“உங்கள் அடிமைத்தனத்தை நீங்களேதான் அழித்தாக வேண்டும். ஒருவர் தன்னுடைய சுயமரியாதையை இழந்து வாழ்வது என்பது மிகவும் இழிவானது. ஒருவருடைய வாழ்க்கையில் சுயமரியாதையே வேறு எதைக்காட்டிலும் முக்கியமானது. சுயமரியாதை இல்லாதவன் ஒன்றுமில்லாதவனே. சுயமரியாதையோடு பயனுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கு நாம் பல்வேறு துன்பங்களை வென்றாக வேண்டும். இடையறாத கடும் போராட்டங்களின் மூலமே ஆற்றலையும், தன்னம்பிக்கையையும், அங்கீகாரத்தையும் பெற முடியும். என்றாவது ஒரு நாள் நாம் சாகத்தான் வேண்டும். சுயமரியாதை மற்றும் மனித மேம்பாடு ஆகிய உயரிய கொள்கைக்காக ஒருவர் தன்னுடைய உயிரையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டும். நாம் அடிமைகள் அல்லர்; போராளி இனத்தவரே!''
-பாபாசாகேப் அம்பேத்கர்

“தலித் முரசு” கடும் இழப்புகளையும் சொல்லொணா அவமானங்களையும் தாங்கிக்கொண்டு, 12ஆம் ஆண்டில் தடம் பதிக்கிறது. 11ஆம் ஆண்டில் பெரும் நிதிச்சுமை இருப்பினும் கூடுதல் பக்கங்களுடன் சிறப்பிதழை வெளியிட்டோம். மேலும், டாக்டர் அம்பேத்கரின் ‘சாதியை ஒழிக்க வழி என்ன?’ என்ற நூலையும் வெளியிட்டு, அம்பேத்கருடைய கருத்துகளை தமிழகமெங்கும் விவாதமாக்கினோம். கால் நூற்றாண்டுக்கும் மேலாக இயக்கங்கள் செய்யத் தவறிய இப்பணியை, நெருக்கடிகளினூடே நாம் செய்ததற்கு காரணம், தலித் விடுதலைக்கான உறுதியான கருத்தியல் வென்றெடுக்கப்படவேண்டும் என்ற நோக்கமே.

ஆனால், 12ஆம் ஆண்டு சிறப்பிதழை கூடுதல் பக்கங்களுடன், உரிய நேரத்திற்குக்கூட எம்மால் கொண்டு வர முடியாத சூழலில் தவிக்கிறோம். மீண்டும் மீண்டும் இதழை நடத்த இயலாத சிரமத்தை வாசகர்களிடம் விளக்க வேண்டிய தேவையில்லை. ஒவ்வொரு மாதமும் இதழ் தாமதமாக வெளிவருவதிலிருந்தே உங்களுக்குப் புரிந்திருக்கும்.

காட்சி ஊடகத்தின் தாக்கத்திற்குப் பெரும்பாலான மக்கள் இரையானதைப் போலவே ‘தலித் முரசு’ வாசகர்களும் ஆளாகிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. அவர்கள் இதழ் குறித்து இரு வரிகளில் விமர்சனங்கள் எழுதுவது கூட தற்போது அருகி வருகிறது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

எந்தவொரு கொள்கையும் தன்னளவில் நிலைத்து வாழ்வதில்லை. அதை தொடர்ச்சியாக விவாதப்படுத்தி பரப்புரை செய்யும் போதுதான் அக்கொள்கை உயிர்வாழும். சாலை போகாத குக்கிராமங்கள் முதல் மெத்தப் படித்த மாநகரங்கள் வரை ஜாதி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. சாதியும் அதற்கு ஆதாரமான இந்து மதமும் நிலைப்பெற்றிருப்பதற்குக் காரணம், அது பல்வேறு தளங்களிலும் விவாதப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கெதிராகக் கிளர்ந்தெழுந்து செயலாற்ற வேண்டிய தொல்குடி மக்களுக்கு அம்பேத்கரியலும், பெரியாரியலும் சுவாசக் காற்றாக இருந்திருக்க வேண்டாமா? நம்மில் பலரும் சுவாசிக்க மறந்த நடைபிணங்களாகவே இருக்கும் முரண்பாடு தீர்க்கப்பட வேண்டும்.

‘தலித் முரசு’ 11 ஆண்டுகளில் சாதித்தது என்ன? என்று கேள்வி எழுப்புகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்! அவர்களுக்குப் பகட்டான அரசியலும், ஆயுதப் போராட்டமுமே புரட்சிகரமாகத் தெரிகிறது. நாம் அதில் நம்முடைய நேரத்தையும், உழைப்பையும் ஒரு மணித் துளிக்கூட வீணடிக்கத் தயாரில்லை. ஜாதிய சமூகத்தில் ஆயுதமும், அரசியலும் ஒருபோதும் ஜனநாயகத்தை மலரச் செய்யாது. சமூக ஜனநாயகத்தை உருவாக்குவதற்காகப் போராட யார் இருக்கிறார்கள்? ஜாதியை ஒழிப்பது தான் அடிப்படை. பார்ப்பனியத்திற்கும், பவுத்தத்திற்கும் இடையறாது நடைபெற்ற ஒரு நெடிய வரலாற்றுப் போராட்டத்தின் தொடர்ச்சியாகவே நாம் அணிவகுக்கிறோம்.

"நம்முடைய போராட்டம் சுயமரியாதைக்கானது' என்றார் அம்பேத்கர். சுயமரியாதையை முன்னிறுத்திய பெரியார் தான், சமுதாயத்தின் சுயமரியாதையைக் காப்பாற்ற, ஒருசிலராவது மானம் இழந்தால் கூட அது குற்றம் இல்லை என்றார். அந்த ஒருசிலராக நாம் இருக்க வேண்டும் என்ற முடிவோடு ‘தலித் முரசு’ தன் போராட்டத்தைத் தொடர்கிறது. ‘தலித் முரசு’க்கு தோள் கொடுக்கும் அனைவருக்கும் நன்றி.