இயற்கைக்கும் மனித சமூகத்திற்கும் இடையிலான  முரண்பாடு அண்மைக்காலமாக மிகத் தீவிரமாக புறவடிவில் வெளிப்பட்டு வருகின்றன. உலகமயம் தாராளமயம் தனியார்மயக் கட்டத்தில் இம்முரண்பாடு மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. காடழிப்பு, உயிரினங்களின் வீழ்ச்சி, காலநிலை மாற்றம், தண்ணீர் சிக்கல், காற்று மாசு, ஆலைக் கழிவுகள், வேளாண்மை சிக்கல், அணு உலை ஆபத்து என நமது புற உலகம் மிகப்பெரும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.

இச்சூழலில்தான் அண்மைக்காலமாக  சூழலியல் அரசியல் மீதான விவாதம் பரவலாகியுள்ளது. நாமும் நமது பூமியும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறோம் என்ற உணர்வு தீவிரம் பெறத் தொடங்கியுள்ளது. இந்த சிக்கலுக்கான பல காரணங்களும் அதற்கான  தீர்வுகளும் பேசப்படுகின்றன. மக்கள் தொகை பெருக்கம் ஒரு காரணம் என்றும், தனி நபர் சுய ஒழுக்கமின்மை மற்றொரு காரணம் என்றும் பேசப்படுகின்றன. மேலும் முறையான சட்ட விதிகள் கடைபிடிக்கப்படாமைதான் சிக்கலுக்கு மையக் காரணம் என்றும் மற்றொரு சாரர் வாதம் செய்கின்றனர். இவ்வகையான கருத்தியல்களே பொதுவாக சூழலியல் அரசியல் விவதாங்களில் செல்வாக்கு செலுத்துகிற கருத்தியலாக உள்ளது.

lenin engels marx

இந்த விவாதங்களை நாம் வராலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தின்  அடிப்படையில் விமர்சனம் செய்வதன் வழியேதான் சூழலியல் குறித்த மார்க்சிய கண்ணோட்டத்தை வளர்த்தெடுக்கவும் நிலை நிறுத்தவும் முயற்சிக்கிறோம். இயற்கைக்கும் மனிதனுக்குமான முரண்பாட்டை வரலாற்று வளர்ச்சிப் போக்கில் வைத்து பேசுவது, குறிப்பாக வர்க்க கண்ணோட்டத்தில் பகுப்பாய்வதே இதன் அர்த்தமாகும்.

ஆனால் சூழலியல் அரசியல் குறித்த மார்க்சிய கண்ணோட்டத்தை இந்திய நிலப்பரப்பில் விவாதிப்பது  அவ்வளவு எளிதான விஷயமாக இருக்கவில்லை. ஏனெனில் கடந்த காலங்களில் சோவியத் ரஷ்யாவில் ஏற்பட்ட மோசமான சூழலியல் சீர்கேடுகள், குறிப்பாக ஆரல் கடலை வற்றச் செய்தது, பைக்கால் ஏரி சீர்கேடு. செர்நோபில் அணு உலை விபத்து போன்ற சூழலியல் படுகொலை நிகழ்வுகளானது மார்க்சிய சூழலியலை வளர்த்தெடுப்பதற்கு முட்டுக் கட்டைகளாகின.

மேலும், இந்திய பாராளுமன்ற கம்யூனிஸ்ட்களின் இயந்திரத்தன தொழில்மய கொள்கையும் முட்டுக் கட்டைக்கு மற்றொரு காரணமாகின. தீவிர தொழில்மயமாக்கலால்தான் பாட்டாளி வர்க்கம் வளரும் என்ற கண்ணோட்டமானது சூழலியல் கரிசனத்தை பின்னுக்குத் தள்ளின. இந்திய பாராளுமன்ற கம்யூனிஸ்ட்களின் “புரோமோதியஸ்” நிலைப்பாடு மார்க்சிய சூழலியல் விவாதத்திற்கு பின்னடவை ஏற்படுத்தின.

கூடங்களும் அணு உலை திட்டம் தொடர்பான இந்திய பாராளுமன்ற கம்யூனிஸ்ட்களின் தொடக்ககால நிலைப்பாடு நாமறிந்தவைதான். இவை ஒருபுறம் இருக்க, மார்க்சிய மூலவர்களான  மார்க்சும் எங்கெல்சுமே மனித மைய பார்வை கொண்டவர்கள்தான்; இயற்கையை மனிதன் ஆளுகை செய்து கட்டுப்படுத்த வேண்டும் என்ற விரும்பியவர்கள்தான்; இயற்கையை மனிதனுக்கு அடிபணிய வைக்கவேண்டும் என்றவர்கள்தான் என்ற தவறான வாதமும் கட்டமைக்கப்பட்டன,

இவ்வாறாக,மேற்கூறிய காரணங்களானது, சூழலியல் குறித்த மார்ச்க்சிய கண்ணோட்ட விவாதங்களுக்கு பின்னடைவாக அமைந்தன. அரசியல் நீக்கம் பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் முதலாளித்துவ சீர்த்திருத்தல்வாதிகளின் கருத்துக்கள் செல்வாக்குப் பெற்றன.

எனவே, புரட்சிக்கு பிந்தைய சோவியத் ரஷ்யாவில் நடந்தது என்ன? மார்க்சு எங்கெல்சுசின் சூழலியல் கரிசனங்கள் யாவை? என்பது குறித்து விவாதிப்பது அவசமாகியது.

1

சோவியத் ரஷ்யாவின் சூழலியல்:

சோவியத் ரஷ்யாவின் சூழலியல் வரலாற்றை நாம்  மூன்று காலகட்டங்களாக பிரிக்கலாம்.

1917-30 வரையிலான காலகட்டம்:

சரியாக நூறாண்டுகளுக்கு முன்பாக சோவியத் ரஷ்யாவில் போல்ஷ்விக் கட்சியின் தலைமையில்  நடைபெற்ற சோசலிசப் புரட்சியானது, உலகின் முதல் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை நிறுவியது. போல்ஷ்விக் தலைமையிலான ஆட்சி தலைமைக்கு வந்தாலும் மூன்றாண்டு காலம் கடுமையான சிவில் யுத்தத்தை எதிர்கொண்டது. சுற்றிலும் ஏகாதிபத்திய முகாம்களின் சுற்றிவளைப்புகள், உள்நாட்டு எதிர்புரட்சியாளர்கள் என இளம் பாட்டாளி வர்க்க அரசு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டது. இந்த சூழ்நிலையில்தான் இயற்கை பாதுக்காப்பிற்கு பெரும் முன்னெடுப்புகளை லெனின் தலைமையிலான அரசு மேற்கொண்டது.

லுனகார்ச்கி தலைமையிலான கல்விக்கான மக்கள் கமிசார், இயற்கை பாதுகாப்பு குழுவை நிறுவியது. செபோவேட்னிக் எனும் இயற்கை பாதுகாப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இயற்கை வளம் மிக்க பகுதிகளை அப்படியே விட்டு விடுவது, அப்பகுதியில் வேட்டையாடுவது தடை செய்யப்பட்டது. இயற்கை அறிவியல் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வது என்ற நோக்கில் செபோவேட்னிக் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. 1933 ஆம் ஆண்டில் சுமார் 33-செபோவிட்னிக் அமைக்கப்பட்டன. இதன் பரப்பளவு சுமார் 2.7 மில்லியன் ஹெக்டேர் ஆகும். ஸ்டான்ஷிகி என்பார்தான் செபோவிட்னிக் திட்டத்தை பெரிதும் ஆதரித்தார். இவர்தான் சோவியத் சோவியத் ரஷ்யாவின் முதல் சூழலியல் இதழின் ஆசிரியரும்கூட.

இந்த காலக்கட்டத்தில் சோவியத் சூழலியல் அறிஞர்களின் அற்புதமான ஆய்வுகள்  வெளிவந்தன. 1926 இல் உயிர்ச்சூழல் (Biosphere) எனும் நூலை சுகசெவ் மற்றும் வெர்னாட்ஸ்கி வெளியிட்டனர். உயிரினங்களின் தோற்றம் குறித்த சிறந்த  ஆய்வு நூல் இது. பாரம்பரிய விதைகளின் தோற்றம் மற்றும் பரவல், பரிணாமம் குறித்த ஆய்வை வாவிலோவ் மேற்கொண்டார். அதேபோல புகாரின், உர்னவோச்கி போன்றோர்களும் இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு குறித்த ஆய்வையும் இயற்கை அறிவியலையும்  வளர்த்தெடுத்தனர்.

1930-50 காலகட்டம் :

இந்த கட்டத்தில் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் ரஷ்ய அரசானது தீவிர தொழில்மயத்தை ஊக்குவித்தது. தொழில்நுட்பம், அதிவேக வளர்ச்சி என்பதே தாரக மந்திரமாகியது. இரண்டாம் உலகப் போரானது தொழில்மயத்தை மேலும் தீவிரமாக்கியது. கனரக தொழில்மய ஊக்குவிப்பு நடவடிக்கைகள், கிராமப்புற விவசாயத்தை பலி கொண்டது. செபோவிட்னிக் திட்டங்கள் படிப் படியாக குறைக்கப்பட்டன. புகாரின்,வாவிலோவ் போன்றவர்கள் ஸ்டாலினுடன் முரண்பட்டனர். ஒரு கட்டத்தில் இவர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர்.

இவர்களின் மரணம் மற்றும் தீவிர கனரக தொழில்மய ஊக்குவிப்புகள் சூழலியல் கரிசனத்தை பின்னுக்கு தள்ளின.

1950-90 காலகட்டம்:

ஸ்டாலின் மரணத்திற்கு பிறகு நிலைமை மோசமாகியது. ஸ்டாலின் இறந்த ஆறாவது நாளில் வனத்துறை அமைச்சகம் கலைக்கப்பட்டது. சூழலியல் பாதுகாப்பு நடைமுறை விதிகள் தளர்த்தப்பட்டன. கெடுபிடி காலகட்டம், கண்மூடித்தன வளர்ச்சியை துரிதப்படுத்தியது. மலேன்கோவ் மற்றும் குருஷேவ் காலகட்டத்தில் நிலைமை மோசமாகியது.

ஆரல் கடலின் வரத்து கால்வாய்களும், நீரோடைகளும் தெற்கு யுரேசியவிற்கு திருப்பியதால் பெரும் கெடு நேர்ந்தது. 1986 ஆண்டில் ஏற்பட்ட செர்நோபில் அணு உலைவிபத்தானது பெரும் சூழல் கேடுகளை உருவாக்கியது.

இவ்வாறான பெரும் சூழலியல் சீர்குலைவுகளுக்கு எதிராக சூழலியல் போராட்டங்கள் ரஷ்யாவில் தீவிரம் பெறத் தொடங்கின. பல சூழலியல் அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்தன. சூழலியல் கரிசனம் மீதான விவாதங்கள் முன்னுக்கு வந்தன.

2

சோவியத் பொருளாதாரம் குறித்த மாவோவின் விமர்சனம்:

இவ்வாறாக சோவியத் சூழலியல் வரலாறானது ஆக்கப்பூர்வமுடன் தொடங்கி பின்பு சீர்குலைவுகளுக்கு உள்ளானது. ஆக்கப் பூர்வ முன்னெடுப்புகளும் போதுமானவைகளாக இல்லை என்பதையும் நாம் இங்கு விமர்சனத்துடன் அணுக வேண்டியவர்களாக உள்ளோம்.

சோவியத் ரஷ்யாவின் சோசலிச கட்டுமானத்தில் ஏற்பட்ட தவறுகளை, சோவியத் அரசு மற்றும் சோவியத் பொருளாதார கொள்கையை விமர்சனப்பூர்வமுடன் பகுப்பாய்வு செய்வது அவசியமாகிறது. ஒரு முதாளித்துவ அறிவிஜீவியின் பார்வையிலோ அல்லது ஒரு திருத்தல்வாதியின் பார்வையிலோ அல்லாமல், சோசலிசக் கட்டுமானத்தில் ஏற்பட்ட தவறுகளை மார்க்கிய அடிப்படையில் நாம் மறு ஆய்வு செய்யவேண்டியது அவசியமாகிறது.

மாவோவின் சோவியத் பொருளாதாரம் மீதான விமர்சனம் அதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். 1950 களில் பத்து பெரும் உறவுகள் மற்றும் சோவியத் பொருளாதாரம் மீதான விமர்சனக் குறிப்புகள் என்ற கட்டுரைகளில் சோவியத் ரஷ்யாவின் சோஷலிசக் கட்டுமானத்தில் ஏற்பட்ட தவறுகளை மாவோ சுட்டிக் காட்டுகிறார்.

இத்தவறுகளை நாம் ஆழ்ந்த அக்கறையுடன் பயில்வது அவசியமாகும். சோவியத் பொருளாதாரக் கொள்கையானது, கனரகத் தொழில்துறைக்கும் விவசாயம் மற்றும் சிறு குறு தொழில்துறைக்குமான உறவை சரியாக கையாளவில்லை என்பது மாவோ முன்வைத்த முக்கியமான விமர்சனமாகும். சோவியத் பொருளாதாரமானது, உற்பத்தி சக்திகளுக்கு முன்னுரிமை வழங்கியதே அன்றி, உற்பத்தி உறவுகளுக்கு முக்கிய இடம் வழங்கவில்லை என்பது மாவோவின் விமர்சனமாகும்.

இதையே சோவியத் அரசு ஒற்றைக் காலில் நடக்கிறது என்றார் மாவோ. சீன நடைமுறையில் இந்த தவறுகளை களைந்து கிராமத்திற்கும் நகரத்திற்குமான இடைவெளியை குறைப்பதற்கு மாவோ முயன்றார். மாவோவின் காலத்திற்கு பின்பாக நிலைமை மோசமாகிய கதை நாமறிந்தவைதான்.

இன்றோ சோசலிச நாடுகள் என சொல்லிக்கொள்கிற நாடுகளில்தான் சூழலியல் சிக்கல்கள் அதிகமாக உள்ளது என்ற சூழலியல் அறிஞர் இயான் ஆங்கசின் சொல்தான் நினைவுக்கு வருகிறது!

3

மார்க்ஸ் எங்கெல்சின் சூழலியல் பங்களிப்பு:

மார்க்ஸ் எங்கெல்ஸ் வாழ்ந்த காலகட்டங்களில் சூழலியல் சிக்கல்கள் பிரதான சிக்கல்களாக முன்னுக்கு வரவில்லை. அவர்கள் காலத்தில், முதலாளியத்தின் வளர்ச்சியும், இந்த வளர்ச்சிப் போக்கில் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க போராட்ட உணர்வுகள் கருக்கொண்டு வருவதை ஆழ்ந்த அக்கறையுடன் பகுப்பாய்வு செய்துவந்தனர். பாட்டாளி வர்க்க போராட்டத்தின் வெற்றியில், ஒட்டுமொத்த சமூக விடுதலையை கண்டனர். இதற்கு தடையாக உள்ள பிற்போக்கு கருத்தியலை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இந்த விமர்சனகளின் வழியே மனிதனுக்கும் இயற்கைக்குமான ஊடாட்டம் குறித்த  மார்க்ஸ் எங்கெல்சின் கண்ணோட்டத்தை நாம் புரிந்துகொள்ள இயலும்.

இயற்கை ஆராதிக்கிற “உண்மையான சோசலிஸ்டுகள்” மீதான மார்க்ஸ் எங்கெல்சின் விமர்சனம்:

உண்மையான சோசலிஸ்ட்கள் என்ற பெயரில் ஜெர்மனியில் அறிவுஜீவி எழுத்தாளர்கள்  குழு ஒன்று இயங்கிவந்தது. இயற்கையை வழிபாட்டு பொருளாக ஆராதிப்பது, சுத்தமான இயற்கையுடன் மனிதர்கள் இணைக்கப்பட வேண்டும் என்பது போன்றவை இவர்களின் கொள்கைகளாக இருந்தன. இயற்கையை வரலாறு சாரதா வெறும் அருவமாக பார்க்கிற இயற்கை வழிபாட்டுப் போக்கை மார்க்ஸ் கடுமையாக விமர்சனம் செய்கிறார்.

இயற்கையின் ஓரங்கமாக மனிதன் உள்ளான். இயற்கையின் விளைபொருளாக மனிதன உள்ளான். அதே நேரத்தில் மனிதன் ஒரு சமூக உயிரியாகவும் உள்ளான். தனது உற்பத்தி நடவடிக்கைகள் மூலமாக அவனது சொந்த சமூகத்தை அவனது உழைப்பின் மூலமாக  படைத்துக்கொள்கிறான். எனவே மனிதன் இயற்கை உயிரியாகவும் சமூக உயிரியாகவும் உள்ளான் என மார்க்ஸ் எழுதுகிறார்.

இயற்கைக்கும் மனிதனுக்குமான பொருள் பரிமாற்ற உறவின் (உழைப்பின் அடிப்படையிலான) அடிப்படையில், இயற்கையும் மனிதனையும் பிரித்துப் பார்ப்பது அவசியம் என்றும், அவ்வாறு காணத் தவறுகிற பட்சத்தில் ஒவ்வொரு கல்லையும், மனிதனையும் சமமாக பார்க்கிற நேரிடும் என்றும் எழுதுகிறார்.

இந்தப் போக்கு இன்றும் தொடர்வதை நாம் காணமுடிகிறது. இயற்கையை வழிபடுகிற பொருளாக ஆராதிப்பது என்ற கண்ணோட்டமானது, இயற்கையை அழிக்கிற சக்திகளை காப்பதற்கே பயனளிக்கின்றன. ஜக்கி சாமியார் அதற்கொரு சிறந்த உதாரணம்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்சும் எங்கெல்சும்:

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முதல் பகுதியானது, முதலாளியத்தின் பிரம்மாண்ட வளர்ச்சி குறித்த வரலாற்றை விளக்குவதாக இருக்கும். அதில், முதலாளிய சமூகமானது எவ்வாறு தனது பிரம்மாண்ட மூலதனக் குவிப்பால் கிராமத்தை நகரத்திற்கு அடிமையாக்கியது என மார்க்சும் எங்கெல்சும் விளக்கியிருப்பார்கள். இதற்கு முன்னரே இங்கிலாந்தில் தொழிலாளர் வர்க்கத்தின் நிலை என்ற நூலில், தொழில் நகரங்களில் எவ்வாறு காற்றோட்டம் இல்லாத அழுக்கடைந்த வீடுகளில் சுகாதாரக் கேட்டோடு  தொழிலாளர்கள் வாழ்கிறார்கள் என எங்கெல்ஸ் எழுதியிருப்பார்.

நகரத்திற்கும் கிராமத்திற்குமான முரண்பாடு முதலாளிய சமூகத்தில் தீவிரம் பெறுவது குறித்தும், நகர்ப்புற தொழிலாளர்களும் கிராமப்புற விவசாயிகளும் எவ்வாறு பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் விளக்கப்பட்டிற்கும். கிராம மக்கள் உலகத் தொடர்பு அற்றவர்களாக, நகர மக்களை சுகாதாரக் கேட்டுடன் வாழ வைக்கிற இந்த அமைப்பின் முரண்பாடுகள் குறித்த மார்க்ஸ் எங்கெல்சின் விளக்கங்கள் நூற்றம்பைது ஆண்டுகள் கடந்தும் மிகப் பொருத்தமாக உள்ளன. இன்று நகரத்திற்கும் கிராமத்திற்குமான முரண்பாடு சூழலியல் சிக்கல்களின் மையக் காரணியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவைகள் போக மால்தசின் மக்கள் தொகை கோட்பாடு மீதான மார்க்ஸ் எங்கெல்சின் விமர்சனம், பிரயுதானின் இயந்திரகதியான புரோமிதினியசம் மீதான மார்க்சின் விமர்சனம், முதலாளித்துவ விவசாயத்தின் மண் வளக் கொள்ளை குறித்த மார்க்சின் விமர்சனம் என பல எடுத்துக் காட்டுகளை நாம் இங்கு குறிப்பிடலாம்.

மார்க்ஸ் எங்கெல்சின் சூழலியல் மைய விவாதம் அனைத்தும் இயற்கையிலிருந்து  மனிதன் அன்னியமாவது என்ற முரண்பாட்டை தீர்ப்பதை ஆதாரமாகக் கொண்டவை. அவ்வகையில் மார்க்சும் எங்கெல்சும் இப்புவியை முதலாளிய சமூகத்தின் காட்டுமிராண்டித் தன சுரண்டலில் இருந்து நம்மையும் இயற்கையையும் காத்துக் கொள்ள, கருத்தியல் ஆயுதம் வழங்கிய முதல் சூழலியல் முன்னோடிகள் ஆவார்கள்!

ஆதாரம்: