உலக அளவில் சமூக, அரசியல் மாற்றங்கள் நிகழும் போதெல்லாம் அது இந்தியாவிலும் நிகழ்ந்து விடாதா என்று மக்களும், அரசியல் நோக்கர்களும் எண்ணுகின்றனர். கருப்பரான பாரக் ஒபாமா, முதன் முறையாக அமெரிக்காவின் அதிபராக வெற்றி பெற்றிருப்பதையொட்டி, இத்தகைய விவாதங்கள் இங்கும் எழுந்துள்ளன. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் அதிபராகப் பதவியேற்ற போதும், இதே போன்றதொரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மண்டேலா அன்று முன்வைத்த லட்சியங்களுக்கானப் போராட்டங்கள், இன்றளவும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சரான கண்டலிசா ரைஸ் என்ற கருப்பரின் காலத்தில்தான், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை ஆக்கிரமித்து, அந்நாட்டின் இறையாண்மையை குழி தோண்டிப் புதைத்து விட்டு, அந்நாட்டு வளங்களைக் கொள்ளையடித்து- இன்று அந்நாடுகள் நிரந்தர சுடுகாடுகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இம்மனித விரோத செயல்களுக்கு கோபி அன்னானும் மவுன சாட்சியாகவே இருந்தார். இத்தகைய கொடூரங்களை தற்காலிகமாக திசை திருப்பி, உலக அரங்கில் ஏகாதிபத்தியம் தன்னை ஜனநாயக வாதியாக காட்டிக் கொள்வதற்கு "ஒபாமா'க்கள் இரையாக்கப்படலாம். எனவே, இத்தகைய அடையாளப் பிரதிநிதித்துவங்கள், அடிப்படையான சமூக, அரசியல் மாற்றங்களை நிகழ்த்தி விடாது.

"இந்தியாவில் ஒரு தலித் பிரதமராகப் போகிறார்' என்ற குரல் முன்னெப்போதையும்விட, தற்பொழுது உரக்கக் கேட்கிறது. முதல்வர் மாயாவதியை முன்னிறுத்தி, பகுஜன் சமாஜ் கட்சி இப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. உத்திரப்பிரதேசத்தில் ஏற்கனவே மும்முறை முதல்வராக இருந்த மாயாவதி, இம்முறையும் முதல்வராகப் பதவி வகிக்கிறார். ஆனால் அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றம்தான் என்ன? தலித்துகள் பொருளாதார நிலையில் சற்று உயர்வதாலும், அரசியல் அரங்கில் ஓரளவுக்கு அறியப்படுவதாலுமே-அவர்கள் சமூக ரீதியாக முன்னேறி விட்டதாகப் பொருள் கொள்ளுவது மாபெறும் தவறு. தலித் மக்கள் சாதி ரீதியாக, சமூக ரீதியாகப் பின்தங்கி இருக்கும்வரை, எவ்வளவு பெரிய பொருளாதார மாற்றங்களோ, அரசியல் மாற்றங்களோ-சமூக மாற்றத்தைத் தன்னளவிலேயே கொண்டு வந்து விடாது.

எது சமூக மாற்றத்தை உருவாக்கும் என்பதற்கு, ஆழமான ஆய்வுகள் கூட தேவையில்லை. இந்து சாதிய சமூக அமைப்புக்கு எதிராக டாக்டர் அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு தளங்களில் நடத்திய இடையறாத போராட்டங்களை உற்று நோக்கினாலே போதும். அண்மையில் பகுஜன் சமாஜ் கட்சி, தமிழகத்தில் கால் பதிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் அக்கட்சியின் செயல்திட்டம் என்ன? சாதிரீதியாக பிரபலமானவர்களை கட்சியில் சேர்ப்பது. கொள்கை? மயிலாப்பூர் சட்டமன்ற (அ.தி.மு.க.) உறுப்பினர் எஸ்.வி. சேகர் என்ற பார்ப்பனர் சொல்கிறார்: “மாயாவதி கட்சியினர் என்னிடம் பேசினர். நான் மாயாவதியையும் சந்திப்பதாக இருக்கிறேன். பகுஜன் சமாஜ் கட்சி 25 முதல் 30 சதவிகித இடங்களை ‘பிராமணர்'களுக்குத் தரவிருக்கிறது. இது உண்மை எனில், நான் இதை கண்டிப்பாகப் பரிசீலிப்பேன். சமூகத்தில் ‘பிராமணர்'கள் ஒதுக்கப்படுகிறார்கள்; தலித்துகள் ஒடுக்கப்படுகிறார்கள். எனவே, இவ்விரு சமூகங்களும் கைகோக்க வேண்டும்'' (‘இந்தியன் எக்ஸ்பிரஸ்' 3.12.2008). இத்தகைய போக்குகள் சமூகப் பேரழிவுக்கே வழிவகுக்கும்.

அடுத்து, இந்திய ஆட்சிப் பணியை விட்டு, பகுஜன் சமாஜ் கட்சியின் முதன்மைப் பொதுச் செயலாளராகி இருக்கும் ப. சிவகாமி, பெண்கள் அய்க்கியப் பேரவையும் (அவர் தொடங்கியுள்ள அமைப்பு) ‘தினமலர்' நாளிதழும் இணைந்து- ‘கிராமப் பெண்கள் இணை ஒலிம்பிக் பந்தயம்' என்ற நிகழ்வை இலக்கியப் போட்டிகளுடன் மாவட்டம் தோறும் நடத்தி வருகிறார்கள்'' (‘புதிய கோடாங்கி') என்று அறிவித்துள்ளார். ‘தினமலர்' என்ற ஆர்.எஸ்.எஸ்.சார்பு நாளேட்டுடன், ஒரு தலித் இயக்கத்தை இணைத்து செயல்படுவது, இம்மக்களுக்கு இழைக்கும் துரோகம் அல்லவா?

சமூக மாற்றத்தையும், தலித் விடுதலையையும் முன்னிறுத்தி கட்சியைத் தொடங்கி, அரசியல் அதிகாரம் இருந்தால் தான் இது சாத்தியமாகும் என்று மக்களை நம்ப வைத்து, பிறகு இதனால் ஏற்படும் மக்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி-அரசியல் அதிகாரத்திற்காக சில உத்திகளை (சமரசங்களை) செய்தாக வேண்டும் என்று மக்களை திசை திருப்பி, இறுதியில் சமூக மாற்றமே ஏற்படாத வகையில் ஆதிக்க சாதியினரிடமும்,மதவெறி கட்சிகளுடனும் கூட்டணியை ஏற்படுத்தி, அதற்கு அம்பேத்கரையும் சாட்சிக்கு அழைத்துக் கொண்டு, கட்சி நடத்துவதற்குப் பெயர் அரசியல் என்றால், இது பிழைப்புவாதமேயன்றி வேறென்ன?