கடலூர் மாவட்டம் சேடப்பாளையம் கிராமத்தில் கிரிக்கெட் தொடர்பாக நடைபெற்ற சாதிவெறித் தாக்குதலில் சிவா என்ற இளைஞர், வன்னியர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சனவரி மாதத்தில் நிகழ்ந்த இப்படுகொலையைத் தொடர்ந்து, இதே மாவட்டத்தில் கிரிக்கெட்டால் இன்னொரு படுகொலை நடந்துள்ளது. கடலூர் மாவட்டம் கீழ் அனுவம்பட்டு கிராமம். கோடை விடுமுறையின்போது இளைஞர்கள் கிரிக்கெட், கபாடி போன்ற விளையாட்டுகளை நடத்துவது இயல்பு. இக்கிராம தலித் இளைஞர்கள் சென்ற ஆண்டு ‘யூத் குரூப்' என்கிற பெயரில் கிரிக்கெட் போட்டியை நடத்தத் தொடங்கினர். இந்த ஆண்டின் போட்டி, சாதிவெறித் தாக்குதலுக்கான விளையாட்டாக கொடூரம் அடைந்தது. 29.5.07 அன்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பல ஊர்களிலும் உள்ள பல்வேறு அணிகளும் போட்டியில் களமிறங்கினர்.

29.5.07 அன்று மாலை 3 மணிக்குத் தொடங்கிய கிரிக்கெட் போட்டியில், சி. மானம்பாடி அணியும் முட்லூர் அணியும் மோதத் தொடங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்தே பிரச்சனை செய்து கொண்டே இருந்தனர் முட்லூர் அணியினர். வன்னியச் சாதியைச் சேர்ந்த இவர்கள் போதையில் இருந்ததால், சாதித் திமிருடன் போதைத் திமிரும் இணைந்து கலவரம் செய்யத் தூண்டியது. அருள் ஜோதி, பிரசாத் இரண்டு பேர்தான் நடுவர்களாக இருந்தனர். இவர்கள் தலித்துகள் என்பதால் ஏளனத்துடன் கூடிய கேலியும், பிரச்சனையும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் வன்னியர்களுக்கும் நடுவர்களுக்கும் இடையே தகராறு ஏற்படும் சூழல் உருவானதால், இதனைத் தவிர்ப்பதற்காக அருள் ஜோதியை நடுவர் பொறுப்பில் இருந்து விலக்கி விட்டு, அந்த இடத்தில் எழில் பிரகாஷ் அமர்ந்தார்.

அதன் பிறகும், வன்னிய இளைஞர்கள் நடுவர்களுடன் தகராறு செய்வதை விடவில்லை. இந்நிலையில் கிரிக்கெட் விளையாட்டின் பாதை திசை மாறியது. அப்போது முட்லூர் அணியின் கேப்டன் பானுசந்தர் போதையில் தடுமாறிக் கொண்டே ஸ்கோர் சொல்லும் இடத்திற்குச் சென்றான். அங்கிருந்த கோவிந்தராஜிடம் "எனக்காக ஒரு முறை ஸ்கோரை வேகமாகச் சொல்லு'' எனக் கேட்டான். கோவிந்தராஜியோ ஓவர் முடிஞ்ச பிறகு சொல்கிறேன் என பதில் சொன்னார். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத வன்னியர் அணியின் கேப்டனுக்கு கோபம் சாதி வெறியாக மாறியது. "ஏண்டா கேப்டன் கேட்கிறேன் ஸ்கோர் சொல்ல மாட்டீங்களா'' என்று கெட்ட வார்த்தைகளால் திட்டத் தொடங்கினான்.

நடுவர் அருள் ஜோதி இதனை சமாதானம் செய்ய எவ்வளவோ முயன்றும் முட்லூர் அணியின் சீனுவாசனும், சரவணனும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. பேசிக் கொண்டிருந்த தலித் இளைஞனான அருள்ஜோதியை கிரிக்கெட் மட்டையால் அடிக்கத் தொடங்கினர். என்னடா நம்ம நடத்துற போட்டியில விளையாட வந்த வெளியூறு பசங்க, நம்ம பசங்களையே அடிக்கிறாங்க எனக் கோபப்பட்ட பிரசாத், வன்னியர்களை கண்டித்ததோடு, மன்னிப்பும் கேட்கச் சொன்னார். இதனால் கோபத்தின் உச்ச வெறிக்கு சென்றனர் வன்னியர்கள். பிரசாத் தலையில் மட்டையால் அடித்து கடுமையாக தாக்கினார்கள். மயங்கிய பிரசாத் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மூன்று நாட்கள் கழித்து இறந்து போனார்.

தலித் சமூகம் பொருளாதார வலிமை கொண்ட சமூகம் அல்ல. கல்வியின் மூலம்தான் ஒட்டுமொத்த மாற்றத்தையும் கண்டாக வேண்டும். அப்படியொரு எண்ணத்தில் பிரசாத்தை படிக்க வைத்தனர், கூலித் தொழிலாளர்களான பெற்றோர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வேதியியல் துறையில் முதுகலை அறிவியல் பட்டம் படித்து வந்த சூழலில், எந்த மாற்றத்தையும் பார்க்காமல் மரணமானார் பிரசாத். காட்டுமன்னார் கோயில் சட்டமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான ரவிக்குமார் போலிசாரால் தாக்கப்பட்டதற்கு, கிரிக்கெட் தொடர்பாக நடந்த படுகொலைதான் காரணம். கடலூர் மாவட்டத்தில் உள்ள சேடப்பாளையம் கிராமத்தில் வன்னியர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையே கிரிக்கெட் தொடர்பாக இருந்த பகையே அது.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் கடலூர் மாவட்ட அமைப்பாளர் காவியச் செல்வன் கூறும்போது, "விளையாட்டுகள் சமூக வேறுபாட்டைக் களைந்து ஒற்றுமையை விதைக்க வேண்டும். ஆனால், இன்றைய சூழலில் சாதிவெறிப் படுகொலைதான் நிகழ்கிறது. விளையாட்டுகள் ஆதிக்க சாதியினரின் அதிகாரப் போட்டியாகவே மாறிவிட்டது. ஆகவே, தலித்துகள் திறமையாக விளையாடினாலும், போட்டிகள் நடத்தினாலும் கொலைவெறித் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இந்நிலையில் பிரசாத் வன்னிய இளைஞர்களால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டாலும், வன்னிய சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரின் நெருக்கடியால் வழக்கை பதிவு செய்ய முடியவில்லை. அதனையும் மீறித்தான் வழக்குப் போட வைத்திருக்கிறோம்'' என்றார்.

எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலைக் குற்றவாளிகளான சரவணன், சீனுவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலித் மக்களை சமத்துவ நோக்கில் பார்க்க விரும்பாத இந்து மதத்திலிருந்து வெளியேறுவதன் மூலமாகத்தான் முன்னேற்றத்தை அடைய முடியும். மாறாக ஒவ்வொரு படுகொலைக்கும் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் என்றால், படுகொலையின் விகிதமும் ஆர்ப்பாட்டத்தின் விகிதமும் சமமாகவே இருக்கும். இனி, இந்து மதத்தைப் புறக்கணிப்போம்; படுகொலையில் இருந்து சேரிகளைப் பாதுகாப்போம்.