நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், மக்களவைத் தேர்தலில் தயவுசெய்து பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காதீர்கள் என்று, இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட இயக்கநர்கள், படைப்பாளிகள், 103 பேர் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிரிவினைவாத மற்றும் வெறுப்பரசியலை வளர்த்தெடுப்பது, தலித்துகள் மற்றும் முஸ்லிம்களை தனிமைப்படுத்துவது, விவசாயிகளைக் கண்டு கொள்ளாதது, நாட்டையே சில பெரும் முதலாளிகள் கையில் ஒப்படைத்தது, கலாச்சார மற்றும் விஞ்ஞான நிறுவனங்களை ஒழிப்பது, கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் தணிக்கை கட்டுப்பாடுகளை இறுக்குவது, பொய்யான தகவல்களைப் பரப்புவது போன்ற பாஜகவின் நடவடிக்கைகள் நாட்டை மிக மோசமான ஆபத்தை நோக்கி கொண்டு சென்றுவிடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனந்த் பட்வர்தன், குர்விந்தர் சிங், கபீர் சிங் சவுத்ரி, சணல்குமார் சசிதரன், ஆஷிக் அபு, வெற்றி மாறன், ரஞ்சித், கோபி நயினார், லீனா மணி மேகலை, திவ்யபாரதி, அஜயன் பாலா உள்ளிட்டோர் கையெழுத்திட்டு www.artistuniteindia.com என்ற இணைய தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது தொடர்பாக மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

“நம் நாட்டுக்கு சோதனையான நேரம் இது. நாம் வேற்றுமையில் ஒற்றுமை காண்பவர்கள். இந்த நாட்டின் குடிகளாக இருப்பது சிறப்பான உணர்வு. ஆனால், தற்போது அந்த உணர்வு ஆபத்தில் உள்ளது. மக்களவைத் தேர்தலில் நாம் புத்திசாலித்தனமாக வாக்களிக்கவில்லை என்றால் பாசிசம் நம்மைக் கடுமையாகத் தாக்கும் ஆபத்து காத்திருக்கிறது. 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அனைத்தும் மோசமாக மாறிக் கொண்டிருக்கின்றன. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. அதனை மறைக்க பசு பாதுகாப்பு வன்முறைகளையும் கும்பல் மனோபாவங்களையும் வளர்த்து நாட்டை பிளவுபடுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.

இன்டர்நெட், சமூக வலைதளங்கள் மூலம் வெறுப்பைத் தூண்டிவிடும்படி பிரச்சாரம் செய்கிறது. தேசபக்தி பெயரில்தான் தனது வாக்கு வங்கியை பா.ஜ.க. வலுப்படுத்துகிறது. யாராவது லேசாக அதிருப்தி தெரிவித்தாலும் தேசத் துரோகி என்கிறார்கள். தேச பக்தியை ட்ரம்ப் கார்டாக பயன்படுத்தி தங்கள் வாக்கு வங்கியை வளர்த்துக் கொள்கின்றனர். இராணுவ நடவடிக்கைகளைக்கூட தங்கள் தேர்தல் உத்தியாகப் பயன்படுத்தி, நாட்டை போரில் ஈடுபடுத்தும் சூழலை உருவாக்கும் அளவிற்கு இது வளர்ந்துள்ளது. இவர்களை அஞ்சாமல் எதிர்த்து நின்றதற்காக கொல்லப்பட்ட புகழ்பெற்ற எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஊடக நண்பர்களை மறந்து விட வேண்டாம்.

பெருமுதலாளிகளின் அரசியல் இலாபத் திற்காக பாதுகாப்புப் படையினரின் உயிரைப் பணயம் வைக்கிறார்கள். படங்கள், புத்தகங்களைத் தடை செய்தும், தணிக்கை செய்தும் மக்களிடம் உண்மை சென்றடை யாமல் பார்த்துக் கொள்கிறார்கள். விவசாயிகளை மொத்தமாக மறந்து விட்டார்கள். இந்தியாவை சில பெரு முதலாளிகளின் ‘போர்டு ரூம்’ ஆக்கிவிட்டது பாஜக. மோசமான பொருளாதாரக் கொள்கைகளால், நாட்டிற்குப் பாதிப்பு ஏற்பட்டும்கூட அந்த கொள்கைகள் வெற்றி பெற்றது போன்று காட்டுகின்றனர். இவையெல்லாம் அவர்களின் பொய்ப் பிரச்சாரத்தினாலேயே சாத்தியமாகியுள்ளது. அவர்களுக்கு இன்னொரு முறை வாய்ப்பு கொடுப்பது ஆபத்தான தவறாகிவிடும். அது உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தின் சவப் பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணியாகிவிடும்.

எனவே உங்களால் முடிந்த அத்தனையை யும் செய்து இந்த ஆபத்தான ஆட்சி மீண்டும் தொடராமல் தடுக்குமாறும், நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கும், பேச்சு எழுத்து சுதந்திரத்தை உறுதி செய்யும். தணிக்கைகள் அடக்குமுறைகளுக்கு எதிரான ஒரு அரசைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இதுதான் நமக்குக் கிடைத்த கடைசி வாய்ப்பு.” இவ்வாறு இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர்.