சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை 1,300 கோடி ரூபாயில் உயர் விரைவு பறக்கும் சாலை; கடற்கரையோரம் 1,000 கோடி ரூபாயில் அதிஉயர் விரைவு சாலை; அடையாறு ஆறு பக்கிங்காம் கால்வாய்; மாம்பலம் கால்வாய்; கூவம் ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் 3,000 கோடி ரூபாயில் ஆற்றோர வட்டச் சாலைகள்; பறக்கும் ரயில்; மெட்ரோ ரயில்; சாலைகள் விரிவாக்கம்; கூவம் நதியை அழகுபடுத்தும் திட்டம் எனப் பல ஆயிரம் கோடிகளில் சென்னை "சிங்காரச் சென்னை'யாக மாற்றப்படுகிறது. சிங்காரச் சென்னை யாருக்காக? எதற்காக உருவாக்கப்படுகிறது? என்ற எதிர்க் கேள்விகள் கேட்கப்படாத சுரணையற்ற இன்றைய நிலையில், முன்பைவிட மிக வேகமாக சென்னை நகர சேரிகள் இடித்து தரைமட்டமாக்கப்படுகின்றன.

கடந்த நவம்பர் மாதம் சேத்துப்பட்டு பகுதியில் இருந்த சேரிகள் அகற்றப்பட்டு, அம்மக்களுக்கு கண்ணகி நகரில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. அடுத்து, சூளைமேடு சாரி தெருவில் கூவம் ஆற்றின் ஓரத்திலிருந்த மு.க. ஸ்டாலின் நகர், ஜோதிமா நகர் குடிசைப் பகுதிகளை எந்த முன்னறிவிப்பும், கால அவகாசமும் இன்றி, ஒரே நாளில் சுமார் ஆயிரம் வீடுகளை இடித்து நொறுக்கியது (19.11.2009) தமிழக அரசு. அங்கு பறக்கும் சாலை வரப் போகிறதாம்!

"எந்த முன்னறிவிப்பும், கால அவகாசமுமின்றி வீடுகளை இடிக்கக் கூடாது' என்று நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கியிருந்தனர், ஜோதிமா நகர் மக்கள். அந்த தடையுத்தரவும் தள்ளுபடியாகி, நீர் நிலை ஆக்கிரமிப்பு என ஜோதிமா நகர் வீடுகளும் இடித்து தள்ளப்பட்டன. அரசு நிர்வாகம் மற்றும் போலிஸ் மிரட்டல்கள், அத்துமீறல்கள் மற்றும் குடிசைகளை இடித்துத் தள்ளும் வன்முறை வெறியாட்டங்கள் – எஞ்சியுள்ள சென்னை நகர சேரி மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. கேட்க நாதியற்று, இன்று சென்னைக்கு வெளியே குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளில் மக்கள் அடைக்கப்படுகின்றனர்.

"நீர் நிலை ஆக்கிரமிப்புகள்' என்று சொல்லி வெளியேற்றப்படும் இம்மக்கள், சென்னையை விட்டு 40 கிலோ மீட்டர் தூரத்தில், சுற்று வட்டாரத்தில் எந்த குடியிருப்புகளும் இல்லாத திறந்த காடுகளில், இன்னொரு நீர் பிடிப்பு நிலத்தில்தான் குடியமர்த்தப்படுகின்றனர்.

சென்னை நகரின் மய்யப் பகுதிகளிலிருந்து சுமார் 50–க்கும் மேற்பட்ட குடிசைப் பகுதிகளை சென்னையை விட்டு வெளியேற்றிய அரசு, ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகரில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் 15,000 குடும்பங்களை மறு குடியமர்த்தியுள்ளது. இந்த பதினைந்தாயிரம் சேரி குடும்பங்களுக்கு இதுவரை எந்தவித அடிப்படை வசதிகளும் முறையாக செய்து தரப்படவில்லை. கிட்டத்தட்ட ஒரு லட்சம் நகர்ப்புற உழைக்கும் மக்கள் சென்னைக்குள் சென்று வர வெறும் 15 மாநகரப் பேருந்துகளே இயக்கப்படுகின்றன. அதுவும் முறையாக வருவதில்லை. குடி தண்ணீருக்குப் பெரும்பாடு. மின்சாரம் இருந்தும் பாதி நாள் இருளில்தான் கிடக்கிறார்கள். கல்விக் கூடங்கள் இருந்தும் போதிய ஆசிரியர் இல்லை. பதினைந்தாயிரம் குடும்பங்களுக்கு இதுவரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்கூட இல்லை. கடந்த பத்தாண்டுகளாக இம்மக்கள் நடத்திய போராட்டங்கள்தான் எத்தனை! எத்தனை! எதற்கும் மசியவில்லை அரசு.

போராடி, போராடி சலித்துப்போய், வெறுத்துப்போய் கிடக்கிறார்கள், சென்னையிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சேரிமக்கள். கடந்த சூன் மாதம் நந்தம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகர் விரிவு குடிசைப் பகுதி திடீர் தீ விபத்தில்(?) எரிந்து நாசமானது. ஒரே வாரத்தில் மாற்று வழங்கப்பட்டது. ஆனால் யாருமற்ற பொட்டல் காட்டில் மனிதர்கள் வசிக்க ஏதுமற்ற சூழலில், மழை நீரில் குடிசைகள் மூழ்கி, ஈர களிமண் தரையில் குடும்பம் நடத்த முடியாமல் கன்னடப்பாளையம் "திடீர் நகர்' பகுதி மக்கள் – தாம்பரம் பேருந்து நிலையத்திலும், ரயில் நிலையத்திலும் இரவில் குழந்தைகளுடன் தங்கி வருகின்றனர். இதைவிடப் பேரவலம், போரூர் ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு, நல்லூர், கூடப்பாக்கத்தில 1 சென்ட் நிலம் ஒதுக்கியதால், அங்கும் மக்கள் வசிக்க முடியாமல், பழைய இடங்களில் (போரூர்) நடை பாதைகளிலும், கடை ஓரங்களிலும், கோணிகளில் கூடாரம் அமைத்து குடும்பம் நடத்துகின்றனர்.

சொந்த மண்ணில் இரண்டாந்தர குடிமக்களாக்கப்பட்ட சென்னை நகர சேரி மக்கள் வயிறெரிஞ்சு சொல்கிறார்கள்: “குப்பை மாதிரி வாரியாந்து கொட்டிட்டானுங்க. இங்க எந்த வசதியும் இல்ல. நாங்க தினம், தினம் செத்துக்குனு இருக்கோம்.''

குடிசைகள் நிறைந்த சென்னை, இன்று குடிசைகளே இல்லாத சென்னையாக கட்டமைக்கப்படுகிறது. “சென்னையில் குடிசை வீடுகளே இல்லாத நிலை உருவாக்கப்படும். இதற்காக மத்திய அரசு 210 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. கால்வாய் கரைகளில் உள்ளவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும்'' என்று சொல்கிறார். மேயர் மா. சுப்பிரமணியன் ("தினகரன்', 29.8.09). “2013 ஆம் ஆண்டுக்குள் மதுரை, சென்னை மற்றும் கோவை நகரங்களை குடிசைகள் இல்லாத நகரமாக மாற்ற திட்டமிடப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 250 கோடி ரூபாயில் சென்னை மற்றும் பிற நகரங்களில் 16,377 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்'' என்று குடிசை மாற்று வாரிய அமைச்சர் சுப. தங்கவேலன் கூறியிருக்கிறார் ("தினத்தந்தி', 1.7.2009). சென்னை மாநகராட்சி மன்றக் கட்டடத்தில் மேயரும், சட்டப்பேரவையில் சுப. தங்கவேலனும் இந்த அறிவிப்புகளை சொல்லிக் கொண்டிருந்தபோது, இங்கு மிச்சம் மீதி இருந்த சென்னை நகர குடிசைகள் – "திடீர் விபத்துகள்' என்ற பெயரில் எரிந்து கொண்டிருந்தன.

குறிப்பாக, 2009 சூன் – சூலை மாதங்களில் மட்டும் எட்டு குடிசைப் பகுதிகள் தீ விபத்தில் எரிக்கப்பட்டன. இதில் கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ. நகரிலும், பெரம்பூர் மடுமா நகரிலும் குடிசைகள் எரிந்ததில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என மொத்தம் ஆறு சென்னை நகர சேரி மக்கள் தீயில் கருகி மாண்டனர். சிங்காரச் சென்னையை அழகுபடுத்துவதற்கு தங்களின் வாழ்வையே பலி கொடுத்துவிட்டு இன்று வீதியில், நடைபாதையில் கிடக்கிறார்கள் சென்னை நகர சேரி மக்கள். குடிசைகள் எரிந்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை இம்மக்களுக்கு மாற்று வசதி செய்து தராமல் மவுனம் காக்கிறது அரசு.

“மழையிலும், வெயிலிலும் லோல்பட்டு, லொங்கழிஞ்சு கீனு கிடக்குறோம். எங்கள யாருமே கண்டுக்க மாட்டேன்னுறாங்க! எத்தனை நாளைக்குதான் பிளாட்பாரத்திலேயும், சொந்தக்காரங்க வீட்டுலயும் தங்கிக்குனு இருக்குறது'' என்று கேட்கிறார் கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ. நகரை சேர்ந்த சிறீராம் என்பவர். “எங்களுக்கு மாத்து இடம் கொடுங்க. இல்லைன்னா எரிஞ்சு போன வீடுகள மறுபடியும் கட்டி கொடுங்கள், கவுன்சிலர்கிட்ட போய் கேட்டோம். அந்த இடத்துல மறுபடியும் யாரும் வீடு கட்டக் கூடாதுன்னு சொல்லிட்டாரு. வீடு கட்டக் கூடாதுன்னு வேகமா தடுக்குற அதிகாரிங்க, எங்களுக்கு மாற்று வழிய சொல்லுறதுக்கு ஆறு, ஏழு மாசமாகுது; இன்னும் பதிலக் காணோம்'' என்கிறார் கொருக்குப்பேட்டை நாகராஜ். குடிசை வீடுகளை இழந்து குடும்பத்துடன் வீதியில் குடும்பம் நடத்தும் அவலம் இங்கு மட்டுமல்ல, சேத்துப்பட்டு – அவ்வைபுரம், வியாசர்பாடி, புளியந்தோப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்கிறது.

நந்தம்பாக்கம் அடையாறு பாலத்தை ஒட்டி வலதுப் புறம் உள்ளது "எம்.ஜி.ஆர். நகர் விரிவு' என்ற குடிசைப் பகுதி. கடந்த சூன் 15 அன்று இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இங்கிருந்த 106 வீடுகளும் தீயில் எரிந்து நாசமாயின. தொடர்ந்து மூன்று நாட்களாக எம்.ஜி.ஆர். நகர் குடிசைப் பகுதி மர்மமான முறையில் எரிந்ததில் 15 வீடுகள் நாசமாயின. இத்திடீர் தீ விபத்தை(?) கண்டித்து அப்பகுதி மக்கள், கவுன்சிலர் பெருமாள்சாமி தலைமையில் 22.6.2009 அன்று போரூர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். வழக்கம் போலவே பெருமாள் சாமி உட்பட 15 பேரைக் கைது செய்து, 9 நாட்கள் சிறையிலடைத்தது

அரசு. இப்பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்பு தாசில்தார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து, அளந்து கோடுகள் போட்டதோடு, கற்கள் நட்டும் சென்றுள்ளனர். இந்தப் பகுதியில் "பிரிட்ஜ் வரப்போகுது' (அடையாறு போரூர் எக்ஸ்பிரஸ் ஹைவே) என்றும், கல்லுக்கு மேலே உள்ளது நத்தம் புறம்போக்கு, கீழே உள்ளது ஆத்து புறம்போக்கு என்றும் அதிகாரிகள் சொல்லிவிட்டுச் சென்றுள்ளனர்.

அடையாறு ஆறு, பக்கிங்காம் கால்வாய், கூவம் ஆற்று கரைகளில் வசித்து வந்த சென்னை நகர சேரி மக்களை நீர்நிலை ஆக்கிரமிப்புகள் என்று சொல்லி வெளியேற்றி வந்த தமிழக அரசு, வீடுகளை இழப்பதை எதிர்த்து சிலர் நீதிமன்ற தடையுத்தரவு வாங்கி விடுகிற தொந்தரவுகள் பொறுக்க முடியாமல் – சேரிகளை மிக எளிதாக வெளியேற்றும் உத்தியாகவே இத்தீவிபத்துகளை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில்தான் நந்தம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகர் விரிவுப் பகுதியில் இருந்த 106 குடிசைகள் தீயில் எரிந்ததும், ஒரே வாரத்தில் பெருங்களத்தூர் கன்னடப்பாளையம் அருகில் எருமையூர் – கூட்டு ரோடு செல்லும் வழியில் ஆள் நடமாட்டமில்லாத வெட்டவெளியில், குடும்பத்துக்கு ஒரு சென்ட் நிலம் கொடுத்து (மாற்று இடம்) கட்டாயமாக இம்மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்; சென்னையை விட்டு துரத்தப்பட்டுள்ளனர்.

தாம்பரத்தை அடுத்துள்ளது பெருங்களத்தூர் பேரூராட்சி. கிஷ்கிந்தா போகும் சாலை, எருமையூர் கூட்டு ரோடு. இரண்டு பக்கமும் பச்சை நிறம் படர்ந்த திறந்தவெளிக் காடு. அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மலைகள். கை தொடும் தூரத்தில் வானம். கொட்டும் மழையில் நனையும் உடல்களைப் பற்றி கவலைப்படாமல், கட்டிய துணியுடன், கைக் குழந்தைகளை தூக்கிக் கொண்டு தாம்பரம் தாலுகா அலுவலகத்தை நோக்கி நடக்கத் தொடங்கியது அந்த மக்கள் கூட்டம். "மழையில் நனைஞ்சுக்குனு எல்லோரும் எங்க போறீங்கன்னு' கேட்கக்கூட நாதியற்ற வெறுமை பிரதேசம். நந்தம்பாக்கம் தீ விபத்தில்(?) வீடுகளை இழந்த மக்களுக்கு அரசாங்கம் கொடுத்த மாற்று இடம்.

சிங்களப் பேரினவாதத்தின் குண்டுகளுக்கு அஞ்சி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இடம் பெயர்ந்து ஓடிக்கொண்டேஇருக்கும் ஈழத் தமிழர்களைப் போல் இந்து பேரினவாத சாதிய ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகி வருகின்றனர் தலித் மக்கள். வருசம் 1500 ரூபாய் சம்பளம், மூன்று வேளை சோறு, பொங்கல், தீபாவளிக்கு ஒரு வேட்டி, சட்டை வாங்கிக் கொண்டு பண் ணையடிமையாய் வாழ்கிறார்கள். அடிமைச் சமூகத்திற்குள் அடிமையாய், கீழான மக்களாய் கிடக்கும் நந்தம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகர் விரிவு குடிசைப் பகுதி மக்களான – அருந்ததிய மக்களின் பூர்வீக முகவரி, திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டு. இம்மண்ணின் பூர்வகுடி மக்களான இவர்கள் சென்னைக்கு பிழைக்க வந்தவர்கள்தான்!

முதலில் சேப்பாக்கம் ஸ்டேடியம் பகுதியில் தங்கியிருந்த இவர்கள் மொத்தம் நூற்றுப்பத்து குடும்பங்கள் – கட்டட வேலை, வீட்டு வேலை உள்ளிட்ட கூலி வேலைகளை நம்பியுள்ளனர். இவர்களின் முதன்மையான தொழில் "திருஷ்டிக் கயிறு' விற்பது. நந்தம்பாக்கத்தில் மட்டும் 27 ஆண்டுகள் வசித்து வந்துள்ளனர். இவர்களின் குழந்தைகள் பரங்கிமலை ஒன்றியம் கன்டோன்மென்ட் பள்ளியில் படித்து வருகின்றனர். திடீரென்று வீடுகள் எரிந்து, எங்கோ காட்டில் மாற்று இடங்களில் இவர்கள் வசிப்பதால், மூன்று பேருந்துகள் மாறி பள்ளிக்கூடம் போய் வருகின்றனர் இவர்களின் பிள்ளைகள். “இங்க எங்களுக்கு எந்த வசதியும் இல்லைங்க. கரண்ட் இல்ல, தெரு விளக்கு இல்ல, இடம் மட்டும்தான் கொடுத்தாங்க. குடிக்க தண்ணிக்குகூட வழியில்ல. இங்கயிருந்து இரண்டு கிலோ மீட்டர் எருமையூர் போய்த்தான் தண்ணீர் எடுத்துக்குனு வர்றோம்'' என்கிறார் கருப்பையா.

"பெருங்களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவரிடம் இது பற்றியெல்லாம் சொன்னீர்களா? அவர்கள் ஏதும் செய்யவில்லையா? என்று கேட்டோம். “பஞ்சாயத்து தலைவர பார்த்துக் கேட்டோம். "உங்கள யாரு இங்க கொண்டு வந்து விட்டாங்களோ, அவங்கள (கலெக்டர்) போய் கேளுங்க. எனக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்றாரு'' என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த நாகரத்தினம் என்பவர். ஒரு வாரமாக மழை பெய்றதால எந்த வேல வெட்டிக்கும் போக முடியல. தண்ணி நிக்குற இடத்துல வீடு ஒதுக்குனதுல, எங்க குடிசையெல்லாம் மூழ்கிடுச்சு. சாதாரணமாவே பாம்பு, தேள் எல்லாம் வருது. இதோ மழை பெய்ஞ்சி வெள்ளம் சூழ்ந்துக்குனதுல வானம் வெளுத்தாதான் நாங்க வீடுகளுக்குப் போக முடியும் என்கின்றனர், இரும்புலியூர் நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்கள்.

“எங்க ஊருக்கு இன்னும் பேர்கூட வெக்கலங்க. சிலபேரு "திடீர் நகர்'னு சொல்லுறாங்க. சிலபேரு கருணாநிதியோட அம்மா பேர வைக்கப் போறதா சொல்லிக்குனு இருக்குறாங்க'' என்கின்றனர், சோனை மற்றும் மொட்டையாண்டி. 110 குடும்பங்களில், முடிச்சூர் ரோடு ஆந்திரா ஸ்கூலில் 50 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய மக்கள் ரோட்டோரமாக கடைகளின் கீழே அடைக்கலமடைந்துள்ளனர். மின்சாரம் இல்லை, குடிநீர் இல்லை, பஸ் வசதி இல்லை, மழைக் காலங்களில் வீடுகளில் தண்ணீர் வந்து விடுகிறது, பள்ளிக் கூடங்கள் இல்லை, சுடுகாடு இல்லை, பொதுப்பாதை இல்லை, பட்டா இல்லை என ஏகப்பட்ட "இல்லை'களோடு இருண்டு கிடக்கின்றன, சென்னையிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சேரி மக்களுக்கு அரசு கொடுத்த மாற்று இடங்கள். காலங்கõலமாய் ஒதுக்கப்பட்டு தீண்டத்தகாதவர்களாய் சேரியில் அடைக்கப்பட்டிருந்த பூர்வகுடி மக்கள், இன்று சென்னையில் வசிக்கத் தகுதியற்றவர்கள் என்றும் அசுத்தமானவர்கள் என்றும் சொல்லி சென்னையை விட்டு வெளியேற்றுகிறது அரசு.

இருண்ட பிரதேசங்கள் : 1. வேளச்சேரியை அடுத்துள்ள மயில பாலாஜி நகர் 2. ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகர் 3. செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு 4. குன்றத்தூரை அடுத்த நல்லூர் 5. பூவிருந்தவல்லியை அடுத்த கூடப்பாக்கம் 6. செம்மஞ்சேரி எழில் நகர், ஜவகர் நகர் 7. ஆவடி கேம்பை அடுத்த மோரை 8. பெருங்களத்தூர் கன்னடப்பாளையம்.

நந்தவனமாய் காட்சியளிக்கிறது அந்த நான்கு வழிச் சாலை. பூத்துக் குலுங்கும் மலர்கள், மரம், செடி, கொடிகள், பக்கவாட்டுச் சுவர்களில் வரையப்பட்டுள்ள நவீன ஓவியங்கள். ஸ்டீல் தகடுகளால் மினு மினுக்கும் நவீன பேருந்து நிறுத்தங்கள். அலங்கார கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ள அகலமான நடைபாதைகள். வானைத் தொடும் உயரத்தில் சாலையை கடக்க நடைபாலங்கள். காண்பவர்களை மயக்கும் மின் விளக்குகளின் பேரொளியில் உலகமயத்தின் பெருமதிமாய் நீள்கிறது, அடையாரிலிருந்து தொடங்கும் தகவல் தொழில்நுட்ப (கட்டண) சாலை. அதாவது, பழைய மகாபலிபுரம் சாலை – "சாப்ட்வேர்' சமஸ்தானத்தின் தலைமையகமான திருவான்மியூரிலிருந்து தொடங்குகிறது.

“என்னைக்கு சாலைய மறிச்சு சுவர் எழுப்புனாங்களோ (இரண்டே கால் அடி), அன்னைக்கே எங்க பொழப்பெல்லாம் போச்சு'' என்ற சிறு வியாபாரிகளின் குமுறல் முதல், இந்தப் பக்கத்துல இருந்து, அந்தப் பக்கம் போகணும்னா ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு சுத்திக்குனு வர வேண்டியதா இருக்குது. குறுக்கு சுவறுனால சாதாரணமா ரோட்ட தாண்டக்கூட முடியல''ன்னு நீள்கிறது, இந்த அய்.டி. சாலையினால் அன்றாடம் பாதிப்புக்குள்ளாகும் ஏழை எளிய மக்களின் அவலக் குரல்கள்.

“மழை பெய்ய ஆரம்பிச்சுட்டா, இந்தக் களிமண் தரையில கால்வைக்கக் கூட முடியாது. கூடவே பாம்பு, தேள், விஷ வண்டுகள் எல்லாம் வருது. இதனாலேயே எங்க புள்ளைங்க ஆறு மாசம் ஸ்கூலுக்கு போனா, ஆறு மாசம் வீட்டுலதான் கெடக்குறாங்க. ஏன்னா இங்கேயிருந்து மூணு அரை கிலோ மீட்டர் நடந்தாதான் மெயின் ரோடு வரும். போற வழியெல்லாம் தண்ணி தேங்கி நிக்குது. புள்ளைங்க எப்படி ஸ்கூலுக்கு போக முடியும்?'' என்று கேட்கிறார்கள், இந்த தகவல் தொழில்நுட்ப சாலையின் விரிவாக்கத்திற்காக வெளியேற்றப்பட்ட செம்மஞ்சேரி எழில் நகர், ஜவகர் நகர் மக்கள்.

திருவான்மியூரை அடுத்துள்ள தரமணி ஜவகர் நகரிலும், பெருங்குடி எழில்முக நகரிலும் வசித்து வந்த சுமார் 500 குடும்பங்களை (1999 – 2000 ஆண்டுகளில்) ஆக்கிரமிப்புகள் என அடித்து விரட்டியது, தமிழக அரசின் சாலை வளர்ச்சி நிறுவனம். வெளியேற்றப்பட்ட இம்மக்களுக்கு அரசு இழப்பீடாக, காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்க நல்லூரை அடுத்த செம்மஞ்சேரி ஊராட்சியில், மேய்க்கால் புறம்போக்கில் இரண்டு சென்ட் நிலம் ஒதுக்கி மாற்று இடம் வழங்கியுள்ளது தமிழக அரசு. ஜேப்பியாரின் சத்தியபாமா கல்லூரியின் கட்டடங்களைத் தவிர, சுற்று வட்டாரத்தில் எந்தக் குடியிருப்புகளும் இல்லாத திறந்தவெளிக் காட்டில் குடியமர்த்தப்பட்டுள்ளனர், சென்னை நகரின் உழைக்கும் மக்கள்.

“கரண்ட், தண்ணீர், தெரு விளக்கு, ரோடு வசதி எதுவுமே இல்லாததினால இடம் ஒதுக்கியும் இத்தனை வருசமா இங்க குடிவராம இருந்தோம். கரண்டும், தண்ணியும் வந்ததினால இப்ப ரெண்டு வருசமாத்தான் இங்க வந்து வீடு கட்டி குடியிருக்கோம்'' என்று சொல்லும் சியாமளா தாமோதரன், இத்தனை நாளும் தரமணியில் வாடகை வீட்டில் தங்கியிருந்ததாக சொல்கிறார்.

இங்கேயிருந்து மெயின் ரோட்டுக்குப் போகணும்னா மூன்றரை கிலோ மீட்டர் சுத்திக்கினுதான் போகணும். தெரு லைட் இல்லாம இருண்டு கிடக்கிற சாலையில நடந்து, பாம்பு, தேள், விஷப் பூச்சிகளிடமிருந்து தப்பிச்சு மெயின் ரோட்டுக்கு (அய்.டி. ரோடு) வந்து பஸ் ஏறணும்னா, இந்தப் பக்கம் ஒரு கிலோ மீட்டர் நடந்தா ஆலமரம் பஸ் நிறுத்தம். அந்தப் பக்கம் ஒரு கிலோ மீட்டர் நடந்தா நாவலூர் பஸ் ஸ்டாப். வேலை வெட்டிக்கும், ஸ்கூலுக்கும், ஆஸ்பத்திரிக்கும், நாங்களும் எங்க புள்ளைங்களும் தினமும் 4 கிலோ மீட்டர் நடந்து நடந்து சோர்ந்து போயிட்டோம். அரசாங்கம் எங்களுக்குனு ஒதுக்குன அய்ந்து அடி பொதுப் பாதையையும் ஜேப்பியார் ஆக்கிரமிச்சு, காலேஜ் கட்டியிருக்காரு என்று குரலை உயர்த்தி, கோபமாக சொல்கிறார், கேளம்பாக்கம் மருந்துக் கம்பெனியில் வேலை செய்யும் அனிதா.

“கவர்மென்ட் ஆஸ்பத்திரி எதுவும் இங்க கிடையாதுங்க. எதுனா ஒண்ணுன்னா, இங்கேயிருந்து கேளம்பாக்கம் (அரசு மருத்துவமனை) ஓடணும். இல்லைன்னா துரைப்பாக்கம் ஆஸ்பத்திரிக்குதான் (ஆராம்ப சுகாதார நிலையம்) ஓடணும். குண்டும், குழியுமான களிமண் ரோடுன்றதால 500 ரூபாய் கொடுத்தாக்கூட ஆட்டோக்காரங்க வர மாட்டாங்க. மழையில இன்னும் மோசம். வீட்ட விட்டு வெளியவே வர முடியாது என்கின்றனர், குமார் என்பவரும், ஆஸ்துமா நோயாளியான அறுபது வயது சுப்பராயனும். இவர்களிடையே பேசிக் கொண்டிருக்கும் போதே குறுக்கிட்ட நாற்பத்தைந்து வயதான பாக்கி என்பவர், எல்லாருக்கும் போடும் சொட்டு மருந்தக்கூட எங்க புள்ளைங்களுக்கு இரண்டு வருசமா போடலிங்க. யாரும் வந்து எட்டிக்கூட பார்க்கல என கொந்தளிக்கிறார் ஆவேசத்துடன்.

பாம்பு, தேள், விஷ பூச்சிகள் உலவும் வெட்டவெளி பொட்டல் காட்டில் மக்களைக் கொண்டு வந்து குடியமர்த்தியதால் இதுவரையில் 10–க்கும் அதிகமான பெண்கள் மற்றும் குழந்தைகள் பாம்பு, தேள் கடித்து பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார், நாற்பத்தியாரு வயதான விஜயா. அவர் மேலும், அங்கம்மா (35) என்பவரின் மூன்று மாத கைக் குழந்தையை தேள் கடித்து, மழை நேரம், பஸ் வசதி எதுவுமில்லாததால், மருத்துவமனைக்குப் போகிற வழியிலேயே அந்தக் குழந்தை இறந்து போனதையும் குறிப்பிடுகிறார்.

ஏதோ ஒரு விஷப் பூச்சி தீண்டியதால், தனது மகனின் தலைமுடி உதிர்ந்து வருவதையும், தலையில் சிரங்கு பிடித்துள்ளதையும் நம்மிடம் காட்டினார் அமுதா. தலையில் முடி உதிர்வது ஊட்டச் சத்து குறைவினால் ஏற்படும் கோளாறு என்றோம். உடனே அதை மறுத்த அமுதா, விஜயராஜ் (7ஆவது வகுப்பு), பிரித்விராஜ் (3ஆவது வகுப்பு), மதன்ராஜ் (4ஆவது வகுப்பு) ஆகிய தனது மூன்று மகன்களுக்கும் இதே பிரச்சனைகள் இருப்பதுடன் வேறு பல குழந்தைகளுக்கும் தழும்புகள் இருப்பதை காட்டுகிறார்.

எழில்முக நகர், ஜவகர் நகர் மக்களை ஒருங்கிணைத்து, பல்வேறு போராட்டங்களை நடத்திவரும் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த தனசேகர் நம்மிடம், "பெரும்பான்மையாக தாழ்த்தப்பட்ட மக்களும், முஸ்லிம்களும், கிறித்துவர்களும், கொஞ்சம் வேற சாதியை சேர்ந்தவங்களுமா மொத்தம் 500 குடும்பங்கள் இங்கு இருக்குது. குடிநீர், மின்சாரம், இந்த இரண்டும் எங்களுக்கு இந்த வருசம் தான் கிடைக்குது. ஒவ்வொரு வருசமும் நாங்க நடத்துன போராட்டங்களினால்தான் எங்களுக்கு இந்த வசதிகூட கிடைச்சது. வீட்டுக்கு இருநூறு, இருநூற்றைம்பது ரூபாய்ன்னு "பிரிவு' போட்டு வசூலிச்சுதான் ஒவ்வொரு போராட்டமும் நடத்திக்கினு வர்றோம்' என்கிறார்.

மேலும், குடிமøனப்பட்டா, மூன்றரை கிலோ மீட்டர் சுற்றுப்பாதையை பள்ளிக் குழந்தைகள் நலனுக்காக 1 கிலோ மீட்டர் குறுக்குப் பாதை அமைத்திடவும், புதிய சுடுகாட்டை உருவாக்கவும் இரவு நேரத்தில் பெண்கள் பொது சாலையில் வீட்டுக்கு வர முடியாமல் சமூக விரோதிகளால் பலாத்காரம், வழிப்பறி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இருள் சூழ்ந்த பொது சாலையில் மின்விளக்கு அமைத்திடவும், பொதுக் கழிவறை, மழைக் காலத்தில் வீடுகள் மழை நீரில் சூழா வண்ணம் சுற்றுச்சுவர் அமைத்திடவும், சத்தியபாமா ஜேப்பியார் காலேஜ் அரை ஏக்கர் நிலத்தில் கட்டியுள்ள நோய் பரப்பும் மலம் தேக்கும் மூடியில்லா தொட்டியை ஊருக்கு அருகில் இருந்து அகற்றிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 வகை கோரிக்கைகளை முன்வைத்து 18.8.2009 அன்று சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

தமிழக அரசு எங்களுக்கு ஒதுக்குன எல்லையம்மன் சாலையில இருந்து, வால் வெட்டி மதகு வரைக்கும் இருக்குற பொதுக்கால்வாய் மேல 5 அடி குறுக்கு சாலையை ஜேப்பியார் ஆக்கிரமிச்சு கட்டடம் கட்டியிருக்காரு. பள்ளிக்கூடம் போற குழந்தைங்க மூன்றரை கிலோ மீட்டர் சுத்திக்கினு போறாங்க. அவங்களுக்காகவாவது 1 கிலோ மீட்டர் குறுக்குப் பாதையை மீட்டுத் தரணும்னு தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர் (காஞ்சிபுரம்)ன்னு எல்லோருக்கும் மனு கொடுத்துட்டோம். இதுவரையில் எந்த பதிலும் இல்லை என்றவர், கட்சித் தலைமையுடன் பேசி, அடுத்தக் கட்டமாக மக்களைத் திரட்டி ஆளுநர் மாளிகை முன்பு சாகும் வரை பட்டினிப் போராட்டம் நடத்தப் போவதாக கூறுகிறார் தனசேகர்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் என சென்னையிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட மக்களின், செம்மஞ்சேரி தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் – 7 ஆயிரம் குடும்பங்களும், துரைப்பாக்கம் கண்ணகி நகரில் 15 ஆயிரம் குடும்பங்களும் வசிக்கும் பகுதிகளுக்கே எந்த அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து தராத ஜெயலலிதா, கருணாநிதி அரசுகள், 500 குடும்பங்கள் வசிக்கும் எழில் நகர், ஜவகர் நகர் மக்களின் தேவைகளை மட்டும் நிறைவேற்றிடப் போகிறார்களா என்ன? இலவசத் திட்டங்களுக்காகப் பல கோடிகளை செலவழிக்கும் தி.மு.க. அரசு, வெளியேற்றப்பட்ட சேரி மக்களின் துன்பங்களை கண்டு கொள்ள மறுப்பது ஏன்?

- இசையரசு

அடுத்த இதழிலும்