கடந்த ஜெயலலிதா ஆட்சியில், தீவிரவாதத்தை ஒடுக்குவோம் எனப் பீற்றிக் கொண்டு, மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட கருப்புச் சட்டமான "பொடா'வில் 6 பெண்கள் உட்பட 21 ஆண்கள் என 27 பேர் 24.11.2002 அன்று "நக்சலைட் தீவிரவாதிகள்' எனப் பொய்யாக குற்றம் சாட்டிக் கைது செய்யப்பட்டோம். எதிர்க்கட்சிகளின், மக்களின் பலத்த எதிர்ப்புக்கிடையிலும் கொண்டு வரப்பட்ட இக்கொடூரச் சட்டத்தால், தமிழகத்தில் பலரும் பாதிக்கப்பட்டனர். இதில் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் எளிதாகவே பிணையில் வெளிவந்தனர். எந்தவித பணபலம், அரசியல் பலம் இல்லாத நாங்கள் 27 பேர் மட்டும்தான் தற்பொழுது தமிழகத்தில் "பொடா' வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறோம்.

எங்களுக்குப் பிணை மனு தாக்கல் செய்தும், இரண்டரை ஆண்டு சிறைவாசம் முடிந்த பிறகே, அதுவும் கடுமையான போராட்டத்திற்குப் பிறகே பிணை கொடுக்கப்பட்டது. இன்னும் 21 ஆண்கள் மூன்றரை ஆண்டு காலமாக சிறையில் வாடுகின்றனர். இதில் 10 பேருக்குப் பிணை தாக்கல் செய்யப்பட்டு "பொடா' நீதிமன்றத்தால் அது தள்ளுபடி செய்யப் பட்டுவிட்டது.

இதில், எல்லோரும் தவறே செய்யாமல் கைது செய்யப்பட்டவர்கள். இக்கைதினால் எங்களின் குடும்பங்கள் சின்னா பின்னமாயின. இதில் பலர் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், வயிற்றுப் பிழைப்புக்காக அன்றாடம் உழைப்பவர்கள்; தங்கையின் கைதினால் அக்காளின் திருமணம் நிற்பது, மகனின் கைதினால் பைத்தியமான தாய், மகள் - மருமகன் கைதினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட தாய், கணவன் கைதினால் குழந்தைகளுக்குக் கஞ்சி ஊற்ற வழி இல்லாமல், படிக்க வைக்க முடியாமல் தவிக்கும் மனைவிமார்கள், பிள்ளைகளின் ஏக்கத்தால் துயரப்படும் பல பெற்றோர்கள் என இக்கைதினால் சமூக, பொருளாதார, மன ரீதியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தான் அதிகம்.

இந்தக் குடும்பங்களை இன்றுவரை அரசு கண்டு கொள்ளவே இல்லை. சட்டம், நீதி, நேர்மை, நியாயம் காக்க வேண்டிய நீதிமன்றம்கூட, இப்பொய்யான குற்றச்சாட்டை உறுதிப்படுத்தி பிணையை மறுத்துவிட்டது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி தேர்தல் அறிக்கையில், "பொடா'வை ரத்து செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தது. பிறகு "பொடா' தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என மக்களின், அரசியல் கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்குப் பின்னர் மத்திய அரசால் இச்சட்டம் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், முன் தேதியிட்டு வழக்கைத் திரும்பப் பெறாததால், அது இன்றும் நடைமுறையில் உள்ளது. இந்தப் பிணைக்காக நாங்கள் பட்டினிப் போராட்டம் இருந்த காலத்தில், இன்றைய முதல்வர் கருணாநிதி அவர்கள், தீவிரவாதத்தை ஒடுக்க அய்.பி.சி., சி.ஆர்.பி.சி. போன்ற சட்டங்களே போதும் என்றும், "பொடா' போன்ற கருப்புச் சட்டங்கள் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.

எல்லா எதிர்க்கட்சிகளும், அறிவுஜீவிகளும், மக்களும் எதிர்த்த போதிலும் யாரையும் சட்டை செய்யாமல் - ஜெயலலிதா அரசு கொண்டு வந்த கருப்புச் சட்டமான "பொடா'வை எதிர்த்த தேர்தல் அறிக்கையில் சொன்னபடி வாக்குறுதியை நிறைவேற்றுவது, இன்றைய தி.மு.க. அரசின் கடமை. இதை வலியுறுத்துவது எங்களின் ஜனநாயக உரிமையும்கூட.

தற்போது தமிழகத்தில் கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருப்பதால், எங்கள் மீது பொய்யாகப் போடப்பட்ட "பொடா' வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்றும், "பொடா' நீதிமன்றத்தைக் கலைக்கவும், "பொடா'வால் பாதிக்கப்பட்ட அனைத்து சிறைவாசிகளையும் விடுவிக்கக் கோரியும் - அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், மனித உரிமை ஆர்வலர்களும், அறிவு ஜீவிகளும் இம்மனித உரிமை மீறலைக் கண்டித்து, எங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பின்குறிப்பு

இவ்வழக்கில் நாங்கள் எவ்வாறெல்லாம் சட்ட விரோதமாக நடத்தப்பட்டோம் என்பதற்குச் சில உதாரணங்கள்: கைது செய்யப்பட்டு, 15 நாட்களுக்குப் பிறகு காவலில் எடுக்கப்பட்டு, எங்களிடம் ஆயுதம் கைப்பற்றப்பட்டதாக சொல்லியுள்ளது. நாங்கள் கொடுத்ததாக சொல்லப்பட்ட வாக்குமூலத்தில் கூட எங்களின் கையெழுத்து இல்லை. 10.1.2003 அன்று சாதாரண பிரிவிலிருந்து "பொடா' பிரிவுக்கு மாற்றப்பட்டது, எங்களுக்கோ, வழக்கறிஞருக்கோ தெரிவிக்கவில்லை. 3.2.2003 அன்று "பொடா' நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 14.5.03 அன்றே தமிழக ஆளுநரிடம் அனுமதி பெறப்பட்டது. பிணை மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, ஒன்றரை ஆண்டு கால நீட்டிப்புக்குப் பிறகே 6 பெண்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டு, மற்ற ஆண்களின் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இவ்வளவு நீண்ட கால நீட்டிப்பு என்பது, இந்திய வரலாற்றிலேயே எங்களின் வழக்கில் தான் நடைபெற்றுள்ளது.

-'பொடா'வால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தினர்