பெரியாரியலாளர்கள் ஜோதிடமும் ஆன்மிகமும் பிழைப்புவாதம் என்று சொன்னால், இந்துக்களைப் புண்படுத்துவதாக எதிர்ப்பார்கள். ஆனால், ‘துக்ளக்’ பார்ப்பன ஏடே அப்படிச் சொல்கிறது.

அந்த ஏடு வெளியிட்டுள்ள கட்டுரை:

ஒரு நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முன்னால் இத்தனை பரிகார ஸ்தலங்களைத் தேடி தமிழர்கள் அலைந்ததில்லை. ஏதோ அவரவர் ஊர்களிலுள்ள சிவன் கோவில், பெருமாள் கோவில்களுக்குச் சென்று வழிபடுவதோடு தங்கள் வழிபாட்டையும், பிரார்த்தனை களையும் முடித்துக் கொண்டார்கள். ஆனால், இன்று தமிழர்கள், குரு பரிகார ஸ்தலம், சனிப் ப்ரீதி ஸ்தலம், ராகு ப்ரீதி ஸ்தலம் என்று ஏதேதோ ஊர்களுக்குக் கும்பல் கும்பலாகப் படையெடுக்கிறார்கள்.

ஏன் இந்த சனி, குரு, ராகு-கேது இத்யாதிகளுக்கான பரிகார பூஜைகளை, வழிபாடுகளை அவரவர் ஊரி லுள்ள சிவன் கோவில் நவகிரகங்களுக்குச் செய்தால் போதாதா என்று இன்று யாரும் யோசிப் பதில்லை. இவர்களை இப்படிப் பரிகாரங்களுக்காக ஊர் ஊராக அலைய விட்டதற்கு, இந்த ஜோதிட சிகாமணிகளும், பத்திரிகைகளும்தான் காரணம். அந்தக் காலத்தில் திருப்பதிக்கேகூட இவ்வளவு பேர் சென்றதில்லை. இந்த ஜோதிடர்களும், ஆன்மிகப் பத்திரிகைகளும்தான் தமிழனை அந்தப் பரிகாரம் செய், அந்த ஊருக்குப் போ, இந்த ஊருக்குப் போ என்று பிரச்சாரம் செய்து விரட்டு கின்றனர். நடைபாதைக் கோவில்கள் பெருத்துக் கிடக்கிறமாதிரி, தமிழ்நாட்டில் ஜோதிடர்களும், ஆன்மிகப் பத்திரிகைகளும் பல்கிப் பெருத்துக் கிடக்கின்றன.

1960களில் ‘மாத ஜோதிடம்’ என்ற ஒரேயொரு ஜோதிடப் பத்திரிகைதான் வந்தது. ஆன்மிகத்துக் கென்று இன்று குவிந்து கிடக்கிற மாதிரி, ஆன்மிகப் பத்திரிகைகள் அந்தக் காலத்தில் இல்லை. கல்கியிலும் ஆனந்த விகடனிலும் கோவில்களைப் பற்றி தொ.மு. பாஸ்கரத் தொண்டமானும், பரணீதரனும் கட்டுரைகள் எழுதுவதோடு ஆன்மிகப் பகுதி முடிந்து விடும். ஆனால், இன்று பல பாரம்பரியமான தினசரிகள்கூட பக்கம் பக்கமாக ஜோதிடப் பகுதிகளை வெளியிடுகின்றன. ஜோதிடத்திற்கும், ஆன்மிகத்திற்கும் தனித்தனியே ஏகப்பட்ட பத்திரிகைகள் கடைகளில் தொங்குகின்றன.

இவற்றையெல்லாம் படித்துவிட்டுத் தமிழன் சும்மா இருப்பானா? தன் கஷ்டங்களை நிவர்த்தி செய்ய, தன் ஊரிலுள்ள தெய்வங்களையும், கோவில்களையும் விட்டு விட்டு, திருநள்ளாறு, ஆலங்குடி, குச்சனூர்... என்று ஊர் ஊராகத் திரிகிறான். தன் கைப் பணத்தைச் செலவு செய்வது போதாதென்று கடன் வாங்கியும் செலவு செய்து இந்தப் பரிகார ஸ்தலங்களைத் தேடித் தேடிப் போகிறான்.

அந்தக் காலத்தில் ஹிந்துக்கள் வீட்டில் யாருக்காவது மனநிலை சரியில்லை என்றால், சக்கரத் தாழ்வாரை வேண்டிக் கொள்வதோடு பிரார்த்தனை முடிந்துவிடும். ஆனால், இன்றைய தமிழன் குணசீலம் கோயில் எங்கே, ஏர்வாடி தர்ஹா எங்கே என்று தேடிப் போய் பணத்தைச் செலவு செய்து, மேலும் மேலும் கஷ்டத்தை வரவழைத்துக் கொள்கிறான். மனநலனைச் சரி செய்ய அருமையான மனநல மருத்துவர்களும், மனநல மருந்துகளும் இருக்கும்போது, இன்றும் பேய் விரட்டுகிறேன், குறி கேட்கிறேன் என்று அலைகிற தமிழனின் மடத்தனத்தை என்ன சொல்வது?

நமது அரசியல் சட்டத்திலேயே அறிவியல் சார்ந்த அணுகுமுறை வேண்டும்(51(ஏ)8) என்று சொல்லி யிருக்கிறது. ஆனால், கடவுளின் பேரைச் சொல்லி, மனிதர்களை மீள முடியாத குருட்டு நம்பிக்கைகளில் தள்ளி விடுகிற ஜோதிடர்களையும், ஆன்மிகப் பத்திரிகைகளையும் யார் தடுப்பது?

சரி, அவர்கள்தான் பிழைப்புக்காக ஜோதிடம், ஆன்மிகம் என்ற பேரில் ஏதேதோ எழுதுகிறார்கள். விற்பனை செய்கிறார்கள். அவற்றைப் படித்துவிட்டு இந்தத் தமிழர்கள் ஏன் புத்தி பேதலித்துப் போய்த் திரிய வேண்டும்? அதுதான் தமிழனின், தமிழ்ச் சமூகத்தின் விசேஷ குணம். யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்பி விடும் சமூகம் இந்தத் தமிழ்ச் சமூகம். ‘திராவிட நாடு வாங்கித் தருகிறேன், ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி போடுகிறேன்’ என்று சொன்னதை நம்பியது தானே இந்தத் தமிழ்ச் சமூகம்? இன்றும் அது ஜோதிடர்களும், ஆன்மிகப் பத்திரிகைகளும் சொல்வதை நம்பிக் கெண்டு அலைகிறது.

(‘துக்ளக்’ 30.9.2015 இதழில் ‘நம்பிக் கெட்டவர்கள் தமிழர்கள்’ என்ற தலைப்பில் ‘துர்வாசர்’ எழுதியது)