தந்தை பெரியார் வாழும் போதே “பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்” நூல் அச்சேற்றப்பட்டது. 26-11-1973இல் கடலூரில் 400 பக்கங்களை அவரே கண்ணாரக் கண்டுகளித்தார். ஆனாலும் விரல் விட்டு எண்ணக் கூடிய மிகச் சில பெரியார் தொன்டர்களே, அன்று, ரூ.150க்கு, ரூ.100 செலுத்தி முன் பதிவு செய்தனர். மிகப்பலர் வெளிப்படையாகப் பின் வாங்கினர்.

1972இலேயே 24ரூ ஆண்டு வட்டிக்குக் கடன் வாங்கிய சிந்தனையாளர் கழகத்தார், 1974 திசம்பர் வரை கடன் வாங்கினோம். தேறிய மொத்தத் தொகுப்புகள் 2647. அவற்றில் 500 தொகுப்புகளே கட்டடம் கட்டப்பட்டவை. இதில் 300 தொகுப்புகள்  மட்டும் தமிழக அரசின் கிளை நூலகங்களுக்கு அளித்தோம். அதில் கிடைத்தது ரூ.45,000/- அன்பில் பெ.தருமலிங்கம் மூலம் பெற்ற வட்டியில்லாக் கடனுக்கு ரூ.20,000/- மட்டும் திருப்பித் தந்தோம். சென்னை கபீர் அச்சகக் கடனைத் தீர்த்தோம். முன் பதிவுக்கும், ரொக்கத்துக்கும் 100 படிகள் போல், பெரியார் அன்பர்களுக்குத் தந்தோம்.

அரசு நூலகங்களுக்கு ஆணை பெறும் ஆசையில், கண்ட கண்ட அரசுப் பணியாளர்களுக்கெல்லாம், 1975-1978இல் 50 படிகளுக்குமேல் கையூட்டாக அளித்தோம். ஆனாலும் அந்நூலைச் சீந்துவார் இல்லை. 1979இல் தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழா வந்தது. அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரை அணுகவே முடியவில்லை. எதிர் பாராதவிதமாகக் கல்வி அமைச்சர் செ. அரங்க நாயகம் வீட்டில், கல்வித்துறைச் செயலர் ரெங்கபாஷ்யம் நாயுடுவை நாங்கள் சந்தித்தோம். அவர் எங்களுக்கு ஏற்கெனவே நன்கு தெரிந்தவர். எங்களின் நிலை கண்டு இரக்கப்பட்டார். 1500 கிளை நூலகங்களுக்கு ஆணை தந்தார். கட்டடம் கட்டப்பட வேண்டியவை 2000 தொகுப்புகள், 6000 தொகுதிகள். ரூ.30,000/- அதற்குச் செலவு. பைண்டிங் செய்பவரே, 24ரூ வட்டிக்கு முதலீடு செய்து, திருச்சியைச் சேர்ந்த பைண்டிங் செய்து தந்தார். பழைய வட்டிக் கடன் ரூ.60,000/- பைண்டிங் கடன் ரூ.30,000/- எதற்கும் 6 ஆண்டுகளுக்கு வட்டி கூடச் செலுத்தவில்லை. சிந்தனையாளர் கழகத்தார்பேரில், அந்த அளவுக்கு மதிப்பும் நம்பிக்கையும் கடன் தந்தவர்களுக்கு இருந்தது.

ரூ.1,50,000/-க்கு ஒரே தடவையில் நூலக ஆணைக்குழுவினரின் காசோலை வந்தது. வட்டியும், முதலும் சேர்த்துக் கடன்களைத் தீர்த்தோம். 1980இல், 7 ஆண்டுகள் கழித்து சுடுபாலில் வாயை வைத்த பூனைகளாக இருந்த நாங்கள், ஒரு பெரிய இக்கட்டிலிருந்து மீண்டோம். இப்போது பெரியாரைப் பரப்ப வரும்  “பெரியார் - நாகம்மை அறக்கட்டளை”க்கு நான் தலைவன். சுடுபாலில் வாயை வைத்தவர்களுள் இன்று இருவர் உயிரோடு உள்ளோம். நானும் கு.ம.சுப்பரமணியமும். பெருமதிப்புக்குரிய நோபிள் கு.கோவிந்தராசலு இன்று இல்லை. எனவே, நாங்கள் கடன்படாமல் நூலை வெளியிட எண்ணினோம்.

“வெட்டிக்கொண்டு வாருங்கள் என்றால், வெட்டிக் கட்டிக் கொண்டு வருவதில் வல்லவர்கள்” மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சிச் செயல்வீரர்களும், புரட்சிக் கவிஞர் கலை இலக்கிய மன்றத்தோழர்களும். 1989 முதல் இப்படிப்பட்ட பணிகளில் கண் துஞ்சாது ஓடோடிச் செயல்படும் அம்மறவர்கள், 15 மாவட்டங்களில் 150 பேருக்கு மேல் 2009 அக்டோபர் 10 முதல் 2010 ஏப்பிரல் 10 முடிய ஆறு மாதங்கள் பம்பரமாகச் சுழன்று செயல்பட்டனர். 2000 பேர்களிடம் முன் பதிவு செய்து நிதி குவித்தனர்.

“பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” நூலை நூலகங்களில் படித்தவர்கள், ஆய்வுக்காகப் படித்தவர்கள், மற்றும் சூலூர் பாவேந்தர் பேரவையினர், திராவிட முன்னேற்றக் கழகத்தினர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), காஞ்சி இளைஞர் இயக்கத்தினர், தமிழ்நாடு விசுவகரும சமூகத்தினரின் சமூக குருசாமிகள் சிவசண்முக நானாச்சாரியார், சீனந்தல் மடத்தின் தலைவர், தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் சமூகத் திருக்குறிப்புத் தொண்டர் பேரவையினர்.

சென்னை, தமிழ் இஸ்லாமியத் தோழர்கள், தமிழ் இன ஆய்வாளர்கள் என - 500 பேருக்கு மேல் அவரவராக முன் வந்து ரூ.3500, ரூ.3800 செலுத்திப் போதிய நிதியை முன் கூட்டி வாரி வழங்கினர். அவர்களும், தமிழ் நூல் பதிப்புத் துறையில் பழம்பெரும் பட்டறிவும், செல்வாக்கும் பெற்றவர் களும் நூல் தொகுப்பைக் கண்டவுடன் கண் குளிரப்பார்த்து, நெஞ்சார மகிழ்ந்து, கை நிறையத் தொகுதிகளை வாரி மடி மீது வைத்துக் கொண்டு “- ரூ.3500/-க்கு இவ்வளவு தொகுதிகளா!’ -  என்று கூறி/ அகம் மிக மகிழ்ந்து பூரித்துப் போவது கண்டு பெரியார் - நாகம்மை கல்வி அறக்கட்டளையினர் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

எங்களை நம்பி வெள்ளிப்பணத்தை அள்ளித் தந்த தமிழ்ப் பெருமக்களுக்குத், தங்க முலாம் பதித்த தாள்களில் போர்த்தப்பட்ட 20 தொகுதிகளை - தந்தை பெரியாரின் சிந்தனைக் கருவூலத்தை 20 பேழைகளில் அடைத்துத் தந்துள்ளோம். 20 தொகுதிகளை 20 மாதங்களில் 2011க்குள் நீங்கள் ஒரு தடவை படித்துவிட முடியும். மானிடம் எல்லாத் துறைகளிலும் உரிமை பெற்றதாக வாழ வேண்டும் - தமிழ் இனம் எந்தத் துறையிலும் பின் தங்கி விடக்கூடாது என்பதைத் தம் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டவர் தந்தை பெரியார் என்பதை நீங்கள் ஒவ்வொருவரும், “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” நூலைப் படிப்பதன் மூலம்  நன்றாக உணர முடியும்.

தமிழ்ப் பெருமக்கள் தாமாக முன் வந்து முன் பதிவு செய்ததும்; பெரியார் பேரன்பர்கள் தேடி வந்து தொகை அளித்ததும் எங்களின் பணி ஏற்றமுற நிறைவேறிட வழி அமைத்தன. தமிழ்ப்பெருமக்களுக்கு எம் தலைதாழ்ந்த வணக்கங்கள்! பெரியாரியல் கற்போர்க்குப் பெரு நன்றிப் படையல்கள்!

-வே. ஆனைமுத்து

Pin It