இனப்படுகொலை வரலாற்றில் தமிழன் பெயரும் இடம்பெறும் என எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. சம உரிமையும், சக வாழ்வும் கேட்டுப் போராடிய ஈழத் தமிழினத்துக்கு ஆயுதவழிப் போராட்டம் என்பது வேறு வழியற்ற இறுதித் தேர்வு. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் காரணம் அல்ல, அவர்கள் விளைவுகள். ஒடுக்குமுறைக்கு எதிரான விளைவுகள். அந்த உரிமைச் சமரின் பின்னுள்ள நியாயங்களை உலகம் புரிந்துகொள்ளும் முன்னரே நந்திக்கடலோரம் போராட்டம் முடித்து வைக்கப்பட்டுவிட்டது. பொருளாதார அதிகாரத்தை மைய அச்சாகக் கொண்டு கட்டமைக்கப்படும் நவீன பொருளாதாரத்தில் அனைத்துமே சந்தையாகத்தான் பார்க்கப்படுகின்றது. சந்தை வியாபாரத்துக்கு எப்போதுமே கூச்சல்கள் பிடிப்பது இல்லை. எதிர்ப்பியக்கங்களின் போராட்டங்கள் அற்ற சந்தைதான் நிறுவனங்களுக்குத் தேவை. தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டப் பின்னரான இலங்கை இப்போது எதிர்ப்புகளும், கூச்சல்களும் அற்ற அமைதியான சந்தையாக இருக்கிறது. அதனால்தான் இந்திய பெரு முதலாளிகள் இலங்கையை நோக்கி படை எடுக்கின்றனர். 

ஈழ யுத்தத்தை நடத்தியதில் இந்தியாவின் பங்கு பிரதானமாக இருந்தது என்றால், அதை தடுத்து நிறுத்தியிருக்கக் கூடிய சாத்தியம் தமிழ்நாட்டுக்கே இருந்தது. குறிப்பாக தமிழக அரசியல் கட்சிகளுக்கு இத்தகைய அரசியல் மற்றும் மக்கள் செல்வாக்கு இருந்தது. ஆனால் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளுமே ஈழத்தின் இன அழிப்பை தங்களின் சுய லாபங்களுக்கு மடைமாற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். இத்தகைய கையாலாகத்தனத்தை அம்பலப்படுத்துவதில் தொடங்குகின்றன பாலாவின் கார்ட்டூன்கள். தமிழக அரசியல்வாதிகளின் ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் பின்னால் இருந்த பச்சை சந்தர்ப்பவாதத்தையும், பிழைப்புவாதத்தையும் இந்த கார்ட்டூன் கோடுகள் தோலுரிக்கின்றன.

'ஈழம் என்னும் ஆன்மாவை மரணமடைய வைத்தது இவர்தான்’ என்று சொல்ல முடியாத அளவுக்கு இந்த மக்கள் படுகொலையில் அரசியல் கட்சிகள், ஊடகங்கள், எழுத்தாளர்கள்  எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் கை நனைத்துள்ளனர். மக்களின் மறதியால் யாவற்றையும் கடந்து சென்றுவிடலாம் என நினைக்கும் இந்த நேர்மையற்றவர்களை மக்களின் முன்பு அம்பலப்படுத்த இத்தைய தொகுப்புகள் உதவக் கூடியவை. எழுத்துக்களால் அல்லாது கோடுகளால் ஒரு குறிப்பான பிரச்னையை அணுகும் முதல் தமிழ் தொகுப்பு என்ற அடிப்படையில் இது கூடுதல் கவனம் பெறக் கூடியது. பாலாவின் ‘ஈழம்: ஆன்மாவின் மரணம்’ என்ற இந்த தொகுப்பின் அறிமுக மற்றும் விமர்சனக் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை 11 -6-10 அன்று இக்ஸா மையத்தில் (கன்னிமரா நூலகம் எதிரே, 107 பாந்தியன் சாலை, சென்னை-8)  நடைபெறவிருக்கிறது. அனைவரும் பங்கேற்கும்படி அன்போடு அழைக்கிறோம்!

bala_cartoon

Pin It