பார்ப்பனர்கள் விரிக்கும் சூழ்ச்சிவலையில் ‘விட்டில்பூச்சி’ ஆகாதீர்!

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களாக அட்டவணைப்படுத்தப்பட்டவர்கள்தான் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர். இவர்கள் அனைவருக்குமே மதத்தின் அடையாளம்‘இந்து’தான். விரும்பாதவர்களுக்கும் சட்டம் இந்த மதத்தின் அடையாளத்தையே சுமத்திக் கொண்டிருக்கிறது.

பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை சமுதாயத்தில் நிலைநிறுத்தவே பல்வேறு வழிபாடு, பழக்க வழக்கம், மரபுகளைக் கொண்டிருந்த வெகு மக்கள் மீது தங்களின் வேத மரபுகளை திணிக்க சூழ்ச்சிகரமாக திட்டமிட்டார்கள். பல்வேறு நம்பிக்கைகள், பண்பாடுகள் கொண்ட மக்களை ‘இந்து’ என்ற ஒற்றை அடையாளத்துக்குள் பிரிட்டிஷ்காரன், நிர்வாக வசதிக்காக அடைக்க முற்பட்டபோது, பார்ப்பனர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். காஞ்சிபுரம் சங்கராச்சாரி, ‘வெள்ளைக்காரனால் நாம் தப்பித்தோம்’ என்று வெளிப்படையாகவே எழுதினார். அதற்குப் பிறகு, வேத மதக் கருத்துகளே ‘இந்து’ மதக் கருத்து என்றார்கள் பார்ப்பனர்கள்.

periyar 282அந்த நாளிலிருந்து பார்ப்பன வேத மதத்துக்குள் திணிக்கப்பட்ட வெகுமக்கள் உரிமைக்கான போராட்டம், பார்ப்பன அதிகாரத்துக்கு எதிராக தொடங்கிவிட்டது என்பதே வரலாறு. அந்தப் போராட்டத்தைத் தான் ஜோதிபாபுலே, அம்பேத்கர், பெரியார் முன்னெடுத்தார்கள்.

இந்த வெகுமக்களின் உரிமைகளுக்கும் அதை மறுத்த பார்ப்பனர்களுக்கும் எதிராக நடந்த போராட்டமே இந்தியாவில் சமூக நீதிக்கான ஜாதி எதிர்ப்புக்கான போராட்டங்கள். இந்தப் போராட்டத்தை ‘இந்து’க்களுக்கும் “இந்து எதிர்ப்பாளர்”களுக்குமான போராட்ட மாக உருமாற்றம் செய்யும் சூழ்ச்சிகள் இப்போது வேகமாக நடக்கின்றன.

இந்த பார்ப்பன சூழ்ச்சி வலையில் ‘விட்டில் பூச்சி’களாய் விழுந்து கொண்டிருக்கும் நமது ஒடுக்கப்பட்ட சகோதரர்கள் சிந்தனைக்கு சில கேள்விகளை முன் வைக்க விரும்புகிறோம்.

‘இந்து’க்கள் உரிமைகளுக்காகப் போராடியது யார்? அந்த உரிமைகளை வரலாறு முழுதும் தடுத்து நிறுத்தியது யார்?

புத்தர் தொடங்கி வைத்த இந்த உரிமைப் போராட்டம், இடையில் சூழ்ச்சிகளால் ஊடுருவலால் சிதைத்து, புத்த மார்க்கத்தை இந்த மண்ணைவிட்டே விரட்டினார்கள் பார்ப்பனர்கள்.

மீண்டும் - பார்ப்பனரல்லாத மக்களுக்காக 18ஆம் நூற்றாண்டிலே அரசியல் - சமூக உரிமைப் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின.

பார்ப்பனரல்லாத இந்துக்கள், “எங்களுக்கும் அரசுப் பதவிகளை வழங்கக்கூடாதா? எங்களுக்கும் கல்விக் கூடங்களின் கதவுகளைத் திறந்துவிடக் கூடாதா?” என்று உரிமைக்காக குரல் கொடுத்தனர். அப்போதெல்லாம் பார்ப்பனரல்லாத ‘இந்து’க்களுக்கு எந்த அரசு சலுகைகளும் வழங்கக் கூடாது என்று எதிர்த்தவர்கள் பார்ப்பனர்கள்.

சமூகத்தின் ஆழக் குழிக்குள் புதைக்கப்பட்டு, மூச்சுத் திணறிக் கொண்டிருந்த ஒடுக்கப்பட்ட ‘இந்து’ மக்களை கைதூக்கிவிட அன்று உரிமைக்காக குரல் கொடுத்தவர்கள் பார்ப்பனரல்லாத ‘இந்து’க்களின் தலைவர்கள்தான்!

பெரியார் இயக்கம் - மதங்களைக் கடந்து மனிதத்துவத்தை நேசிக்கும் இயக்கம். ‘இந்து’ உள்ளிட்ட எந்த மதத்தையும் ஏற்காத இயக்கம். ஆனால், உரிமை மறுக்கப்பட்ட எமது தமிழினத்தின் உறவுகளான தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட ‘இந்து’க்களின் உரிமைகளுக்காக களம் கண்ட இயக்கம். சுயமரியாதை சமூக நீதிக்கான போராட்டக் களத்தில் ஒடுக்கப்பட்ட ‘இந்து’க்களின் உரிமைகளை தடுத்தவர்கள் தான் இன்று ‘இந்து’க்களின் காவலர்களாக நாடகமாடுகிறார்கள். இந்த ‘மாய்மாலத்தில்’ மயங்கும் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

‘சங்பரிவார்’ கும்பல் பேசும் மொழிகளிலேயே கேட்க விரும்பு கிறோம். ‘இந்து’க்களின் நண்பர்கள் யார்? ‘இந்து’க்களின் எதிரிகள் யார்?

•             காங்கிரஸ்கட்சிக்குள்ளேயே ‘தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப் பட்ட’ பார்ப்பனரல்லாத ‘இந்து’க்களின் கல்வி, அரசுப் பதவி, அரசியல் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியவர் பெரியார். அதை எதிர்த்து முறியடித்தவர்கள் பார்ப்பனர்கள். அதன் காரணமாகவே காங்கிரசில் செல்வாக்கான பதவிகளை உதறித் தள்ளிவிட்டு வெளியேறியவர் பெரியார். யாருக்காக? ஒடுக்கப்பட்ட ‘இந்து’க்களின் உரிமைகளுக்காக! இப்போது சொல்லுங்கள்; ‘இந்து’க்களின் நண்பர்கள் யார்? ‘இந்து’க்களின் எதிரிகள் யார்?

•             1929இல் செங்கல்பட்டில் சுயமரியாதை முதல் மாநாட்டைக் கூட்டி, பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட ‘இந்து’ மக்களுக்கு அவர்களின் மக்கள் தொகை விகிதாசாரத்துக்கேற்ப அனைத்துத் துறைகளிலும் இடஒதுக்கீடு கேட்டு குரல் கொடுத்தார் பெரியார். இதை எதிர்த்து பெரியார் கருத்துக்கு எதிராக கூக்குரலிட்டு வகுப்புவாரி உரிமைகளை எதிர்த்தவர்கள் ‘இந்து’ பார்ப்பனர்கள். இப்போது சொல்லுங்கள்; ‘இந்து’க்களின் நண்பர்கள் யார்? ‘இந்து’க்களின் எதிரிகள் யார்?

•             1947இல் தமிழகத்தில் ஓமாந்தூர் இராமசாமி (ரெட்டியார்) முதல்வராக இருந்தபோது, அவர்தான் பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு (14 இடங்களில் 2 இடங்கள் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில்) 14.29 சதவீத கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகளை வழங்கி ஆணையிட்டார். அப்போது இந்த ‘இந்து’க்களுக்கு தனி உரிமைகள் வழங்கக்கூடாது என்று எதிர்த்து, தமிழகம் வந்த காந்தியடிகளிடமே புகார் செய்தவர்கள், ‘இந்து’ பார்ப்பனர்கள். இந்த உரிமைகளை வழங்கக் கூடாது என்று கண்டித்து எழுதியவை ‘இந்து’ பார்ப்பனர்கள் நடத்திய பத்திரிகைகள். அப்போது ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியாரின் இந்த சமூக நீதியை ஆதரித்து களமிறங்கி செயல்பட்டவர் பெரியார்; பெரியாரின் இயக்கம். இப்போது சொல்லுங்கள்; ‘இந்து’க்களின் நண்பர்கள் யார்? ‘இந்து’க்களின் எதிரிகள் யார்?

•             1935ஆம் ஆண்டிலிருந்து அன்றைய சென்னை மாகாணத்தில் மட்டும் அஞ்சல் துறை, துறைமுகம் போன்ற மத்திய அரசு அலுவலகங்களில் பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட ‘இந்து’க்களுக்கு அவர்களை 6 வகுப்புகளாகப் பிரித்து வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட் டிருந்தன. பார்ப்பன ‘இந்து’க்களின் கண்களை இது உறுத்திக் கொண்டே இருந்தது. இந்தியா ‘சுதந்திரம்’ பெற்ற அடுத்த 45ஆவது நாளிலேயே நேரு ஆட்சிக்கு அழுத்தம் கொடுத்து, பிற்படுத்தப்பட்ட இந்துக்களின் இந்த வேலைவாய்ப்பு உரிமைகளைப் பறித்தவர்கள், ‘இந்து’ பார்ப்பனர்கள். அப்போது இதை எதிர்த்துக் கண்டனக் குரல் எழுப்பியது பெரியார் இயக்கம். இப்போது சொல்லுங்கள்; ‘இந்து’க்களின் நண்பர்கள் யார்? ‘இந்து’க்களின் எதிரிகள் யார்?

•             தமிழ்நாட்டில் நீண்டகாலமாக கல்வி, உத்தியோக உரிமைகளை உறுதி செய்ய தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்காக அமுல்படுத்தப்பட்டு வந்த வகுப்புவாரி உரிமையை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது யார்? ‘இந்து’ பார்ப்பனர்கள் செண்பகம் துரை ராஜன், சீனிவாசன். இவர்களுக்காக ‘இந்து’ பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக நீதிமன்றத்துக்கு வாதாட வந்தது யார்? அரசியல் சட்ட வரைவுக் குழுவில் உறுப்பினராக இருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் என்ற இந்து பார்ப்பனர். அப்போது, பார்ப்பனரல்லாத ‘இந்து’க்கள் உரிமைகளுக்காக வீதிகளில் இறங்கி போராடி, மீண்டும் உரிமைகளை உறுதி செய்ய அரசியல் சட்டத்தை முதன்முதலாக திருத்துவதற்கு காரணமாக இருந்தவர்தான் பெரியார். இப்போது சொல்லுங்கள்; ‘இந்து’க்களின் நண்பர்கள் யார்? ‘இந்து’க்களின் எதிரிகள் யார்?

•             பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ‘இந்து’ பெண்களை கோயில்களில் ‘பொட்டுக் கட்டி’ அர்ப்பணித்து அவர்களை அர்ச்சகப் பார்ப்பனர்களுக்கும் இந்து மத உயர்ஜாதி செல்வந்தர் களுக்கும் ‘சேவை’ செய்ய வேண்டும் என்பதை ‘சமூக தர்மமாக்கி’ இந்த அபலைப் பெண்களின் வாழ்வை சிதைத்தவர்கள் பார்ப்பனர்கள். இந்த இழிவுகளை ஒழித்திட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் முயற்சியில் தடைச் சட்டம் கொண்டுவந்தபோது, அதை எதிர்த்து, ‘இந்து’ தர்மத்துக்கு எதிரானது என்று கூச்சல் போட்டது யார்? ‘இந்து’ மதத்தைச் சார்ந்த சத்தியமூர்த்தி அய்யர் என்ற “தேசியத் தலைவரும்”, ‘இந்து’ சனாதன பார்ப்பனர்களும், ‘இந்து’ பார்ப்பனர்கள் நடத்திய ஏடுகளும்தான்! அப்போது ‘இந்து’ பெண்களை ‘தாசி’களாக்கும் இழிச் செயல்களுக்கு எதிராக உறுதியாக குரல் கொடுத்து முத்துலட்சுமி ரெட்டிக்கு ஆதரவாக நின்றது யார்? பெரியாரும், பெரியார் இயக்கமும்தான். இப்போது சொல்லுங்கள்; ‘இந்து’க்களின் நண்பர்கள் யார்? ‘இந்து’க்களின் எதிரிகள் யார்?

•             பிற்படுத்தப்பட்ட ‘இந்து’க்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் 27 சதவீத இடஒதுக்கீட்டை (மண்டல் அறிக்கை) பிரதமராக இருந்த வி.பி.சிங் அமுல்படுத்தியபோது அதை எதிர்த்து நாடு முழுதும் கலவரத்தை உருவாக்கியதுயார்? ‘இந்து’ பார்ப்பனர்கள்; ‘இந்து’ பார்ப்பன ஏடுகள்; ‘இந்து’ பார்ப்பன உயர் அதிகாரிகள். அப்போது ‘ராமன்’ கோயில் பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு, அத்வானி தலைமையில் ரதயாத்திரையைத் தொடங்கி, பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு உரிமை வழங்கும் உத்தரவையும் எதிர்த்து, வி.பி.சிங் ஆட்சிக்கு அளித்த ஆதரவையும் திரும்பப் பெற்று, ஆட்சியையே கவிழ்த்தது யார்? இப்போது இந்துக்களின் காவலனாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் பா.ஜ.க.வும், அதன் குடும்ப அமைப்புகளும்தான், அப்போது மண்டல் பரிந்துரைக்காக பிற்படுத்தப்பட்ட ‘இந்து’க்களின் உரிமைகளுக்காக களத்தில் நின்று போராடியது பெரியார் இயக்கங்கள். இல்லை என்று மறுக்க முடியுமா? இப்போது சொல்லுங்கள்; ‘இந்து’க்களின் நண்பர்கள் யார்? ‘இந்து’க்களின் எதிரிகள் யார்?

•             தாழ்த்தப்பட்ட ‘இந்து’க்களின் கோயில் நுழைவு உரிமைகளை தடுத்தது யார்? மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ‘தாழ்த்தப் பட்டோர்’ நுழைந்துவிட்டதால் “மீனாட்சியே” கோயிலை விட்டு, ஓடிவிட்டாள் என்று கூறி கோயிலுக்கு பூட்டு போட்டது யார்? இந்து பார்ப்பன அர்ச்சகர்கள்.

                குற்றாலம் நீர் வீழ்ச்சியில் தாழ்த்தப்பட்ட ‘இந்து’க்கள் குளிக்கத் தடை போட்டது யார்? இந்து பார்ப்பனர்கள். காந்தியார் சிதம்பரம் வருகிறார் என்றவுடன், கோயிலுக்குள் இந்து தாழ்த்தப்பட்ட வர்களை அழைத்து வந்து விடுவார் என்று அஞ்சி, காந்தியார் திரும்பிப் போகும் வரை நடராஜர் கோயிலை பூட்டியது யார்? ‘இந்து’ பார்ப்பனர்கள்.

                இப்போதும் ஆறுமுகசாமி என்று சைவத்தில் ஊறிப் போன ‘இந்து’ முதியவர் அதே கோயிலுக்குள் ‘தேவாரம்’ ஓதியதற்காக அடித்து உதைத்து வெளியேற்றி தூக்கி வீசியது யார்? ‘இந்து’ பார்ப்பன தீட்சதர்கள்.

                தில்லை நடராசன் கோயில், கோயில் நிர்வாகத்தையும் வருமானத்தை யும் தங்களுக்கே சொந்தம் கோரி, உச்சநீதிமன்றம் வரை போய் வாதாடி வெற்றி பெற்றது யார்? பிற பார்ப்பனரல்லாத எந்தப் பிரிவு ‘இந்து’க்களுடனும் கோயில் உரிமைகளை பகிர்ந்து கொள்ள முடியாது என்று ‘இந்து’க்களை ஒதுக்கி வைப்பது யார்? ‘இந்து’ பார்ப்பன தீட்சதர்கள். இவர்களுக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடி யது சுப்பிரமணியசாமி எனும் இந்து பார்ப்பனர். பார்ப்பனரல்லாத ‘இந்து’க்களில், அவர்கள் ‘ஓதுவார்களானாலும்’, ‘பண்டாரங் களானாலும்’ - ஒதுக்கி வைப்பது யார்? இந்து பார்ப்பனர்கள்.

                இந்த இழிவுகளை எதிர்த்து, இவர்களின் சுயமரியாதைக்காகப் போராடுவது யார்? ‘புரட்சிகர’ முற்போக்கு இயக்கங்களும் பெரியார் இயக்கங்களும் மனித உரிமை அமைப்புகளும்தான். இப்போது சொல்லுங்கள்; ‘இந்து’க்களின் நண்பர்கள் யார்? ‘இந்து’க்களின் எதிரிகள் யார்?

•             ‘இந்து’ தாழ்த்தப்பட்டவர்களை ‘இந்து’ பிற்படுத்தப்பட்ட ஆதிக்க ஜாதியினர் பல்வேறு பகுதிகளில் ஒடுக்கி வைத்து வன்முறைத் தாக்குதலுக்கு உள்ளாக்குவதை எதிர்த்து, இந்து மதக் காவலர்கள் போராடியது உண்டா? இந்த ஒதுக்குதலுக்குக் காரணமான ஜாதியையும், ஜாதியமைப்பையும் எதிர்த்து, ‘இந்து’ மக்களிடையே சமத்துவத்துக்காக போராடுவது யார்? எதிர் நீச்சல் போட்டு இயக்கம் நடத்துவது யார்? பெரியார் இயக்கம் தானே!

•             கோயில் கர்ப்பகிரகத்துக்குள் பார்ப்பனர் மட்டுமே அர்ச்சகர் ஆக முடியும். பிற்படுத்தப்பட்ட ‘இந்து’க்களோ, ‘தாழ்த்தப்பட்ட இந்து’க்களோ, அவர்கள் முறையான பயிற்சி பெற்றாலும் அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் வரை சென்று தடை வாங்கியிருப்பது யார்? பார்ப்பன ‘இந்து’க்கள் தானே? தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இந்துக்களின் சுயமரியாதைக்காக அவர்களை ‘சூத்திரர்’ என்று இழிவுபடுத்தாதே என்று இறுதி மூச்சு அடங்கும் வரை போராடி அதற்கான இயக்கம் நடத்திய ஒரே தலைவர் பெரியார் தானே! மறுக்க முடியுமா?

•             கருவறைக்குள் ‘தீண்டாமை’யை உறுதிப்படுத்தும் இழிவை ஏற்காதீர்கள்; கோயிலுக்குள் போகும் பார்ப்பனரல்லாத தமிழர்களே! நீங்களே தேங்காய் உடைத்து, ‘கற்பூரம்’ காட்டி, உங்கள் சுயமரியாதையை உறுதி செய்யுங்கள் என்று பக்தி உணர்வுள்ள இந்துக்களுக்கும் வேண்டுகோளை வைத்தது யார்? பெரியார் அல்லவா?

•             பெரும்பான்மை ‘இந்து’ப் பெண்களை ‘சாஸ்திர ரீதியாக’ அடிமைகளாக்கி, கணவன் இறந்தால் மொட்டை அடித்து விதவையாக்கி, மறுமண உரிமைகளை தடுத்து, குடும்ப வன்முறையை, குழந்தைத் திருமண முறைகளையும் சாஸ்திரங்களைக் காட்டி நியாயப்படுத்தியதை எதிர்த்தது, பெரியார் இயக்கம். பெரும் பான்மை ‘இந்து’ பெண்களின் உரிமைக்கும் சமத்துவத்துக்கும் போராடியது, போராடுவது பெரியார் இயக்கம்!

•             கணவன் கட்டிய ‘தாலி’க்காக கணவன் வன்முறைகளையும் குடும்ப சித்திரவதைகளையும் ‘இந்து’ பெண்கள் மீது பண்பாடு என்றும், ‘புனிதம்’ என்றும் சுமக்கச் செய்து, காலம் முழுதும் அவர்களை கண்ணீரில் மூழ்கச் செய்வது நியாயம் தானா? என்ற சிந்தனையி லிருந்து பிறந்ததுதான் ‘தாலி எதற்கு?’ என்ற கேள்வி! கணவனுக்கு இல்லாத அடையாளம் பெண்ணுக்கு மட்டும் ஏன்? என்ற நியாயத் தின் வெளிப்பாடுதான் - தாலியை நீக்கிக் கொள்வதற்கான உரிமை!

பெண்களுக்கான உரிமைக் குரலை, மதத்துக்கான எதிர்ப்பாக்கி மடைமாற்றம் செய்யும் பார்ப்பன சூழ்ச்சிகளை சகோதரிகளும் தாய்மார்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

‘இந்து’ப் பெண்கள் மீதான வன்முறைகள்; ‘வரதட்சணைக் கொலைகள்’, ‘பெண் கருக்கலைப்புகள்’, ‘பால்ய விவாகங்கள்’ போன்ற எந்த ஒடுக்குமுறைக்கும் போராட முன் வராதவர்கள், ‘தாலி’யை அகற்றும் பரப்புரையை மட்டும் முன் வைத்து, ‘இந்து’க் காவலர்களாக வன்முறையை கையில் எடுக்கிறார்கள்.

‘இந்துப் பெண்களை அடிமைகளாகவே நடத்த வேண்டும் என்ற மனு சாஸ்திரத்தை எதிர்க்காதவர்கள், அதன் அடிப்படையில் ‘ஆர்.எஸ்.எஸ்.’சில் பெண்கள் உறுப்பினராகவே முடியாமல் தடைப்படுத்தி, இந்துப் பெண்களை இன்று வரை அவமதிப்பவர்கள் இவர்கள்தான்; மறுக்க முடியுமா? இந்த அநீதிகளுக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வுக் கருத்துகளை விதைத்து, ‘இந்து’ப் பெண்களின் உரிமைக்கான கருத்துகளை பரப்புவதுதான் பெரியார் இயக்கம்.

இப்போது கேட்கிறோம்;

சொல்லுங்கள்;

இந்துக்களின் நண்பன் யார்?

இந்துக்களின் எதிரி யார்?