அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சிவில் சட்டம் தேவை என்று சங்பரிவாரங்கள் மீண்டும் பேசத் தொடங்கியுள்ளன. பொது சிவில் சட்டம் குறித்த சில வரலாற்றுத் தகவல்கள்:

ஆர்.எஸ்.எஸ். முன் வைக்கும் முக்கிய மூன்று விஷயங்களை, சங் பரிவாரங்கள் வழிமொழிந்து பிரச்சாரம் செய்வதும், பி.ஜே.பி. ஆட்சிக்கு வருகிற போதெல்லாம் அந்த பிரச்சாரம் தீவிரமடைவதையும் காணலாம்.

அவை 1) காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட வேண்டும். 2) பொது சிவில்சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். 3) பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் இராமர் கோயில் கட்ப்பட வேண்டும். இதன் மூலம் ஒரே மதம், மொழி, கலாச்சாரத்தைக் கொண்ட இந்து இராஷ்டிரத்தை உருவாக்க வேண்டும்.

இது அடிப்படையில் இந்தியாவின் பன்முகத் தன்மையை நிராகரித்து, இந்திய மக்களின் ஒற்றுமையை உடைக்கும் செயலாகும். வலதுசாரிகளான சங்பரி வாரங்களின் கனவு நிறைவேற இதுவரை இந்திய மக்கள் அனுமதிக்கவி ல்லை. ஆனால், தற்போது தனி மெஜாரிட்டியுடன் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் தங்கள் நிகழ்ச்சி நிரலை வேகமாக முன்னெடுக்க முடியுமென்ற நம்பிக்கை துளிர்விட, ஒவ்வொரு விஷயமாக கையிலெடுக் கின்றனர். தற்போது பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர வேண்டு மென்று பிரதமர் தொடங்கி அமைச்சர்கள் வரை பேச ஆரம்பித்துள்ளனர். மேலோட்டமாக பார்க்கும்போது வரவேற்க கூடியதாக இருக்கும் இந்த வாதம், உண்மையில் அதன் உள்ளடக்கத்தில் பல முரண்களையும், சிக்கல்களையும் கொண்ட தாகும்.

பொது சிவில் சட்டம் என்பது என்ன?

மொகலாயர் வருகைக்கு முன்பு இந்தியா பல துண்டுகளாக பிரிந்து மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. மொழி, இனம், சாதி அடிப்படையில் பிளவுபட்டிருந்த இவர்கள், திருமணம், வாரிசு, விவாகரத்து, சொத்துரிமை, பாதுகாப்பு, பராமரிப்பு, தத்தெடுப்பு போன்ற விஷயங்களில் சாத்திர ரீதியான சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் பின்பற்றி வந்தனர். சில பொதுவான அம்சங்களோடு வேறுபட்ட அம்சங்களும் இருந்தன. குரான் அடிப்படை யிலான ஒழுக்க நெறிகளை தங்களுடன் கொண்டு வந்த மொகலாயர்கள் அதை கண்டிப்புடன் பின்பற்றினர்.

மொகலாயர் ஆட்சிப் பொறுப்பில் இருந்த 500 ஆண்டு காலத்தில், அதிகாரத்தின் அருகில் இருக்க வேண்டிய ஆசையும், இந்துக்கள் பின்பற்றிய தீண்டாமை என்கிற அம்சமும், இந்துக்கள் முசுலீமாக மாற காரணமாயிருந்தன. இதனால் பரவலாக இரண்டு தனி நபர் ஒழுக்கவியல் நெறிகள் இந்தியர்கள் மத்தியில் பின்பற்றும் நிலை இருந்தது. அதிகாரத்தில் மட்டுமே அக்கறை கொண்ட மொகலாயர்கள் இந்துக்களின் நம்பிக்கை மீது அவ்வப் பொழுது தாக்குதல் தொடுத்தாலும், அரசுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நிலைமைக்கு கொண்டு போன தில்லை. இந்து-முஸ்லீம் மத்தியில் ஏற்பட்ட சகிப்பின்மையைப் போக்கி சகோதரத்து வத்தைக் கொண்டுவரும் நோக்கத்துடன் கபீர், நானக் போன்றவர்கள் பிரச்சாரம் செய்தார்கள்.

இதைத் தொடர்ந்து உருவானதுதான் சூபி இயக்கம். பேரரசர் அக்பர் பல மதங்களில் உள்ள நல்ல அம்சங்களைக் கொண்ட ஒரு புதிய மதமாக தீன் இலாஹியை உருவாக்கினார். ஆனால், அவருக்குப் பின் அந்த மதம் மறைந்து போனது. பின்னர் இந்தியாவை 200 ஆண்டுகள் ஆண்ட பிரிட்டிஷார் மதச்சார்பற்ற தனிநபர் ஒழுக்கவியல் விதிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தினர். எனினும், அவரவர்கள் தங்கள் மதம் சார்ந்த தனி நபர் ஒழுக்க சட்டங்களையே பின்பற்றி வந்தது மட்டுமல்ல, அதில் யாரும் குறுக்கிடவும் அனுமதிக்கவில்லை. எனினும், பிரிட்டிஷார் குற்றவியல் சட்டங்களை இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவானதாக அமுல்படுத்தினர்.

இது இந்து முசுலீம் தனிநபர் சட்டங்களுக்கு மாறாக இருப்பினும் பொதுவாக அனைவரும் ஏற்றுக் கொண்டனர். ஆனால், அதே சமயம் பிரிட்டிஷார் அவரவர்களின் தனிநபர் சட்டங்களில் குறுக்கீடு செய்ய வில்லை .காரணம், அதனால் ஏற்படும் குழப்பமும், கலவரமும் தங்கள் ஆட்சி தொடர்வதற்கு உதவாது என்பதனால் தேவை ஏற்படும்போது மட்டுமே தலையிட்டனர். எனினும், ஒரு பொதுவான சிவில் சட்டம் கொண்டு வருவதன் தேவையை உணர்ந்தனர். 1772லேயே ஹே°டிங்க்° பிரபு திருமணம், வாரிசு, சாதி மற்றும் மத நிறுவனங்கள் தொடர்பாக ஒரு கருத்துரையை தயாரித்திருந்தார். அதன் அடிப்படையில் சில தனி நபர் சட்டங்கள் இயற்றப்பட்டன.

அக்பர் ஒழிக்க விரும்பிய சதி ஒழிப்புச் சட்டம் 1829இல் இராஜாராம் மோகன்ராயின் உதவியோடும், 1872இல் சிறப்பு திருமணச் சட்டம், 1925இல் இந்தியர் மரபுரிமைச் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. அனைத்து முசுலீம் இனத்தவர்க்கும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான குரான் அடிப்படை யிலான ஷரியத் சட்டம் அமுல்படுத்த வேண்டுமென்ற அவர்களின் கோரிக்கை அடிப்படையில் 1937இல் முசுலீம் தனிநபர் சட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் 1938லும், முசுலீம் திருமண இரத்து சட்டம் 1938லும் நிறைவேற்றப்பட்டது.

தீவிர மத நம்பிக்கை உள்ளவர்களின் எதிர்ப்பு, சில சட்டங்களுக்கு கிளம்பினாலும் சட்ட அமுலாக்கத்தை அது தடுக்கவில்லை. பிரிட்டிஷார் ஆட்சியில் திருமணம் தொடர்பாக அவர்கள் கொண்டு வந்திருந்த சட்டங்களாவன. 1) இந்திய கிருத்துவ திருமண சட்டம் 1872. 2) ஆனந்த் திருமண சட்டம் (சீக்கியர்களுக்கு மட்டும்) 1909. 3) கொச்சி கிருஸ்துவர் சிவில் திருமண சட்டம் 1920 (திருவாங்கூர் மற்றும் கொச்சி பகுதியிலுள்ள கிருத்துவர்களுக்கு மட்டும்), 4) முசுலீம் தனி நபர் ஷரியத் சட்டம் 1937; 5) பார்சி திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் 1937; 6) இந்துக்கள் தொடர்பான சிறப்பு திருமணம் சட்டம் 1872 ஆகும்.

குழந்தை திருமணம் தடுப்பு, இந்து பெண்களுக்கு விவாகரத்து உரிமை, பெண்களுக்கு ஓரளவு குறிப்பாக விதவை பெண்களுக்கு சொத்துரிமை போன்றவை இந்த சட்டங்கள் மூலம் கிடைத்த முன்னேற்றங்களாகும். ஒரு பொது சிவில் சட்டம் இந்தியரனைவருக்கும் கொண்டு வரும் நோக்கில் பி.என். ராவ் என்பவர் தலைமையில் ஒரு சட்டக் குழு பிரிட்டீஷாரால் அமைக்கப் பட்டது. இந்தக் குழு தயாரித்த அறிக்கையை 1948இல் மசோதாவாக தாக்கல் செய்ய வேண்டுமென்றிருந்த நிலையில் இந்தியா 1947இல் சுதந்திரம் பெற்றது. அதனால் தள்ளிவைக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது.

(தொடரும்)