வினாக்கள்... விடைகள்...!

ஸ்ரீரங்கம் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளருக்கு நிதி மோசடி வழக்கில் முன் ஜாமீன் கிடைத்தது. - செய்தி

முன் ஜாமீன் முதல் வெற்றிதான்! அடுத்து தேர்தலிலும் ‘ஜாமீன்’ வாங்கிக் காட்டுவோம்! இது உறுதி!

கோயில் வளாகங்களுக்குள் ‘கோட்சே’வுக்கு சிலை அமைப்போம். - இந்து மகாசபை அறிவிப்பு

அதோடு, ‘இராமன்’ சிலையும் சேர்த்துக்குங்க அவனும் ‘சம்பூகனை’க் கொலை செய்திருக்கிறான்.

ஒபாமா வரவேற்பு நிகழ்ச்சியில் மோடி அணிந்திருந்த உடையின் மதிப்பு ரூ.10 இலட்சம். - செய்தி

தப்பா நினைச்சுக்காதீங்க... அப்பத்தான் அமெரிக்காகாரன் இந்தியாவை நம்பி கடன் கொடுப்பான்!

வேத மந்திரம் ஓதி, 11 கிறிஸ்தவர்களை தமிழ்நாட்டில் ‘இந்து’ மதத்துக்கு மாற்றியுள்ளோம். - இந்து முன்னணி

பரவாயில்லையே! மதமாற்றத்துக்கெல்லாம் ‘மதந்திரங்கள்’ இருக்கா! அப்போ ஜாதி மாறுவதற்கு ஏதேனும் மந்திரம் வச்சிருக்கேளா?

தமிழ் நாட்டில் 5720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி கிடையாது. - மத்திய அரசு தகவல்

எங்க நாட்டுல பள்ளிகளை கோயில்களாக மதிக்கிறோம். எனவே இரண்டுக்கும் கழிப்பறை கட்ட மாட்டோம்; புரியாம பேசாதீங்க...

12 கோயில்களில் ‘ஆன் லைனில்’ பக்தர்கள் காணிக்கை பணத்தை செலுத்தலாம். - அறநிலையத் துறை அறிவிப்பு

அப்படியே ‘பணம் வந்து சேர்ந்தது’ என்று ‘பகவான்களிடமிருந்து’ பதில் கிடைக்கவும் ஏற்பாடு செஞ்சுட்டா, பக்தர்களுக்கு திருப்தியாயிருக்கும்!