோற்றப்பாடுகள் ஏற்படலாம். அவர்களுடைய உருவத்தில் மனதைப்பறி கொடுத்த நிலையிலே காணப்படுவர்.

இழப்பினைத் தொடர்ந்து மனநெருக்கீடு ஏற்பட்டு அது கவலையாகவும் கண்ணீராகவும் வெளிப்படுகிறது. அவர்கள் தங்கள் எல்லாவிதமான மகிழ்ச்சியான விடயங்களையும் தொலைத்து விட்டவர்களாகவே காணப்படுவர். அவர்கள் கவனக்குறைவு மற்றும் ஆர்வமின்மையினால் பாதிக்கப்பட்டுக் காணப்படுவர்.

அத்துடன் சினம் கொண்டவர்களாகவும் சமூகத்திலிருந்து ஒதுங்கியும் காணப்படுவர். அவர்களுடைய அன்றாடக் கடமைகளை மேற்கொள்ள முடியாது தவிப்பர். அத்துடன் ஏதோ நடைபெறப்போகிறது என்ற பயமும் காணப்படலாம்.

இத்தகைய வெளிப்பாடுகள் யாவும் ஓரு இழப்பினைத் தொடர்ந்து சாதாரணமாக ஏற்படலாம். எனவே இத்தகையபடி முறைகளுக்கூடாகவே இழப்பினை ஏற்றுக் கொள்ளும் மனநிலையை அடைவர். மேற்குறிப்பிட்ட குணங்குறிகள் மெல்ல மெல்ல மறையத் தொடங்க இழப்பினை ஏற்றுக்கொண்டு தனது அன்றாட கடமைகளைச் செய்யத் தலைப்படுவர்.

எமது சமூகத்தில் நாம் மேற்கொள்ளும் ஈமச்சடங்குகள் மற்றும் கிரியைகள் இத்தகைய ஆரோக்கியமான எதிர்கொள்ளலுக்கு ஆதரவாக உள்ளன. அவற்றைச் சரியாக கடைபிடிப்பதன் மூலம் இவற்றை நாம் ஆரோக்கியமாக எதிர்கொள்ள முடியும்.

சாதாரண துயரம் (Normal Grief)

இது உடலில் ஏற்படும் ஏனைய மாற்றங்கள் போன்று சாதாரணமானது. 'ஒருகாய்ச்சலைத் தொடர்ந்து அல்லது காயத்தினைத் தொடர்ந்து இயற்கையாக எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றனவோ அவற்றை ஒத்து இழப்பினைத் தொடர்ந்து சாதாரணமாக ஏற்படும் உளத்தாக்கங்களை சாதாரண துயரம் என வரையறுக்கப்படுகின்றது' இது சில படிமுறையான நிலைகளினூடாகக் கடந்து செல்கிறது. இந்த படிமுறைகள் மூன்று நிலைகளாக காணப்படுகின்றது.

முதலாவதுநிலை  அதிர்ச்சிநிலை ‘சில மணிநேரங்களிலிருந்து சிலநாட்களுக்கு நீடிக்கக்கூடிய நிலையினை குறிக்கின்றது'. இதன்போது ஒருவித அதிர்ச்சியுடன் காணப்படுவார்கள். இழப்பினை அல்லது இழப்பினை மறுதலிக்கும் போக்கினை அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.

அத்துடன் அவர்கள் உணர்வற்றவர்களாகவும், நம்பிக்கை இழந்தவர்களாகவும் காணப்படுவர். இழப்பினை ஏற்றுக் கொள்ளாது அதன் எதிர்த்தாக்கமாக ஏற்படும் உணர்ச்சிகளை வெளிப் படுத்தாதவர்களாக பிரமை பிடித்த நிலையில் காணப்படுவர். இழந்தவரை தேடும் மனநிலையில் காணப்படுவர்.

இரண்டாவது நிலை  துயரப்படும் நிலை ‘சிலவாரங்களில் இருந்து சிலமாதங்கள் வரை நீடிக்கக் கூடிய நிலை'. இந்த நிலையின் போது மிகையான துக்கம், அழுகை என்பன ஏற்பட்டு ஒருவித உணர்ச்சிக் கொந்தளிப்பில் காணப்படுவர். பதகளிப்புக் குணங்குறிகள் பெருமளவில் காண ப்பட்டு தூக்கமின்மை, பசி யின்மை போன்றவற்றினால் பாதிக்கப்படுவர்.

இத்தகைய உணர்ச்சிக் கொந்தளிப்பு அலைஅலையாக வந்து தாக்கிச் செல்லும். சிலர் குற்ற உணர்விலும் வேறு சிலர் கோப உணர்ச்சியிலும் தவிப்பர். இறந்தவரின் உருவம் தெரிவதாகவும் அவர் உரையாடும் குரல் கேட்பது போன்றும் மாயப்புலன் உணர்வு கொண்டிருப்பர்.

மூன்றாவது நிலை - இசைவாக்கப்படும் நிலை ‘சிலவாரங்களில் இருந்து மாதங்கள் வரை நீடிக்கக்கூடிய நிலை இது'. இறப்பின் அல்லது இழப்பின் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு அதனை மெல்ல மெல்ல ஏற்றுக் கொள்ளும் நிலையினைக் குறிக்கின்றது. இந்நிலையின்போது உணர்ச்சி வெளிப்பாடுகள் மற்றும் உடல் உபாதைகள் பெருமளவில் குறைந்து தங்களுடைய அன்றாடக் கடமைகளை படிப்படியாகச் செய்ய ஆரம்பிக்கின்ற நிலையினை அவதானிக்கலாம்.

சிலர் இழந்தவருடனான இனிமையான நினைவுகளை மீட்டிக் கொள்வதை அவதானிக்கக் கூடியதாக இருக்கும். ஆனாலும் ஒரு வருடப்பூர்த்தியின் போது குணங்குறிகள் தற்காலிகமாக மீளவும் வெளிப்படக் கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

அசாதாரண துயரம் (Abnormal Grief)

‘மரணத்துயரம் மிகைப்படுத்தப்பட்ட நிலையில் அல்லது நீடித்துச் செல்லும் வகையில் காணப்பட்டால் அது அசாதாரண மரணத்துயர் என வரையறுக்கப்படுகின்றது'. பிந்திய இழவிரக்கம் (Delayed Grief) அல்லது ஆரோக்கியமாக நெறிப்படுத்தப்படாத மரணத்துயரம் ஆகியனவும் அசாதாரணமானவையே. இவை இயற்கைக்கு மாறான (Unatural Grief) இழவிரக்கமாகக் கொள்ளப்படுகின்றன. சாதாரண இழவிரக்கத்திலும் பார்க்க மிக அதிகமாக அல்லது மிகக் குறைவாக வெளிப்படுத்தப்படுகின்ற இழ விரக்கத்தினையும் நாம் அசாதாரணமாகக் கொள்ளலாம்.

சமூக ஆதரவு மற்றும் குடும்ப ஆதரவு குறைந்தவர்களில் துயரம் பிந்திய வெளிப்பாடாகவே அமைகிறது. இழப்பின் தன்மை மற்றும் இழந்தவருடனான உறவுமுறை என்பன மிகையான வெளிப்படுத்தலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இழந்தவருடனான உறவில் வெளிப்படுத்தப்படமுடியாத குற்ற உணர்வு, கோபம், நிராகரிக்கப்பட்டதான உணர்வு என்பன காணப்பட்டால் இழவிரக்கம் அசாதாரணமாக அமையலாம். உதாரணமாக தற்கொலை மூலம் இறப்பு ஏற்படும் சந்தர்ப்பங்களில் இத்தகைய நிலை காணப்படலாம்.

நீண்டு செல்லும் துயரம் (Croc Grief)

இழந்த உறவில் மிகையாகத் தங்கியிருப்பவர்களில் அவரது இழப்பினைத் தொடர்ந்து ஏற்படுகிறது. இதன்போது இழவிரக்கச் செயற்பாடுகள் ஆறு மாதங்களின் பின்னரும் நீண்டு செல்வதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கும். இதுவரை இங்கு குறிப்பிடப்பட்டவை மனிதவாழ்வில் சாதாரணமாக ஏற்படும் இறப்புக்கள் மற்றும் இழப்புக்கள் காரணமாக ஏற்படும் இழவிரக்கச் செயற்பாடுகள்.

ஆனால் ஆழிப்பேரலைகள், உள்நாட்டு யுத்தம் போன்றனவற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட இழப்புக்கள் மிகவும் அசாதாரணமானவை. எமது கட்டுப்பாட்டை மீறியவை பல குடும்பங்களில் பலர் ஒன்றாகவே மாண்டனர். பல சந்தர்ப்பங்களில் இறந்த உடல்களையேனும் காணமுடியாது அனேகர் தவிர்த்தனர்.

ஆத்மாக்கிரியைகளை மேற்கொள்ளமுடியாமல் வீடு வாசல்களை பலர் இழந்து பலர் தவிர்த்தனர். கூடிஅழுவதற்கு சுற்றமும் உற்றாரும் இன்றிப் பலர் தவித்தனர். இத்தகைய அசாதாரண நிலைமையில் பலர் மிகையான இழவிரக்கத்திற்கு உட்பட்டுக் காணப்பட்டனர்.

இத்தகைய சந்தர்ப்பங்களில் அசாதாரண இழவிரக்கம் ஏற்படுவதற்கான அல்லது இழவிரக்கம் நீண்டு செல்வதற்கான சந்தர்ப்பங்களும் பெருமளவில் காணப்படுகின்றன. சாதாரணமாகச் சுமார் ஆறு மாத காலமளவில் இந்த இழவிரக்கம் நிறைவடையலாம்.

எனினும் தொடர்ச்சியாக நீண்டு செல்வதற்கான சந்தர்ப்பங்களும் தற்போதைய நிலைமையில் காணப்படுகின்றன. இதனை நாம் கவனத்திற் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

மரணத்துயர் தொடர்பான கொள்கைகள்.

மரணம் தொடர்பான படிமுறை அணுகுமுறையில் பிரசித்தி பெற்ற கொள்கைகளில் மரணத்தை எதிர்கொள்வதற்கான படிமுறைக் கொள்கை. இது Dr Elizebeth Kubler Ross அவர்கள் 1969 - 1970 களில் முன்மொழியப்பட்டது'. இவர் தனது நூலான "On Death And Dying' என்ற நூலில் ஒருவர் மரணத்தை எதிர்கொள்ளலானது படிநிலைகள் ஊடாக செல்கின்றார்.

அதற்காக அவர் தீராத நோயால் பாதிக்கப்பட்ட 200 பேரில் கள ஆய்வு செய்தார். இவர் ஆய்வுக் கண்டு பிடிப்பே மரணத்தை எதிர்கொள்கையில் சிறந்த ஒன்றாக கருதப்படுகின்றது. தனது ஆய்வினூடு மரணத்தை எதிர்கொள்வோரின் உணர்ச்சி அனுபவங்கள் ஐந்து கட்டங்களாக நிகழ்வதை அடையாளம் கண்டு கொண்டார். 200 நோயாளர்களில் 191 பேர் ஐந்து படிமுறைகளுக்கு ஊடாக பொருத்தப்பாடடைதல் எனக் கூறினர். இவருடைய இப்படி நிலைகளுடாக எவ்வாறு இழப்புத் துயருடையவர்கள் எதிர்கொள்கின்றனர் என ஒப்பீட்டுப் பார்க்க முடிகின்றது.

அவையாவன.

  1. ஏற்க மறுத்தல் படிநிலை (Stage of Denial)
  2. கோபப் படிநிலை (Stage of Anger)
  3. பேரம்பேசுதல் (Stage of Bargaining)
  4. மனச்சோர்வுப் படிநிலை (Stage of Depression)
  5. ஏற்றுக் கொள்ளல் படிநிலை (Stage of Acceptable)
  6. ஏற்க மறுத்தல் படிநிலை (Stage of Denial)

ஏற்க மறுத்தல் படிநிலை (Stage of Denial)  

இழப்புத் துயரத்தில் உள்ளவர்கள் தங்களுடைய உறவின் பிரிவினை அதாவது அவர்கள் இறந்து விட்டார் என்பதை ஏற்க மறுக்கின்றனர். ஒருவர் ஒன்றை மறுக்கின்றாரோ அந்த அளவிற்கு அது உண்மை என்று கண்டு கொள்ளவேண்டும். இதை மற்றவர்கள் நேர்மையற்றதனமாகவோ அல்லது உண்மையற்றதனமாகவோ எடுத்துக் கொள்ள தேவையில்லை. இது உறவுப்பிரிவின் துயரத்திலிருந்து பாதுகாக்க ஒரு கவசமாக மறுத்தல் காணப்படுகின்றது. இங்கு அவர்களுடன் உரையாடுவது கதைத்துக் கொள்ளல் போன்றன இடம்பெறும்.

கோபப் படிநிலை (Stage of Anger)

இப்படி நிலையில் கோப உணர்வே மேலோங்கிக் காணப்படும். 'எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும் என்று தனக்குள்ளேயே கேட்கின்றனர்.' இளம் வயது பெண் கணவனை இழந்தால் 'தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக எண்ணி தன்னைச்சுற்றி இருக்கும் அனைவர் மீதும் கோபத்தை வெளிப்படுத்த ஆரம்பிக்கின்றனர்.

உதாரணமாக: பெற்றோர், நண்பர்கள், மருத்துவர் கடவுள் அத்துடன் தன்னுடன் தொடர்பில்லாத நபர்கள் மீதும் கோபத்தை காட்டலாம். ஒரு சிலர் தம்மீதும் கோபமாயிருப்பார்கள். கடந்த இரண்டு நிலைகளுக்கும் உட்பட்டோர் மூன்றாவது நிலையில் இருந்து தங்கள் உணர்வுகளை வெளிக்காட்ட முனைகின்றனர். பேரம் பேசுதல் (Stage of Bargaining) இழப்புத் துயரில் உள்ளவர் தன் வாழ்வை நீடிக்க இம்முறையை பின்பற்றுகின்றனர். தனக்கு வந்துள்ள இப்பிரிவுத் துயரத்தை தவிர்க்க முடியாததை உணர்கின்றார்.

பிரிவை மறுக்கவில்லை. இப்போது அவர் விரும்புவதெல்லாம் தம்முடைய பிரியமான உறவு ஆத்மா சாந்தியடைய வேண்டும். கடவுளிடம் பேரம்பேசல் போன்றன இடம்பெறும்.

உதாரணமாக: கோவில்களுக்கு தர்மம் கொடுத்தல்.

மனச்சோர்வுப் படிநிலை (Stage of Depression)

இழப்பின் எதிரொலியாக மனச்சோர்வு அமையலாம். இழப்புத்துயர் அடைந்தவர்களை தகுந்தமுறையில் ஆற்றுப்படுத்தாதபோது அவர்கள் தொடர்ச்சியான சோகம் தனிமைக்கு உள்ளாகி மனச்சோர்வுக்குத் தள்ளப்படுகின்றனர்.

ஏற்றுக் கொள்ளல் படிநிலை (Stage of Acceptable)

ஏற்றுக் கொள்ளும் தன்மையை அடைதலே கடைசி நிலையாகும். இக்கடைசி நிலையில் வெளிப்படையாக காட்டப்படுகின்ற உணர்வு ஏதும் இல்லாததுபோல் தோன்றும். இங்கு அன்புக்குரியவர் இறந்துவிட்டார் என்பதை ஏற்றுக் கொண்டு செயற்படல். அத்தோடு எவரிடமும் பேசாமல் மௌனமாக இருப்பர். எத்தகைய கோபமும் இங்கு காணப்படாது.

ஒருவர் இறந்தபின் அவர் எம்மதத்தைச் சார்ந்தவரோ அம்மதத்தின் விதிகளுக்கு அமைய அந்த ஆன்மாசாந்தி அடைவதற்காகவும், அந்த ஆன்மாவைத் தாங்கி நின்ற உடலை புனிதமாக்குவதற்காகவும் கிரியைகள் நடாத்தப் பெற்று தகனம் செய்யப் பெறுகின்றன அல்லது நல்லடக்கம் செய்யப் பெறுகின்றன.

மேலும் விளக்கமாக கூறுவதாயின் மானிடப் பிறப்பெடுத்து வாழ்ந்த ஆன்மாவானது இரண்டு சூழ்நிலைகளில் பாவவினைகளை செய்து விடுகின்றன. ஒன்று தாம் செய்யும் செயல் பாவம் என அறிந்திருந்தும் செய்வது, மற்றையது பாவம் என அறியாமலே செய்வது அல்லது எதுவுமே அறியாமலேயே நிகழ்ந்து விடுவது போன்ற சந்தர்ப்பங்களில் உடலினாலும், வாக்கினாலும், மனதினாலும் மூன்று விதமாக பாவவினைகளைச் செய்கின்றது. இவற்றுள் பாவம் என அறிந்து செய்யும் செயலால் ஏற்படும் பாவவினையை அந்த ஆன்மா அனுபவித்தே ஆகவேண்டும்.

அறியாது செய்த பாவவினைகள் அவரின் வழி வந்த வாரிசுகள் அவருக்காகச் செய்யும் மரணச் சடங்கு, அந்தியேட்டிக் கிரியைகள், தான தர்மங்களினால் நிவர்த்தியாகின்றன அல்லது குறைந்து போகின்றன என ஆகம நூல்கள் கூறுகின்றன.

கன்ம வினைகளால் பீடிக்கப் பெற்ற ஆன்மாவை ஜீவாத்மா அல்லது சூட்சுமசரீரம் என்றும் அது இப்பூவுலகில் பெற்றிருக்கும் உடலை தூலசரீரம் என்றும் அழைப்பர். சூட்சும சரீரம் தூல சரீரத்தை விட்டுப் பிரிதலையே நாம் இறப்பு என கூறுகின்றோம். இந்த இறப்பின்போது ஜீவாத்மாவானது (சூட்சுமசரீரம்) யம தூதர்களினால் கவர்ந்து யமலோகத்தில் இருக்கும் யமதர்மாராஜனிடம் அழைத்துச் செல்கின்றனர்.

பூலோகத்திற்கும் யமலோகத்திற்கும் இடையே சுமார் எண்பத்தியாறாயிரம் காதவழிதூரம் இருப்பதாகவும் பாவம் செய்த ஆன்மாக்களுக்கு உரியதண்டனை அவர்கள் செல்லும் பாதையிலும், எமலோகத்திலும் வழங்கப்பெறுவதாகவும் அப்பாதையை கடந்து செல்வதற்கு பாவம் செய்த சில ஆன்மாக்களுக்கு ஒருவருடம் வரை ஆகலாம் என்றும் கருடபுராணம் கூறுவதாகச் சொல்லப் பெறுகின்றது.

இறந்த ஜீவாத்மாவின் கன்ம வினைகளுக்கு ஏற்ப பாதையின் உக்கிரம் தன்னிச்சையாகவே மாற்றமடைவதால் உடலை விட்டுப் பிரிந்த ஜீவாத்மா பாவம் என அறியாது செய்த பாவங்களை நிவர்த்தி செய்து அல்லது குறைத்து இயமலோகம் செல்லும்வரை உள்ள பாதையின் உக்கிரத்தை குறைத்து சுகமாக கடந்து செல்வதற்காகவும், அந்த ஜீவாத்மாவை சாந்தி பெறச் செய்வதற்காகவும் அவர்களின் வாரிசுகளினால் இறுதிக் கிரியை, (எட்டு வீடு, 15 ஆம் நாள் படையல்) அந்தியேட்டிக் கிரியை, மாத மாசியம், திவசம் போன்ற சிரார்த்தக் கிரியைகளையும், தானங்களையும் சிரத்தையோடு செய்கின்றனர்.

இதனால் அந்த ஜீவாத்மாவிற்கு புண்ணியப் பேறினால் நற்பிறப்பு கிடைக்கும் என்பதும் ஐதீகம். ஒருவர் இறந்த காலத்தை வைத்தும் அந்த ஜீவாத்மா பாவம் அதிகம் செய்த ஆத்மாவா அல்லது புண்ணியம் அதிகம் செய்த ஆத்மாவா என்று கணித்துக் கொள்கின்றார்கள்.

உத்தராயண காலத்தில் (தை மாதம் முதல் ஆனி மாதம்வரை உள்ள காலம்), சுக்கில பக்சத்தில் (வளர்பிறைக் காலம்), உடலின் தொப்பூழுக்கு மேல் (கண்கள், காதுகள், நாசிகள், வாய்) அமைந்துள்ள ஏதாவது ஒரு வாசலினால் உயிர்பிரிந்திருந்தால் புண்ணியம் அதிகம் செய்த ஆன்மாவாகவும் தட்சணாயன காலத்தில் கிருஷ்ணபக்சத்தில் உடலின் தொப்பூழுக்கு கீழ் உள்ள வாயில்களில் ஒன்றினால் உயிர்பிரிந்திருந்தால் பாவவினை அதிகம் செய்த ஆன்மாவாகக் கணிக்கப் பெறுகின்றது.

ஒருவர் இறக்கும்போது ஆன்மாவானது உடம்பில் உள்ள ஒன்பது வாசல்களில் ஏதாவது ஒருவாசலினால் பிரிவதாக ஐதீகம். இதனை இறந்தவுடன் ஒருவரின் ஏதோ ஒரு வாயில் ஈரமாக இருப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். பாவம் செய்யாத பரிசுத்த ஆன்மாக்களை காண்பது அரிதினும் அரிது. எந்த ஒரு ஆன்மாவும் தெரிந்தோ தெரியாமலோ பாவம் செய்தே இருப்பார்கள் என்பது நம்பிக்கை. பரிசுத்தமான ஆன்மாவானது நேரடியாக பரமாத்மாவுடன் இரண்டறக் கலந்து விடுகின்றது என்பது ஐதீகம்.

ஒருவர் நோய்வாய்ப்பட்டு அல்லது வயோதிபம் அடைந்ததினால், சுயநினைவற்று இருக்கும் தறுவாயில் (சேடம் இழுக்கும் நிலை யில்) அந்த ஆன்மா இறைவனையே எண்ணும்படியான சூழ்நிலையை உருவாக்குவதற்காக அவரைச் சூழ்ந்துநின்று பஜனைகள் அனுபவமிக்கவர்கள், அல்லது நாடிபிடித்து பாப்பவர்கள் (தோத்திரங்கள்) பாடுவார்கள்.

ஜீவன் பிரியும் நிலையை உணர்ந்தால் ‘ஜீவன் போகப் போகுது' உரிமைகாரர் பால் பருக்குங்கள் என்றுகூறுவர். அப்போது அவருக்கு தீர்த்தம் அல்லது பால்பருக்கி அவருடைய வலது காதில் சமயதீட்சை பெற்ற ஒருவர் மூலம் ‘பஞ்சாட்சர மந்திரம் - சிவாயநம' சொல்லி தோத்திரம் பஜனையாக பாடுவார்கள். இவ்வாறு நாம் செய்யும்போது பிரிய இருக்கும் ஆன்மாவானது இவ்வுலகத்தில் பெற்றிருந்த ஆசாபாசங்களை மறந்து, இறைநாட்டம் கொண்டதாகி இறைவனை நாடிநிற்கும். அந்த நிலையில் ஜீவன் பிரிந்தால் இறைவனின் கடாட்சம் அந்த ஆன்மாவுக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஒருவர் இறந்துவிட்டால் அவரை உடனே குளிப்பாட்டி, விபூதி அணிவித்து, சந்தனமும் குங்குமப் பொட்டும் வைத்துத் தெற்குத் திசைநோக்கி தலைப்பகுதி இருக்குமாறு கட்டிலை வைத்து, குத்துவிளக்கேற்றி வைப்பார்கள். அத்துடன், இறந்தவரின் உடல்வைக்கப் பெற்றுள்ள இடத்தில் கட்டிலுக்குமேலே வெள்ளை கட்டுவார்கள். அதற்கும் ஒருகாரணம் சொல்லப் பெறுகின்றது.

அதாவது இறந்தவரின் உடல்வைக்கப் பெற்றிருக்கும் கட்டிலுக்கு மேலே கட்டப் பெற்ற வெள்ளைத்துணியில் அந்த உடலைவிட்டுப் பிரிந்த சூட்சும சரீரம்கொண்ட (ஆன்மா) ஆவியானது தொங்கிக் கொண்டு நிற்குமாம்.

அதனாலேயே இறந்தவரின் உடலை தோயவாக்கும் போதும் வெள்ளைத் துணிகட்டிய இடத்திற்கு கீழே வைத்து தோய வார்க்கிறார்கள். அதன்பின்பும் இறுதிக்கிரியைகள் நடக்கும் போதும் வெள்ளை கட்டிய இடத்திலேயே தலைப்பக்கம் தெற்குநோக்கி இருக்குமாறு வைக்கிறார்கள். குளிப்பாட்டும் போதும், கிரியைகள் நிகழும்போதும் இறந்தவரின் ஆத்மா அந்த வெள்ளை துணிகளில் தொங்கியவாறு இருக்கும் என்பது நமது மூதாதையினர் கூறிய விளக்கமாகும். இறந்தவரின் ஆவி இறந்தநாளில் இருந்து 16 நாட்கள் வரை அவ்வீட்டை சுற்றிக் கொண்டுநிற்கும் என்பதும் ஆன்றோர் கூற்று.

அதனாலேயே 3ம்நாள், 8ம்நாள், 15ம்நாள்படையல் என இறந்தவர் விரும்பி உண்ணும் உணவும், உணவுப் பண்டங்களும் படைத்து இறந்தவரின் ஆவியை மகிழ்விக்கின்றார்கள்.

இக்கிரியைகள் இடத்திற்கு இடம் வித்தியாசமான முறைகளில் செய்யப் பெறுகின்றன. சாதாரணமாக ஒரு பொதுமகன் இறந்துவிட்டால். அவர் உடம்பை தகனம் செய்வார்கள். அவர் சமயதீட்சை பெற்று ஆசாரசீலராக வாழ்ந்திருந்தால் சமாதியும் இருத்துவார்கள். அனேகமாக புலம்பெயர் வெளிநாடுகளில் தமிழர் ஒருவர் இறந்தால் அவரின் பூதவுடலை இரண்டு அல்லது மூன்று தினங்கள் பார்வைக்கும், அஞ்சலிக்கும் வைத்தபின், இறுதிக்கிரியைகள் செய்து மின் அல்லது காஸ் போறணையில் எரியூட்டி தகனம் செய்வது வழக்கமாக உள்ளது.

ஆனால் அவரின் ஆன்மாசாந்தி அடைய செய்யப் பெறும் கிரியைகள் எல்லாம் சைவ ஆகமவிதிகளுக்கு அமைய இடம்பெறுகின்றன. இறந்தவர் இஸ்லாம் சமயத்தை சேர்ந்தவராயின் அவர் அரசனாக இருந்தாலும் சரி, ஆண்டியாக இருந்தாலும் சரி பள்ளிவாசலில் வைக்கப் பெற்றிருக்கும் பூதவுடல் எடுத்துச் செல்லும் தொட்டிலில்தான் பூதவுடலை மைய வாடிக்கு எடுத்துச் செல்வார்கள் அத்துடன் பூதவுடல் உயிர்பிரிந்த 24 மணிநேரத்திற்குள் அடக்கம் செய்யப் பெற்றுவிடும். அது அவர்களின் சமய கலாசாரமாகும்.

சைவசமயத்தைச் சேர்ந்த ஒருவர் அகால மரணமடைந்தால் எதுவித சமயகிரியைகளும் செய்யாது, தோத்திரம் பாடி கற்பூரம் தீபம் ஏற்றியபின் தகனம் செய்கின்றார்கள். ஆனால் தற்பொழுது அந்த நிலை மாறி எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சமயக்கிரியைகள் செய்கின்றனர்.

வீட்டில் ஒருவர் இறக்க நேரிட்டால், இறந்தவுடன் பூதவுடலைச் சுத்தம்செய்து, விபூதி பூசி ஈமைக்கிரியைகள் ஆரம்பிக்கும் வரையும் வீட்டின் ஒருபகுதியில் தெற்குப்பக்கம் தலை இருக்கும் படியாகக் கட்டிலில் படுக்க வைத்து தலை மாட்டில் குத்து விளக்கேற்றி வைப்பது வழக்கம். உறவினர்கள் யாராவது தூரதேசத்தில் இருந்துவரும் வரை காத்திருப்பதாயின் அப்பூதவுடல் பழுதடையாது இருக்க உரியமருந்துகள் இட்டு பாதுகாத்து வைப்பார்கள்.

சிலசந்தர்ப்பங்களில் பூதவுடல் வீக்கமடையும். அதனைத் தவிர்ப்பதற்காக ஒரு பெரிய பாத்திரத்தில் நீரை அல்லது அல்லது உப்பை சீலைத்துணியில் கட்டி நெஞ்சில் வைத்தும், ஒருசாக்கில் நெல்லை கட்டி கட்டிலுக்குக் கீழே வைப்பார்கள்.

வெளிநாடுகளிலும், பெரிய பட்டினங்களிலும் இறந்தவரின் பூதவுடல் மலர்ச்சாலையில் (Funeral Home) வைக்கப் பெறுவதால் அவர்களே அதனைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்.

சாதாரணமாக பொதுமக்களின் ஈமைக்கிரியைகளை சைவக்குருமாரே செய்து வருகின்றனர். ஆனால் பிராமணருடைய இறுதிக் கிரியைகளை மாத்திரம் பிராமணக் குருமாரே செய்கின்றார்கள்.

இறுதிக் கிரியையின்போது இறந்தவரின் நெருங்கிய இரத்த உறவினர்கள் கடமைகளைச் செய்வது வழக்கம். இறந்தவர் தந்தையாயின் அவரின் மூத்த மகனும், தாயாயின் இளையமகனும், சிலசந்தர்ப்பங்களில் எல்லா ஆண் மக்களும் இணைந்து கடமைகளைச் செய்வார்கள்.

உடலுக்கு செய்யும் இறுதிக்கிரியைகள் மூலம் அந்த ஆன்மாவானது அந்த உடலைத் தாங்கி நின்றகாலத்தில் தெரியாமல் செய்த தீவினைகள் நீங்கப் பெற்று சாந்தி அடைவதாக ஐதீகம். அத்துடன், தன்னை இயங்க வைத்த ஆன்மாவை பிரிந்ததனால் சவமாக இருக்கும் உடலை சிவமாக்கி அதனை அக்கினியில் சங்கமிக்கச் செய்யும் புனிதகிரியையாகவும் நிகழ்த்தப் பெறுகின்றது.

அதனால் ஆன்மாவின் ஈடேற்றம் கருதி பயபக்தியோடு இறைவனை பிரார்ததனை செ ய்யக் கூடியவர்களாக ஆண்பிள்ளைகளையும், இரத்த உறவினர்களையும் அனுமதிக்கின்றனர்.

பெண்பிள்ளைகளைப் பொறுத்த மட்டில் அவர்களை சுடுகாடு செல்வதற்கு எமது சமூகம் அனுமதிக்காத காரணத்தினாலும் அவர்கள் விவாகம் செய்து கணவனுடன் இருப்பதாலும் கடமை செய்வதற்கு அனுமதிப்பதில்லை. ஆனால் அவர்கள் எல்லாப் பூஜைகளிலும் கலந்து இறந்தவருக்காக பிரார்த்தனை செய்வார்கள். தற்காலத்தில் ஆண்பிள்ளைகள் இல்லாத சில குடும்பங்களில் பெண்களும் கடமைகள் செய்து உறவினர் அல்லது இரத்த உறவு உள்ள ஒருவர் மூலம் தகனக்கிரியைகளை நிறைவேற்றுகின்றனர்.

நம்முடன் பழகிக் கொண்டிருந்த உறவின் இறப்பானது எம்மில் சடுதியான மாற்றங்களைக் கொண்டு வருகின்றது. இனி அவர்களை இவ் உலகில் காணமாட்டோம் என்ற ஏக்கமும் அவர்களை மேலும் உளரீதியாக பலவீனமடையச் செய்கின்றது. அந்தவகையில் இழப்பினைத் தொடர்ந்து ஏற்படும் எதிர்த்தாக்கம் ஒரேமாதிரியானதல்ல. அது பல்பரிமாண நிலையினைக் கொண்டது.

அதனையே நாம் அன்புக்குக் கொடுக்கும் விலையெனக் கொள்ளலாம். இது ஒரு உறவின் பிரிவினால் உலகளாவிய அளவில் ஏற்படுகின்ற வலி தருகின்ற அனுபவம். எல்லோரும் பெரும்பாலும் இந்த இழவிரக்கச் செயற்பாட்டினூடாகத் தங்களுடைய இழப்பினை அது தந்திட்ட தாக்கத்தை எதிர்கொள்கின்றனர்.

இழப்புக்கள் ஏற்படும்போது உடல்ரீதியாக, உளரீதியாக, மனவெழுச்சி ரீதியாக நடத்தை ரீதியாக தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். அந்த வகையில் இழப்புக்கள் ஏற்படும்போது அதிலும் குறிப்பாக எதிர்பாராத இழப்புக்கள் ஏற்படும்போது முதலில் பெரும்பாலும் எவரும் அதிர்ச்சிக்கு உட்படுவர். இழப்பினை மறுதலித்து அதனை ஏற்றுக் கொள்ள முடியாதவொரு நிலையில் காணப்படுவர்.

அந்த இழப்பினைத் தாங்கமுடியாததால் கடும்கோபத்திற்கு உள்ளாகிக் காணப்படுவர். பிற இடங்களிலும் மக்கள் கூடங்களிலும் இறந்தவரை தேடுவர். அத்துடன் இறந்தவர் உயிருடன் இருப்பது போன்ற உணர்வைக் கொண்டிருப்பதுடன் அவர்களது உருவங்கள் தெரிவது போலவும் அவர்களுடன் உரையாடுவதை ப் போலவும் தோற்றப்பாடுகள் ஏற்படலாம். அவர்களுடைய நினைவுகளில் மனதைப் பறிகொடுத்த நிலையிலே காணப்படுவர்.

இழப்பினைத் தொடர்ந்து மனநெருக்கீடு ஏற்பட்டு அது கவலையாகவும், கண்ணீராகவும் வெளிப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் எல்லா விதமான மகிழ்ச்சியான விடயங்களையும் தொலைத்து விட்டவர்களாகக் காணப்படுவதுடன் கவனக்குறைவு மற்றும் ஆர்வமின்மையினால் பாதிக்கப்பட்டுக் காணப்படுவர். அத்துடன் சினம் கொண்டவர்களாகவும் சமூகத்திலிருந்து ஒதுங்கியும் காணப்படுவர். அவர்களுடைய அன்றாடக் கடமைகளை மேற்கொள்ள முடியாது தவிப்பர். அத்துடன் ஏதோ தர்மச்சம்பவம் நடைபெறப்போகிறது என்ற பயமும் அவர்களிடம் காணப்படலாம்.

இத்தகைய வெளிப்பாடுகள் யாவும் ஒரு இழப்பினைத் தொடர்ந்து சாதாரணமாக ஏற்படலாம். எனவே இழவிரக்கத்தினால் பாதிக்கப்பட்டவர் இத்தகைய படிமுறைகளுக்கு ஊடாகவே இழப்பினை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை அடைவர்.

மேற்குறிப்பிட்ட குணங்குறிகள் மெல்ல மெல்ல மறையத் தொடங்க இழப்பினை ஏற்றுக்கொண்டு தனது அன்றாட கடமைகளைச் சகஜமாகச் செய்யத் தலைப்படுவர். ‘எமது சமூகத்தில் நாம் மேற்கொள்ளும் ஈமச்சடங்குகள் மற்றும் கிரியைகள் இழவிரக்கத்தை ஆரோக்கியமாக எதிர்கொள்வதற்கு உறுதுணையாக உள்ளன. எமது சமூகத்தில் நாம் மேற்கொள்ளும் இவ்மரணச் சடங்குகள் மற்றும் கிரியைகள் இழவிரக்கத்தை ஆரோக்கியமாக எதிர்கொள்வதற்கு உறுதுணையாக உள்ளது. அவற்றை முறையாக கடைப்பிடிப்பதன்மூலம் இழவிரக்கத்தை நாம் ஆரோக்கியமாக எதிர்கொள்ளலாம்.

மதத்தில் காணப்படும் மரணச் சடங்குக்கிரியைகள் எவ்வாறு மரணத்துயர் நிவாரணியாக செயற்படுகின்றது? மத மரணச்சடங்குக் கிரியைகள் ஒழுங்குமுறையாகச் செய்தவர்கள் இறப்பு துயரத்தில் இருந்து எவ்வாறு மீண்டெழுகின்றனர்?

தமது உறவுகளுக்குரிய சமய மரணச் சடங்குக்கிரியைகளில் பங்குபற்றாதவர்கள் குற்ற உணர்விற்கு உட்படுகின்றனர். மத மரணச்சடங்குக் கிரியைகள் ஒழுங்குமுறையாக புரிபவர்களின் உறவுகளின் பிணைப்பு வலுப்படுத்தப்படுகின்றது.

இறந்தவர்களுக்குரிய கிரியைகள் சடங்குகள் புரியாதவர்கள், தற்பொழுதும் இறப்புத் துயரத்துடன் உள்ளனர். அவலச் சடங்கு உடையவர்கள் இறப்புத் துயரத்தில் அதிகம் உள்ளனர். மனம்விட்டுக் கதறி அழுதல், ஒப்பாரி மூலம் இறப்புத்துயருடன் உள்ளவர்களின் மனப்பாரம் குறைவடைகின்றது. இறப்புவீடு தூய்மையடைகின்றது. குறித்த காலங்களில் மேற்கொள்வதன் மூலம் அது சமூகத்தின் நடைமுறைகளில் ஒன்றாக மாறி பண்பாட்டில் இடம் பெறுகின்றது.

சடங்குகள் மற்றும், அபரக்கிரியைகள் மேற்கொள்வதற்கு ஊக்குவித்தல் வேண்டும். உடல் அடையாளம் காணப்படாவிட்டாலும் இத்தகைய சடங்குகளை மேற்கொள்ளல் அவசியம். இறப்பு மற்றும் இழப்பினை இயலுமானவரை உறுதிசெய்தல் ஆரோக்கியமானது.

தொடர்ச்சியாக காணாமல் போன உறவுகளைத் தேடி அலைவது பாதகமான நிலைமையைத் தரலாம். உடல் கிடைக்கப் பெறாத சந்தர்ப்பங்களில் ஒரு நினைவுப் பொருளை அல்லது கல் ஒன்றினையேனும் வைத்துச் சடங்குகள் நடத்தமுடியும். இறந்தவரின் புகைப்படம் ஒன்றினைப் பெரிதாக்கித் தாம் இருக்கும் முகாம்களிலோ அல்லது உறவினர்கள் வீடுகளிலோ வைப்பதன் மூலம் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துதல் இலகுவானதாக அமையும்.

அத்துடன் இழப்பினை ஏற்றுக் கொள்வதற்கு ஏதுவாக அமையும். இறந்தவர்களின் சார்பாக பொதுவான நினைவுகூரல் நிகழ்வை ஏற்பாடு செய்வது ஆரோக்கியமானதே. இதை ஆலயங்களிலோ அல்லது மண்டபங்களிலோ ஏற்பாடு செய்யலாம். இறந்தவர்கள் நினைவாக ஒரு நினைவுச் சின்னம் அமைத்தல் நன்று. அத்துடன் ஒரு பொதுவான நினைவுத்தூபி அல்லது மண்டபம் அமைத்து அதில் பெயர்கள் பொறிக்கப்படல் அவசியமான ஒன்றாகின்றது.

இறந்த மாணவர்களின், நண்பர்களின் புகைப்படங்களையும் பாடசாலைகளின் பொதுமண்டபத்தில் நிறுவி அஞ்சலிக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வதும் ஆரோக்கியமான விடயமே. ஓராண்டு பூர்த்தியின் போது மீண்டும் பெருமளவில் உணர்ச்சிகள் வெளிப்படக்கூடும். இதன்போது இறந்தவர்களை நினைவுகூரல் என்பது முக்கியமான நிகழ்வாக அமைதல் வேண்டும். தளர்வுப் பயிற்சிகளை கையாண்டு மனதை ஒருநிலைப்படுத்தலாம்.

உளவளத் துணைச் சிகிச்சைகளின்போது மேற்கொள்வதுபோல் இழவிரக்கத்துக்கு உட்பட்டவர்களுக்கு ஏற்பட்ட இழப்பினைப் பற்றி உரையாடச் சந்தர்ப்பம் அளித்து அதனைக் கரிசணையுடன் செவிமடுத்தல் வேண்டும். அவர்களை மென்மையாகவும் பாதுகாப்பு உணர்வை வழங்குபவராகவும் நாம் அணுக வேண்டும். இழப்பினைப் பற்றி அவர்களது உறவினர்களுடன் உரையாடுவதற்கு ஊக்கமளிப்பதுடன் அதற்கான சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்தவேண்டும். இறந்தவருடன் இவருக்குள்ள உறவுமுறை, நெருக்கம் ஆகியபற்றியும் தொடர்பாடல் செய்தல் நன்று.

குடும்பத்தில் மற்றைய அங்கத்தவர்களைப் பற்றி விசாரித்து அவர்களது நலம் பற்றி உரையாடல் நன்று. இறந்தவரின் புகைப்படத்தினைக் காட்டும்படி கோரவேண்டும். அவர்களது அன்றாட செயற்பாடுகள் பற்றியும் விரிவாக உரையாடவேண்டும்.

இழப்பிற்கு முன்பாக அவர்களது நெருக்கத்தையும் உறவாடலில் ஏற்பட்ட நிகழ்வுகளையும் விரிவாக உரையாட வேண்டும். இழப்பிற்கு உள்ளானவர் சிலநேரம் ஒருவிதக் குற்ற உணர்வுடன் இருப்பர். இதனை ஒரு சாதாரண மனித இயல்பு என்ற அடிப்படையில் புரியவைக்க வேண்டும். மன்னிப்பு கேட்க விரும்பினால் மன்னிப்பு கேட்கவைத்தல்.

அவரவர் கலாசார விழுமியங்களுக்கு ஏற்றவாறு இறந்தவர் சார்பாக மேற்கொள்ளப்படும் சடங்குகள் மற்றும் கடமைகளை மேற்கொள்ளும்படி தூண்டுதல் வேண்டும். பொதுவான நினைவுகூரல் மற்றும் நினைவஞ்சலிக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கும், ஏனைய இறுதி மரணச் சடங்குக் கிரியைகளிலும் பங்கு பற்ற ஊக்கமளித்தல் வேண்டும்.

ஒரு குழுவாக த் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்குரிய சந்தர்ப்பத்தினை நாம் வழங்குதல் மூலம் இழப்பினை ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலமையை ஏற்படுத்தலாம்.

(கட்டுரையாளர்: உள நல ஆலோசகர், ஆஸ்திரேலியா)

- நிஜத்தடன் நிலவன்