மத மற்றும் மொழி சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் (NCRLM) அமைக்கப்பட்டதைக் குறித்தும், அது ஆய்வுக்குட்படுத்தும் கருத்துகளைக் குறித்தும் – பிற்படுத்தப்பட்ட சாதி முஸ்லிம்களும், தலித் முஸ்லிம்களும் மிகக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். மத மற்றும் மொழி சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவரான ரங்கநாத் மிஸ்ராவுக்கு "அனைத்து இந்திய பஸ்மான்ட முஸ்லிம் மகாஜ்' அமைப்பின் தலைவரான அன்வர் அலி அளித்த அறிக்கையின் இரண்டாவது பத்தியில் பின்வருமாறு குறிப்பிடுகிறார் :

“பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் / பிரிவுகள் அல்லது மதம் மற்றும் மொழி சிறுபான்மையினரிடையே, உள்ள சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் / பிரிவுகள் அல்லது பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பினர் என்பதானபெயர்கள் எல்லாம் – போலியான கற்பிதங்களாகவும், நியாயப்படுத்த முடியாத பிரிவுகளாகவும் இருக்கின்றன.

இவற்றை எந்த சட்டத்திருத்தத்தின் மூலமும் அரசியலமைப்புச் சட்டத்தின் நான்கு சட்டகங்களுக்குள்ளும் பொருத்தி விட முடியாது. அத்தகைய எந்தச் சட்டத்திருத்தமும் அரசியலமைப்புச் சட்டத்தின் 368ஆவது விதி கோருகிற சிறப்புப் பெரும்பான்மையைப் பெறக்கூடியதாக இருக்காது. ஒரு வேளை அவையில் செல்லத்தக்கது என்று அறிவிக்கப்பட்டாலும், உச்ச நீதிமன்றத்தில் அதன் மீது வழக்கு தொடரப்பட்டு, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை நெறியை மீறுவதாக இருக்கிறது என்ற அடிப்படையில் அது தடை செய்யப்படும்.

“நாட்டிலுள்ள சட்டத்துறை அறிஞர்களில் தலைசிறந்தவரும், இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியுமான தாங்கள் சட்டரீதியாக அதற்கு நேர இருக்கும் தலை எழுத்தையும், அரசால் மேற்கொள்ளப்பட்ட இதுபோன்ற நடவடிக்கைகள் எதிர்கொண்ட அனைத்தையும் நன்றாக அறிவீர்கள். பொதுப்பணம் வீணாக்கப்படுவதற்கு முன்பாக இந்நடவடிக்கையை தடை செய்வதும், இவ்வாணையத்தின் "மத மற்றும் மொழி சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம்' பணியை முடித்துக் கொள்ள அறிவுறுத்துவதும் தான் அறிவுப்பூர்வமானதாகவும், சட்டப்பூர்வமாக பொருத்தமானதாகவும் இருக்கும்.''

பொருளாதார அளவுகோலின்படி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வாதாடுகின்றவர்களின் பாதையில் மிகப்பெரிய தடைக்கற்களாக இருப்பவை – இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 340, 15(14), 16(4) ஆகிய பிரிவுகள் ஆகும். இந்தத் தடைக்கற்களை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்பதுதான் "மத மற்றும் மொழி சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம்' பரிசீலிக்கும் பொருட்களில் முதன்மையானது. இந்தப் பரிசீலனைப் புள்ளியின் படி, தங்களது பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தத் தேவையான சட்டரீதியான, நீதிமன்ற நடைமுறை சார்ந்த, நிர்வாக ரீதியிலான வழிமுறைகளை ஆணையம் தெரிவிக்க வேண்டும்.

ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, இடஒதுக்கீடு என்பது சாதியமைப்பின் விளைவு; அதன் முதன்மையான நோக்கம் அதிகாரப் பொறுப்புகளிலும், சிறப்பு உரிமைகளிலும் ஆதிக்க சாதியினரின் பிடியைப் பலவீனப்படுத்துவதே ஆகும். பொருளாதார அடிப்படையில் ஆதிக்க சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதென்பது, இடஒதுக்கீட்டின் அடிப்படைக் கொள்கைக்கே விரோதமானதாகும். பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை.

எனவே, பொருளாதார அடிப்படையில் ஆதிக்க சாதி ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடஒதுக்கீடு வழங்குவதை அனுமதிக்க வேண்டுமெனில், அரசியலமைப்புச் சட்டமே திருத்தப்பட வேண்டும். அவ்வாறு திருத்தம் செய்வது தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பாதிப்பதாக இருக்கும். இப்பெரும்பான்மை மக்களுக்கு சாதி அடிப்படையில் வழங்கப்படும் இடஒதுக்கீட்டை நிரந்தரமாக ஒழித்துக்கட்டும் நோக்கில்தான், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வேண்டும் என்று ஆதிக்க சாதியினர் விரும்புகின்றனர்.

ஓர் உழைக்கும் சாதிக்குழுவின் பொருளாதாரப் பின்னடைவுக்குக் காரணம் – முதலாளித்துவ உற்பத்தி உறவு, நிலப்பிரபுத்துவ நில உறவு, நிர்வாகத்திலுள்ள ஆதிக்க சாதியினரின் ஆதிக்கம் ஆகியவற்றில்தான் அடங்கியுள்ளது. ஆனால், உழைப்பாளிகளாய் இல்லாத ஆதிக்க சாதி குழுவினரின் ஏழ்மைக்கு, உடலுழைப்பின் மீதான அவர்களின் அணுகுமுறைதான் பெரும்பாலும் காரணமாக இருக்கிறது. மடிப்பு கலையாத வெள்ளை உடுப்புகளோடு பார்க்கும் வேலைகளைப் பெறுவதுதான் அவர்களது இயல்பான நாட்டமாக இருக்கிறது. ஓர் "உயர்சாதி'க்காரன் என்று சொல்லிக் கொள்பவன், கசப்பான இவ்வுண்மைகளை ஒத்துக் கொள்வதற்கு பதிலாக, முதலாளித்துவ உற்பத்தி உறவுகளையும், நிலவுடைமை நில உறவுகளையும் காரணம் சொல்லி, அதன் மூலம் தன்னைப் புரட்சிகரமானவனாகக் காட்டிக் கொள்வான்.

பார்ப்பனியத்தைத் தவிர இவ்வுலகில் உள்ள வேறெந்த தத்துவமும், அது எவ்வளவு பிற்போக்கானதாக இருந்தாலும் உழைப்பை இகழும் தத்துவமாக இருக்காது. பார்ப்பனியத்தை ஒரே வரியில் விளக்குவதென்றால், இப்படிச் சொல்லலாம்: உடலுழைப்பையும், உழைப்பாளிகளையும் இகழும் தத்துவமே பார்ப்பனியம். எனவே, வசதியற்ற ஆதிக்க சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதென்பது, உழைப்புக்கு விரோதமாக சோம்பேறித்தனத்திற்கும், வெறுப்பு மிக்க நடவடிக்கைகளுக்கும் பரிசளிப்பதற்குச் சமமானது.

ஏழ்மை மற்றும் பொருளாதாரப் பின்னடைவு ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிப்பதற்காக அரசின் ஆதரவு பெற்ற நடவடிக்கைகள், எண்ணற்ற அளவில் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய அரசு ஆதரவு பெற்ற நடவடிக்கைகள் – அவர்களது வறுமையையும், பொருளாதாரப் பின்னடைவையும் கவனித்துக் கொள்கின்றன. பிற்படுத்தப்பட்டோரின் பொருளாதாரப் பின்னடைவை சரி செய்ய கிரீமிலேயர் கொள்கையைத் துணைக்கு அழைத்துக் கொள்ள முடியாதது போலவே, பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு "உயர் சாதி' ஏழைகளிடையேயான வறுமையை மட்டுப்படுத்த உதவாது.

ஒரு பார்ப்பனரது அல்லது ஓர் "உயர்சாதி'யினர் என்று சொல்லிக் கொள்பவரது சாதிய உணர்வுகளும், தவறான மேட்டிமை மனப்பான்மையும், அவர் பொருளாதாரத்தில் கீழ்ப்படிநிலையில் இருக்கும்படியாக நேர்ந்துவிட்டது என்பதாலேயே இல்லாமல் போய்விடுவதில்லை. இடஒதுக்கீடு பெற்ற "உயர்சாதி' நபர், அவர் ஏழையாக இருந்தாலும், தனது சாதியைச் சேர்ந்த வசதியான சகோதரர்களுடன்தான் இணைவார்; அவ்வாறு தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராகக் கூட்டு சேர்வதன் மூலம் – இடஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கத்தையே சிதறடித்து விடுவார்.

கிரீமிலேயர், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு ஆகியவை – ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும். இரண்டுமே இடஒதுக்கீட்டில் சாதிக்கு உள்ள பங்கை நீர்த்துப் போக வைக்கின்றன. கிரீமிலேயர் அதை மறைமுகமாக செய்கிறதென்றால், பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு அதை நேரடியாகச் செய்கிறது. சாதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தில், இடஒதுக்கீட்டிற்கான அளவுகோலாக சாதி மட்டுமே இருக்க முடியும். கிரீமிலேயர் அளவுகோலைப் புகுத்தாமலேயே, ஆதிக்க சாதியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க முடியும். இதைச் செய்ய வேண்டுமென்றால், இடஒதுக்கீட்டின் உச்சவரம்பு 50 சதவிகிதத்திற்கு மேம்படக்கூடாது என தடை விதித்துள்ள உச்ச நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யும் வகையில் சட்டத் திருத்தத்தை முதலில் செய்ய வேண்டும்.

அதன் பின்னர் எல்லா பணியிடங்களையும் மக்கள் தொகையில் பல்வேறு சமூக குழுக்களுக்கும் அவர்களின் சதவிகி தத்திற்கேற்ற வகையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்தியாவின் 100 கோடி மக்கள் தொகையில், பிற்படுத்தப்பட்டவர் 60 சதவிகிதம்; தாழ்த்தப்பட்டவர் 15 சதவிகிதம்; பழங்குடியினர் 8 சதவிகிதம்; ஆதிக்க சாதியினர் 15 சதவிகிதம் என்ற அளவுகளில் உள்ளனர். ஆதிக்க சாதியினரிலும் பார்ப்பனர்கள் 4 சதவிகிதமும், பிற ஆதிக்க சாதியினர் 11 சதவிகிதமும் உள்ளனர். இடஒதுக்கீடு வரம்பிற்குள் ஆதிக்க சாதியின ரைக் கொண்டு வருவதற்கு இது ஒன்றுதான் வழி. வேறெந்த வழியும் இல்லை.

பிரகாஷ் காரத் எழுதுகிறார் : “உழைக்கும் மக்களில் ஒரு பெரும் பகுதியினர் தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர் அல்லாத சமூகங்களில் இருந்து வந்தாலும் – பொருளாதாரச் சுரண்டலுக்கும், சமூகப் புறக்கணிப்பினால் ஏற்படும் பாதிப்பிற்கும் உள்ளாகிறார்கள் என்பதை சி.பி.எம். ஏற்றுக் கொள்கிறது. ஜனநாயக இயக்கத்தின் முக்கியமானதும், முன்னேறியதுமான ஒரு பகுதியினராக இப்பிரிவினர் இருக்கிறார்கள்.

நகர்ப்புற உழைக்கும் மக்களில் முன்னேறிய பிரிவினர் மற்றும் சாதிய, பொருளாதார ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் கிராமப்புற உழைக்கும் மக்கள் திரள் ஆகிய உழைக்கும் மக்களின் இரு பிரிவினருடைய ஒற்றுமையின் அடிப்படையில்தான் – நவீன கால உழைக்கும் வர்க்கமும், உழைக்கும் மக்களின் திரண்ட இயக்கமும் முன்னேற்றம் அடைய முடியும். இடஒதுக்கீட்டிற்காக வாதாடுபவர்கள் முன்யோசனையின்றியும், மூர்க்கமான வேகத்துடன் கூடிய மனநிலையுடன் தாழ்த்தப்பட்ட/பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை நீட்டிக்க முண்டியடிப்பவர்களாகவும்; இன்றியமையா தேவையாய் இருக்கிற ஒற்றுமை குறித்து மனங்கொள்ளாதவர்களாகவும் இருக்கின்றனர்.''

இடஒதுக்கீட்டுப் பிரச்சனையில், மூர்க்கமான வேகத்துடனும் முன்யோசனை இன்றியும் பிற்படுத்தப்பட்டவர்கள் நடந்து கொண்டதே இல்லை. அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தையும் நாட்டின் சட்ட திட்டங்களையும் எப்போதும் மதித்து நடந்திருக்கின்றனர் என்பதே உண்மை. சமூக முரண்பாடுகளின் புதிர் பாதையினுள் வழியைத் தேடுவதற்குப் பதிலாக, வரலாற்றில் நிலை கொண்டுள்ளவையான எல்லா சமூக முரண்பாடுகளும் ஆவியாகி, வர்க்க ஒற்றுமையைப் பேணி வளர்க்கும் தனது பணி மிக எளிதானதாகி விட வேண்டுமென சி.பி.எம். கட்சி விரும்புகிறது. வஞ்சிக்கப்பட்ட சமூகங்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டைக் குறித்து, நகர்ப்புற உழைக்கும் மக்களில் முன்னேறிய பிரிவினர் ஏன் அதிருப்தி கொள்ள வேண்டும்? அத்தகைய அதிருப்தியைக் கொண்டிருந்தால், நகர்ப்புற உழைக்கும் மக்களில் முன்னேறிய பிரிவினர் என அழைக்கப்பட முடியாதவர்களாகவே அவர்கள் இருப்பார்கள்.

மேற்கண்ட அவரது கூற்றில், நகர்ப்புற உழைக்கும் மக்களில் முன்னேறிய பிரிவினர் என்போர் பெரும்பாலும் ஆதிக்க சாதியினராகவே இருக்கிறார்கள் என்பது மறைமுகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது; அதுதான் உண்மையான நிலையுமாகும். இத்தகைய முன்னேறிய பிரிவினரே புரட்சியின் ஊர்திகள் என நம்பப்படுவதால், கிரீமிலேயர், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இடஒதுக்கீடு ஆகியவற்றுக்காக வாதாடுவதன் மூலம் அவர்களது மனதுக்கிசைந்த வகையில் நடக்க வேண்டியிருக்கிறது.

நகர்ப்புற உழைக்கும் மக்களில் முன்னேறிய பிரிவினர் என்று அழைக்கப்படுகிறவர்களால் நிரம்பி, நிறுவனமயப்பட்ட தொழிற்சங்கங்களிடம் இந்திய மக்களுக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை. புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான அவர்களின் தற்போதைய கிளர்ச்சிகளும், அவ்வப்போது நடத்தும் அடையாள வேலைநிறுத்தங்களும் – எந்தவிதமான மக்களுக்கும் ஆதரவான உணர்வு நிலையிலிருந்தும் பிறந்தவை அல்ல. மாறாக தங்களது வேலைகள், வேலை சார்ந்த பிற பலன்கள், வசதிகள் போன்றவற்றுக்கு அச்சுறுத்தல் வரும் என்று உணர்ந்து கொண்டதை முன்னிட்டுப் பிறந்தவை ஆகும். பொது நலன்களை முன்னிறுத்திய எந்தப் பிரச்சனைக்காகவும் நகர்ப்புறம் சார்ந்த உழைக்கும் மக்களில் முன்னேறிய பிரிவினர் எப்போதும் வேலை நிறுத்தம் செய்ததே இல்லை. இந்திய உழைக்கும் வர்க்கத்தின் அனைத்து அரசியல் போராட்டங்களும் சுதந்திரத்திற்கு முன்னால் நடைபெற்றவையே ஆகும்.

அகவிலைப்படி உயர்வுக்காக அவர்கள் போராடுவார்களேயன்றி, பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக அல்ல. இந்த ஆவணத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கையில், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையின் கடுமையான விலையேற்றத்திற்கு எதிராக இந்திய மக்கள் போராடிக் கொண்டிருந்தார்கள்.ஆனால், நகர்ப்புற உழைக்கும் மக்களில் முன்னேறிய பிரிவினர் என்று சொல்லப்படுபவர்களுக்கு, விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்ப முழு அளவு இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு ஈடுகட்டும் விதமாக அகவிலைப்படி உயர்த்தப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டது. இவர்கள் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தப் போராடும்போதுதான் – இந்திய நாட்டின் பொது மக்களுடன் தங்களை இணைத்துக் கொண்டவர்களாவர்.

கொல்கத்தா, சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் உள்ள உழைக்கும் மக்கள் சற்றுத் தாழ்வில்லை என்று சொல்லலாம். ஆனால் அவர்கள்கூட சாதிய சமூகத்தின் பரம்பரைப் பழக்கங்களின் சுமையைத் தூக்கி எறிந்துவிடவில்லை. திரட்டப்பட்ட உழைப்பாளிகளிடம் சமூக விழிப்புணர்வு மிகக் குறைந்த அளவுக்கே இருக்கும் நிலை, இந்தியத் தொழிற்சங்க இயக்கத்திற்கு நூற்றாண்டுக்கும் மேல் வயதாகிறது என்பதை நியாயப்படுத்துவதாக இல்லை. ஒரு தொழிற்சங்கத் தலைவரான டாக்டர் அம்பேத்கர், நகர்ப்புற உழைக்கும் மக்களில் முன்னேறிய பிரிவினரிடம் சமூக விழிப்புணர்வு மிகக் குறைந்த அளவுக்கே இருக்கும் நிலையோடு மல்லுக்கட்ட வேண்டியிருந்தது. டாக்டர் அம்பேத்கரின் நாட்களை விடவும் மேம்பட்ட சூழ்நிலை இப்போதும் இல்லை. ஏதாவது மாற்றம் நிகழ்ந்திருக்கிறதென்றால், சூழ்நிலைகளின் அழுத்தம் சில நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றதேயல்லாமல், அம்மாற்றங்கள் தொழிற்சங்கம் தனது முயற்சியில் ஏற்படுத்தியவை என்று சொல்ல முடியாது.

அர்ப்பணிப்புணர்வுள்ள, திறமையான, நேர்மையான செயல் வீரர்களும், தங்களது முழு ஆயுளையும் உழைக்கும் மக்களின் இயக்கங்களுக்காகவே செலவழித்த உழைப்பாளிகளின் உரிமைகளுக்கானப் போராட்டங்களை நடத்தி, முன்னோடி நாயகர்களாகப் பரிணமித்த தொழிற்சங்கத் தலைவர்களும் – இந்தியத் தொழிற்சங்கங்களில் அருகிப் போய்விடவில்லை. நகர்ப்புற உழைக்கும் மக்களில் முன்னேறிய இப்பிரிவினர் மூலம் சமூக மாற்றங்களைக் கொண்டு வர முயன்ற அவர்களது அனைத்து முயற்சிகளும் எந்தப் பலனையும் அளிக்கவில்லை. நகர்ப்புற உழைக்கும் மக்களில் முன்னேறிய பிரிவினரிடம் உள்ள சாதிய உணர்வுதான் – வர்க்கமாக இருப்பதிலிருந்து வர்க்கத்துக்காக இருப்பதை நோக்கிய அவர்களின் பயணத்திற்கு மிகப்பெரிய தடைக்கல்லாக இருக்கிறது.

சமூகத்தில் பழமைவாதிகளும், அரசியலில் புரட்சிகர சிந்தனை உள்ளவர்களாகவும் உள்ள நபர்கள் தொழிற்சங்க இயக்கத்தில் மிகுந்து காணப்படுகிறார்கள். இவ்வாறு சமூகத்தில் பழமைவாதியாகவும், அரசியலில் புரட்சிக்காரர்களாகவும் உள்ளவர்கள் – பிற்படுத்தப்பட்டவர்களும், தலித்துகளும் தலைமைப் பதவிக்கு வருவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர். பாட்டாளி வர்க்கப் புரட்சியின் அவசரத் தேவையாக இருக்கிற தொழிலாளர் ஒற்றுமையைக் குலைத்து விடுகிற ஓர் உணர்வுப்பூர்வமான பிரச்சனையாக சாதி இருப்பதால், அதைக் குறித்து உறுப்பினர்களிடையே விவாதிப்பது அனுமதிக்கப்படுவதில்லை.

எளிய வாழ்க்கையைச் சுட்டிக்காட்டிப் பணக்கார வர்க்கத்திலிருந்து தங்களைத் தாங்களே வெளியேற்றிக் கொண்டவர்கள் என்று சொல்லத்தக்க நிறைய மனிதர்கள் தொழிற்சங்கத்தில் உண்டு; ஆனால் ஆதிக்க சாதியிலிருந்து வெளியேறி, சாதியற்றவனாக மாறிவிட்டேன் என்று அறிவித்துக் கொள்கிற ஒரு நபரைக்கூட நாம் அங்கு காண முடியாது. நகர்ப்புற உழைக்கும் மக்களில் முன்னேறிய பிரிவினர் என்று சொல்லப்படுபவர்கள் தங்களது சாதிய உணர்வுகளை நிர்ணயிக்கும் கிராமங்களில் வலுவான வேர்களை உடையவர்களாக இருக்கிறார்கள்.

சாதி மறுப்பு மற்றும் வரதட்சணையற்ற திருமணங்களைத் தொழிற்சங்கத் தலைவர்களும், செயல்வீரர்களும் தீவிரமாக ஆதரித்த தருணங்கள் தொழிற்சங்கத்தில் எத்தனை முறை நடந்திருக்கின்றன? இத்தகைய நகர்ப்புற உழைக்கும் மக்களில் முன்னேறிய பிரிவினர் ஒரு புதிய தொடுவானத்திற்கு வழிநடத்திக் கொண்டு போவார்கள் என்று காட்டுவதற்கு எதுவுமில்லை. தொழிற்சங்கத் தலைவர்களின் சாதி வாரியான கணக்கெடுப்பு உடனடித் தேவையாக இருக்கிறது.

தமிழில்: ம.மதிவண்ணன்