டாக்டர் அம்பேத்கர் சமூகக் கல்வி பொருளாதார அறக்கட்டளையின் ஓராண்டு நிறைவு விழாவும், "தலித் முரசு' வாசகர் வட்டக் கூட்டமும் 21.6.09 அன்று பெரம்பலூரில் நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ரா. கிருஷ்ணசாமி தலைமை வகித்து, அறக்கட்டளை தொடங்கப்பட்டதன் நோக்கம் குறித்து விரிவாகப் பேசினார். கல்விப் பணியும் சமூகப் பணியும் சாதிய விடுதலையும் அறக்கட்டளையின் நோக்கமாகத் தெரிவித்தார். ஒவ்வொரு மனிதனுக்கும் "வந்த வேலை' ஒன்று இருக்கும்; "சொந்த வேலை' ஒன்று இருக்கும். சொந்த வேலையினை அவர்கள் செய்து கொள்கிறார்கள்; வந்த வேலையைத்தான் யாரும் செய்வதில்லை. வந்த வேலை என்பது தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒவ்வொரு படித்தவனும் அச்சமூகத்தில் இருக்கும் மக்களை உயர்த்துவதற்காகப் பாடுபட வேண்டும். அந்த வந்த வேலையினைத்தான் அறக்கட்டளை மூலமாகத் தான் செய்வதாகக் கூறினார். மேலும் அவர் பேசும் போது புரட்சியாளர் அம்பேத்கரைப் போலவே தாத்தா ரெட்டமலை சீனிவாசன், புலே, அயோத்திதாசப் பண்டிதர் ஆகியோரையும் மக்களிடம் பரப்ப வேண்டும் என்று கூறினார். இறுதியில் "தலித் முரசு'க்கு 30 வாழ்நாள் கட்டணங்களை அளித்தார் (ஏற்கனவே கடந்த இதழில் அவருடைய மகள் திருமணத்தையொட்டி 11 வாழ்நாள் கட்டணங்களை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது).

Punithapandianநிகழ்ச்சியில் உரையாற்றிய "தலித் முரசு' ஆசிரியர் புனித பாண்டியன், மனித மாண்புகள் மீட்டெடுக்கப்படுவதற்கான கருத்தியலைப் பரப்பும் பணியினை "தலித் முரசு' இடைவிடாமல் கடந்த பதிமூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆற்றிக் கொண்டிருக்கிறது. இப்பணிக்கு பெரியவர் கிருஷ்ணசாமி, அபெகா பண்பாட்டு இயக்க நிறுவனர் மருத்துவர் ஜெயராமன் போன்றவர்கள் தொடர்ந்து தரும் ஆதரவும் உற்சாகமும்தான் காரணம். இப்படி உதவி செய்யக் கூடியவர்களுக்கு என்ன பிரதிபலனை நாம் தந்துவிட முடியும்? ஒரு பொன்னாடையோ அல்லது பூமாலையோ போட்டுவிட்டால் அவர்களின் பேருதவிக்கு நன்றி செலுத்துவதாக அமைந்து விடுமா? இல்லை. அதைவிட மேலதிகமாக கடும் இன்னல்களை எதிர்கொண்டாலும், "தலித் முரசு' இதழைத் தொடர்ந்து கொண்டு வருவது மட்டுமே அவர்களுக்கு நாம் செய்யும் நன்றியாக இருக்க முடியும் என்றார்.

"தலித் முரசு' இதழ் குறித்து உரையாற்றிய புதுக்கோட்டையிலிருந்து வந்திருந்த வழக்குரைஞர் சாந்தி பேசுகையில், பிற வணிக இதழ்களை ஒரே வாசிப்பில் படித்து விடுகின்ற மாதிரி "தலித் முரசை' படிக்க முடியவில்லை. ஒரு கட்டுரையைப் படித்துவிட்டு அதை அன்றெல்லாம் சிந்தித்து மற்றவர்களுக்குச் சொல்லி இப்படி நடக்கின்றது என்று அங்கலாய்த்து பிறகுதான் அடுத்த கட்டுரைக்கோ, பகுதிக்கோ செல்ல முடிகிறது. "தலித் முரசி'ன் அட்டைப்படங்கள் பிற இதழ்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கின்றன. அழகு என்பதற்கான அர்த்தத்தை வேறுவிதமாக அது கட்டமைக்கிறது. "தலித் முரசை'ப் படித்த பிறகு தான் மேலவளவு, மாஞ்சோலைப் பிரச்சினைகளைக் குறித்து முழுமையாக அறிய முடிந்தது. படித்தவர்களும் பணக்காரர்களும் தனியாக ஒதுங்கிவிட்டார்கள். இடஒதுக்கீட்டின் மூலம் பயன் பெற்ற தலித் மக்கள் இப்பிரச்சினையில் தலையிடுவதில்லை. இதனால் அம்பேத்கரின் கனவு மெய்ப்படாமலேயே போய்விடுமோ என்னும் அச்சம் அதிகமாக உள்ளது. அதற்காக வேகமாகப் பணியாற்ற வேண்டியுள்ளது என்றார். கவிஞர் கார்மேகம் உரையாற்றுகையில், பிற இதழ்களிலிருந்து "தலித் முரசு' மிகவும் வேறுபட்டு சிறந்த கருத்துகளை கொண்டு வருகின்றது என்றார். கவிஞர் சீராளன் "தலித் முரசு' பிரச்சனைகளைப் பல கோணங்களில் அணுக வேண்டும் என்று கூறினார்.

மருத்துவர் என். ஜெயராமன் தமது நிறைவுரையில், நாம் எத்தகைய ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று எதிரிதான் தீர்மானிக்கிறான் என்று மாவோ கூறினார். இப்போது நமக்கான ஆயுதம் "தலித் முரசு'. தீண்டாமைக் கொடுமைகளை நகர்ப்புறத்திலிருப்பவர்களை விட கிராமங்களிலிருப்போர் அதிகமாக அனுபவித்து இருக்கின்றனர். ஆனால் தீண்டாமை இப்போது மேலும் கூர்மைப்படுத்தப்பட்டு வருகிறது. இடத்திற்கு தகுந்த மாதிரி தீண்டாமை மாறி இருக்கிறது. நம்மை மற்றவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால், முற்றிலும் தீண்டாமையை ஒழித்துவிட்டு ஏற்றுக் கொள்கிறார்கள் என்றில்லை, வேறுவழியில்லாமல் ஏற்றுக் கொள்கிறார்கள். தீண்டாமை அப்படியேதான் மாறாமல் இருக்கிறது. "தலித் முரசை' படிப்பது என்பது "நான்' என்னும் தனி மனிதனுக்காக அன்று; சமூக விடுதலைக்காகப்படிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதனால்தான் "தலித் முரசு' தொய்வின்றி வரவேண்டும் என்று விரும்புகிறோம். அய்யா ஏபி. வள்ளிநாயகம் விதைத்த விதை வீண் போகவில்லை. புதுக்கோட்டையில் "தலித் முரசு' வாசகர் வட்டம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. மீண்டும் ஒருமுறை வாசகர் வட்ட கூட்டத்தைப் புதுக்கோட்டையில் நடத்துவோம் என பலத்த கைத்தட்டல்களுக்கிடையே கூறினார். கூட்டத்தில் புதுக்கோட்டையிலிருந்து வந்த பல தோழர்களும், சிறப்பு அழைப்பாளர்களாக ரமணி தேவியும், யாழன் ஆதியும் பங்கேற்றனர்.