தமிழ்நாட்டில் மழை பெய்வதற்காக யாகங்கள் - வருண பகவானை வேண்டும் வேதச் சடங்குகள் - மழை பெய்விப்பதற்கான அமிர்த வர்ஷினி இசை நிகழ்ச்சிகளை நடத்துமாறு அற நிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.  சிண்டைத் தட்டி விட்டுக் கொண்டு பூணுலை உருவிக் கொண்டு புரோகிதர் கூட்டம் ஒவ்வொரு கோயிலாக யாகம் நடத்தக் கிளம்பிவிட்டது. மழை கொட்டப் போகிறதோ இல்லையோ, புரோகிதக் கூட்டத்துக்கு வருமானம் மழையாகக் கொட்டத் தொடங்கிவிட்டது.

வேத காலத்தில் பார்ப்பனர்கள் ‘வானுலக தேவர்களை’ மகிழ்விக்கிறோம் என்று மக்களை ஏமாற்றி உருவாக்கிய வேத சடங்குகள் 2019ஆம் ஆண்டிலும் மதச்சார்பற்ற ஆட்சி நடத்த வேண்டிய அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டு அதற்கு அரசு நிதியே செலவிடப்படுகிறது என்றால் நாட்டின் பண்பாட்டு - அரசியல் ஆதிக்கம் இப்போதும் பூதேவர்களாகிய பார்ப்பனர்களிடமே இருக்கிறது என்பதைப் புரிந்து  கொள்ள முடியும். ‘தமிழர் கலாச்சாரம்’, ‘தமிழர் பண்பாடு’ - தமிழர் அடை யாளத்தைக் காப்பாற்ற  வந்திருக்கிறோம் என்று கிளம்பி மேடைதோறும் ‘வீர வசனங்களைப்’ பேசி வரும் ‘சுத்த சுயம் பிரகாசத்’ தமிழர்கள் இந்தப் பார்ப்பன சடங்குகள் பற்றி எந்த ஒரு எதிர்ப்புக்கூட தெரிவிக்கவில்லை. பெரியார் இயக்கங்கள் மட்டுமே இதை எதிர்த்து வருகின்றன.

மற்றொரு செய்தியையும் குறிப்பிட வேண்டும். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்நாடு அரசு ‘தமிழ் அன்னை சிலை’ வைப்பதற்கு ஏற்பாடுகளை செய்து வருகிறது. மொழியை பாலின அடை யாளத்துக்கு உள்ளாக்கி, அதை சிலையாக்கி வழிபடும் தெய்வமாக மாற்றுவது என்பதெல்லாம் தமிழுக்கோ தமிழருக்கோ பெருமை சேர்ப்பது ஆகாது. தமிழை அறிவியல் மொழியாக வளர்த் தெடுக்கவும், தமிழ் வழிக் கல்வியைப் பரப்பு வதற்கான ஆக்கபூர்வ முயற்சிகளைத் திட்டமிட்டு செயல்படுத்துவதும், அதை நோக்கி மக்கள் ஆதரவை த் திரட்டுவதும், தமிழ் வழியில் படித்தால் எதிர்கால வாழ்க்கைக்கான உறுதிப் பாட்டை உருவாக்குவதுமே தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஆற்றும் உண்மையான தொண்டு.

இப்போது அந்தத் தமிழ் அன்னைச் சிலையை வடிவமைப்பதிலும் வேதகால பார்ப்பனியம் நுழைந்துவிட்டது. இந்த சிலை அமைக்கும் பொறுப்பை ஏற்றிருப்பது ‘பூம்புகார்’ என்ற அரசு நிறுவனம். சிலை அமைப்புக்கான அறிவிப்பை வெளியிட்டள்ள இந்த அரசு நிறுவனம், “தமிழ் அன்னைக்குப் பளிங்குக் கற்கள், ஃபைபர் போன்றவற்றிலும் வேதகால முறைப்படியும் சிலை செய்யலாம்” என்று அறிவித்திருக்கிறது. வேதகால பிராமண முறைப்படி (Vedic Brahminism) சிலை செய்யப்பட வேண்டும் என்று அரசு நிறுவனமான பூம்புகார் அதற்கான ஒப்பந்தப் புள்ளியில் (டெண்டர்) குறிப்பிட்டுள்ளது.

சிலைகள் வடிவமைப்பதில் உலகப் புகழ் வாழ்ந்த தமிழர்களான சிற்பிகள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “கல் சிற்பங்களுக்கு பெயர் போன தமிழ்நாட்டில், உலகம் முழுதும் சென்று சிற்பங்களை வடித்துத் தரும் கல் சிற்பிகள் நிறைந்துள்ள தமிழ்நாட்டில் இப்படி ஒரு அறிவிப்பு தமிழர் சிற்பக் கலையை அவமதிக்கிறது என்று மாமல்லபுரம் சிற்பக் கல்லூரி பேராசிரியர்கள் மனம் குமுறி இருக்கிறார்கள்.

ஃபைபர், பளிங்குகளில் சிலை செய்வதற்கு வடநாட்டுக்காரர்களையே இறக்குமதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டு சிற்பக் கலைஞர்களுக்கு ‘பைபரிலும், பளிங்குகளிலும்’ சிலை செய்யத் தெரியாது; கல்லில் சிலை வடிவமைப்பதே தமிழர் மரபு என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இது பற்றிய விரிவான பேட்டிகளை ‘ஜூனியர் விகடன்’ (15.5.2019) இதழ் வெளியிட்டிருக்கிறது. தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மாஃபா பாண்டியராஜன் என்ற ஆர்.எஸ்.எஸ். பேர்வழி, ‘பளிங்கு மற்றும் பைபர் சிலையும் வேதமரபும்’ தமிழ்க் கலாச்சாரம் தான் என்று நியாயப்படுத்தியிருக்கிறார்.

வேத காலத்தில் தொடங்கிய பார்ப்பனிய கொடுங்கோல் ஒடுக்குமுறை இப்போதும் தொடருகிறது; தமிழ்நாட்டிலேயே இந்த நிலையா? அதுவும் தமிழ்த் தாய்க்கான சிலை வேத பார்ப்பனிய முறையில் அமைப்பது தமிழுக்கு அவமானம் இல்லையா?

தமிழைப் பழிக்கும் வேத-பார்ப்பன சடங்குகளை எதிர்ப்பதற்கு ‘நாங்களே தமிழருக்கான போராளிகள்’ என்று உரிமை கோரும் இயக்கங்கள் ஏன் வாயை மூடிக் கொள்கின்றன?