இந்த மாநாட்டு மேடைக்கு வந்ததும், இங்கே ஒரு கம்யூனிஸ்ட், ஒரு சோஷியலிஸ்ட், ஒரு காங்கிரசிஸ்ட் ஆக மூவர் பேசினார்கள். மூவரும் பார்ப்பானுக்குப் பரிந்து, மிகச் சலுகையாகப் பேசினார்கள். ஆனால் மூன்று பேரும் ஜாதி ஒழிய வேண்டும் என்ற கருத்துள்ளவர்கள். அப்படி இவர்கள் கருதியிராவிட்டால், சொல்லாவிட்டால் இந்த சாதி ஒழிப்பு மாநாட்டு மேடையில் அவர்களுக்கு இடமேயில்லை; இடமிருக்க நியாயமுமில்லை.

Periyarஇந்த மூன்று பேரும் பார்ப்பான் ஒழிய வேண்டும் என்று சொல்லவே மாட்டார்கள். ஏன்? இந்த மூன்று பேருக்கும் தலைவர்கள் பார்ப்பனர்கள். நீங்கள் நினையுங்கள். கம்யூனிஸ்ட் ஏன் பார்ப்பானைத் திட்டவில்லை என்றால், அவர்களின் தலைவர்கள் என்பவர்கள் பார்ப்பனர்கள்தானே! சோஷலிஸ்ட் ஏன் பார்ப்பானைத் திட்டவில்லை என்றால், அந்தக் கட்சித் தலைவரும் பார்ப்பனர்தானே? காங்கிரஸ் கட்சிக்காரர் ஏன் பார்ப்பானைத் திட்டவில்லை என்றால், அவர்கள் தலைவர்கள் யார்? இந்த ஆச்சாரியார், நேரு முதலிய பார்ப்பனர்கள்தானே!

ஜாதி ஒழிய வேண்டும் என்றால், அதை உண்டாக்கக் காரணமாய் இருந்த இந்து மதம் ஒழிய வேண்டும்; அந்த இந்து மதத்தில் உள்ள கடவுள்கள் ஒழிய வேண்டும்; அதிலே இருக்கிற ராமனும், சுப்பனும், கணபதியும் ஜாதியைக் காப்பாற்ற வந்தவர்கள் அல்லவா என்று கேட்கிறேன். இங்கே பேசிய கம்யூனிஸ்ட் சொன்னார், ‘‘நீங்கள் கடவுளை ஒழிக்கணும், ஒழிக்கணும் என்று பிள்ளையாரைப் போட்டு உடைத்ததால்தான் இப்போது எங்கேயும் பூஜை நடக்கிறது'' என்று. இன்னும் சொன்னார்: ‘‘சாதி ஒழியணும்; அதற்குப் பார்ப்பான் ஒழியணும் என்று வேகமாகப் போனால் ஜாதி வளரும்'' என்றார். நான் கேட்கிறேன், நீ மட்டும் முதலாளி ஒழியணும் என்றால், முதலாளி மட்டும் வளர மாட்டானா?

உண்மையான காரணத்தை அறியாமலோ அல்லது அறிந்தும், மறைத்துப் பேசியே வருவது என்பது என்ன நியாயம்? பார்ப்பானைத் திட்ட இவர் களுக்குத் தைரியம் போதாது. கம்யூனிஸ்டுகள் சும்மா அளப்பார்கள், பணக்காரனை ஒழிக்கணும் என்று. பணக்காரனை நெருக்கினால் என்ன ஆகும் என்று தெரியுமா இவர்களுக்கு? பணக்காரனைக் காப்பாற்றுவதற்குத்தானே அரசாங்கம் இருக்கிறது, போலிஸ் இருக்கிறது? ஏன் என்றால் அவன் அந்தப்படியாகத் தன்னைக் காப்பாற்றிக் கொடுப்பதற்காக என்று சர்க்காருக்கு (அரசுக்கு) வரி செலுத்துகிறான். பணக்காரன் கிட்டே போகிறதுன்னா இவன் முதலில் சர்க்கார்கிட்டே போகணும்.

பார்ப்பான்கிட்டே இருப்பதெல்லாம் இந்தப் புராணம், இந்த மதம், இந்த சாஸ்திரம் முதலியவைதான். இவர்கள் சொல்கிறார்கள் ஜனங்களுக்குப் படிப்பில்லை என்று. யாருக்குப் படிப்பில்லை? செட்டிக்குப் படிப்பில்லை; படையாச்சிக்குப் படிப்பில்லை; நாயக்கனுக்குப் படிப்பில்லை. பார்ப்பானுக்கா படிப்பில்லை? அவன் வீட்டுப் பூனைக்குட்டி கூடப் படித்திருக்கிறதே! அவனுக்குச் சர்க்காரிலும் நல்ல வசதியிருக்கின்றதே! அதே மாதிரி நாட்டில் வேலையில்லாமை பெருகிவிட்டது என்கிறார்கள். யாருக்கு, எங்கே வேலையில்லா திண்டாட்டம்? நம்மவனுக்கு வேலையில்லை.

இந்தக் கம்யூனிஸ்டுகள் என்னவென்றால், இதைப்பற்றின கவலை கொஞ்சம்கூட இல்லாமல் ஜனங்கள் பட்டினி கிடக்கின்றார்களே என்று கூப்பாடு போடுகின்றார்கள்! நான் கேட்கிறேன், எந்தப் பார்ப்பானுக்காவது வறுமையுண்டா? சர்க்காரில் கஞ்சித் தொட்டி வைத்திருக்கின்றார்கள். எந்தப் பார்ப்பானய்யா அந்தக் கஞ்சித் தொட்டியில் போய் கஞ்சிக் குடித்தான்? சொல்ல முடியுமா? இந்தக் கம்யூனிஸ்டுகள், உடை பஞ்சம் என்று சொல்கின்றார்களே! பெரும்பாலான நம் பெண்கள் நான்கு முழம், எட்டு முழம், கட்டிக்கொண்டு இருப்பார்கள். ஆனால் பார்ப்பனர்களை எடுத்துக் கொள்ளுங்கள். பன்னிரண்டாறு அல்லவா கட்டிக் கொள்ளுகின்றார்கள்? பார்ப்பனப் பெண்கள் 18 முழம் அல்லவா கட்டிக் கொள்கின்றார்கள்?

நம் பெண்கள் தாங்கள் கட்டியிருக்கும் அழுக்குப் பிடித்த புடவையைத் துவைக்கணும் என்றால், புடவையின் ஒரு முனையை இடுப்பில் கட்டிக் கொண்டல்லவா இன்னொரு முனையை நனைத்து துவைக்க வேண்டியிருக்கிறது? ஏன் நமக்கு மட்டும் இந்த நிலை? நாம் கீழ் ஜாதியில் இருப்பதனால்தான். சாதி என்பதை எல்லா வகையிலும் பார்ப்பான் உபயோகப்படுத்திக் கொண்டு முன்னே போகின்றான். உங்களுக்கு இருக்கிற சூத்திரத்தன்மை, உத்தியோகமில்லாத தன்மை ஒழியணும் என்றால், இந்து மதத்தை ஒழிக்கணும். இந்த ராமன், சுப்பன், கிருஷ்ணன் முதலியோர்களை உடைத்து ரோட்டுக்கு சல்லியாக்கிப் போடணும். அப்பொழுதுதான் ஏதாவது வழி பிறக்கும்.

இங்கு இந்த ஜாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்றதற்கு ஒன்று சொல்ல வேண்டும் என்று கருதுகின்றேன். நீங்கள் யாரும் கோயிலுக்குப் போகாதீர்கள்! சாம்பலைப் பூசிக்கொள்ளாதீர்கள்! பெண்களைக் கேட்டுக் கொள்கிறேன் – தயவு செய்து பார்ப்பானை ‘சாமி' என்று கூப்பிடாதீர்கள்! அதைப்போல மடத்தனம் வேறு இல்லை. அத்துடன் அவனைப் ‘பிராமணன்' என்றால் நாம் நம்மை ‘சூத்திரன்' என்றே ஒப்புக் கொள்வதாகாதா? ஆகவே, இப்படிப்பட்ட சாதி ஒழிப்புக் காரியங்களில் எல்லோரும் சற்று அக்கறை செலுத்த வேண்டும்.

(9.3.1954ம் தேதி அக்கிச் செட்டிப்பாளையத்தில் ஆற்றிய உரை)