தீண்டாமையை எதிர்த்து காந்தியார் பேசியதற்காக சங்பரிவாரங்களின் முன்னணி அமைப்பாகிய ‘இந்து மகாசபை’ காந்திக்கு கருப்புக் கொடி காட்டி, கலவரம் செய்ததோடு காந்தியாரை 1934ஆம் ஆண்டிலேயே கொல்லவும் முயற்சி செய்தது. இந்த வரலாற்று உண்மைகளை எழுதியிருப்பவர் இந்தியாவின் தலைசிறந்த வரலாற்று ஆய்வாளராக கருதப்படும் இராமச்சந்திர குகா இது குறித்து ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து:

“காந்தியின் தீண்டாமை எதிர்ப்புப் பிரச்சாரம் கடும் அச்சுறுத்தலை சந்திக்க வேண்டியிருந்தது. காரணம், தீண்டாமை எதிர்ப்பு - இந்து பழமைவாதத்தின் ஆணிவேரையே அசைப்பதாகும். அப்போது சங்கராச்சாரிகள், காந்தியை கடுமையாகக் கண்டித்தனர். “சமஸ்கிருதம் பற்றி துளிகூட தெரிந்திராத ஒரு பனியாவுக்கு, இந்து புனித நூல்கள் பற்றி என்ன தெரியும்? இந்து புனித சாஸ்திரங்கள் தீண்டாமையை அங்கீகரித்திருக்கிறது. அதையெல்லாம் மறுத்துப் பேச காந்திக்கு யோக்கியதை கிடையாது” என்று சங்கராச்சாரியார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் காந்தியை இந்து மதத்திலிருந்து விலக்கி வைத்து அறிவிக்க வேண்டும் என்று, சங்கராச்சாரிகள் மனு அளித்தனர். 1933-34ஆம் ஆண்டுகளில் காந்தி தீண்டாமைக்கு எதிராக சுற்றுப்பயணம் செய்தபோது, இந்து மகாசபைக்காரர்கள், பல ஊர்களில் கருப்புக்கொடி காட்டியதோடு, காந்தி மீது மலத்தை வீசினர். 1934இல் பூனாவில் காந்தியை கொலை செய்யவும் முயற்சி செய்தனர்.

இந்த நிலையில் காந்தி, இந்தியாவின் சட்ட அமைச்சராக அம்பேத்கரை நியமிக்குமாறு நேருவிடமும், பட்டேலிடமும் கூறினார். இவர்கள் இருவருக்கும் இதில் உடன்பாடு இல்லை என்றாலும், காந்திக்காக ஒப்புக் கொண்டனர். “சுதந்திரம் கிடைத்தது, காங்கிரஸ் கட்சிக்கு அல்ல, தேசத்துக்கு” என்று கூறிய காந்தி, “முதல் அமைச்சரவையில் கட்சிக் கண்ணோட்டம் கூடாது என்றார்” என்று இராமச்சந்திர குகா எழுதியுள்ளார்.