ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த கருங்கம்மாள் என்ற தலித் பெண்ணை, அக்கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி மற்றும் முத்து என்ற சாதி இந்துக்கள் 1.3.2006 அன்று பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தியுள்ளனர். இவர்கள் வசிக்கும் ராமநாதசுவாமி நகரில் தலித் மக்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளுமில்லை. குறைந்தபட்சம் கழிப்பறைகூட இல்லாததால், அம்மக்கள் அருகில் இருக்கும் வேதனைகுழை தோப்பைத்தான் கழிப்பறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. பெண்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட, இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது. ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட கருங்கம்மாளே தனக்கு நேர்ந்த கொடுமைகளைப் பதிவு செய்தும் முதல் தகவல் அறிக்கையில் உண்மைக்கு மாறான தகவல்கள் பதிவாகியுள்ளன. பாலியல் கொடுமை நடைபெற்ற 24 மணி நேரத்தில், மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும். ஆனால், ஒரு வாரத்திற்கும் மேலாக இதைச் செய்யாமல் காலத்தைக் கடத்தி வருகிறது காவல் துறை. இங்கு பாலியல் வன்கொடுமைகள் தொடர, காவலர்களின் மெத்தனப் போக்கே காரணம். முனியசாமி மட்டுமே இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கை, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யக் கோரியும், காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அருந்ததியர் கூட்டமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

- பூமிநாதன்