ஆம்ஸ்ட்ராங் - மேற்கு தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பட்டியில் பிறந்தவர். ஒரு குக்கிராமத்தில் வளர்ந்த இவர், தன்னுடைய கல்வித் திறனால் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்தி இருக்கிறார்.

எளிமையான தலித் குடும்பத்தில் பிறந்து, தமிழ்வழிக் கல்வி பயின்று, ஆங்கிலத்தில் ஆளுமை கொண்டிருக்கிறார். தன்னுடைய தந்தை வாங்கித் தந்த ஆங்கில அகராதியைப் படித்து, நாளொன்றுக்கு குறைந்தது அய்ம்பது ஆங்கில சொற்களைப் படிக்கத் தொடங்கிய ஆம்ஸ்ட்ராங், தன்னுடைய விடா முயற்சியால் இன்று, உலகின் பல பல்கலைக்கழகங்களில் ஆய்வுக் கட்டுரைகளை அளித்து வருகிறார்.

armstrong_232பன்னிரெண்டாம் வகுப்புவரை, ஆவாரம்பட்டிக்கு அருகிலுள்ள பூதலூர் அரசுப் பள்ளியில் படித்த ஆம்ஸ்ட்ராங், கல்லூரிப் படிப்பை திருச்சியில் தொடங்கியிருக்கிறார். இவர், ஆவாரம்பட்டியிலிருந்து திருச்சியில் உள்ள கல்லூரிக்கு வருவதே ஒரு தலித் தன்வரலாறு. ஆவாரம்பட்டியிலிருந்து பூதலூருக்கு அய்ந்து கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் வந்து, அங்கிருந்து திருவெறும்பூருக்கு தொடர்வண்டியில் பயணித்து, மீண்டும் அங்கிருந்து திருச்சிக்கு பேருந்து மூலம் கல்லூரி செல்வார். திரும்பி வரும் போது, தொடர் வண்டியில் நின்று கொண்டே அன்றைய பாடங்கள் அனைத்தையும் படித்து முடித்துவிடுவாராம்!

முதுகலை படிக்கும்போதே முனைவர் பட்டம் படிப்பதற்கான தகுதிகாண் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் ஆம்ஸ்ட்ராங். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது, அவருக்கு பேராசிரியர் முனைவர் செல்லப்பன் மிகுந்த ஆதரவாக இருந்திருக்கிறார். அக்காலத்தில்தான் அவர் நிறைய வாசித்திருக்கிறார். அந்த வாசிப்புதான் அவரை இந்த உச்சிக்கு அழைத்துச் “சென்றிருக்கிறது. ஆர்வத்தோடு எதைச் செய்தாலும், அதில் வெற்றி பெற முடியும் என்பதற்கு ஆம்ஸ்ட்ராங் ஓர் எடுத்துக்காட்டு.

இளம் ஆய்வாளர் பட்டத்திற்கு, கிரீஷ் கர்னாட் என்னும் புகழ் பெற்ற நாடக ஆசிரியரின் நூல்களை எடுத்துக்கொண்ட ஆம்ஸ்ட்ராங், பெரும்பாடு பட்டு அவரை சந்தித்து நேர்காணல் செய்து, தன் வழிகாட்டி ஆசிரியரையே வியப்புக்குள் ஆழ்த்தியிருக்கிறார். இத்தருணத்தில், இன்னும் ஆறாத வடுவாக அவர் பெற்ற காயம் தான் அவரை மேலும் படிக்க வைத்திருக்கிறது. இளம் ஆய்வாளர் பட்டம் படிக்கும்போது, மாலை நேரத்தில் அவர் படித்த அதே கல்லூரியில் பாடம் நடத்தும் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். அப்போது, அவர் ஊரிலிருந்து வரும் சாதி இந்து மாணவன் ஒருவன், "நம்ம ஊரு கீழ் ஜாதிக்காரன், இங்கவந்து இதெல்லாம் செய்றானா' என்று கேவலமாகப் பேசியிருக்கிறான். இதைக் கேள்விப்பட்ட ஆம்ஸ்ட்ராங், அவனைக் கன்னத்தில் அறைந்திருக்கிறார். அதனால் கல்லூரியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார்.

அவர் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட தலைப்பு - கனடாவில் உள்ள தொல்குடி மக்களின் இலக்கியங்கள். “தலித் இலக்கியங்கள் அப்போது ஆங்கிலத்தில் வரவில்லை. ஆனால், அவர்களின் குரலை ஒலிக்க வேண்டும் என நான் எண்ணினேன். அதற்கான தேடலில் இருந்தபோதுதான், எனக்கு ஒரு கனடா நாட்டு புத்தகம் கொடுக்கப்பட்டது. அதை வாசித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. இங்கே தலித்துகள் என்ன வகையான புறக்கணிப்புகளை அனுபவிக்கின்றார்களோ, அதேபோல கனடா நாட்டின் தொல்குடிகளும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதால், இது தொடர்பாக மேலும் ஆய்வு செய்ய முடிவு செய்தேன்’ என்கிறார் ஆம்ஸ்ட்ராங்.

இந்தியாவிலிருந்து கனடா சென்று படிக்க, ஓராண்டுக்கு இரண்டு பேருக்கு "சாஸ்திரி இண்டோ கனடியன் பெலோஷிப்' என்ற உதவித் தொகையை தருகிறார்கள். அதைப் பெற இரண்டாண்டுகள் போராடி இருக்கிறார். அது கிடைத்தவுடன் கல்லூரியில் சம்பளமில்லா விடுப்பு எடுத்துக் கொண்டு, கனடா சென்று அங்கு மிகுந்த இன்னல்களுக்கிடையே தன் படிப்பை முடித்திருக்கிறார். இவருடைய திறனை அறிந்த கனடா நாட்டின் நாளிதழ் ஒன்று, அவரை நேர்காணல் செய்து வெளியிட்டிருக்கிறது.

மீண்டும் தமிழகம் வந்து கல்லூரிப் பணி யைத் தொடங்கினார். தன்னுடைய கல்வி தாகம் தணியாத அவர், சென்னை பல்கலைக்கழகத்தில் மாலை நேரங்களில் பணம் வாங்காமல் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்தார். தற்பொழுது சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் பணிபுரிந்து வருகிறார் ஆம்ஸ்ட்ராங். அயல்நாடு சென்று தன் திறமையை மேலும் வளர்த்துக் கொண்டு திரும்பியிருந்தும், இந்த சாதிய சமூகம் அவருக்கு சாதி இழிவையே பரிசாக்கியிருக்கிறது!

இன்னொரு "பெலோஷிப்'புக்காக விண்ணப்பிக்க வேண்டி ஒரு பரிந்துரைக் கடிதத்தை அவருடைய துறையில் இருக்கும் பேராசிரியரிடம் ஆம்ஸ்ட்ராங் கோரியிருக்கிறார். அக்கடிதம் அப்பட்டமான சாதிவெறியோடு எழுதப்பட்ட ஒரு கடிதம். அதற்கும் அந்த பெலோஷிப்பை வாங்குவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது குறித்த விரிவான செய்தி, "தலித் வாய்ஸ்' இதழில் வெளிவந்திருக்கிறது.

இந்தியாவில் தரப்படும் இன்னொரு ஆகச்சிறந்த பெலோஷிப் "புல்பிரைட் பெலோஷிப்'. அதைப் பெறுவதற்கு இரண்டு பேரின் பரிந்துரைக் கடிதங்கள் அவசியம். இந் தியாவில் தரப்படும் பரிந்துரைக் கடிதங்கள், ஜாதிக் கடிதங்களாக இருப்பதால், அக்கடிதங்களை அவர் கனடாவிலும், அமெரிக்காவிலும் பெற்றிருக்கிறார். 2009 - 2010 ஆம் ஆண்டுக்கான "புல்பிரைட் பெலோஷிப்' ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு கிடைத்தது. அதுமட்டுமல்ல, அதை ஆங்கிலத்திற்காகப் பெற்ற முதல் தலித் - இந்தியாவிலேயே அவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பெல்லோஷிப்பை பெற்று, அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், அவர் தலித் மற்றும் அமெரிக்க தொல்குடி பெண் எழுத்தாளர்களுக்கு உள்ள - ஒற்றுமை மற்றும் வேற்றுமை குறித்த ஒரு பாடத்திட்டத்தினை உருவாக்கி, அதை அங்குள்ள மாணவர்களுக்கு நடத்தியுள்ளார். அது அவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது என்று அவர் நம்மிடம் கூறியபோது, நம் நெஞ்சு இயல்பாகவே நிமிர்கிறது. புல்பிரைட் பெலோஷிப்பை பெற்றவர்கள், ஆய்வு உலகத்தில் உயர்நிலையைப் பெற்றவர்களாக மதிக்கப்படுகின்றனர். அத்தகைய ஆகச்சிறந்த மதிப்பை, ஒரு தலித் பெற்றிருக்கிறார் என்பது, நம் விடுதலைக்கான பாதையில் ஒரு மைல்கல்!

ஆங்கிலத்தில் வெளியான அவருடைய முதல் புத்தகம், கனடா நாட்டின் தொல்குடி பெண் எழுத்தாளர்களின் தன்வரலாறுகள் (The voice of the voiceless from the first nations). “அவர்களுடைய தன்வரலாறுகள் தனிவரலாறுகள் அல்ல; அவை சமூகத்தின் வரலாறுகள்’ என்கிறார் ஆம்ஸ்ட்ராங். அவர்களை "முதல் தேசத்து மக்கள்' என்று அழைக்கிறார். அவருடைய இரண்டாவது நூல் Survivance beyond canons: mapping Canadian first nations literatures  - கனட நாட்டு முதல் தேசத்து மக்களின் இலக்கிய வரைவியல். மேலும், அவருடைய இரண்டு நூல்கள் வர இருக்கின்றன - Beyond Post-colonial borders: Studies in Canada and India, an anthology of Tamil Dalit literature.

கனடாவில் உள்ள தொல்குடி மக்களின் நாடகங்கள் வெகுசிறப்பினைப் பெற்றுள்ளன. ஆனால், தமிழில் அத்தகைய தலித் நாடகங்கள் இல்லை. ஒரு சில இருந்தாலும் அவை தீவிரத்தன்மை யுடன் இல்லை என ஆம்ஸ்ட்ராங் கூறுகிறார். வரவிருக்கும் நூலில், தற்பொழுது தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களின் ஆக்கங்களை, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்.

தலித் எழுத்துக்கும், கனடா நாட்டின் முதல் தேசத்து மக்கள் என்றழைக்கப்படும் தொல்குடி மக்களின் எழுத்துக்கும் நிறைய ஒற்றுமைகளை அவரால் உணர முடிந்திருக்கிறது. இதற்கு தமிழ் - தலித் இலக்கிய வாசிப்பும் அவருக்கு பேருதவியாக இருந்திருக்க வேண்டும். தன் வரலாறுகளை சமூக வரலாறுகளாக எழுதும் உத்தி, இரு எழுத்துகளிலும் இருக்கிறது. கதைக்குள் கதை நிகழ்த்தும் போக்கு மற்றும் அப்பெண்களுக்கும் தலித் பெண்களுக்குமான ஒடுக்குமுறைகள் ஒரே தன்மையுடையதாக இருக்கிறது. இரண்டுமே நான்கு வழிகளில் நிகழ்த்தப்படுகின்றன.

தலித் பெண்கள் மீதான ஒடுக்கு முறை - சாதியம், ஆதிக்க சாதி ஆண், ஆதிக்க சாதி பெண், சுயசாதி ஆண் என நான்கு வழிகளிலும்; கனடா நாட்டின் முதல் தேசத்து பெண் மக்கள் மீது - நிறவெறி, வெள்ளை ஆண், வெள்ளைப் பெண், தன்னின ஆண் என நான்கு வழிகளிலும் நடைபெறுகிறது என கூறும் ஆம்ஸ்ட்ராங், இரண்டு எழுத்துகளுமே ஆதிக்கத்திற்கு எதிராக எழுதப்படுவன; இரண்டுமே ஊடகங்களின் புறக்கணிப்புக்கு உள்ளானவை என வரையறுக்கிறார். கனடா பெண் எழுத்தாளர்கள் வெவ்வேறு வடிவங்களில் எழுதுகின்றனர். முதல் தேசத்து மக்களின் பிரச்சனைகள் உலகளவில் விவாதிக்கப்படுகின்றன. பல்கலைக் கழகங்கள் - ஆதிகுடிகளின் எழுத்துகளைக் கொண்டாடுவதிலும், அவற்றைப் பரப்புவதிலும் முதன்மையான இடத்தை வகிக்கின்றன. தொல்குடி எழுத்துகளுக்கென தனிப் பல்கலைக் கழகமே அங்கு தொடங்கப்பட்டுள்ளது என இங்கில்லாத சிறப்புகளையும் கூறுகிறார்.

பல்வேறு இடர்படிக்கட்டுகளை ஏறி, வெற்றியின் உச்சாணிக் கொம்பில் ஆம்ஸ்ட்ராங் நிற்கிறார். ஆம், தலித் இளைஞர்களுக்கு இவர் தன் வாழ்க்கையையே பாடமாக நடத்திக் கொண்டிருக்கிறார்.

- யாழன்ஆதி

ஆம்ஸ்ட்ராங்கை தொடர்பு கொள்ள : 97911 40260