நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை : 675. இதில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை : 45. உச்ச நீதிமன்றத்தில் ஒரு பெண் நீதிபதிகூட இல்லை. மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில் ஆண் மற்றும் பெண் நீதிபதிகளின் நிலை : அலகாபாத்-ஆண் : 70; பெண் : 3. ஆந்திரா-ஆண் :29; பெண் : 2. மும்பை-ஆண் : 59; பெண் : 7. கொல்கத்தா-ஆண் : 36; பெண் : 2. டெல்லி-ஆண் : 33; பெண் : 6. கவுகாத்தி-ஆண் : 21; பெண் : 1. குஜராத்-ஆண் : 26; பெண் : 3. கர்நாடகா-ஆண் : 37; பெண் : 2. கேரளா-ஆண் : 31; பெண் : 2. மத்தியப் பிரதேசம்-ஆண் : 34; பெண் : 4. சென்னை-ஆண் : 39; பெண் : 4. சட்டிஸ்கர், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய உயர் நீதிமன்றங்களில் ஒரு பெண் நீதிபதிகூட இல்லை.''

நிரப்பப்படாத 32 ஆயிரத்து 500 தலித் இடங்கள்

பதினோராவது அய்ந்தாண்டுத் திட்டத்தின்படி, கிராமப்புறங்களில் தலித்துகளில் 37 சதவிகிதத்தினரும், பழங்குடியினரில் 47 சதவிகிதத்தினரும் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கிறார்கள். நகர்ப்புறங்களில் தலித்துகளில் 33 சதவிகிதத்தினரும், பழங்குடியினரில் 40 சதவிகிதத்தினரும் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கின்றனர். அய்ந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளில் இறக்கக்கூடிய குழந்தைகள் தலித் பிரிவினரில் 94.3 ஆகவும், பழங்குடியினரில் 113 ஆகவும் உள்ளது. இது, ஒட்டுமொத்த இந்திய சராசரியைவிட அதிகமாகும்.

தற்பொழுது நடைபெறும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், சமூக நீதிக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய சி.பி.எம். கட்சியின் டி.கே. ரங்கராஜன், “தலித்துகளுக்கான துணைத் திட்ட நிதி 7.07 சதவிகிதத்திலிருந்து 6.49 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. பழங்குடியினருக்கான துணைத் திட்ட நிதி 4.21 சதவிகிதத்திலிருந்து 4.10 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. தலித்துகளுக்கென்று "பிரதமர் ஆதர்ஷ யோஜனா' என 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன் புதிய திட்டம் ஒன்றை கொண்டு வந்திருக்கிறார்கள். இத்தொகையை வைத்து என்ன செய்ய முடியும்? இருப்பதைக் குறைதது புதிதாக ஒன்றைத் தொடங்கி இருக்கிறார்கள். ரயில்வே துறையில் 1 லட்சத்து 70 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கின்றன. இவற்றில் 32 ஆயிரத்து 500 இடங்கள் தலித் மற்றும் பழங்குடியினருக்குரியவை. இவை நிரப்பப்படாமலேயே உள்ளன'' என்று தெரிவித்திருக்கிறார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் வறுமையில் வாடுகின்றனர்; அவர்களுக்கு எழுத்தறிவில்லை; அவர்களின் குழந்தைகள் சிறு வயதிலேயே இறந்து விடுகின்றனர்; அவர்களுக்குப் போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை; அவர்கள் மீது எண்ணற்ற வன்கொடுமைகள் நடக்கின்றன... இவ்வாறு எல்லா வகையான கேடுகளும் சூழ்ந்துள்ள தீவில்தான் அவர்கள் வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இந்து என்னும் இத்தீவில் இருந்து அவர்களை வெளியேற்றாமல், அவர்களை ஒருக்காலும் முன்னேற்ற முடியாது. அதற்கான செயல்திட்டம் இல்லாத வரை, அவர்களை எத்தகைய பொருளாதார நலத் திட்டங்களும் சென்றடையாது; வறுமையும் ஒழியாது.

தீண்டாமையை உள்ளடக்கிய சமத்துவபுரங்கள்!

விருதுநகர் மாவட்டம்-காரியாப்பட்டி வட்டத்தில் உள்ள கல்குறிச்சி பெரியார் சமத்துவபுரத்தில், ஆறுமுகம் என்ற தலித் குடும்பத்தினர் அங்குள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்றபோது, அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். ஆறுமுகத்தை ஓட ஓட விரட்டி, செருப்பாலும் கம்பாலும் தாக்கியிருக்கின்றனர். இது குறித்து அவர் போலிசில் புகார் கொடுக்க முயன்றபோது, "நீ சமத்துவபுரத்தில் இருக்கிறாய். அதனால் சாதி பற்றி பேசக் கூடாது. எனவே, நீ அடிபட்டதற்கு வேறு ஏதாவது காரணம் சொல்' என அதிகாரிகள் மிரட்டியிருக்கிறார்கள். தற்பொழுது ஆறுமுகம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் ("குமுதம் ரிப்போர்ட்டர்', 9.7.09). தமிழக முதல்வரின் செல்லமான திட்டத்தின் அடிப்படையே தகர்ந்து விடும் ஆபத்துள்ளது. அரசு அதிகாரிகளால் எவ்வித அக்கறையுமின்றி செயல்படுத்தப்படும் திட்டங்கள், இத்தகு அவலங்களையே சந்திக்கும்.

சமத்துவபுரங்களின் பெயர்களில் மட்டும் பெரியார் இருந்தால் போதாது. அவருடைய கொள்கைகளைப் பரப்ப அரசு குறைந்தளவு கவனத்தையாவது செலுத்த வேண்டும். சாதி-தீண்டாமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, அம்பேத்கர்-பெரியார் கருத்துகளை சிறு நூல்களாக வெளியிட்டு விழிப்புணர்வைப் பரவலாக்குவது என தொடர்ச்சியான திட்டங்கள் இல்லாது போனால், சமத்துவபுரங்களும் சேரிகளையே உருவாக்கும். கடந்த ஆட்சியின்போதும், இந்த ஆட்சியிலும் தி.மு.க. அரசால் தொடங்கப்பட்ட சமூக சீர்திருத்தத் துறை-எவ்வித சீர்திருத்தத்தையும் கடுகளவும் செய்யாமலேயே முடங்கிப் போயிருக்கிறது. சமூக அக்கறை கிஞ்சித்தும் இல்லாத அரசியல்வாதிகளையே பெரும்பான்மையாகக் கொண்டு அத்துறையின் ஆலோசனைக் குழு நிரப்பப்பட்டிருக்கிறது. சென்ற முறை இத்துறை செயலிழந்து போனதற்கு அ.தி.மு.க.வை குறை கூறிய தி.மு.க. அரசு, இம்முறை இத்துறை செயலிழந்து இருப்பதற்கு யாரை குற்றம் சொல்லப் போகிறது? 

“வாழ்க வளமுடன்''

தீண்டாமைக் கிருமி, கிராமங்களை மட்டும்தான் தாக்கும்; நகரங்களைத் தாக்காது என்றொரு மூடநம்பிக்கை மக்களிடையே உண்டு. உண்மை என்ன? மகாராட்டிர மாநிலம் பூனாவில் உள்ள பிம்பாரி-சிக்காவாட் என்ற நகரத்தில், 24 வயது தலித் பெண் சாதி வெறியர்களால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார் (மேலே உள்ள படங்கள்). காரணம்? சாதி இந்துக்களின் வீட்டிற்கு எதிரில் அவர் சொந்தமாக வீடு கட்டத் துணிந்திருக்கிறார். ரேகா, தன்னுடைய தாய் (கல்பனா), தந்தை (சம்பாஜி வாக்மரே) மற்றும் மூன்று சகோதரர்களுடன் (வினோத், சுனில், சுரேஷ்) தங்கள் ஊரைவிட்டு டப்கிர் நகருக்கு வந்தார். தான் படித்திருந்ததால் கிடைத்த பணியின் மூலம் உழைத்து, ஒரு வீட்டுமனை வாங்கியிருக்கிறார் ரேகா. அதில் 2 அறைகள் கொண்ட ஒரு வீட்டைக் கட்டி வருகிறார். பக்கத்தில் சுரேஷ் சுபேகார் என்ற சாதி இந்துவின் வீடு உள்ளது. இந்த மனையை ரேகா வாங்கியதிலிருந்தே இந்த சாதி இந்து, கேவலமாக பேசத் தொடங்கியிருக்கிறார்.

மே 13, 2009 அன்று மாலை 7.30 மணிக்கு ரேகா, தன்னுடைய எம்.ஏ. (ஆங்கிலம்) தேர்வை எழுதி முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். "பைக்'கில் ஆறு ஆண்கள் அவர் முன் நின்றனர். அதில் இரண்டு முகங்கள் தெரிந்தவை : டுஷார் சுபேகார், சுமித் சுபேகார். அதில் ஒருவன் இவருடைய பெயரைக் கேட்டிருக்கிறான். ரேகா பதில் சொல்வதற்குள் சுமித், "இவள் மகர் (தலித்) ரொம்ப திமிர் பிடித்தவள். அவளுடைய திமிரை அடக்க வேண்டும்' என்றிருக்கிறான். உடனே ஒருவன் ரேகாவின் நெற்றியில் அடித்திருக்கிறான். அடுத்து இருவர் அவரை கெட்டியாகப் பிடித்து வாயை மூடியிருக்கின்றனர். அவர்களிடம் பீர் பாட்டில்கள் இருந்தன. அவருடைய வாயில் பீரை கொட்டி, அவர் உடல் முழுக்க தெளித்திருக்கின்றனர். அவருடைய ஆடைகளை கிழித்திருக்கின்றனர். உதடு, நெற்றி என ரத்தம் வருமளவிற்கு அடித்திருக்கிறார்கள்.

அவருடைய தலையில் பீர் பாட்டிலால் அடிக்க முனைந்தபோது, ரேகா வேறு பக்கம் தலையை திருப்பிக் கொண்டதால் தப்பித்தார். கிழிந்த துணிகளோடு காவல் நிலையம் சென்று புகார் அளித்திருக்கிறார். ஆனால் புகாரைப் பதிவு செய்ய காவலர்கள் மறுத்து விட்டனர். அடுத்த நாளும் சென்று வலியுறுத்தியதன் அடிப்படையில் புகாரை பெற்றுக் கொண்ட போலிஸ், சாதாரண வழக்குகளில் பதிவு செய்து, சுபேகார் குடும்பத்தினரை கைது செய்து, அடுத்த நாளே அவர்களைப் பிணையில் விடுவித்தது. அவர்கள் வெளிவந்த அதே நாளில் மீண்டும் ரேகாவை தாக்கியிருக்கிறார்கள். மீண்டும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் பயனில்லை. "தேசிய தலித் மனித உரிமைகள் பிரச்சார இயக்கம்' இப்பிரச்சினையில் தலையிட்ட பிறகே (மே 29) வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், புகார் தேதியை மாற்றிக் கொடுக்க ரேகாவை வற்புறுத்தி இருக்கிறது போலிஸ். இன்றுவரை குற்றவாளிகள் சுதந்திரமாகத் திரிகின்றனர்.

மீண்டும் 11 சூன் 2009 அன்று காலை பத்து மணிக்கு ரேகா தன் வீட்டிலிருந்து குப்பைகளை அள்ளி குப்பைத் தொட்டியில் போடச் சென்றபோது, 40 சாதி இந்து பெண்கள் அவரை மறித்து அடித்திருக்கின்றனர்; இழிவான வார்த்தைகளால் திட்டியிருக்கின்றனர். இதைத் தடுக்கச் சென்ற ரேகாவின் தம்பியையும் மயங்கி விழும்வரை அடித்தனர். அவருடைய அடிவயிற்றில் ரத்தம் கட்டிப் போகும் அளவுக்கு கடுமையாக அடித்துள்ளனர். அவர் பூனாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இம்முறையும் புகாரை வன்கொடுமை வழக்கில் காவல் துறை பதிவு செய்யவில்லை. முழு போலிஸ் ஆதரவுடன் ஜாதி இந்துக்கள் அட்டகாசம் செய்து வருகின்றனர்.

நகர்ப்புறங்களில் கூட்டுவது, பெருக்குவது என அடிமை வேலை செய்தால் தீண்டாமை தலித்துகளை தீண்டாது. ஆனால், வளமுடனும் சுயமரியாதையுடனும் வாழ்ந்தால், அது தன் கொடூர முகத்தை காட்டும். ஆர்.எஸ்.எஸ்.காரன்கள் எல்லா இடத்திலும் "ஸ்டிக்கர்' ஒட்டி வைத்திருக்கிறான்கள் : "வாழ்க வளமுடன்' என்று. ஒரு தலித் எப்படிடா வாழ முடியும் வளமுடன்?