மோடி ஆட்சியின் முறைகேடுகள் பற்றிய தொகுப்பு : (கடந்த இதழ் தொடர்ச்சி)

மோடி 2014ஆம் ஆண்டு, காஷ்மீருக்கு வழங்கும் சிறப்பு அந்தஸ்து தரும் அரசியல் சட்டப் பிரிவு 370 நீக்கப்படும் என்ற தேர்தல் அறிக்கையோடு பிரதமர் பதவியில் அமர்ந்தார். ஆட்சிக்கு வந்த பிறகு மோடியின் முதல் காஷ்மீர் வருகைக்கே காஷ்மீர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பா.ஜ.க., மெஹ்பூபா முஃப்தி கட்சியான பிடிபியுடன் கூட்டணி அமைத்து ஜம்மு-காஷ்மீரில் முதன்முறையாக  ஆட்சியில் அமர்ந்தது. அதன் பிறகு காஷ்மீரில் சுதந்திரத்திற்கான போராட்டங்களும் இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களும் அதிகமானதால் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேற மாநில அரசு கலைக்கப்பட்டு காஷ்மீரில் 2018ஆம் ஆண்டு கவர்னர் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

2015ஆம் ஆண்டு காஷ்மீரில் புர்கான் வானி இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீர் முழுவதும் இராணுவத்தினரால் அடக்குமுறை நிகழ்த்தப்பட்டது. இதில் பல்லாயிரம் பேர் குழந்தைகள் உட்பட தங்கள் பார்வையை இழந்தார்கள். தங்கள் எதிர்காலத்தை இழந்தார்கள். காஷ்மீரிகள் நாட்டின் இரண்டாம் தர குடிமக்களை விட குறைவான நிலையில் நடத்தப்பட்டனர். இந்த அடக்குமுறைகள் இயல்பாகவே இந்தியாவை அவர்களிடமிருந்து அந்நியமாக்குகிறது. இதனை காஷ்மீரிகள் செய்யவில்லை. இந்திய அரசியல்வாதிகள் இதனை கட்டமைக்கிறார்கள்.

இதனாலேயே முன்னால் இருந்த நிலையை விட அதிகமாக காஷ்மீர்கள் சிலர் பாகிஸ்தானின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்புகிறார்கள். மோடியின் ஆட்சியின் கீழ் காஷ்மீர் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் காஷ்மீர் தனது சுதந்திரத்திற்கான குரலை உயர்த்தும்போது பேச்சு வார்த்தையை நடத்த வேண்டிய இடங்களில் ஆயுதங்களை உபயோகித்து அடக்க நினைக்கிறது அரசு. ஆனால் காஷ்மீரிகளின் ஆஷாதி (சுதந்திர) முழக்கம் குறையாமல் உயர்ந்து  கொண்டே வருகிறது.

2014ஆம் ஆண்டு 583ஆக இராணுவத்திற்கு எதிரான போராட்டங்கள், 2015இல் 405, 2016இல் 449, 2017இல் 971, 2018இல் 1432  என அதிகமாகிக் கொண்டேதான் போகின்றதே ஒழிய குறைய வில்லை. அடக்குமுறைகள் காஷ்மீரில் பிணங்களை உருவாக்குமே தவிர அமைதியைத் தராது. அதனை மோடி அரசு உணரவில்லை.

மோடி ஆட்சியின் கீழ் வங்கி பரிமாற்றம்:

மோடியின் ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் நாட்டு மக்கள் குறைந்தபட்ச சேமிப்பு இல்லாமல் வங்கி கணக்கு தொடங்கலாம் என கொண்டு வரப்பட்ட நடைமுறையின்கீழ் எப்போதும் இல்லாத அளவுக்கு வங்கி கணக்குகள் அதிகமாகியது. ஆனால் கணக்கு தொடங்கப்பட்ட தோடு சரி, அந்த வங்கி கணக்குகளில் எந்த பரிமாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் இந்த வங்கி கணக்குகள் மூலம் வங்கிகளுககு எந்த இலாபமும் இல்லை. அது மட்டுமல்ல, ஜந்தன் யோஜனா திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் பண மோசடி நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதிலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது இந்த வங்கி கணக்குகள் பண மோசடிக்காக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. யூனியன் வங்கியில் உள்ள ஒரு ஜன்தன் வங்கி கணக்கில் 93.82 கோடி ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. அதேபோல், 20 இலட்சம் வங்கி கணக்குகளுக்கு மேலும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தொகை வைப்பு நிதியாக வைக்கப்பட்டிருக்கிறது. இதுவெல்லாம் ஜன்தன் வங்கி கணக்கை உபயோகித்து பண மோசடி நடைபெற்றதற்கான சான்று.

மக்களின் பயன்பாட்டில் வங்கி பரிமாற்றத்தை எளிமைப்படுத்த வேண்டும் என்று எல்லோரும் கூறிக் கொண்டிருந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கி போன்ற சில வங்கிகள் குறைந்தபட்ச தொகையாக 1000 முதல் 3000 வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் மாதந்தோறும் அபராதம் விதிக்கப்படுகிறது. இதேபோல் ஒரு மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் பணத்தை எடுக்கும்போதும் அதற்கும் தனி கட்டணம் விதிக்கிறது. இந்த நடைமுறை மக்களின் அன்றாட நடவடிக்கைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.