முனைவர் விவேக்குமார் - புது தில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் சமூக அமைப்புகள் மய்யத்தின் சமூகவியல் பேராசிரியர். அதே மய்யத்திலிருந்து அவர் முனைவர் பட்டம் பெற்றவர். இதற்கு முன்பு அவர் மும்பையில் உள்ள கல்வியியல், சமூகவியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். கல்காரி பல்கலைக்கழகத்தின் பண்பாடு மற்றும் ஊடகத்துறையும், நூலக அறிவியல் துறையும் இணைந்து 2007 மார்ச்சில் நடத்திய மாநாட்டில், ‘பாபாசாகேப் அம்பேத்கரின் தேசம் குறித்த சிந்தனைகள் மற்றும் தேசம்' என்ற தலைப்பில் முக்கிய கட்டுரை ஒன்றை வாசித்தளித்தார்.

Vivekkumar
இவர், ஆங்கிலத்தில் மூன்று நூல்களும் இந்தியில் இரண்டு நூல்களும் எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் அவர் எழுதிய நூல்கள்: ‘இந்தியாவில் தலித் தலைமை - இந்தியாவின் பொங்கும் புரட்சி', ‘தலித் எதிர்ப்பும் புதிய எல்லைகளும்', ‘உத்தரப் பிரதேசத்தில் தலித் எதிர்ப்பும் பகுஜன் சமாஜ் கட்சியும்'. இவர் பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதியிருந்தாலும் கீழ்க்காணும் 4 கட்டுரைகள், கல்விமான்களிடையே குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன: ‘இந்திய சமூகவியலில் தலித்துகளை பொருத்துதல்', ‘கல்வி மற்றும் விடப்பட்ட தலித்துகள்', ‘இடஒதுக்கீடு அரசியலைப் புரிந்து கொள்ளுதல்', ‘பகுஜன் சமாஜ் கட்சி : ஜனநாயகம் மற்றும் நிர்வாகத்தில் சில சிக்கல்கள்'.

‘சார்புத் தன்மையுடைய மற்றும் சுதந்திர தலித் தலைமை', ‘புலம் பெயர்ந்த தலித்துகள்' மற்றும் ‘தலித்துகளின் மனித மனச் சோர்வு புள்ளி' ஆகிய கருத்தியல்களை முதன் முதலாக முன்வைத்தவர்களில் ஒருவர் விவேக்குமார்.

தலித் மனித உரிமைகளுக்கான தேசியப் பிரச்சாரத்தை ஒருங்கிணைத்தவர்களுள் ஒருவராக, 2001இல் டர்பனில் நடைபெற்ற ‘இன வேற்றுமைக்கு எதிரான உலக மாநாட்டில்' பங்கேற்றுள்ளார். இவர் ஒரு பத்திரிகையாளõரும் கூட. ‘தி பயனீர்' இதழில் லக்னோ பிரிவில் துணை ஆசிரியராகவும் இருந்தார். மேலும், லக்னோவிலிருந்து வெளிவரும் இந்தி வார இதழான ‘பயனீர்'இல் தொடர்ந்து எழுதிய முதல் தலித் எழுத்தாளர். தற்போது, புது தில்லியில் உள்ள ஜெயின் தொலைக்காட்சியில் வாரம்தோறும் ‘தலித் ஆவாஜ்' என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார்.

இந்திய சமூகவியல் அமைப்பின் ஆர்.சி.9இன் செய்தி இதழான ‘தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும்' என்ற இதழின் ஆசிரியராகத் தற்போது பணியாற்றுகிறார். இவர் அண்மையில் சென்னைக்கு வந்திருந்தபோது, தலித் அரசியல் குறித்தும், முதல்வர் மாயாவதியின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் - ‘தலித் முரசுக்'காக விரிவாகப் பேசினார்.

சந்திப்பு : பாண்டியன்

தலித் அரசியல் என்பது, வெறும் தேர்தல் அரசியலாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் தலித் அரசியல் என்று விவாதிப்பவை எல்லாம் - தேர்தல் அரசியலாகத்தான் புரிந்து கொள்ளப்படுகிறது. அதைக் கடந்து யாரும் சிந்திப்பதில்லை. தலித் அரசியல் என்பது, தேர்தல் அரசியல் மட்டும்தானா?

தலித் இலக்கியத்தையும், தலித் அரசியலையும் நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தலித் இயக்கம் என்பது பரந்துபட்டது. அதில் தலித் அரசியல் என்பது ஓர் அங்கம் மட்டுமே. தலித் எழுச்சி என்பது பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. அரசியல் மற்றும் இயக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் ஏழு வகையான தலித் எழுச்சிப் பரிமாணங்கள் உள்ளன. சமூக விடுதலையிலிருந்து தொடங்குகிறோம். அந்த எழுச்சி, அடையாள மீட்பு மற்றும் மதத்திற்கானது. அது ஒரு தொடக்கப் புள்ளி மட்டுமே. நமது சமூகப் புரட்சியாளர்கள் இந்த எழுச்சியை தொடங்கினார்கள். வடக்கில் ரவிதாஸ், மகாராட்டிரத்தில் சொக்கமேளா, தெற்கில் அயோத்திதாசர் மற்றும் பலர். ஆக, அது ஒரு மத அடிப்படையிலான சமூக எழுச்சி.

பின்னர், பாபாசாகேப் அம்பேத்கர் காலத்தில் அரசியலுக்குள் நுழைந்தோம். அவர் ஒரு சமூகப் புரட்சிக்கான இயக்கத்தையே தோற்றுவித்தார். ஆனால், அதற்கு எல்லை வகுக்கவில்லை. அவர், ஒரு வாக்கு - ஒரு மதிப்பு - ஒரு மனிதன் என்ற நிலையை கோரினார். நம் மக்களின் பிரதிநிதித்துவ உரிமையை அங்கீகரிக்கக் கோரினார். இரட்டை வாக்குரிமை வேண்டும் என்றார். 1937இல் சுதந்திரத் தொழிலாளர் கட்சியைத் தோற்றுவித்தார். இங்கு அரசியல் நுழைவதைக் காணலாம். இது குறித்துப் பின்னர் பேசலாம்.

தற்காலத்தில் ஆற்றல் வாய்ந்த பணியாளர்கள் இயக்கமாக ‘பாம்செப்' இருக்கிறது. ‘பாம்செப்' எந்த அளவிற்கு வலிமை வாய்ந்தது என்றால், அதுதான் பகுஜன் சமாஜ் கட்சி தோன்றுவதற்கு காரணமாக இருந்தது. இலக்கியத்தில் வரலாற்றுப் பூர்வமான எழுச்சி இருக்கிறது. இது பெரும்பாலோருக்குத் தெரிவதில்லை. ஏனெனில், இந்திய சமூகம் சாதியால் மட்டுமல்ல; மொழியாலும் பிளவுபட்டு இருக்கிறது. நாம் இங்கு பேசுவது தலித் இலக்கிய இயக்கம் குறித்து. அடுத்து, தலித் பெண்கள் இயக்கம். அது தனக்கென ஓரிடத்தை கேட்கிறது. தற்காலத்தில் தலித் தொண்டு நிறுவனங்கள் உலகமயமாக்கல் பின்னே சென்று கொண்டிருக்கிறார்கள். அதோடு புலம் பெயர்ந்த தலித்துகள் வேறு இருக்கிறார்கள். ஆக, மொத்தம் ஏழு பரிமாணங்கள் உள்ளன. ஆனால், அதை நான் வானவில் என்று சொல்ல மாட்டேன். நான் அதை எழுச்சியின் ஏழு பரிமாணங்கள் என்று கூறுவேன்.

தற்போது நாம் நமது சட்டப்படியான உரிமைகளுக்காகப் போராட வேண்டும். நாம் மற்றவர்களின் உரிமைகளைப் பறிக்க முயலவில்லை. நாம் அனைவரும் இவை நமது அடிப்படை உரிமைகள் என்பதால், இதை சட்டப்படியான வழிமுறைகளில் மீட்டெடுக்க முயல்கிறோம். ஆனால், தீவிர இடதுசாரிகள் இயக்கமும் உள்ளது. அவர்கள் மிகுந்த வன்முறை எண்ணத்தோடு இருக்கிறார்கள். அவர்கள் சட்டப்பூர்வமான ஜனநாயக வழிமுறைகளைப் பற்றி சிந்திப்பதில்லை. இங்கு இந்த அனைத்துப் பரிமாணங்களும் ஜனநாயக வழிமுறையிலேயே செயல்படுகின்றன. ஆக, நம்மிடம் எழுச்சியின் 7 பரிமாணங்கள் உள்ளன. அவற்றில் ஒரு பரிமாணம் மட்டுமே தேர்தல் அரசியல். தலித் அரசியலை இரு கூறுகளாகப் பிரிக்க வேண்டும். ஒன்று சார்புத் தன்மை யுடையது. மற்றொன்று சுதந்திரமானது.

சுதந்திரமான தலித் இயக்கம் அல்லது தலித் அரசியல் இயக்கம் என்பது தலித்துகளால் தொடங்கப்பட்டு, தலித்துகளின் ஆளுகையில் – தலித்துகளால் நடத்தப்படும் இயக்கமாகும். பாபாசாகேப் அம்பேத்கர் சுதந்திர தலித் இயக்கத்தின் முன்னோடி ஆவார். அவர் தனியாக கட்சி தொடங்கியபோது, அந்த அரசியல் கட்சியின் வரலாற்றில் தலித்துகளே இடம் பெற்றனர். அரசின் கவனத்திற்கு தலித் விஷயங்கள் கொண்டு வரப்பட்டன. அதன் முழக்கங்களும் வேறாகவே இருந்தன. ஆனால், சார்புத் தன்மையுடைய தலித் இயக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை ஆதிக்க சாதியினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகளில் காணலாம்.

எடுத்துக்காட்டாக, காங்கிரசில் இருந்த ஜெகஜீவன்ராமை எடுத்துக் கொள்ளுங்கள். அதைப் போல மகாராட்டிரத்தில் ஆர்.எஸ். கவாய், இந்து மகாசபையில் இருந்தவர். இந்த அரசியல் தலைவர்கள் ஆதரவு அரசியலில் சிக்குண்டவர்கள். அதனால் அவர்களின் பெயர் வரலாற்றில் இடம் பெறவில்லை. அவர்களுக்காக, அக்கட்சிகளில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான பிரிவுகள் தொடங்கப்பட்டன. அவர்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்களாக இருந்தபோதும், அவர்களின் செயல் திட்டம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. இது, அவர்கள் எந்த தலைவர்களுடன் அமர்ந்து பேசுகிறார்களோ, அந்தத் தலைவர்களின் விருப்பு வெறுப்புகளை சார்ந்ததாக இருந்தது. இதன் மூலம் சார்புத்தன்மையுடைய மற்றும் சுதந்திரமான தலித் தலைமைகளுக்கு இடையில் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் அதை ‘தலித் அரசியல்' மற்றும் தலித்துகளின் அரசியல் என்று அழைக்கிறேன். இவை இரண்டும் வெவ்வேறானவை. சான்றாக, நேற்று (17.6.07) நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகளின் மண்ணுரிமை மாநாட்டில், தமிழக முதல்வர் - காமராஜ், பெரியார் மற்றும் அண்ணா ஆகியோரது பிறந்த நாட்களின்போது நிலங்கள் அளிக்கப்படும் என்று அறிவித்தார். இவற்றில் அம்பேத்கர் பெயர் இல்லை. அதை எப்படிப் பார்ப்பது? நீங்கள் தலித்துகளுடன் அரசியல் நடத்துகிறீர்கள். ஆனால், அதை தலித் அரசியலாக நடத்தவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கோயிலில் நுழைய வேண்டும் என்கிறார்கள். 1927இல் அம்பேத்கர் இதனை விட்டுவிட்டார். இதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இங்கு தான் நாம் சார்புத்தன்மையுடைய மற்றும் சுதந்திர தலித் தலைமை குறித்து புரிந்து கொள்ள வேண்டும்.

மாபெரும் தலித் எழுச்சியின் ஒரே முகவாயில் அரசியல் மட்டுமே. சிக்கல் என்னவென்றால், இந்திய அரசமைப்பின் இயல்பால், அரசியல் அதிகாரம் முன்னுரிமை பெறுகிறது. அது பிற வகையான எழுச்சிகளைப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது. அதனால் நாம் ஒரே ஒரு பரிமாணம் மட்டுமே இருப்பதாக நினைக்கிறோம். உண்மை அதுவல்ல. ஒரு சமூக இயக்கம் இன்னமும் அதிகமான பங்கை ஆற்ற வேண்டியுள்ளது. ஏனெனில், அது அரசியலை அவ்வப்போது சீர் தூக்கிப் பார்க்கிறது. முகவாயில் அரசியல் மட்டுமே. சமூக இயக்கம் என்பது பெரிய அளவிலானது. சமூக எழுச்சியிலிருந்தே தலித் அரசியல் உருவாகியுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அது ஒரு தொடக்கமல்ல. நாம் பேசிக் கொண்டிருக்கும் இறுதிக் கட்டமைப்பில் எங்கோ ஓரிடத்தில் அது இருக்கிறது. இந்திய அரசமைப்பில் அதிகாரம் மய்யப்படுத்தப் பட்டுள்ளதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அரசின் கரங்கள் தொட்டிலிலிருந்து சுடுகாடு வரைக்கும் - அதைத் தாண்டியும் நீளும் என்று நாம் சொல்கிறோம். அதனால் அனைவரும் அந்த அரசின் பகுதியாக இருக்க விரும்புகிறார்கள். அரசியல் மற்ற அனைத்தையும் மூழ்கடித்து விடுகிறது.

பாபாசாகேப் அம்பேத்கருக்குப் பின்னால் எழுந்த சமூக இயக்கங்களைப் பற்றி சொல்ல முடியுமா?

‘பாம்செப்' ஒரு சமூக இயக்கமாகவே தோற்றுவிக்கப்பட்டது. ‘பாம்செப்' ஒரு சுதந்திரமான சமூக இயக்கம். வேரற்ற சமூகங்களில் வலிமையான அரசியல் இயக்கங்கள் இருக்க இயலாது. அதனால் நீங்கள் உங்கள் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும். பாபாசாகேப் அம்பேத்கர், பெரியார், நாராயண குரு போன்ற தலைவர்களின் கருத்துகளை எடுத்துக் கொண்டு, தலித் மக்கள் மீதான வன்முறைகள் மற்றும் பாபாசாகேப் தனது எழுத்துகளிலும் உரைகளிலும் கூறியவற்றை கான்சிராம் பாம்செப்பில் எடுத்துக் கொண்டார். அதன் மூலம் மக்கள் தங்கள் சமூக வேர்களையும், அவர்கள் எவ்வாறு இந்நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்பதையும் உணர்ந்து கொள்ள வைக்க முயன்றார். தலித்துகளே உண்மையில் இந்நாட்டை ஆண்டவர்கள். அப்படித்தான் வரலாறு கட்டமைக்கப்பட்டது. வெளியிலிருந்து வந்தவர்கள் தலித்துகளை அடிமைப்படுத்தி, அவர்களின் அடையாளங்களைப் பறித்து, அவர்கள் மீது சாதி அமைப்பைத் திணித்தனர். இப்படித்தான் வரலாறு மறுகட்டமைக்கப்பட்டது.

மறுபுறம், ஒரு பொதுவான வரலாற்றின் மூலம் மொழி வேற்றுமையால் உருவாக்கப்பட்ட இடைவெளிகளை நிரப்புவது. அதற்காக தமிழ் நாட்டிலிருந்து பெரியாரை எடுத்துக் கொள்கிறோம். கேரளத்திலிருந்து நாராயண குருவை எடுத்துக் கொள்கிறோம். மகாராட்டிரத்திலிருந்து அம்பேத்கரையும் புலேவையும் எடுத்துக் கொண்டு, வடக்கே ரவிதாசோ அல்லது கபீரோ இவர்களை ஒருங்கிணைத்து வடக்கு மற்றும் தெற்கின் வரலாற்றை சமன்படுத்தி, பகுஜன் மற்றும் மநுவாதிகள் என்று இரண்டு கற்பனையான பிரிவுகளை ஏற்படுத்துகிறோம். தற்போது பகுஜன் (பட்டியல் சாதியினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர்) 85 சதவிகிதமும், மனுவாதிகள் 15 சதவிகிதமும் உள்ளனர். ஆக, இந்திய மக்கள் இரண்டு கற்பனையான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். ஒன்று மற்றொன்றோடு சண்டையிட்டுக் கொள்கிறது.

இந்த சமூக இயக்கம்தான், பெரும்பான்மை மக்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் வரலாற்றை மறுகட்டமைப்பதாக சொல்லியது. அந்த சமூக இயக்கத்திலிருந்து 1978இல் ‘பாம்செப்' உருவானது. 1981இல் டி.எஸ்.4 தொடங்கப்பட்டது. அதன் முழக்கம் "வாக்கு எங்களுடையது; ஆட்சி உங்களுடையது. இனி நடக்காது, இனி நடக்காது'' அந்த வகையில் மக்கள் விழிப்புணர்வு பெற்றவர்களாக ஆக்கப்பட்டனர். வளங்களைப் பொதுமைப்படுத்தத் தொடங்கினர். சமூகத்திற்கு திருப்பி செலுத்த வேண்டும். உங்களுக்கு கிடைத்த ஒதுக்கீடு, திறன் அடிப்படையில் அல்ல. மாறாக, உங்கள் சமூகத்தின் அடிப்படையில். அதற்கு நீங்கள் திருப்பி செலுத்த வேண்டும் (Pay back to society).

கான்சிராம் பலவித தியாகங்களை செய்தார். "எந்த தனிப்பட்ட சொத்தும் வைத்துக் கொள்ள மாட்டேன். திருமணம் செய்து கொள்ள மாட்டேன். எனது குடும்பத்தினருடன் செல்ல மாட்டேன். எந்த பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள மாட்டேன். முதன் முறையாக வடக்கில் நிலவும் வெற்றிடத்தை மாற்றிக் கொண்டிருக்கும் ஒரு சமூக இயக்கத்தின் வெற்றிக்காக, எனது முழு நேரத்தையும் செலவிடுவேன்'' என்றார். அம்பேத்கருக்குப் பிறகு எந்த சமூக இயக்கமும் இல்லை. இந்த சமூக இயக்கம்தான் பிறந்தது. பின்னர் பகுஜன் சமாஜ் கட்சி 1984இல் தோற்றுவிக்கப்பட்டது. அது பின்னர் ஓர் அரசியல் இயக்கமாக உருவெடுத்தது. இன்று வரை பகுஜன் சமாஜ் கட்சியில் ஜனநாயகம் இல்லை, தேர்தல் இல்லை என்றெல்லாம் விமர்சிக்கப்படுவதை நீங்கள் காணலாம். ஏனெனில், அது இயக்கம் மற்றும் அரசியல் கட்சி என இரு தன்மைகளைக் கொண்டது.

கான்ஷிராம் ஒரு சமூக இயக்கத்தைத் தொடங்கினாலும், அவர் இறுதியில் ஓர் அரசியல் கட்சியில் தானே முடிந்திருக்கிறார்?

ஏனெனில், அரசு மற்றும் சமூகத்தின் தன்மை மாறியுள்ளதை நீங்கள் அறிவீர்கள். ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் ஒரு சமூக இயக்கத்தைக் கொண்டிருந்தோம். அக்கால கட்டத்தில் அரசு இல்லை. பிரிட்டிசாரை ஓர் அரசு என்று சொல்ல இயலாது. எதிர்த்துப் போராட ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட அதிகார மய்யம் இல்லை. அது ஒரு சமூகமாகவே இருந்தது. கோயில் நுழைவு இயக்கம் இருந்தது. இலக்கிய இயக்கம் இருந்தது. ஆனால், அரசியல் இல்லை. சுதந்திரத்திற்குப் பிறகு அரசியல் எழுந்தது. எப்போதெனில், பல கட்சி தேர்தல் அரசியல் தோன்றியபோது. தலித்துகளுக்கு 1937இல்தான் வாக்குரிமை அளிக்கப்பட்டது.

அது இன்னமும் முழுமையாக உருவம் பெறவில்லை. ஜனநாயகம் பெரிய அளவில் உருவெடுத்த பிறகு, அரசியல் சட்டமும் அதனுள் உரிமைகள் பொறிக்கப்பட்ட பிறகு, அதை நடைமுறைப்படுத்த வேண்டியிருந்தது. அது எவ்வாறு சாத்தியப்படும்? அதை சமூக குழுக்கள் மூலமாக நடைமுறைப்படுத்த இயலாது. அந்த அரசியல் நடைமுறையின் ஓர் அங்கமாக நாம் இருக்க வேண்டும். அங்குதான் கான்சிராம் அத்தகையதொரு முடிவெடுத்தார். நம்மிடம் சமூக இயக்கம் உள்ளது. இனி நாம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்காகவே அவர் அரசியலில் நுழைந்தார்.

நம்முடைய இறுதி இலக்கை அடைய, அரசியல் ஒரு வழிமுறை மட்டுமே. அதிகாரத்தைப் பெறுவதற்கான அதிகாரமே இறுதி இலக்கல்ல. எது இலக்கு? சமூக மாற்றமே இலக்கு. எவ்வாறு அது சாத்தியப்படும்? தலித்துகள் இந்த குறிப்பிட்ட இயக்கத்தில் எவ்வாறு செயல்படுகிறார்கள்; அதை அவர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது ஆற்றும் பங்கை வைத்தே கணிக்க முடியும். இந்த பங்கையும் சமூக மதிப்பையும் மாற்ற வேண்டும். ஒரு சமூகத்தில் அதன் அமைப்பு தானாக மாறாது. ஏனெனில், அது அப்படித்தான் இருக்க வேண்டும் என அமைக்கப்பட்டுள்ளது. இந்து சமூக அமைப்பிலிருந்து வெளியேறாமல், அவ்வாறு அமைக்கப்பட்ட சமூகக் கட்டமைப்பிலிருந்து வெளியேற இயலாது.

ஜாதி அரசியலிலும்தான் எதிரொலிக்கிறது?

ஆம். எதிரொலிக்கிறதுதான். நீங்கள் முற்றிலும் வேறொரு முன்மாதிரியை வைத்திருந்தால் ஒழிய. உங்களுடைய முன் மாதிரி என்ன? ஆதிக்க சாதியினர் கட்டளையிட, தலித்துகள் அந்தக் கட்டளைக்குப் பணியும் நிலையை மாற்றுங்கள். அதை எப்படி மாற்றுவீர்கள்? உங்களுக்கென ஓர் அரசியல் கட்சியை வைத்திருக்க வேண்டும். அப்படி இருந்தால், நீங்கள் தான் அதிகாரத்திலிருப்பீர்கள். நீங்கள் தான் முடிவெடுப்பீர்கள்.

யார் போட்டியிட வேண்டும், எப்படிப் போட்டியிட வேண்டும்? உண்மையில் உங்கள் கொள்கை என்ன? ஓர் எடுத்துக்காட்டு : மகாராட்டிரத்தில் நாமன்தார் இயக்கம் இருந்தது. மராத்வாடா பல்கலைக் கழகத்தில் பெயரை மாற்றியது இந்த இயக்கம்தான். அம்பேத்கருக்குப் பிறகு அதுதான் இயக்கம். ஒட்டுமொத்த தலித் சிறுத்தைகள் இயக்கமும் தனது முழு ஆற்றலைப் பயன்படுத்தியது. ஆனால், பெயரை மாற்ற இயலவில்லை. என்ன நடந்தது? பெயருக்கு முன் ஒரு சொல் சேர்க்கப்பட்டது. ‘அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகம்.'

தற்போது, பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் பல பல்கலைக்கழகங்களின் பெயரை மாற்றியது. தற்போது யாரையும் போய் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. முடிவெடுக்கும் நிலையில் அவர்களே இருந்தனர். இது ஒரு மாற்றம் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால், 1995இல் மாயாவதி முதல்வராக இருந்தது தொடங்கி, நான்கரை மாதங்களில் நடந்த ஒரு குறிப்பிட்ட வகையான மாற்றம் இதுவென சொல்லலாம். பிறகு 6 மாதங்கள் வந்தõர். அதன் பின்னர் 15 மாதங்கள்.

Vivekkumar
மொத்தமாக இந்த 25 மாதங்களில் தலித்துகள் மற்றும் ஆதிக்க சாதியினரின் மதிப்பு மாறியிருக்கிறது என்று நான் கூறுவேன். தற்போது தலித்துகள் முடிவெடுக்கிறார்கள். முதலமைச்சராக மட்டுமல்ல, அமைச்சர்களாக, செயலாளர்களாக, பல்வேறு அதிகாரிகளாக! அதோடு அடித்தட்டு தலைவர்களாகவும். இப்போது நீங்கள் வந்தால், இங்குள்ள சமத்துவபுரம் போன்று, அங்கு அம்பேத்கர் கிராம் யோஜ்னாவை காணலாம். அய்ந்து அடிப்படை வசதிகளோடு அது மாயாவதியால் 1995இல் தொடங்கப்பட்டது. 55 சதவிகிதத்திற்கு மேல் தலித்துகள் உள்ள கிராமங்களில் பள்ளி, மின்வசதி, இணைப்புச் சாலை, நீர், மருத்துவ வசதி.

தலித் சேரிகளில் பள்ளி வசதி வழங்கினால், நீங்கள் வேறுபாட்டைக் காண முடியும். ஒரே இரவில் இது மாறிவிடும் என்று நான் கூற மாட்டேன். சாதி இந்துக்கள் பள்ளிக்கு வருவதைத் தடுத்து விடுவார்கள் என்ற அச்சம் இனி இருக்காது. பள்ளிகளே எப்போதும் வாக்குச் சாவடிகளாக ஆக்கப்படுகின்றன. முன்பு என்ன நடந்தது? பள்ளிகள் ஆதிக்க சாதியினரின் பகுதியில் இருக்கும். மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், தற்போது அவர்கள் வசிக்கும் இடத்தில் பள்ளிகள் இருப்பதால், அவர்கள் தங்கள் வாக்குகளை எளிதாகப் போட முடிகிறது. இணைப்புச்சாலை இருப்பதால், ஆதிக்க சாதியினர் அவர்களைத் தடுக்க இயலாது.

முன்னர் சேரிக்கு இணைப்புச் சாலை இருந்தால், அதை குறுக்கே மறிப்பார்கள். அதன் மூலம் அவர்களை வெளியேறச் செல்ல விடாமல் தடுப்பார்கள். ஆனால், தற்போது அவர்களுக்கு இணைப்புச் சாலை உள்ளது. இது ஏற்படுத்தியிருக்கும் மாற்றத்தை கற்பனை செய்து பாருங்கள். அதை மதிப்பிட முடியாது. இது குறித்த ஆய்வை யாரும் இதுவரை மேற்கொள்ளவே இல்லை. மற்றொரு முக்கிய விஷயம் நிலப்பங்கீடா. இத்தகைய சீர்திருத்தங்களை மாயாவதி திட்டமிட்டே வெளிப்படையாக அறிவிப்பதில்லை. ஏனெனில் அறிவித்தால், அதைத் தடுப்பதற்கு அதிகமான பேர் இருப்பார்கள்; நிலத்தை அளிக்க இயலாது. ஆனால், மாயாவதி ஆட்சியில் லட்சக்கணக்கான தலித்துகள் பட்டாவினால் மட்டுமல்ல, நிலவுடைமையாலும் பயன் பெற்றார்கள். காங்கிரஸ் காலத்தில் பட்டா வழங்கப்பட்டது.

ஆனால், நிலம் கையளிக்கப்படவில்லை. பஞ்சமி நிலங்களைப் போல பட்டா இருக்கும்; ஆனால், நிலம் கையிலிருக்காது. ஆனால், தற்போது மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆங்காங்கே நின்று நிலத்தை அளந்து கையளிக்கும்படி அறிவுறுத்தப்பட்டார்கள். 2002இல் நான் 3 மாவட்ட நீதிபதிகளை சந்தித்து உரையாடினேன். மேஷ்ராம், நாகா மற்றும் ரமேஷ் குமார். முகேஷ் மேஷ்ராம் 5000 ஏக்கர் நிலங்களைப் பகிர்ந்தளித்ததாக கூறினார். ஆக, இந்த மாதிரியான நிலச் சீர்த்திருத்தங்கள் நடைபெற்றுள்ளன. இதன் பலன் என்ன என்பது இனிமேல் தான் தெரியும். ஏனெனில், இது குறித்து ஆய்வு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. நிலம் வழங்கப்படுவதில் எனக்கு அடிப்படையில் உடன்பாடில்லை.

ஏனெனில், தற்போதைய சமூகம் அறிவுசார்ந்த சமூகமாக இருக்கும் நிலையில், நாம் இன்னமும் உழவு சார்ந்த பொருளாதாரத்தை வழங்கிக் கொண்டிருக்கிறோம். அது வேறு. இருப்பினும், நிலமற்ற தொழிலாளர்கள் நிலவுடைமையாளர்களாக மாறுவதை கற்பனை செய்து பாருங்கள். மற்றொரு முக்கிய சீர்திருத்தத்தை மாயாவதி கொண்டு வந்தார். காவல் நிலைய தலைவர்களில் 25 சதவிகிதம் பேர், தலித் சமூகத்திலிருந்து வந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற ஒதுக்கீட்டை அவர் கொண்டு வந்தார். அதோடு 20 பேர் சிறுபான்மைச் சமூகத்திலிருந்து வந்தவர்களாக இருக்க வேண்டும். இதனால் காவல் நிலைய அமைப்பே மாறிவிட்டது. முன்பெல்லாம் சிறுபான்மையினரும் தலித்துகளும் காவல் நிலையத்திற்கு வெளியேதான் நிற்க வேண்டும். அவர்கள் நடுங்குவார்கள்.

ஆதிக்க சாதியினர் சென்று மத்தியஸ்தம் செய்வார்கள். காவல் துறையினர் ஆதிக்க சாதியினர் பக்கமே நிற்பார்கள். ஆனால், தற்போது என்ன நடக்கிறது? பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த அடித்தட்டுத் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தலித்துகளுடன் காவல் நிலையத்தில் நுழைவார்கள். ஏனெனில், காவல் நிலையத்தில் மட்டுமல்ல, முதலமைச்சராகவும் அவர்களுடைய சமூகத்தைச் சார்ந்தவரே என்ற தைரியம் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால், அதே நேரத்தில் எந்த ஒரு அதிகாரியாவது முறைகேடாக நடந்தால், உடனடியாக கட்சித் தலைமையகத்திற்கு நேரடியாக தொலை நகல் மூலம் தெரிவியுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம். மக்கள் ஒரே நேரத்தில் மாறியிருக்கிறார்கள். அடித்தட்டு நிலையில் இது, பெரும் நம்பிக்கையை அளித்திருக்கிறது.

- அடுத்த இதழிலும்