துவாரகா பீட பார்ப்பன சங்கராச்சாரி-சுவருப்பானந்தா சரசுவதி, சீரடி சாய்பாபாவை இந்துக்கள் வழிபடக் கூடாது என்று அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால், சாய்பாபா பக்தர்கள் கடும் ஆத்திரமடைந்துள்ளனர். சீரடி சாய்பாபாவை ‘இந்துக்கள்’ தங்கள் கடவுளாக நாடு முழுதும் கோயில் கட்டி வழிபடுவதோடு ஏழைகளுக்கு உணவளிப்பது போன்ற சேவை களையும் செய்து வருகின்றனர்.

19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சீரடி சாய்பாபா - பிறப்பால் ஒரு முஸ்லீம். ஆனாலும் முஸ்லீம் மதத்தைவிட்டு விலகியவர்; சீரடி சாய்பாபா ஒரு கடவுள் இல்லை என்றும்,இந்து கோயில்களில் அவர் படங்களை அகற்ற வேண்டும் என்றும் வாரணாசியில் இந்த சங்கராச்சாரி கூறியவுடன், சங்கராச்சாரி சீடர்கள் வாரணாசி தெருவில் இறங்கி,சாய்பாபாவுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். இதற்கு பதிலடியாக சாய்பாபாவை வழிபடும் இந்துக்கள், துவாரகா பீட சங்கராச்சாரி உருவ பொம்மைகளை எரித்தனர். சாய் பாபா பக்தர்கள், சங்கராச்சாரிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர, அதைக் கண்டித்து பயங்கர ஆயுதங்களுடன் திரியும் ‘சாதுக்கள்’ வாரணாசியில் உண்ணாவிரதப் போரட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

காங்கிரஸ் ஆதரவாளரான துவாரகா பீட சங்கராச்சாரி, சாய்பாபா பக்தையான பா.ஜ.க. அமைச்சர் உமாபாரதியை கடுமையாக சாடியுள்ளார். ‘ராமன் கோயில்’ கட்ட வேண்டிய அமைச்சர், முஸ்லீம் பாபாவின் சீடராக இருப்பதா? என்று கேட்கிறார், 90 வயது பார்ப்பன சங்கராச்சாரி. சாய்பாபா பக்தர்களை எதிர்கொள்ள சூலாயதம், ஈட்டியுடன் திரியும் நாகா நிர்வாண சாதுக்களை களத்தில் இறக்கப் போவதாக பாகம்பரி மடத்தின் தலைவரான நதேரந்திர கிரி என்பவர் மிரட்டி யிருக்கிறார். சீரடி சாய்பாபாவுக்கு உலகம் முழுதும் பக்தர்கள் உள்ளனர்.

இந்தியாவிலேயே சீரடி சாய்பாபா அறக்கட்டளைக்கு ஏராளமான சொத்துகள், பணம் இருக்கிறது. இந்தியாவிலேயே பணக்கார பக்தி நிறுவனங்களில் 3ஆவது இடத்தில் உள்ளது. சீரடி சாய்பாபாவை முஸ்லீம்கள் வழிபடுவது இல்லை. இந்து பக்தர்கள்தான் அதிகம் வழிபடுகிறார்கள். ஆண்டுதோறும் ‘ராம நவமி’ கொண் டாடப்படும் ஒரே இடம் சீரடிதான்,என்கிறார் இதன் அறக்கட்டளை தலைவர் சயிலேஷ் குட்.

“இந்துக்களே ஒன்றுபடுங்கள்” என்று முழக்கமிட்டு வந்தவர்கள், இப்போது தங்களுக்குள்ளே மோதிக் கொள்கிறார்கள். “தர்மத்துக்கு ஆபத்து வரும்போது அவதாரம் எடுத்து வருவேன்” என்று கூறிய “கிருஷ்ண பரமாத்மா”இப்போதாவது வருவாரா?

முஸ்லீம் பெண்களின் உரிமை குரல்!

முஸ்லீம் பெண்களுக்காக தற்போது பின்பற்றப்பட்டு வரும் மதச் சட்டங்கள்‘குரானுக்கு’ எதிரானது என்று குரல் கொடுத்திருக்கிறது. இஸ்லாமியர்களுக்கான பெண்கள் அமைப்பு; “பாரதிய முஸ்லீம் மகிளா அண்டோலன்” என்ற அமைப்பைச் சார்ந்த பெண்கள் முஸ்லீம் மதச் சட்டங்களில் கொண்டு வரப்பட வேண்டிய மாற்றங்களுக்கான மசோதா ஒன்றையும் உருவாக்கி யுள்ளனர். இதன்படி திருமணம் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும். மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறையை அனுமதிக்கக் கூடாது. விவாகரத்துப் பெற்ற பெண், மீண்டும் அதே கணவரோடு சேர்ந்து வாழ விரும்பினால், அதற்கு முன் நிபந்தனையாக வேறு ஒரு ஆணை திருமணம் செய்து, அவரிடம் விவாகரத்துப் பெற வேண்டும் என்ற ‘ஹலாலா’ முறையை தடை செய்ய வேண்டும் என்று பல திருத்தங்களை கோருகிறது இந்த வரைவு. இந்த வரைவு நகலை சென்னையில் வெளியிட்ட அமைப்பைச் சார்ந்த சக்கிய செர்மன் மற்றும் நூர்ஜஹான் சஃபியா, செய்தியாளர்களிடம் பேசுகையில், “புனித நூலான ‘குர்ரானில்’கூறப்பட்டுள்ள கருத்துகள் பலவும் திரிக்கப்பட்டுள்ளன என்றார்கள்.

தற்போதுள்ள சட்டப்படி, விவாகரத்துப் பெறும் இஸ்லாமிய பெண்கள், அதற்காக கணவன் வீட்டிலிருந்து எந்த உரிமையும் கோர முடியாது. குழந்தைகளுக்கான பாதுகாப்பையும் கேட்க முடியாது. இதற்கான உரிமைகளை இந்த மசோதா வலியுறுத்துகிறது. மதத்தின் பெயரால் பெண்கள், குழந்தைகள் உரிமைகள் மறுக்கப்படுவதை எதிர்த்து இஸ்லாமிய பெண்களே குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். இஸ்லாமிய மக்களின் சமுதாய அரசியல் உரிமைக்கு குரல் கொடுப்பது என்பது வேறு. அதற்காக பெண்களுக்கு எதிரான பழமையான நடைமுறைகளை ஆதரிக்க முடியாது.