“நா. கதிரைவேற்பிள்ளை என்கிற ஒரு தமிழ் வாயாடிப் புலவர் என்னிடம் வந்தபோது, ஒரு நிகழ்ச்சியில் புலவர்களுக்குப் பகுத்தறிவுக் கிடையாது என்பது என் கருத்து. அதை உங்களிடம் கண்டேன் என்று சொன்னதற்கு, உன்னிடம் வந்ததே தவறு என்று சொல்லி, என்னிடம் வாங்கிக் குடித்தப் பாலை விரலைவிட்டு வாந்தி எடுத்துவிட்டார்.”  - பெரியார்

பாவலர் தமிழேந்தி தொகுத்த ‘திராவிடம், பெரியாரியம் இன்றும் தேவையே’ நூலில் ‘பெரியாரும் தமிழ் இலக்கியமும்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ அவர் நினைவாகப் பதிவு செய்கிறது. (சென்ற இதழ் தொடர்ச்சி)

மதுரையை எரிக்கக் கண்ணகிக்குப் பயன்பட்ட தீக்கடவுள்கூடப் பார்ப்பனக் கோலத்தில் (பால்புரை வெள் எயிற்றுப் பார்ப்பான் கோலத்து) தோன்றித்தான் புகார் நகரத்தை எரித்ததாக இளங்கோவடிகள் இசைக்கின்றார்.

இவ்வாறு, விரிவாக இலக்கியங்களில் இருந்து மேற்கோள்கள் காட்டி எழுதுவதற்கான காரணம் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று காய்ந்த பெரியாரின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்குத்தான். தமிழை எல்லா வகையிலும் கடவுளோடும் கற்பனைப் புராணங்களோடும் புனைந்துவிட்ட பொய்க் கதைகளைக் கண்டு பெரியார் பொங்கினார். உயர்ந்த மொழி என்று சொல்லப்படும் தமிழ், கோயிலுக்குள் நுழைய முடியாத நீச மொழியாக உரிமை மறுக்கப்படு கின்றதே என உளங்கொதித்தார்.

நம்மால் - நம் பணத்தால் - நம் உழைப்பால் கட்டப்பட்ட கோயிலுக்குள் இன்றைக்கும் நம்மை உள்ளே போகக் கூடாது, தொடக்கூடாது என்கின்றானே! உன் மொழி - முதலை உண்ட பாலனை மீட்டது - சிவன் பேசியது - எலும்பைப் பெண்ணாக்கியது - பூட்டியக் கதவைத் திறந்தது என்றெல்லாம் பெருமை பேசுகிறாயே! அத்தகைய மொழியைக் கடவுளிடம் சொல்லக் கூடாது; அது நீசமொழி என்கின்றானே; அதைப் பற்றி எவன் சிந்தித்தான்; வெட்கப்பட்டான்.

தமிழரைக் காட்டுமிராண்டி என்றேன் என்று படித்தவன், அரசியலில் உள்ளவன் கோபிக்கிறானே? உன்னுடன் உள்ளே (கர்ப்பக்கிரகத்தினுள்) விடமாட்டேன் என்கிறானே. இதற்கு என்ன செய்தாய்? இன்னமும் சொல்கிறேன்.

உன்சாமி காட்டுமிராண்டி சாமி

உன்மதம் காட்டுமிராண்டி மதம்

உன்மொழி காட்டுமிராண்டி மொழி

உன் இலக்கியங்கள் காட்டுமிராண்டி இலக்கியங்கள்.

- ‘விடுதலை’ 14.4.1967

தமிழ் இலக்கியங்கள் மேல் பெரியார் கொண்ட கடுஞ்சினத்திற்குக் காரணம் என்ன? பார்ப்பனர்களை உயர்த்திப் பேசும் சங்கப் பாடல்களிலேயே இழிந்தோர், கடைசியர், அடியோர் என்ற சொற்களும் இடம் பெற்றுவிட்டனவே!

ஐந்திணைக்குரிய தலைமக்களைப் பற்றிக் கூறும் தொல்காப்பியம் அதன் புறத்தவாகிய கைக்கிளை, பெருந்திணைக்குரிய மக்களைப் பற்றிப் பின்வருமாறு பேசுகிறது:

“அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்

 கடிவரையில புறத்து என்மனோர் புலவர்”  - தொல். அகத். 23

இங்கு அடியோர் என்பவரைப் பிறர்க்குக் குற்றேவல் செய்வோர் எனவும் வினைவலர் என்பரைப் பிறர் ஏவிய தொழிலைச் செயல் வல்லோர் என்றும் நச்சினார்க்கினியர் உரை எழுதுகிறார். பொருளியல் மேன்மையும், சமூக மதிப்பும் கொண்டோர் ஒருபுறமும், அவர்க்கு அடிமைத் தொழில் புரிவோர் மறுபுறமும் அக்காலத்தில் இருந்துள்னர் என்பதை இதனால் அறிய முடிகிறது.

சங்க இலக்கியங்கள் பலவற்றில் துடியர், பறையர் என்போர் பேசப்பட்டுள்ளனர். ‘துடி’, ‘பறை’ என்பன தோற்கருவிகள். அவற்றை இயக்குவோர் அப்பெயரால் அழைக்கப்பட்டுள்ளனர் என்ற போதிலும், ‘இழிசனர்’, ‘புலையன்’ என்கிற சொல் லாட்சிகளும் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன.

“பூக்கோள் இன்று என்று அறையும்

மடிவாய்த் தண்மை இழிசினன் குரலே”           

- புறம் 289

“புலையன்

 பேழ்வாய்த் தண்ணுமை இடந்தொட்டன

 அருவி இழிதரும் பெருவரை நாடன்”               

 - நற்றிணை 345

இலக்கியங்கள் அக்கால மக்களின் வாழ்நிலையை எதிரொலிக்கும் கண்ணாடிகள் என்கிறோம். அந்தக் கண்ணோட்டத்தில் இவற்றை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். மரபின் பெருமை பேசுதலில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் அதன் மறுபக்கத்தையும் கணக்கிலெடுத்து மானுட வரலாற்றை முன் நகர்த்த முனைய வேண்டும். இலக்கியங்கள் பற்றிய இந்த முன்நோக்கிய பார்வை பெரியாரிடம் இருந்தது.

“தமிழர்கள் கடுகளவு அறிவும், தன்மானமும் உடையவர்களாக இருந்திருந்தால், இந்த நாட்டில் 2000, 3000 ஆண்டுகளாக இந்த நாட்டு மக்கள் - பழங்குடி மக்கள், கடைச்சாதியாய், இழி மக்களாய் இருந்திருக்க முடியுமா? எந்த அரசனாவது தானுட்பட - தன்னின் மக்கள் 100க்கு, 90க்கு மேற்பட்டவர்கள் கீழ் மக்களாய், இழி மக்களாய் இருக்கிறார்களே என்று சிந்தித்ததாகக் காணப்படு கிறதா? கோயில்களுக்கும், சத்திரங்களுக்கும், மடங்களுக்கும் அவற்றின் விழாக்களுக்கும், விளம்பரங்களுக்கும் விடப்பட்டிருக்கும் சொத்துக்களையும் - அதே நேரத்தில் இந்நாட்டு மக்களின் கல்வியறிவு பெறுவதற்கு ஏற்ற நடவடிக்கை எடுக்காதபடி விட்டிருக்கும் தன்மையையும் மற்றும் நம் நாட்டுக்கு நல்லறிவும் நல்லொழுக்கமும் புகுத்தப் பாடுபட்ட பவுத்தர்களையும் சமணர்களையும் வெட்டியும், சித்திரவதை செய்தும், கழுவேற்றியும் கொடுமை செய்த சரித்திரத்தையும் நடப்பையும் பார்த்தால் - நம் தமிழர்கள் ஆட்சி ஒரு கொடுங் கோன்மையும் காட்டுமிராண்டித்தனமும் கொண்ட ஆட்சி என்பதைத் தவிர வேறு என்ன ஆட்சி என்று சொல்ல முடியும்?” (15.8.1957 ‘விடுதலை’ தலையங்கம்)

பழமையை எந்த மறு ஆய்வுக்கும் உட்படுத்த முன்வராத அக்காலப் புலவர்கள் மீது பெரியார்க்கு வருத்தமும் சினமும் இருந்ததில் வியப்பில்லை. தம் வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை அவரே வேடிக்கையாகப் பின்வருமாறு குறிப்பிடுவார்.

“புலவர் என்றால் சொந்தப் புத்தி இல்லாதவன், புளுகன் என்றுதான் உரை கூறுவேன். நா. கதிரைவேற்பிள்ளை என்கிற ஒரு தமிழ் வாயாடிப் புலவர் என்னிடம் வந்தபோது, ஒரு நிகழ்ச்சியில் புலவர்களுக்குப் பகுத்தறிவுக் கிடையாது என்பது என் கருத்து. அதை உங்களிடம் கண்டேன் என்று சொன் னதற்கு, உன்னிடம் வந்ததே தவறு என்று சொல்லி, என்னிடம் வாங்கிக் குடித்தப் பாலை விரலைவிட்டு வாந்தி எடுத்துவிட்டார்.” (‘விடுதலை’ தலையங்கம் 16.3.1967, பெரியார் சிந்தனைகள் 3, 2, பக்கம் 1773)

பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றதும், தமிழ்ப் புலவர்கள் சொந்தப் புத்தி இல்லாதவர்கள் என்றதும் அவர் தமிழ்மொழி மீதும், தமிழ்ப் புலவர்கள் மீதும் கொண்ட வெறுப்பால் அல்ல. மூடநம்பிக்கைகளைக் கைக்கொண்டு வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தை எப்படியேனும் முன்னேற்றிவிட வேண்டும் என்கிற துடிப்பாலும் தாய் உள்ளத்தாலும் வெடித்த சொற்களுக்குத் தப்பான பொருள் கொள்வது தந்தை பெரியாரின் மாபெரும் மக்கள் தொண்டை மலினப்படுத்தும் செயலாகும். தமிழ்மொழி சிவபெருமானின் டமாரத்திலிருந்து வந்தது, அது அவன் மனைவி பார்வதியுடன்  பேசிய மொழி என்றெல்லாம் கதை அளந்து கொண்டிராமல், தமிழை அறிவியல் மொழியாக வளர்த்தெடுத்துக் கடைத்தேற்றம் காண வேண்டும் என்பதே அவர் அவா ஆகும்.

“தமிழ் மொழி, ஆங்கில மொழி இரண்டைப் பற்றிய என்னுடைய கருத்தைப் பலமுறை சொல்லி இருக்கிறேன். ஆங்கிலம் வளர்ந்த மொழி என்பதும், தமிழ் வளர்ச்சி அடையாத பழங்கால மொழி என்பதும் என்னுடைய மதிப்பீடாகும். இதை நான்  சொன்னதற்கு முக்கிய நோக்கம் தமிழ் மொழி - ஆங்கில மொழி அளவுக்கு விஞ்ஞான மொழி யாகவும் பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பதுதானே தவிர தமிழ் மீது எனக்குத் தனி வெறுப்பில்லை.” (‘விடுதலை’ 1.12.1970)

இப்படித் திட்டினாலாவது அதைக் கேட்டு உணர்ச்சி பெற்ற ஒற்றிரண்டு புலவர்கள் தமிழுக்குத் தங்களாலான ஆக்க நிலைப் பங்களிப்பைத் தர முன் வரமாட்டார்களா என்கிற ஏக்கம் பெரியாரிடம் இருந்தது. அந்த ஏக்கம் அவருடைய சொற் களாலேயே வெளிப்பட்டது.

“இந்தப்படி நான் எழுதுவதைப் பற்றி ரோஷப்பட்டு எந்தப் புலவராவது திருந்தி, கந்தபுராண மறுப்பு, இராமாயண, பாரதத்துக்கு மறுப்பு, சிலப்பதிகாரத்துக்கு மறுப்பு மற்றும் இலக்கியங் களுக்கு மறுப்பு அல்லது ஆராய்ச்சி நூல் என்னும் பெயரால் பகுத்தறிவாளர்கள் ஏற்கும்படி 100 - 200 பக்கங்களில் அடங்கும்படி புத்தகங்கள் எழுதித் தருவார்களேயானால் வரவேற்பதோடு, சன்மானங் களும் தந்து பாராட்டு விழாக்களும் நடத்தப்படும். அவை அச்சுப் புத்தகமாக்கப்படுமானால் 100க்கு 100 புத்தகங்கள், சன்மானமாகக் கொடுக்கப்படும். இப்போதைய புலவர்கள் பலரின் நடத்தை எனக்கு வேதனை உண்டு பண்ணியதால் தமிழ் மக்களின் நலத்தை முன்னிட்டே இது எழுத நேர்ந்தது.” (தமிழ்ச் செய்தி - பொங்கல் மலர் - 16.1.65)

பெரியாரும் திராவிட இயக்கமும் தமிழுக்கும், தமிழர்க்கும் ஆற்றிய தொண்டுகள் அளப்பரியன வாகும். இப்போது, எச்சில் துப்பி எரிமலையை அணைக்க முயலும் முயற்சி நடந்து வருகிறது. ஒரு கட்டற்ற சிந்தனையாளர் என்கிற தன்மையில் எதனையும் காட்டமாகப் போட்டு உடைப்பது என்பது பெரியார் பின்பற்றிய நெறி. “இலக்கியம் என்று சொல்லுவதைப் பற்றி முதலாவது நாம் அதற்கு ஒரு வரையறை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இலக்கியம் என்றாலே யாரோ நான்கு பேர் பாடின கவி இருக்கிறது.

ரொம்பப் பெரிய காலத்துக்கு முன்னே அற்புதமான கருத்துகளைப் புகுத்தியிருக்கிறார்கள் என்பது மாத்திரம் போதாது. இலக்கியம் என்றால் நமக்கு என்ன அதனாலே பலன்? நாம் அதைப் பின்பற்றி நடக்க முடிகிறதா? அல்லது நம்மை அது பின்பற்றம்படியாகவாது கட்டாயப்படுத்தும்படி யான சக்தி இருக்கிறதா? அத்தோடு மாத்திர மல்லாமல் அது இன்றைக்கு மக்களுக்குப் பயன்படுகிறதா? இவைகளை நாம் நன்றாகக் கவனிக்க வேண்டும்.” (இலக்கியம் வளர்ச்சிக்கு உதவ வேண்டாமா? திராவிடர் கழகம் வெளியீடு பக்கம் 23)

இந்த உரைகல்லைக் கொண்டு பார்க்கும்போது அவருக்குத் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் தொடங்கி எல்லா நூல்களிலும் காணப்பட்ட சாதியம் பற்றிய அடையாளக் குறிப்புகள் ஒவ்வாமை ஊட்டின. அவருக்கே உரித்தான கடுமையான சொற்களால் அவற்றின்மீது எதிர்வினை புரிந்தார். சில குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் குறள் நூலை முழுமையாக ஏற்றார்.

உலக இலக்கியங்கள் யாவற்றைக் காட்டிலும் உயர்ந்து நிற்பவை நம் ஒப்பரிய இலக்கியங்களான தொல்காப்பியமும் சங்க நூல்களும், திருக்குறளும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை. இவற்றின் மீது பெரியார் கொண்டிருந்த பார்வையையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தமிழ்மொழி வளர்ச்சிக்கும் தமிழின விடுதலைக்கும் தொடர்ந்து தோள் கொடுப்போம்.

(நிறைவு)