தீண்டத்தகாத மக்களை இந்திய அரசியல் அரங்கிற்கு கொண்டு வருவதிலும்இந்திய ஜனநாயகத்திற்கு அடித்தளமிடுவதிலும் டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்பு – 3

வட்டமேசை மாநாட்டின் முதல் கூட்டத்தின் போது, சிறுபான்மையோர் துணைக் குழு செய்ததைப் போன்று, வருங்கால இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் அங்கீகரிக்கப்பட மாட்டார்கள் என்றால், தான் அந்தக் குறிப்பிட்ட குழுவில் சேரப் போவதில்லை; அது போன்றே, ஒத்திவைப்புக்கான அறிவிக்கையை முழுமனதாக ஆதரிக்கப் போவதுமில்லை என்று இடியோசை போல் அம்பேத்கர் முழங்கினார். சர். ஹெர்பார்ட் கார், டாக்டர் தத் மற்றும் பிறர் ஒத்திவைப்பை ஆதரித்தார்கள்.

ambedkar_361காந்திக்கும் முஸ்லிம் தலைவர்களுக்கும் இடையிலான விவாதங்கள், ஒருவார காலம் நடைபெற்றன. விவாதங்கள் ஓர் ஊக்கமளிக்கும் கட்டத்தை அடைந்துள்ளதாகப் பத்திரிகைகள் தெரிவித்தன. முஸ்லிம்களுக்கு அவர்களுடைய 14 அம்சங்களை காந்தி விட்டுக் கொடுத்தார் என்றும், எஞ்சியுள்ள அதிகாரங்கள் சமஷ்டியில் சேர்ந்துள்ள மாகாணங்களுக்கு வழங்குவதை ஒத்துக் கொண்டார் என்றும், பஞ்சாபிலும் வங்காளத்திலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையோராக இருப்பதை ஏற்றுக் கொண்டார் என்றும், முஸ்லிம்களுக்குத் தொகை குறிப்பிடாத ஒரு வெற்றுக் காசோலையைக் கொடுத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் சீக்கியர் – முஸ்லிம் பிரச்சினையில் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.

வெவ்வேறு குழுக்களினுள்ளும் அவற்றின் பிரதிநிதிகளுடனும் வகுப்புவாரிப் பிரச்சினைக்கு தனி முறையிலான உரையாடல்கள் மூலம், "ஓர் ஒன்றுபட்ட தீர்வு காண்பதில் முழு தோல்வி அடைந்ததாக காந்தி, அக்டோபர் 8 இல் ஆழ்ந்த துயரத்துடன் சிறுபான்மையோர் குழுவிற்கு அறிவித்தார். தோல்விக்கான காரணங்கள், இந்தியப் பிரதிநிதிக் குழுவின் இயைபிலேயே உள்ளார்ந்து அமைந்திருந்தன என்று அவர் கூறினார். மேலும், அவர்கள் அனேகமாக எல்லோரும் யாரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கருதப்பட்டதோ, அந்தக் கட்சிகள் அல்லது குழுக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளல்லர். மேலும், ஓர் ஒன்றுபட்ட தீர்வுக்கு அவர்களுடைய இருப்பு முற்றிலும் அவசியமானதாக இருக்கவில்லை. எனவே, அவர், மாநாட்டை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கும்படிக் கோரினார். டாக்டர் அம்பேத்கர், சவாலை ஏற்று காந்திக்கு பதில் கூறுவதற்கு எழுந்தார். பரஸ்பரம் ஒத்துக் கொண்டதை காந்தி மீறிவிட்டார் என்றும், முந்தைய நாள் இரவில், ஆத்திரமூட்டக் கூடிய எத்தகைய உரையையும் விமர்சனத்தையும் எந்தப் பிரதிநிதியும் நிகழ்த்தக் கூடாது என்று ஒத்துக் கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

டாக்டர் அம்பேத்கரின் கடுகடுத்த தொனி உயரத் தொடங்கியது. அவர் இவ்வாறு முழங்கினார்: “திரு. காந்தியின் பேச்சைக் கேட்டதற்குப் பின்னர் என்னைக் கலக்கமடையச் செய்திருப்பது என்னவெனில், அவர் தன்னுடைய நிலையுடன் நிறுத்திக் கொள்ளாமல், அதாவது, சிறுபான்மையோர் குழு மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்று கூறுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல், இந்த மேசையைச் சுற்றி அமர்ந்து கொண்டிருக்கும் வெவ்வேறு சமூகங்களின் பிரதிநிதிகள் மீது பழி சுமத்துவதற்குத் தொடங்கியுள்ளார். பிரதிநிதிகள் அரசினால் நியமிக்கப்பட்டவர்கள் என்றும், அவர்கள் யாருக்காக நிற்கிறார்களோ, முறையே அந்த சமூகங்களின் கருத்துகளைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.

“நாம் அரசினால்  நியமிக்கப் பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டை மறுக்க முடியாது. ஆனால் என்னைப் பொருத்தமட்டிலும், இந்த மாநாட்டிற்குத் தங்களுடைய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பும்படி தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால்கூட, அப்பொழுதும் நான் இங்கு இடம் பெறுவேன் என்பதில் எனக்குச் சிறிதும் அய்யமில்லை. எனவே, நான் ஒரு நியமனப் பிரதிநிதியானாலும், இல்லாவிட்டாலும், என்னுடைய சமூகத்தின் கோரிக்கைகளை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன்.  இது தொடர்பாக, எந்த மனிதருக்கும் எத்தகைய தவறான கண்ணோட்டமும் இருக்க வேண்டியதில்லை.''

டாக்டர் அம்பேத்கர் தொடர்ந்து கூறினார் : “காங்கிரஸ் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்காக நிற்கிறது என்றும், நானோ அல்லது என்னுடைய சகாக்களையோ காட்டிலும் கூடுதலாக காங்கிரஸ் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும் காந்தி உரிமை கொண்டாடி வருகிறார். இந்த உரிமை கொண்டாடலுக்கு பொறுப்பற்ற நபர்கள் தொடர்ந்து கூறிவரும் பல பொய்யான உரிமை கொண்டாடல்களில் இதுவும் ஒன்றாகும் என்று மட்டுமே நான் கூற முடியும். அந்த உரிமை கொண்டாடல்கள் தொடர்புடைய நபர்கள், எப்போதும் அவற்றை மறுத்து வந்துள்ள போதிலும் தொடர்ந்து அவற்றைக் கூறி வருகிறார்கள்.'' பின்னர் டாக்டர் அம்பேத்கர், எவ்வாறு இந்தியாவின் மிகத் தொலைவான தீண்டத்தகாத மூலையிலிருந்து, அவர் ஒருபோதும் வருகை புரியாத, அவர் ஒரு போதும் காணாத மக்களிடமிருந்து – தனது நிலையை ஆதரித்து தனக்கு தந்திகள் வந்துள்ளன என்று எடுத்துக் காட்டினார்.

பின்னர் அவர், ஒன்று, குழு இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் அல்லது பிரிட்டிஷ் அரசு இதற்குத் தீர்வு காணும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று குழுவினரிடம் கூறினார். மிகவும் ஏமாற்றமும் கலக்கமும் அடைந்த அவர், இன்றைய சூழ்நிலையில் அதிகார மாற்றம் குறித்து தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் ஆவலாக இருக்கவில்லை. ஆனால் அரசு அதிகார மாற்றத்தை விரும்பினால், அதிகாரம் ஒரு சிறு குழுவினரின் கைகளுக்கு, ஆதிக்க வர்க்கத்தின் கைகளுக்கு, முகமதியர்களாகவோ, இந்துக்களாகவோ இருந்தாலும் – ஒரு குழுவினரின் கைகளுக்கு அதிகாரம் மாறிச் சென்றுவிடக்கூடாது என்ற நிபந்தனைகளுடனும் விதிகளுடனும் அது செய்யப்பட வேண்டும். அதிகாரத்தை எல்லா சமூகங்களும் முறையே அவர்களின் விகிதாசாரப்படி பகிர்ந்து கொள்ளப்படுமாறு தீர்வு  அமைய வேண்டும் என்று கூறினார்.

பிரதமர், பிரதிநிதிகளுக்கு விடுத்த வேண்டுகோளில், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறை பற்றியோ அல்லது அவர்களுடைய தனிப்பட்ட குறைபாடுகளுக்கோ காரணங்கள் கற்பிக்க வேண்டாமென்று கேட்டுக் கொண்டார். உண்மைகளை எதிர்கொள்ளும்படியும், இந்தப் பிரச்சினை இந்தியாவில் உள்ளதா, இல்லையா என்று கூறும்படியும், அவர் அவர்களை கேட்டுக் கொண்டார். பிரதமரின் உரை ஓரளவு கார சாரமான தொனியில் அமைந்திருந்தது. சிலர் அதை நன்றி மறந்த செயல் என்று கூறினர். அது, காந்திக்கும் எதிராகக் கடுமையான மறை முகத் தாக்குதல்களைக் கொண்டிருந்தது.

டாக்டர் அம்பேத்கரின் தீவிரமான பிரச்சாரம் இத்துடன் நின்றுவிடவில்லை. அவர் லண்டனிலிருந்து அக்டோபர் 12 அன்று, "டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிகைக்கு எழுதிய ஒரு கடிதத்தில், இந்த நிகழ்ச்சி முழுவதையும் பற்றி விளக்கமளித்திருந்தார். அவர் இவ்வாறு எழுதினார்: “நமது முஸ்லிம் நண்பர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில், அவர்களுடைய 14 அம்சங்களை ஒப்புக் கொள்வதற்கு அவர் விதித்த நிபந்தனைகளில் ஒன்று, தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் மற்றும் சிறுபான்மையினரின் கோரிக்கைகளை அவர்கள் எதிர்க்க வேண்டும் என்று கோரினார் என்பதுதான் என்று நமக்கு நம்பகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மற்றவர்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டால் நான் ஏற்றுக் கொள்கிறேன்''  என்று பகிரங்கமாகக் கூறிவிட்டு, ஒத்துக் கொள்ள விரும்புகின்றவர்களை விலைக்கு வாங்குவதன் மூலம் ரகசியமாக அவ்வாறு ஒத்துக்கொள்ளாமல் தடுப்பதற்கு வேலை செய்வது, ஒரு "மகாத்மா'வுக்குப் பொருந்தாத நடத்தை என்பது எங்களுடைய கருத்து. தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் ஓர் இறுகிப்போன எதிராளியிடமிருந்து மட்டுமே இதை எதிர்பார்க்க முடியும். திரு. காந்தி, தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் நண்பன் என்ற பங்கை ஆற்றவில்லை என்பது மட்டுமின்றி, ஒரு நாணயமான எதிரியின் பங்கைக் கூட ஆற்றவில்லை.''

நாட்டுக்கு எழுதிய கடிதத்தில், வட்டமேசை மாநாடு தோல்வியில் முடியுமென்றும், அந்தத் தோல்விக்கு காந்திதான் பொறுப்பு என்பது தனது கருத்து என்றும் டாக்டர் அம்பேத்கர் முன்கூட்டியே கூறியிருந்தார். டாக்டர் அம்பேத்கரின் கருத்துப்படி, சிறுபான்மையினரின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் காந்தியின் ஒரு சாராருக்கு ஆதரவான நிலை, பாரபட்சம், அவருடைய சமத்துவமற்ற மனப்பாங்கு, பிற பிரதிநிதிகளின்பால் சிறிதும் மரியாதை காட்டாத நிலை, அவர்கள் மீது அவர் சுமத்திய அவமானம் – ஆகிய இந்தப் பண்புகள் எல்லாம் பிரச்சினைக்கு சாமர்த்தியமாகத் தீர்வு காண்பதற்கு காந்திக்கு  உதவவில்லை. ஒரு சமூகத்தை மற்றொரு சமூகத்திற்கு எதிராகத் தூண்டிவிடும் காந்தியின் கெட்ட எண்ணத்துடன் கூடிய வழிமுறை, தற்பொழுது மிகத்தெளிவாகத் தெரிகிறது என்று டாக்டர் அம்பேத்கர் மேலும் கூறினார். அவருடைய ஜனநாயகமற்ற மனப்பாங்கு, ஹரோல்டு லாஸ்கியைப் போன்ற மனிதருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மற்றும் வித்தல்பாய் பட்டேல் போன்ற காங்கிரஸ் தலைவர்கள், காந்தி நிலைமையை தவறாகக் கையாண்டதற்கு ஆட்சேபனையை முணுமுணுத்துக் கொண்டிருந்தனர்.

டாக்டர் அம்பேத்கர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு காந்தியின் எதிர்ப்பு, இந்தியா முழுவதிலும் தீண்டத்தகாதவர்களின் வட்டாரங்களில்  பரந்த பிரதிபலிப்பையும் கடுமையான விளைவையும் ஏற்படுத்தியது. ராவ் பகதூர் எம்.சி. ராஜாவின்  தலைமையின் கீழ் அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் மாநாடு, தனது குர்கான் அமர்வில் தீண்டத்தகாதோரின் கோரிக்கையை காந்தி தவறாக எடுத்துக் கூறுவதாக அறிவித்து, தொடக்கக் காலத்திலிருந்தே காங்கிரஸ் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு கொடுத்து வருகிறது. மேலும், தாழ்த்தப்பட்டவர்களின் நலனுக்காகப் பாடுபட்டு வருகிறது என்று காந்தி உரிமை கொண்டாடியதை வன்மையாக மறுத்தது. மாநாட்டின் தலைவர் ராஜா, “இந்தக் கூற்றுகள் உண்மையல்ல என்று நான் கூறுகிறேன்'' என்று கூறினார்.

டாக்டர் அம்பேத்கர் முன்வைத்த கோரிக்கைகளை மாநாடு ஆதரித்தது. தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்குத் தனித் தொகுதி முறையை உள்ளடக்கிக் கொள்ளாத எந்த அரசமைப்புச் சட்டமும், தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கு ஏற்புடையது அல்ல என்று  அறிவித்தது. காந்தியாரிடமும் காங்கிரசிடமும் நம்பிக்கை வைக்க வேண்டாம் என்று டாக்டர் அம்பேத்கரை கேட்டுக் கொள்ளும் நூற்றுக்கணக்கான செய்திகள் (தந்திகள்), இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களாலும், அமைப்புகளாலும் மற்றும் திருநெல்வேலி, ராபர்ட்சன் பேட்டை (சென்னை) லயால்பூர், கர்னால், சிதம்பரம், கள்ளிக்கோட்டை, பனாரஸ், கோலாப்பூர், யோத்மால், நாகபுரி, சந்தா, கான்பூர், காம்ப்தே, பெல்காம், தார்வார், நாசிக், ஹூப்ளி, ஆமதாபாத், தூத்துக்குடி, கொழும்பு மற்றும் வேறு பல இடங்களிலும் நடைபெற்ற பொதுக் கூட்டங்களிலிருந்தும், மாநாடுகளிலிருந்தும் டாக்டர் அம்பேத்கருக்கு அனுப்பப்பட்டன.

தாழ்த்தப்பட்ட மக்களின் உண்மையான பிரதிநிதி யார் என்பதை  இந்த ஆவேசமான தந்திகள் எடுத்துக் காட்டின. காந்திக்கும் சில தந்திகள் கிடைத்தன என்பதில் அய்யமில்லை. ஆனால், லண்டனில் வெவ்வேறு இடங்களில் ஆற்றிய உரைகளின் போதும், உரையாடல்களின் போதும் காந்தியை நோக்கிக் கேட்கப்பட்ட கேள்விகளை நிறைவு செய்வதற்குப் போதுமானதாக இல்லை. டாக்டர் அம்பேத்கரின் போர்க் குணம் மிக்க பிரச்சாரத்தின் ஆற்றல்மிக்க விளைவு இத்தகையதாக இருந்தது. எனவே, உண்மையாகவே காந்தி திகைப்படைந்தார். "தீண்டத்தகாதவர்களின் பாதுகாவலன்' என்று அவர் தனக்குத்தானே வகுத்துக் கொண்ட தன்மை அம்பலப்படுத்தப்பட்டது.

இந்த நேரத்தில் இந்தியாவில் நாசிக்கிலும், குருவாயூரிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் தொடங்கிய ஆலய நுழைவு  இயக்கத்தினால், இது மேலும் தெளிவாக அம்பலமாயிற்று. நாசிக்கில் சத்தியாகிரகம் மீண்டும் தொடங்கப்பட்டதானது, மகத்தான உந்து விசையை  அளித்தது. அய்ந்தாயிரம் தொண்டர்கள் நாசிக்கில் குவிந்தனர். டாக்டர் அம்பேத்கரின் ஈடுபாடு மிக்க துணைத் தளபதி பாபுராவ் கெய்க்வாட், தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்கள் ரங்காம்பே, பதித்பாவன தாஸ் போன்றவர்கள் மற்றும் நம்பிக்கைக்குரிய தளபதி தேவ்ராவ் நாயக் ஆகியோர் போராட்டத்தை முழு மூச்சாக நடத்தி, வைதிக இந்துக்களையும், இந்து தலைவர்களின் போலியான விசுவாசத்தையும் அம்பலப்படுத்தி, அவர்களின் உண்மை உருவத்தை தோலுரித்துக் காட்டினர்.

இந்த அவமானம் மிகவும் தாங்கொணாததாக இருந்ததால், டாக்டர் மூஞ்சே, லண்டனிலிருந்து இந்துக்களுக்கு வேண்டுகோள் விடுத்து, தங்களுடைய சொந்த சகோதரர்களுக்கு சமூக மற்றும் மத உரிமைகளை மறுக்க வேண்டாமென்றும், அவ்வாறு செய்தால் அது தங்களுக்கே ஆபத்தாக முடியும் என்றும் எடுத்துக் கூறியிருந்தார். முந்தைய சத்தியாகிரகத்தின் போது நடந்தது போலவே, காலாராம் கோயில் கதவுகளும் மூடப்பட்டன.

சாதி இந்துக்களின் நடத்தையை அம்பலப்படுத்துவதில் தனது மக்களிடமிருந்து உரிய காலத்தில் ஆதரவு கிடைத்ததற்காக டாக்டர் அம்பேத்கர் மகிழ்ச்சியடைந்தார். லண்டனிலிருந்து அவர் தனது மக்களுக்கு செய்தி அனுப்பினார். நாசிக் சத்தியாகிரகம் மிகுந்த உற்சாகத்துடனும், உறுதிப்பாட்டுடனும் நடத்தப்பட்டது. பெருங்கூட்டங்களும் ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. ஏராளமான தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிறை புகுவதற்கு முன் வந்து, சிறைவாசத்தை ஏற்றனர். இந்தக் கைதுகளைப் பற்றியும், சத்தியாகிரக நிகழ்ச்சிகளையும் பற்றி "லண்டன் டைம்ஸில்' வெளியிடப்பட்ட செய்திகள், டாக்டர் அம்பேத்கர் கூறியவற்றுக்கு மதிப்பைக் கூட்டின.

காந்தியுடனான மோதலுக்குப் பின்னர், சமஷ்டி அரசுக்கு துணைக் குழு வகுத்தளித்திருந்த, வருமானத்திற்குரிய வழிமுறைகளைப் பற்றிய விவாதத்தில் டாக்டர் அம்பேத்கர்   பங்கெடுத்துக் கொண்டார். சமஷ்டி நீதிமன்றத்தின் இயைபைப் பற்றி அவர் மிகவும் சிந்தனையைத் தூண்டும் அறிவார்ந்த  உரையை நிகழ்த்தினார். அதில் ஜின்னா, ஜெயகர், சாங்கே பிரபு மற்றும் லோதியன் பிரபுகூட அதிக ஆர்வம் காட்டினர். அவரது உரையின் அம்சங்களில் சிலவற்றைத் தெளிவுபடுத்தும்படியும் அவரைக் கேட்டுக் கொண்டனர். இந்தப் பெரும் பணியையும் பொருட்படுத்தாது, அம்பேத்கர், லண்டனில் வட்டமேசை மாநாட்டில் தனது நிலைக்கு ஆதரவாகத் தனியாருக்கான பேட்டிகள், விளக்கங்களைக் கொடுப்பதிலும், அறிக்கைகள் வெளியிடுவது, பதில் (மறுப்பு) அறிக்கைகளை வெளியிடுவது, பல்வேறு நிறுவனங்களில் உரைகள் நிகழ்த்துவது ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

சர்வதேச விவகாரங்கள் நிறுவனத்தில் அம்பேத்கர் நிகழ்த்திய  உரை, காந்தியின் கொள்கை நிலையை உடைத்தெறிவதில் மிகவும் பயனுறுதியுடையதாக இருந்தது.                                               

அம்பேத்கரும் ரெட்டமலை சீனிவாசனும் அளித்த மனு

வட்டமேசை மாநாட்டின் முதலாவது கூட்டத் தொடரில் சிறுபான்மையினர் துணைக் குழுவிடம் அளித்த முதலாவது கோரிக்கை மனுவோடு,  1931 நவம்பர் 4இல் ஒரு துணை கோரிக்கை மனுவையும் டாக்டர் அம்பேத்கரும், ராவ் பகதூர் ஆர். சீனிவாசனும் கூட்டாக அளித்தனர். துணை கோரிக்கை மனுவில் கீழ்வருமாறு கூறப்பட்டிருந்தது : சிறப்புப் பிரதிநிதித்துவத்திற்காக, தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் உரிமைக் கோரிக்கைகள் பற்றி டாக்டர் பீமாராவ் ஆர். அம்பேத்கரும், ராவ்பகதூர் ஆர். சீனிவாசனும் அளித்த துணை கோரிக்கை மனு :

தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் பாதுகாப்புக்காக, ஒரு சுயாட்சி இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் அரசியல் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பாக, கடந்த ஆண்டு நாங்கள் அளித்த கோரிக்கை மனுவில் – இது, சிறுபான்மையினர் துணைக் குழுவின் விவாதங்களின் அச்சிட்ட தொகுதியின் 3ஆவது பிற்சேர்க்கையாக அமைந்துள்ளது. தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் சிறப்புப் பிரதிநிதித்துவம், அத்தகைய பாதுகாப்புகளில் ஒன்றாக அமைய வேண்டும் என்று கோரியிருந்தோம். அவர்களுக்குத் தேவையென்று நாங்கள் கோரியிருந்த சிறப்புப் பிரதிநிதித்துவத்தின் தகவல்களை அப்பொழுது நாங்கள் விளக்கவில்லை. இந்தப் பிரச்சினையை எட்டுவதற்குள், சிறுபான்மையோர் துணைக் குழுவின் விவாதங்கள் முடிவுக்கு வந்துவிட்டதே இதற்குக் காரணமாகும். இந்தத் துணை மனுவின் மூலம், அப்பொழுது விடுபட்டதை இப்பொழுது சரிசெய்வதற்கு நாங்கள் விரும்புகிறோம். எனவே, இவ்வாண்டு இப்பிரச்சினையை விவாதிப்பதற்கு, சிறுபான்மையோர் துணைக் குழு முன்வரும்போது இந்த தேவையான விவரங்கள், அதற்கு உதவிகரமாக இருக்கும்.

1. சிறப்புப் பிரதிநிதித்துவத்தின் அளவு

அ. மாகாண சட்டப் பேரவையில் சிறப்புப் பிரதிநிதித்துவம்

(i) வங்காளம், மத்திய மாகாணங்கள், அஸ்ஸாம், பீகார், ஒரிசா, பஞ்சாப் மற்றும் அய்க்கிய மாகாணங்களில் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கு, சைமன் ஆணையமும், இந்திய மத்தியக் குழுவும் மதிப்பிட்டதன்படியான அவர்களின் மக்கள் தொகையின் விகிதாசாரத்திற்கு ஏற்பப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.

(ii) சென்னை மாகாணத்தில் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கு 22 சதவிகித பிரதிநிதித்துவம் வேண்டும்.

(iii) பம்பாயில் –

(அ) சிந்து மாகாணம் பம்பாய் ராஜதானியின் ஒரு பகுதியாக நீடித்து இருக்கும் பட்சத்தில், தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கு 16 சதவிகித பிரதிநிதித்துவம் வேண்டும்.

(ஆ) பம்பாய் ராஜதானியிலிருந்து சிந்து பிரிக்கப்பட்டுவிட்டால் தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள், ராஜதானியின் முஸ்லிம்களுக்குள்ள அதே பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். ஏனெனில், இரு தரப்பினரின் மக்கள் தொகையும் சமமாக உள்ளன.

ஆ. சமஷ்டி சட்டப் பேரவையில் சிறப்புப் பிரதிநிதித்துவம் –

சமஷ்டி சட்டப் பேரவையின் இரு அவைகளிலும் இந்தியாவில் அவர்களது மக்கள் தொகையின் விகிதாச்சாரத்திற்கேற்ப, தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும்.

ஒதுக்கீடுகள்

சட்டப் பேரவைகளில் இந்தப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தைக் கீழ்வரும் அனுமானங்களின் பேரில் நாங்கள் நிர்ணயித்துள்ளோம் :

(1)  தாழ்த்தப்பட்ட மக்களின் மக்கள் தொகை தொடர்பாக சைமன் ஆணையமும் (தொகுதி1 பக்.40), இந்திய மத்தியக் குழுவும் (அறிக்கை, பக்.44) கொடுத்துள்ள புள்ளிவிவரங்கள், இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கு அடிப்படையாக அமைவதற்குப் போதுமான அளவு சரியானது என்று ஏற்றுக் கொள்ளத்தக்கதாகும் என்று நாங்கள் கருதுகிறோம்.

(2) சமஷ்டி சட்டப் பேரவை இந்தியா முழுவதையும் உள்ளடக்கியதாகும் என்று நாங்கள் கருதுகிறோம். இந்நிலையில் ஆளுநர்களின் மாகாணங்களில் உள்ள அவர்களது மக்கள் தொகைகூட – இந்திய சமஸ்தானங்களிலும், நேரடி மத்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள பிரதேசங்கள் ஆகியவற்றிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் மக்கள் தொகையும் – சமஷ்டி சட்டப்பேரவையில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவ அளவைக் கணக்கிடுவதற்கு, மிகவும் சரியாக ஒரு கூடுதல் தொகையாக அமையும் என்று நாங்கள் கருதுகிறோம்.

(3) பிரிட்டிஷ் இந்திய மாகாணங்களின் நிர்வாகப் பரப்பு, தற்போதுள்ளது போன்றே தொடர்ந்து இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.

ஆனால், சில அக்கறையுள்ள தரப்பினர் அச்சுறுத்துவதைப் போன்று, இந்த அனுமானங்களுக்கு சவால் விடப்படுமேயானால், தாழ்த்தப்பட்ட மக்களின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு புதிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் கீழ், தாழ்த்தப்பட்ட மக்களின் மக்கள் தொகை முறையான விகிதாசாரத்தைக் காட்டுமேயானால், அல்லது மாகாணங்களின் நிர்வாகப் பிரதேசங்கள் மாற்றப்பட்டு, அதன் விளைவாக தற்போதைய மக்கள் தொகை சமநிலை பாதிக்கப்படுமேயானால், அப்பொழுது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, தமது பிரதிநிதித்துவ விகிதாசாரத்தை மாற்றுவதற்கும் கூடுதல் பிரதிநிதித்துவத்தைக் கோருவதற்கும் உரிமை உள்ளவர்களாவர். இதே முறையில், அகில இந்திய சமஷ்டி நடைமுறைக்கு வராமல் போகுமானால், சமஷ்டி சட்டப்பேரவையில் எந்த அடிப்படையில் கணக்கிடப்பட்டதோ, அந்தப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தில் மறுசீரமைப்புக்கு அவர்கள் தயாராயிருப்பார்கள்.

– தொடரும்