மனிதனை மனிதன் அடிமை கொள்கிறான்; அழிக்க முயல்கிறான்; மனிதனை மனிதன் சுரண்டி வாழ்கிறான். அன்று தொட்டு இன்றுவரை மனிதனே மனிதனின் முதன்மையான எதிரியாக விளங்கி வருகிறான். ஒருவனது சுதந்திரத்தை இன்னொருவன் விழுங்கிவிட எத்தனிக்கும்போது, தர்மம் செத்து விடுகிறது; உலகில் அதர்மமும் அநீதியும் பிறக்கிறது. சாதி என்றும், வர்க்கம் என்றும், இனம் என்றும் பிளவுகள் எழுந்து மனிதரிடையே முரண்பாடு தோன்றுகிறது; மோதல்கள் வெடிக்கின்றன. இந்த உலகில் அநீதியும் அடிமைத்தனமும் இருக்கும் வரை, சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை, விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி. ஏனெனில், சுதந்திர எழுச்சியின் உந்துதலால்தான் மனித வரலாற்றுச் சக்கரமும் சுழல்கிறது.

ஒடுக்கப்படும் உலக மக்களில் ஒரு பிரிவினராக நாமும் சுதந்திரம் வேண்டிப் போராடி வருகிறோம். எல்லா விடுதலைப் போராட்டங்களையும்விட எமது போர்க்குரல், இன்று உலக அரங்கில் மிகப் பெரிதாக ஒலிக்கிறது. எமது சுதந்தரப் போர் ஏனைய விடுதலைப் போராட்டங்களைவிட சாராம்சத்தில் வித்தியாசமானது; தனக்கே உரித்தான தனித்துவத்தைக் கொண்டது; ஒப்பற்ற சிறப்பம்சங்களைக் கொண்டது.

(1997இல் மேதகு பிரபாகரன், மாவீரர் நாள் உரையிலிருந்து)