tamil statue copyகி. பி. 13 ஆண்டுவாக்கில் நபிகள் நாயகத்தின் பேரன் இமாம் உசேன் அவர்களின் வம்சத்தில் தோன்றிய அலாவுதீன் உத்தௌஜி என்றழைக்கப்பட்ட மார்க்க அறிஞர் இறை அழைப்பின் நிமித்தம் இந்தியாவுக்குள் வந்து கேரளம், இலங்கை வழியாக தமிழகத்தின் அதிராம்பட்டணம் வந்து பின்னர் மதுரை கோரிப்பாளையம் கிராமத்தில் தங்கி இஸ்லாத்தைப் பரப்பத் தொடங்குகிறார்.

அப்போது மதுரையில் ஆட்சியிலிருந்த கூன்பாண்டியன் இம்மகான் பற்றிக் கேள்விப்பட்டு தனக்கு இருக்கின்ற நெடுநாள் வயிற்றுவலியைத் தீர்க்க கோருகிறார். அவரும் இறைவனிடம் பிராத்தனை செய்து நீரை அருந்தக் கொடுக்கிறார். சில நாட்களில் கூன்பாண்டியனுக்கு வயிற்றுவலி குணமாகவே அகமகிழ்ந்த மன்னன் அலாவுதீன் உத்தௌஜியிடம் தங்களுக்கு என்ன செய்யவேண்டும் எனக் கேட்கிறான்.

அலாவுதீன் தன்னிடம் இருந்த 14,000 பொற்கா சுகளைக் கொடுத்து கோரிப்பாளையம், சொக்கிகுளம், பீ.பீ. குளம், கண்ணனேந்தல், திருப்பாலை, சிறுதூர், சொற்குளிப்பட்டி, சோளிக்குடி, பூனாரி உள்ளிட்ட 9 கிராமங்களைத் தனக்கு கிரையம் எழுதித்தரச் சொல்கிறார். அவ்வாறே வழங்கி செப்பேட்டுப் பத்திரத்தை எழுதிக் கொடுத்தார் கூன்பாண்டியன்.

15 ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர் மன்னர்கள் ஆட்சிக்குட்பட்டபோது நாயக்கர் மன்னர்களில் ஒருவரான வீரப்ப நாயக்கர் (1592 1595) ஆளுகையில் இருக்கும்போது அரசு ஊழியர்களுக்கும் தர்கா நிர்வாகத்திற்கும் அலாவுதீன் உத்தௌஜி அவர்களுக்கு வழங்கப்பட்ட கிராமங்கள் தொடர்பாக பிணக்கு ஏற்பட தர்கா நிர்வாகம் வீரப்ப நாயக்க மன்னரிடம் கூன்பாண்டியனது விலைப் பிரமாண செப்பேடுகளைக் கொடுக்க அதை ஏற்றுக்கொண்ட நாயக்க மன்னர் அதை மறு உறுதி செய்து கல்வெட்டு ஒன்றையும் எழுதி தர்கா நிர்வாகத்திற்கு அக்கிராமங்கள் சொந்தம் என்பதை நிறுவினார்.

(பார்க்க: மதுரை டவுன், கோரிப்பாளையம் ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீன் அவுலியா அவர்கள் வாழ்க்கை வரலாறு) இக்கல்வெட்டும் மேற்கண்ட செய்தியும் கோரிப்பாளையம் தர்காவில் காணப்படுகிறது. தமிழக அரசு தொல்லியல் துறையும் அதை அறிவிப்பு செய்து செய்திப் பலகை ஒன்றையும் வைத்துள்ளது.

கூன்பாண்டியனும் திருஞானசம்பந்தரும்

பக்தி இலக்கிய கால மூலவர் என்றும் சமண பவுத்த புறச்சமயங்களைத் தமிழின் துணை கொண்டு விரட்டியத்தவர் என்றும் சைவ வரலாற்று அறிஞர்களால் விதந்தோதப்படும் ஞானசம்பந்தர் பாண்டிய நாட்டில் தழைத்தோங்கி நிற்கும் சமணத்தை வீழ்த்தி சமண ஆதரவாளரான கூன்பாண்டியனின் சூலை நோயை விரட்டி அவரை சைவத்தினராக மாற்றியதாகத் திருத்தொண்டர் புராணம் கூறுகிறது.

திருஞான சம்பந்தரின் காலத்தைப் பொருத்தவரை அவரை ஏற்போரும் மறுப்போரும் 7 ஆம் நூற்றாண்டு என்றே சொல்லி வருகின்றனர். ஆனால் திருத்தொண்டர் புராணம் எனும் பக்தி இலக்கியங்கள் தவிர அவரது காலத்துக்கு துணைச் சான்றுகளாக கல்வெட்டுகள், செப்பேடுகள், வழக்காற்றுக் கதைகள் என்பது போன்ற புறச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.

கிடைக்கும் சான்றுகளைப் பொருத்தவரை மகேந்திர பல்லவனுக்கு கிடைக்கும் சான்றுகள் வழியே திருநாவுக்கரசரும் அவரின் சமகாலத்தவராக புராண வழியாக திருஞான சம்பந்தர் சொல்லப்படுகிறரே தவிர வேறு ஏதுமில்லை. ஆனால் ஞான சம்பந்தரால் குணப்படுத்தப்பட்டதாக அறியப்படும் கூன்பாண்டியனுக்கு கல்வெட்டுச் சான்றுகள் செப்பேடுகள் கிடைத்துள்ளன.

ஆனால் அவை 13 ஆம் நூற்றாண்டு என்பதாக அறியத் தருகின்றன. பல ஆயிரம் தேவாரப்பாடல்கள் ஞானசம்பந்தரால் பாடப்பட்ட போதும் ‘வாழ்க அந்தணர்’ எனத் தொடங்கும் தேவாரப்பாடல் ஒன்று முதன்முதலாக உடையார் பாளையம் கோவிந்தபுத்தூரில் உத்தமசோழன் காலத்தில் கட்டப்பெற்ற சிவன்கோயிலில் உள்ள மூன்றாம் இராஜேந்திரன் கல்வெட்டில் (கி.பி. 1248) காணப்படுகிறது.

(கா. இராஜன், கல்வெட்டியல், பக். 22.) சைவத்தின் தொன்மையை முன்கொண்டு செல்வதற்காக சமயக்குரவர்களின் பாடல்ளை முன்னிழுத்துக் செல்லப்படுகிறதே தவிர வரலாற்றுச் சூழலுடன் எவ்விதத்துடனும் அப்பாடல்கள் பொருந்திப் போகவில்லை.

பக்தி இலக்கியத் தேவைக்கான காலச்சூழலைப் பொறுத்தவரை சோழர் எழுச்சிக் காலத்துக்கான பண்பாட்டு இயக்கமாக செயல்பட்டது என்கிற வரையறுப்பின்படி ஞானசம்பந்தரை அக்காலத்திற்கு முன்கொண்டு செல்ல காரணம் ஏதுமில்லை.

ஞானசம்பந்தர் காலத்து கூன்பாண்டியனும் அலாவுதீன் உத்தௌஜி காலத்து கூன்பாண்டியனும் வெவ்வேறு அரசர்களாக இருக்க முடியாதா என்ற கேள்வி எழலாம். கூன்பாண்டியன் என்ற பெயர் அவர் முதுகு கூன் விழுந்திருந்ததால் கூன்பாண்டியன் எனப் பெயராயிற்றே தவிர அவரது இயற்பெயர் நெடுஞ்செழியன்.

அதேநேரத்தில் 7 ஆம் நூற்றாண்டில் கூன்பாண்டியன் என்ற பட்டப்பெயர் கொண்ட மன்னர் ஒருவர் இருந்து அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டு வேற்றுமதத்தை சேர்ந்த ஒருவர் அவரை குணமாக்கியது போல 13 ஆம் நூற்றாண்டில் கூன்பாண்டியன் என ஒருவர் இருந்து அவருக்கும் வயிற்று வலி ஏற்பட்டு பிற மதத்தவரால் குணமாக்கப்பட்டார் என்று வரலாற்றில் ஏற்பட்டிருக்க இயலாது என்றே நம்ப வேண்டும்.

கோரிப்பாளையம் தர்கா கல்வெட்டை ஆராய்ந்த தொல்லியலாளர் திரு. வெ. வேதாசலம் அவர்கள் 7 ஆம் நூற்றாண்டு கூன்பாண்டியன் இவர் அல்ல என்றும் திருப்பு பகுதி பவித்திர மாணிக்கம் என்ற பகுதியில் சோவாச் சாமந்தப்பள்ளி என்ற பள்ளிமாறவர் மகன் சுந்தரபாண்டியன் (1238 - 1255 ) என்கிறார்.

ஆனால் இம்மன்னனுக்கு கூன்பாண்டியன் என்ற பட்டப்பெயர் குறிப்பிடப்படவில்லை. கல்வெட்டில் சுந்தரபாண்டியன் எனக் குறிப்பிடப்படாது கூன்பாண்டியன் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும். ஆகவே கூன்பாண்டியன் என்கிற மன்னன் 13 ஆம் நூற்றாண்டவராகத்தான் இருக்க வேண்டும் என்பது கருதுகோளாக கொள்ள முடிகிறது.

கூன்பாண்டியன் மற்றும் அக்கால சுந்தரபாண்டியன் என்ற பெயர் கொண்ட பல மன்ன களது வரலாறு ஆய்வுக் குரியதாகிறது.

வரலாறு நெடுகிலும் இது போன்று சமயப் பூசல்களின் பின்னே எழுதப்படும் புனைகதைகளில் இன்னொரு மதத்தின் புகழ்ச் செய்திகளை தங்களது மதத்தினதாக சொல்லப்படுவது இந்திய தமிழக சமய வரலாற்றுச் செய்திகளில் ஏராளமாகக் காணப்படுகின்றன.

சமணத்தின் பல கதைகளை வைதீகம் எடுத்தாண்டது போல இசுலாத்தின் செய்திகளையும் சைவம் எடுத்திருக்கலாமோ என்ற ஐயத்தை கூன்பாண்டியன் பற்றிய செய்திகள் எண்ண வைக்கிறது.

புகழ் பெற்ற மாபலிச் சக்ரவர்த்தி கதையை மாற்று வரலாறு நோக்கில் எழுதிச் செல்லும்போது அயோத்திதாசர் பாணாழ்வார் பற்றியும் சிறிய அளவில் எழுதிச் செல்கிறார். மாபலிச் சக்கரவர்த்தியின் மகன் பெயர் திருப்பாணர். திருப்பாணர் பௌத்த அரசராகவும் மகள் அலர்மேலு தங்கை பௌத்த பிக்குணியாகவும் இருந்தனர்.

திருப்பாணர் ஒரு கட்டத்தில் இல்லறம் துறந்து பௌத்தநெறியில் நின்று திரிசிரபுரம் அழகர் என்னும் அரங்கர் சங்கத்தில் சேர்ந்தான். அதாவது இன்றைய ஸ்ரீரங்கத்திலுள்ள இன்றைய ரங்கர் கோயிலான அரங்க விகாரில் இருந்த சங்கத்தில் சேர்ந்தான்.

அக்காலத்தில் பல இடங்களிலும் பௌத்தத்தைக் கைப்பற்றி முன்னேறி வந்த மிலேச்சர்களான வேடதாரி பிராமணர்கள் பாணன் பற்றி கதையும் மதிப்பும் மக்களிடம் வழங்கி செல்வாக்கு பெற்றிருந்ததால் அவற்றை முற்றிலும் நிராகரிக்காமல் முடியாமல் அவற்றை திரித்து தங்கள் நோக்கத்தையும் அதில் கலந்து கைப்பற்றிப் பரப்பினார்கள் (முனைவர் ஸ்டாலின் இராஜாங்கம், வரலாறாக்கப்படும் புனைவுகள், மானுடம், மே ஜுலை, பக். 15) என்று சொல்வதையும் மேற்சொன்ன செய்திகளுடன் இணைத்துப் பார்க்கவேண்டும்.

பாண்டிய மன்னனுக்காக வாங்கி வந்த பரிகள் இரவில் நரியான கதை மாணிக்கவாசகர் காலத்தில் நடந்தது அல்ல என்றும் அக்கதை அதற்கு முன்பிருந்தே தமிழகத்தில் வழக்கில் இருந்து வந்த கதை என 'மாணிக்கவாசர்: காலமும் கருத்தும்' என்ற தனது ஆய்வு நூலில் தெரிவிக்கிறார் முனைவர் பத்மாவதி.

பிரபலமான கதைகளை பின்னாளில் வைதிக சமயத்தைச் செல்வாக்குப் பெற வைக்கும் நோக்கில் நாயன்மார்கள் ஆழ்வார்களின் வரலாற்றை தொகுக்கப்படும் காலத்தில் இணைத்து விடுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருவது கவனிக்க முடிகிறது.

கௌதம புத்தரின் எதிர்ப்பாளர்களாக ஆறு குருமார்கள் இருந்தார்கள். அவர்கள் பூரணகாசிபர், மக்கலிகோசலர், அஜித கேசம்பளி, பகுட கச்சாயனர், நிகந்த நாத புத்திரர், சஞ்சய பெலட்டிபுத்திரர் என்பவர்கள்.

இந்த அறுவரும் வைசாலி நகரத்தாரால் தங்கள் நாட்டில் ஏற்பட்டிருந்த கொள்ளை நோயைத் தீர்ப்பதற்காக வரவழைக்கப்பட்டு அவர்களால் அந்நோய் நீக்கப்படாமல் போகவே, பகவான் புத்தரை வைசாலி நகரத்தார்கள் அழைக்க அவர் அங்கு சென்று அந்நோயைப் போக்கினார்.

(மயிலை சீனி. வேங்கடசாமி, கௌதம புத்தர், பக். 149) இச்செய்தியில் இருந்து பல்வேறு அவைதிக மதப்பிரிவினரும் நோய்களைக் குணப்படுத்துவது என்பதைத் தத்தமது அறநெறிகளைப் பரப்புவதற்கான உத்திகளாக வைத்திருந்தனர் என்பதும் அவைதிக மதப்பிரிவினரின் பேரறங்களில் ஒன்றான மருத்துவம் சார்ந்த அறநெறிப் பரப்புரைகள் மூலம் ஏற்பட்ட செல்வாக்கை வீழ்த்துவதற்கு பின்னாளில் அச்செய்திகளை தத்தமது வைதிக மதப் பரப்புதலுக்கு ஏற்பத் திரிபு செய்து பரப்பி வந்ததும் மேற்கண்ட செய்திகள் மூலம் அறிய முடிகிறது.

- யுகன்