இடஒதுக்கீடு கொள்கை ‘தகுதி திறமை’க்கு எதிரானது என்று பார்ப்பனர்கள் இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து முன் வைக்கும் வாதத்தில் உண்மையில்லை என்று ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. டெல்லி பொருளாதார ஆய்வு மய்யத்தின் பேராசிரியர் அஷ்வினி தேஷ்பாண்டே, அமெரிக்காவின் மிச்சிகன் பொருளாதார பல்கலைக்கழக பேராசிரியர் தாமஸ் வெய்ஸ்கோஃப் இருவரும் இணைந்து உலகின் மிகப் பெரும் பொதுத் துறை நிறுவனமான இந்திய தொடர்வண்டித் துறையில் இந்த ஆய்வை நடத்தினர். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதால் தொடர்வண்டித் துறையில் உற்பத்தியோ திறனோ பாதிப்புக்குள்ளானதா என்ற இந்த ஆய்வு 1980-லிருந்து 2002 வரையுள்ள ஆண்டுகளை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்டது. இந்த ஆய்வை உலகின் தலைசிறந்த ஆய்விதழான ‘வேல்ட் டெவலப் மெட்’ வெளியிட்டுள்ளது.

பிரிவு ‘ஏ’ முதல் ‘டி’ வரை பல்வேறு நிலைகளில் பணியாற்றும் 1.3 மில்லியன் ஊழியர்களிடமிருந்து மிக விரிவாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டில் இடம் பெற்றவர்களையும் கூடுதலாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. அதிக எண்ணிக்கையில் பணியாற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடி ஊழியர்கள் மண்டலங்களையும் இந்தப் பிரிவினர் குறைந்த எண்ணிக்கையில் பணி யாற்றும் மண்டலங்களையும் ஒப்பீடு செய்து, தரவுகள் காரணிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இது குறித்து ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் நேர்படப் பேசு விவாதத்தில் (பிப்.5 அன்று) பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்று, ஆய்வின் முடிவுகளை வரவேற்றுப் பேசினார். தீவிர இடஒதுக்கீடு எதிர்ப்பாளரான வழக்கறிஞர் விஜயன், ஆய்வு நடத்தப்பட்ட முறைகளில் அய்யங்களை எழுப்பி, இந்த முடிவுகளை ஏற்பதில் தமக்கு உடன்பாடு இல்லை என்று வாதிட்டார். இந்த வாதத்துக்கு ‘இந்து’ ஏடே பதிலளித்துள்ளது. விரிவான புள்ளி விவரங்கள், தரவுகளுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்ட முறையை ஆசிரியர் குழு உறுதி செய்த பிறகுதான் ‘இந்து’ ஆங்கில ஏடு வெளியிட்டது என்று இந்த ஏட்டின் ‘வாசகர்களுக்கான ஆசிரியர்’ ஏ.எஸ். பன்னீர்செல்வம் அந்த ஏட்டில் விளக்கமளித்துள்ளார் (பிப்.9, 2015). ஆய்வாளர்களும் ஆய்வை வெளியிட்ட இதழும், ஆய்வுலகில் மதிக்கப்படு வோராக இருப்பதையும் எடுத்துக்காட்டி யுள்ளார்.

தொடர்வண்டித் துறையில் இந்த ஆய்வை மேற்கொள்ள நேர்ந்தமைக்கான காரணங்களைஆய்வாளர்கள் தங்கள் அறிக்கை யில் பதிவு செய் துள்ளனர். அடிக்கடி தொடர் வண்டி விபத்துகள் நிகழ்வதற்குக் காரணம், இரயில்வேயில் இட ஒதுக்கீடு அடிப்படையில் தகுதி திறமையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிப்பதால் தான் என்று ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டில் 1990 செப்டம்பரில் வெளிவந்த ஒரு கட்டுரைதான் இந்த ஆய்வை நடத்தத் தூண்டியது என்று ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளதை ஏ.எஸ். பன்னீர்செல்வம், தனது விளக்கத்தில் பதிவு செய்துள்ளார். தகுதியானவர்களை மட்டுமே தேர்வு செய்வதைவிட பல்வேறு திறன் கொண்ட பன்முகப் பிரிவினரின் ஆற்றல்களை ஒருங்கிணைப்பதில்தான் திறனையும், ஆற்றலையும் வெளிக்கொண்டு வர முடியும் என்றும், இந்தக் கட்டுரை சுட்டிக் காட்டியுள்ளது. எவ்வித தரவுகளோ, புள்ளி விவரங்களோ இல்லாமல் இடஒதுக்கீட்டுப் பிரிவினரை அவமதித்து, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ கட்டுரை வந்தபோது அந்தக் கருத்தை வரவேற்று நியாயப்படுத்திய அதே ‘அறிவு ஜீவி’ கூட்டம்தான் இப்போது முறையான தரவுகளுடன் வெளிவந்துள்ள இந்த ஆய்வை குறை கூறி ஏற்க முடியாது என்று கூக்குரலிடுகிறது.