Eelam War victimsஎரிந்தபடி நிற்கும் ஒற்றை மரத்தின்
கடைசிக் கிளையில் அமர்ந்த பறவை
பாடுவதற்காக வாயைத் திறந்த
அதே கோலத்தில் சாம்பலாகிப் போனது

வெளுத்துப் போன சருகுச் சிறகுகளில்
வெடிகுண்டு துகள்கள் சுமந்த பட்டாம்பூச்சி
கருகிய பூக்களின் ரசாயன நெடி தாளாமல்
குமட்டலோடு அலைகிறது

கடைசியாக வீசப்பட்ட
கொத்து வெடிகுண்டுகள் தலையில் விழுந்து
துண்டுக் கறியின்றி புதைந்து விட்டான் சிறுவன்

அம்மாவைக் கொன்ற தோட்டாக்களின் சீறலில்
அச்சம் கவ்விய அடிவயிற்றின் கீழ்
முதல் உதிரம் கசிய
திசையற்று ஓடும் சிறுமி
பிணம் தடுக்கி விழுகிறாள்!

இடுங்கிய பூ விழுந்த கண்கள் வழியே
தன்னினம் அழிவதைப் பார்த்து
இன்னும் உயிரோடிருப்பதற்காக
தன்னையே திட்டுகிறாள் கிழவி!

குரல்வளையை நெரிக்கிறான் ஒருவன்
உடல்தோலை
உருவிப் போர்த்துகிறான் இன்னொருவன்
குருதி குடிப்பவனும்
எலும்புகளை உடைத்து நொறுக்குபவனும்
தீரா வெறியோடு
கண்ணீர் தளும்பும்
கண்களை குறி பார்க்கிறார்கள்!

சீருடையணிந்து துரத்தும்
சாவின் நிழலில்
இளைப்பாற இடம் தந்தவர்கள்
அலட்சியமாய் வீசியெறிந்த
இறுகிய ரொட்டித் துண்டுகள்
இறையாண்மையின் எச்சங்களாய்
கைகளில் கனக்கின்றன...

புழுக்கள் மேயும் பிணக்குவியல்கள்
சவக்குழிகளில் நிரம்பி
குன்றுகள் அளவு உயரும் காட்சியை
சர்வாதிகாரச் சாட்டையை
நீவியபடி ரசிக்கிறான்
அயோக்கியர்களின் நல்லவன்!

பிணங்கள் மேல் உயிருள்ளவர்களும்
உயிரோடிப்பவர்கள் தலையில் பிணங்களும்
மாறிமாறி விழும்
படுகொலை நிகழ்வுகள்
அவனை பரவசப்படுத்துகின்றன!

பேரோலங்களோ
பெருக்கெடுத்து ஓடும் ரத்த ஆறோ
வெடித்துச் சிதறும் உடலுறுப்புகளோ
உலகின் புலன்களை எட்டாதவாறு
ஒரு நாட்டையே
நான்கு சுவர்களாக்கியவனின்
சாதனையை மெச்சுங்கள்!

இன அழிப்பில் தீர்ந்து விட்ட
கொலைக் கருவிகள்
சர்வதேசச் சந்தையில்
மறு உற்பத்தியிலிருப்பதால்
தற்காலிகமாக நிறுத்திவிட்டான்
அழிவு ஆட்டத்தை!

பேரங்கள் முடிந்து ஆயுதங்கள்
களம் வந்து சேரும் நேரம்...
தண்ணீரில் ஊறிய ரொட்டித் துண்டுகள்
பிள்ளைகளின் வாயிலிருந்து
வயிற்றை அடையும் முன்பே...
எட்டி மிதித்து முடுக்குவான்
கொலைக்களத்திற்கு...

கனவுகள் புதையுண்ட நிலத்தில்
எஞ்சிய உயிர்களை குறிவைத்து
மறுபடியும் போர் தொடங்கும்.