ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் அதிகாரம் சார்ந்ததாக, அரசியல் சார்ந்ததாக இருக்கும்படி மிகக் கவனமாக ஆளும் வகுப்பு பார்த்துக் கொள்கிறது. தேர்தல் அரசியல் சார்ந்த உரிமைகள், இடஒதுக்கீட்டு உரிமை, பொருளாதாரத் தற்சார்புக்கான உரிமை, நலத்திட்டங்களைத் துய்ப்பதற்கான உரிமை என தலித் மக்களின் போராட்டங்கள் இவற்றை மட்டுமே நோக்கி இருக்கும்படி நிர்பந்திக்கப்படுகின்றன. இந்திய (இந்து) அரசமைப்புக்குட்பட்ட இந்த உரிமைகளை, எந்தளவுக்கு வேண்டுமானாலும் -எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும் போராடிப் பெறலாம். இன்னும் 60 ஆண்டுகள் போராடினாலும் இந்த உரிமைகள் எல்லாம் கிடைத்துவிடுமா? கிடைக்கும். ஆனால், மிகவும் சொற்பமாக! அவை ஒருபோதும் முழுமையாகக் கிடைக்காது. ஆனால், என்றாவது ஒரு நாள் கண்டிப்பாகக் கிடைக்கும் என்ற மாயை மட்டும் மிக ஆழமாக நம் சிந்தனையில் வேரூன்றப்பட்டுள்ளது.

இந்து சமூக வரையறைக்குட்பட்டு, உரிமைகளைக் கோரி, போராடி, ஓரளவுக்கு மட்டும் அனுபவிக்கும் வகையில் நமக்கு கடிவாளமிடப்பட்டிருக்கிறது. இச்சதித்திட்டத்தைக் கடந்து சிந்தித்தவர் பாபாசாகேப் அம்பேத்கராகவே இருந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களும், இயக்கங்களும் -விடுதலைக்கான தொலைநோக்குச் செயல் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. தலித் போராட்டத்தின் அடிநாதமாக சுயமரியாதையும், பகுத்தறிவும், சமத்துவ வேட்கையுமே இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் தேடும் சமத்துவம், இந்து எல்லையைக் கடப்பதாக இல்லை. தலித் கிறித்துவர்களின் பிரதிநிதித்துவத்திற்கானப் போராட்டம் இன்னும் வெற்றி பெறாமல் இருப்பதற்கு, இத்தகைய அணுகுமுறை ஒரு முக்கியக் காரணம்.
ஆறு ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பிறகு (1956) தலித் சீக்கியர்கள், தங்களின் இடஒதுக்கீட்டு உரிமையைப் பெற்றனர். நாற்பது ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பிறகு தலித் பவுத்தர்கள், இதே உரிமையைப் பெற்றனர். ஆனால், 56 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடியும் தலித் கிறித்துவர்கள் தங்களுக்கான உரிமைகளைப் பெற முடியவில்லை. சீக்கியத்தையும், பவுத்தத்தையும் தனது (இந்து) சட்ட எல்லைக்குள்ளேயே நிறுத்தியிருக்கும் பார்ப்பன அதிகார வர்க்கம், அதை கிறித்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அளிக்க மறுப்பதற்கான காரணம், இம்மதங்கள் அதற்கு நேரடியான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன என்பதுதான். அடிமைகள் மதம் மாறினாலும் தப்பித்து விடாதபடி பார்த்துக் கொள்ள, நீதிமன்றங்களும் துணை நிற்கின்றன.

அப்போதைய இந்தியப் பிரதமரும் (7.11.1950) குடியரசுத் தலைவரும் (17.12.1950) கிறித்துவ பிரதிநிதிகளுக்கு அளித்த உறுதிமொழிக் கடிதம் முதல், மத்திய அரசால் அமைக்கப்பட்ட "முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்' -1953, இளையபெருமாள் ஆணையம் -1969, மண்டல் குழு அறிக்கை -1980, சிறுபான்மையினர் ஆணையத்தின் மூன்றாவது ஆண்டறிக்கை -1980, பிரதமர் நரசிம்மராவிடம் 103 பேராயர்கள் அளித்த கோரிக்கை மனு -1996, நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் மே 15, 2007 அன்று பிரதமரிடம் அளித்த அறிக்கை வரை, அனைத்துமே தலித் கிறித்துவர்களுக்கான இடஒதுக்கீட்டை வலியுறுத்துகின்றன. இது தவிர, எண்ணற்ற போராட்டங்கள் இந்தியா முழுவதும் நடைபெற்றுள்ளன. இருப்பினும், எந்தக் கட்சி ஆட்சியாக இருந்தாலும் -இக்கோரிக்கைக்கு மட்டும் செவி சாய்க்க மறுக்கின்றன.

இந்து எல்லைக்குட்பட்ட கோரிக்கைகள், அனுமதிக்கப்படுவதற்குக் காரணம் -இந்து சமூகத்திற்கு அடிமைகள் வேண்டும் என்பதால் தானே ஒழிய,
சமத்துவத்தைப் பேணுவது அவர்களின் நோக்கமல்ல. இந்துவாக இருந்து கொண்டு, தீண்டாமையை மட்டும் எதிர்ப்பது விவேகமல்ல. இந்து பயங்கரவாத எல்லையை அத்து மீறும்பொழுதுதான் விடுதலை சாத்தியமாகும். அதை இந்து மதத்திலிருந்து செய்யலாம் என்ற நினைப்பது அறிவீனம். பவுத்தத்தைப் பரப்புரை செய்பவர்களும்கூட, இந்து சட்டகத்தை மீற வேண்டும் என்ற உணர்வின்றி -அதைக் கேள்வி கேட்காமல், வெறும் பவுத்தர்களாக மாறுவதோடு பிரச்சினை முடிந்துவிடுவதாக எண்ணுகின்றனர். பவுத்தத்தை இந்து ஆக்டோபஸ் கரங்களில் இருந்து மீட்டெடுக்காமல், "இந்து பவுத்தராக' இருப்பதும், இடஒதுக்கீட்டைப் பெற்றுக் கொள்வதும் மட்டுமே ஜாதியை ஒழித்து விடாது.

தலித்துகள் எந்த மதத்தைத் தழுவினாலும், அவர்களுக்கான இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பெற கடும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இதற்கு அழுத்தம் தருவதை முக்கிய தலித் செயல்திட்டமாக்க வேண்டும். தலித்துகள் இந்துவாக இருக்க நிர்பந்திக்கப்படுவதிலிருந்து மீண்டெழ இதுவே சீரிய வழிமுறையாகும்.