தலித் விடுதலைச் சிந்தனை தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் பரவியுள்ளது. மேலிருந்து கீழ் நோக்கிய பார்வை, ஆய்வுகள் மாறி, அடி வேலிருந்து அகிலத்தைப் பார்க்கும் பார்வை புதிய உத்வேகத்துடன் கிளம்பி, இன்று எல்லாத் தளங்களையும் சூழ்ந்து நிற்கிறது. ஒரு தொலைநோக்குப் பார்வையோடு, ஒடுக்கப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் விடுதலை குறித்துச் சிந்திப்பவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அவ்வாறு விடுதலை வேட்கையுடன் மாறுபட்டு சிந்தித்து, செயலாற்றியவர்களுள் ஒருவர்தான் பரட்டை.

Parattai
பேராசியர், ஆயர், எழுத்தாளர், கலைஞர், கவிஞர், நடிகர், நாடக இயக்குநர், பாடலாசியர், இசையமைப்பாளர், மாற்று மருத்துவ வித்தகர், சுற்றுச் சூழல் ஆர்வலர், பெண்ணியச் சிந்தனையாளர், இறையியலாளர், நாட்டுப்புற ஆய்வாளர், தொடர்பியல் வல்லுநர், தலித் பண்பாட்டு அறிஞர் எனப் பல்வேறு பரிமாணங்களில் தன்னுடைய தனித் திறமையான முத்திரை பதித்த பரட்டை அவர்கள், 4.11.2005 அன்று அமெக்காவில் தன் உயிர் மூச்சை நிறுத்திக் கொண்டார்.

தேய்க்க எண்ணெயின்றி, வறண்டு அலங்கோலமாய்க் கிடக்கும் தலை மயிரைப் பார்த்தவுடன் "பரட்டைத் தலையா இருக்கு' என்று கூறுவது இயல்பு. உயர் கல்வி முடித்து தாயகம் திரும்பிய பரட்டை, கிராமங்களில் களப்பணியாற்ற இப்படித்தான் எண்ணெயின்றி நீண்ட கூந்தலோடு அறிகமானார். அவருடைய தோற்றத்தைக் கண்ட மக்கள், அவரைப் "பரட்டை' எனக் கிண்டலாக அழைத்தனர். மக்கள் வழங்கிய அந்தப் பெயரையே தன்னுடைய சொந்தப் பெயராக ஏற்றுக் கொண்டார். ஆனால், பரட்டை என்ற சொல்லுக்கு சமூக பொதுப்புத்தியில் விளங்கிக் கொண்டிருந்த அர்த்தத்தை நீக்கி, அச்சொல்லுக்குப் புதிய இலக்கணம் வகுத்தார்.

பரட்டை என்றால், பாமரன் அல்ல; பரந்து விரிந்த அறிவாளி என்று நிரூபித்துக் காட்டிய பரட்டை, கடலூல் 1940 மார்ச் 9 ஆம் நாள் மெர்சி கிளாரா ஜேம்ஸ் டேவிட் என்ற தம்பதியினருக்குப் பிறந்தவர். இவருடைய இயற்பெயர் தியாபிலஸ் அப்பாவு. கல்வியின் பல நிலைகளைத் தொட்டு உயர்ந்த இவர், தான் பெற்ற உயர் கல்வி அறிவை தன் சுய வளர்ச்சிக்கென செலவழிக்காமல் சமூக மாற்றத்திற்காகவே பயன்படுத்தினார்.

பரட்டை என்ற பெயரைக் கேட்டாலே இந்து பயங்கரவாதிகள் தொடை நடுங்கும் அளவிற்கு அவரது சிந்தனைகளில் நய்யாண்டித் தாக்கம் கோபம் கொப்பளிக்கும். சமூக மாற்றத்திற்கானப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர் பெரும்பாலும், தாங்கள் பேசும் கொள்கைகளை அரசியலை, நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றுவதில்லை. சொல்லுக்கும் செயலுக்கும் ஒருவித முரண்பாடு இருக்கும். ஆனால், பரட்டையைப் பொறுத்தவரை எதைப் பேசினாரோ, அதைத் தன் வாழ்க்கையில் செயல்படுத்தியும் காட்டினார்.

நெல்லிக்குப்பத்தில் பாரி சர்க்கரை ஆலையில் எழுத்தராகத் தன் பணியைத் தொடங்கிய பரட்டை, ஆசியராக (கடலூர்), இயக்குநராக (கிராமிய இறையியல் நிறுவனம்), பேராசியராக (தமிழ் நாடு இறையியல் கல்லூ) படிப்படியாக தன் அயராத உழைப்பால் உயர்ந்தார். பதவிக்கும், புகழுக்கும் மயங்காத பரட்டை, மதுரை காமராசர் பல்கலைக் கழகத் தலைமை தேர்வு ஆணையராகவும், ஆந்திரா தலித் திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தில் துறைத் தலைவராகவும் (மதிப்பு) இருந்து கவுரவப் பணிகளை திறம்பட நிறைவேற்றினார்.

மிகச் சிறந்த கர்நாடக இசைஞான மிக்க பரட்டை, மண்ணிசையில் மக்களின் மரபிசையில் நாட்டம் கொண்டு, அவற்றை மக்களிடம் சென்று பயின்று வந்ததோடு, மண்ணிசையின் பெருமைகளை உலகறியச் செய்தார். அவருடைய இசையறிவை சோதித்துப் பார்க்கவும், அவருக்குள்ளே புதைந்து கிடக்கிற எழுத்தாற்றலை கவித்துவத்தை உரசிப் பார்க்கவும், அவரின் "நிமுந்து நட' பாடல் ஒலிநாடா ஒன்றே போதுமானது. அதைத் தொடர்ந்து "மாட்டுக்கொட்டில் ரெடியாச்சு', "ஒண்டி வீரன்', "ஆசிய அள்ளித் தருவாரு' போன்ற ஒலிநாடாக்கள், அவருடைய இசைப்புலமையை விளக்கும் ஆதாரங்களாகத் திகழ்கின்றன.

இது தவிர, எண்ணற்ற புத்துயிர்ப் பாடல்களையும் இயற்றி இசையமைத்துள்ளார். 15க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 10க்கும் மேற்பட்ட வீதிநாடகங்கள், 2 தெருக்கூத்து மற்றும் 20 மேடை நாடகங்களையும் எழுதி, இயக்கி அரங்கேற்றியுள்ளார். சாதி ஒழிப்பு, பொருளாதாரத் தன்னிறைவு, தலித், பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை, தாழ்த்தப்பட்ட சாதிகளிடையே உள்ள முரண்பாடுகளைக் களைதல், இந்துத்துவ எதிர்ப்பு, இந்து பண்பாட்டு அடையாளங்களை மறுத்து தலித் பண்பாட்டை முன்னிறுத்துதல், சாதி மறுப்புத் திருமணம், சுயமரியாதையுடன் தலைநிமிர்ந்து வாழ்வது போன்றவை இவரது நாடகப் படைப்புகளில் கருப்பொருட்களாகக் காணப்படும். தமிழகத்தில் "தலித்' அடையாளத்தோடு நாடகங்களை அரங்கேற்றிய பெருமை, பரட்டை அவர்களையே சாரும்.

Parattai
வறுமையில் உழன்றாலும், விருந்தோம்பலில் தலித்துகள் எப்போதும் தலைசிறந்த பண்பாளர்கள் என்பதைப் பரட்டையின் வீடும், அவருடைய வாழ்வும் சாட்சியாய் கிடக்கின்றன. இரவோ, பகலோ எந்த நேரமானாலும் சரி, பலன் வயிற்றுப் பசியைத் தணித்தது பரட்டையின் வீடுதான். வயிற்றுப் பசியை மட்டுமல்ல, அறிவுப் பசியையும் தீர்த்து, பல்வேறு பிரச்சனைகளுடன் வரும் மாணவர்களின் இன்னலைத் துடைத் தெறிந்து, அவர்களுக்கு நங்கூரமாய் விளங்கினார். கல்லூரி நிர்வாகத்தால் தண்டிக்கப்பட்டு விலக்கம் செய்யப்பட்ட மாணவர்களை அரவணைத்து, அவர்களை சீர்திருத்தி வழிநடத்தும் தாயாய் இருந்ததை, தமிழ் நாடு இறையியல் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் பணியாளர்கள் நன்கறிவர்.

பரட்டை பார்ப்பதற்குதான் ஏதோ கிராமத்தான் போலிருப்பார். மூக்குக் கண்ணாடி, கணிப்பொறி, எழுதுகோல் ஆகியவற்றைக் கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டு கிடுகிடுப்பைக்காரன் போல் திரிவார். ஆனால், ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் தன் ஆற்றலை விதைத்துத் திரும்பியவர். “பரட்டையின் பெண்ணியம் பற்றி எழுதுவது கடினமானது. ஏனெனில், அவரது பெண்ணியச் சிந்தனைப் பகிர்வுகள் முழுவதும் உணர்வுப்பூர்வமானவை'' என்கிறார் பெண்ணியச் சிந்தனையாளர் காபியலே . அந்தளவிற்கு தன் மனைவியையும், மூன்று பெண் குழந்தைகளையும் சமத்துவச் சிந்தனையோடு வளர்த்தெடுத்தார். தான் பெற்ற அறிவை, திறமையை, தன் மனைவி, பிள்ளைகளிடம் ஆழமாக ஊன்றி, அவர்களையும் சமூக மாற்றுச் சிந்தனையாளர்களாக உருவாக்கினார்.

"தமுக்கு' இதழின் கடைசிப் பக்கத்தை "பரட்டையின் டாவு' மூலம் நிரப்பி, ஆயிரக்கணக்கான வாசகர்களைத் தன்பால் ஈர்த்தார். அவர், கடைசியாக எழுதிய "தமிழக வரலாற்றில் மநுதர்மிகளின் தொடர்பியல் சதி' என்ற நூலில், தானே சமஸ்கிருதம் பயின்று, இந்துத்துவவாதிகளின் முகமூடிகளைத் தோலுரித்துக் காட்டிய துணிச்சலைக் காண முடியும். அவரது படைப்புகள் குறித்துப் பேசும்போது, “மக்களின் மனதில் எழுதுவதுதான் முக்கியம். புத்தகங்கள் பேசாது. என்னுடைய படைப்புகளை ஒருவருடைய மனதில் எழுதினால் அவர் பேசுவார். அவரே ஒரு நூலாக மாறிவிடுவார்'' என்பார். உண்மையிலேயே அவரது படைப்புகள் யாவும் காலத்தால் அழிக்க முடியாத, நீடித்து நிலைத்து நிற்கும் ஆற்றல் மிக்கவை.

பரட்டையின் இசைப் படைப்புகளில் காணப்படும் விடுதலைக் கருத்துகளை உணர்வுகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற அமெக்காவைச் சேர்ந்த ஜோயி கேரே செனின் என்பவருடைய வேண்டுகோளை ஏற்று, அக்டோபர் மாதம் அமெரிக்காவிற்குப் பயணமானார் பரட்டை. “அடித்தள மக்களின் இசை குறித்து அமெரிக்காவின் ஒக்லாகலமா நகரிலுள்ள பல்கலைக் கழகம் ஒன்றில் விரிவுரையாற்றிய பரட்டைக்கு, திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து மூன்று வாரங்கள் அதி நவீன சிகிச்சை அளித்தும் பலனின்றி, பரட்டை இயற்கை எய்தினார்.

அவரது வாழ்வில் லட்சியமாகக் கொண்டிருந்த கொள்கைகளில் முக்கியமானது சாதி ஒழிப்பு. “சாதி உடம்பில் இல்லை, உடம்பை அடிக்கிறதால சாதி ஒழியாது. வன்முறை சாதியை ஒழிக்காது. சாதி என்பது உணர்வு கருத்து இரண்டிலும் கலந்திருக்கிறது. அதை அழிக்க, பண்பாட்டுத் தளத்தில் நன்று களப்பணி செய்ய வேண்டும்'' என்பதே அவரின் முழக்கம். அதை அவரின் மாணவர்கள் நிறைவேற்றுவதே பரட்டைக்குச் செலுத்தும் உண்மையான நன்றிக் கடனாகும். பரட்டை என்ற சகாப்தம் தலித் விடுதலைக்கு மட்டுமல்ல, பண்பாட்டுத் தளத்தில் தமிழ் மண்ணுக்கே மிகப் பெரிய இழப்பாகும். இழப்பினூடாகவும் அவரது படைப்புகள் விடுதலைத் திசைகளில் அணி வகுத்து நிற்கின்றன.