இலங்கையில் சுதந்திரா கட்சியின் சார்பில் 10 ஆண்டுகாலம் அதிகாரத்திலிருந்து தமிழர்களை இனப்படுகொலை செய்து அய்.நா.வின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ள இனக் கொலைக் குற்றவாளி இராஜபக்சே தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளார். அவரது அமைச்சரவையில் இடம் பெற்று, இனப் படுகொலைக்கு துணை நின்ற மைத்ரிபால சிறிசேனா, இராஜபக்சேயிடமிருந்து வெளியேறி, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நின்று வெற்றி பெற்று விட்டார். சிறிசேனாவுக்கு 51.28 சதவீதமும், இராஜ பக்சேவுக்கு 47.28 சதவீத ஓட்டுகளும் கிடைத்துள்ளன. தமிழர்களின் தாயகமான யாழ்ப்பாணத்தில் சிறிசேனாவுக்கு 74.42 சதவீத வாக்குகளும், இராஜ பக்சேவுக்கு 21.85 சதவீத ஓட்டுகளும், வன்னியில் முறையே 78.42, 19.07 சதவீத வாக்குகளும், திரிகோண மலையில் முறையே 71.84, 26.87 சதவீத வாக்குகளும் மட்டக் களப்பில் முறையே 81.62 , 16.22 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டணி இந்தத் தேர்தலில் இராஜபக்சேவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு சிறிசேனாவுக்கு ஆதரவு அளித்தது. ஆக இராஜ பக்சேவின் தோல்விக்கு தமிழர்களின் வாக்குகள் உதவியிருக்கின்றன. சிறிசேனா, புதிய அதிபராக பதவியேற்றபோது, புதிய பிரதமராக ரணில் விக்ரம சிங்கே பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.

யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதைத் தீர்மானிப்பதே இத்தேர்தலின் முக்கிய நோக்கமாக இருந்திருக்கிறது. இராஜபக்சே அதிகாரத்தைக் குடும்பத்தில் குவித்தார். தனது ஒரு சகோதரரை (கோத்தபய இராஜபக்சே) பாதுகாப்புத் துறை செயலாளராக்கினார். மற்றொரு சகோதரரை (பசில் இராஜபக்சே) பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சராக்கினார். இன்னொரு சகோதரரை (சாமல் இராஜபக்சே) நாடாளுமன்ற சபாநாயகராக் கினார். அவரது மகன் நமல், அரசியல் வாரிசாக உருவெடுத்தார். இதனால் இராணுவத்தை தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, இனப்படுகொலையை அவரால் செய்து முடிக்க முடிந்தது. இராஜபக்சே ஆதரவோடு ‘பொது பலசேனா’ என்ற சிங்கள தீவிரவாத அமைப்பு, இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலை நடத்தியதால் இஸ்லாமியர்கள் இராஜபக்சேவுக்கு எதிராக திரண்டார்கள். ஆளும் கூட்டணியில் இடம் பெற்றிருந்த ‘சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்’ கடைசி நேரத்தில் வெளியேறி சிறிசேனாவை ஆதரித்து விட்டது.

சர்வாதிகாரிகளாக தங்களை வளர்த்துக் கொண் டவர்கள், சரித்திரத்தின் குப்பைத் தொட்டியில் வீசப்படுவார்கள் என்பதற்கு இராஜபக்சே விலக்கு அல்ல. போர்க் குற்ற விசாரணைக்கு இராஜபக்சே உள்ளாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மேலும் வலிமை பெற்றாக வேண்டும். இந்த விசாரணைக்கு அவர் வகித்து வந்த அதிகாரம் தடையாக இருந்ததும் இப்போது நீங்கியுள்ளது. ஆனால், அமெரிக்கா, தொடர்ந்து அய்.நா.வில் போர்க்குற்ற விசாரணை கோரிக்கையை வலியுறுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

குடியரசுத் தலைவருக்காக இராஜபக்சே குவித்துக் கொண்ட அதிகாரங்களைக் குறைப்பேன் என்று சிறிசேனா தேர்தல் பரப்புரையில் உறுதியளித்திருக் கிறார். இதற்கு இலங்கையின் அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும். அப்படி திருத்தியமைப் பதற்கு மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை. இப்போதுள்ள நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு ஓராண்டுக்கு முன்பு புதிய தேர்தலை நடத்தினால் இது சாத்தியம். மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டிய சூழலில் சிங்களர்களின் ஆதரவை நாடி நிற்க வேண்டிய ஆட்சி, தமிழர்களுக்கான உரிமைகளை சிங்களர்களின் எதிர்ப்பையும் மீறி வழங்க முன் வருமா என்ற கேள்விகளும் இருக்கின்றன.

இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டணி, தேர்தலைப் புறக்கணிக்கக் கூடாது என்று எடுத்த முடிவு சூழ்நிலைக்கேற்ற சரியான முடிவு என்றே கூற வேண்டும். தமிழர்களிடம் உள்ள ஒரே அதிகாரமான வாக்குச் சீட்டை இராஜபக்சேவுக்கு எதிராகப் பயன்படுத்துவது என்பது வரலாற்றின் கட்டாயம். சிறிசேனாவின் வெற்றி, தமிழர்களை வாழ வைக்கப் போகிறது என்பது இந்த ஆதரவுக்கான அர்த்தமல்ல; இலங்கை அரசியலில் மாற்றத்துக்கான கதவை திறப்பதே இதன் நோக்கம். இந்த அரசியல் மாற்றம், தமிழர்களுக்கான தீர்வுகளை நோக்கி நகரும் என்பதை உறுதியாகக் கூற முடியாது. ஆனால், அதற்கான சர்வதேச நிர்ப்பந்தங்களை உருவாக்கு வதற்கான தளங்களை விரிவுபடுத்தியிருக்கிறது என்று கூறலாம்.

இராஜபக்சே தமிழர்களுக்கு மறுத்த உரிமைகளை புதிய ஆட்சி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற அழுத்தங்கள், சர்வதேச அரங்கிலிருந்து உருவாகும் வாய்ப்புகள் இருக்கின்றன. அய்.நா.வின் வழியாகஅழுத்தங்கள் கூடுதலாக்கப்பட வேண்டும். வடக்கு மாகாணத்தில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட ஆட்சியின் முதல்வர் விக்னேசுவரன், தான் அதிகாரமற்றவராக மாற்றப்பட்டதை ஆதாரங்களுடன் பட்டியலிட்டுள்ளார். (வேறு இடத்தில் அதை வெளியிட்டுள்ளோம்) தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்காக பேசக்கூடிய அதிகாரம் பெற்ற அரசு என்ற நிலை வடக்கு மாகாண அரசுக்கு இருப்பதை இலங்கையால் பறித்துவிட முடியாது. இந்த அதிகாரத்தின் வழியாக இலங்கை அரசுக்கான எதிர்ப்பை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

ஈழ விடுதலை என்பது இறுதி இலக்கு என்றாலும், அந்த இலக்கு நோக்கிய அரசியல் நடவடிக்கைகளும் அதை படிப்படியாக முன்னெடுப்பதற்கான செயல் திட்டங்களை வகுத்தலும்தான் இன்று புலம் பெயர்ந்த தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் முன் நிற்கும் சவால். உணர்ச்சி முழக்கங்களும் கற்பனைப் பெருமிதங்களும் கரவொலிப் பேச்சுகளும், அரசியல் முன்னெடுப்புக்கு ஒருபோதும் பயன்படாது என்பதை மட்டும் கவலையுடன் பதிவு செய்கிறோம்.           

***