திருச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஏப்.18ஆம் தேதி திருவெறும்பூரில் பெரியார் கருத்துகளை விளக்கிடும் இளைஞர் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தது. சிற்பிராசன், ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சி வழியாக மூடநம்பிக்கைகளுக்கான விளக்கம் தரவும், மதிமாறன், ‘ஜாதி ஒழிப்பும் அம்பேத்கரும்’ எனும் தலைப்பிலும், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘பெரியாரும் இடஒதுக்கீடும்’ எனும் தலைப்பிலும், ஊடக வியலாளர் செல்லையா, ‘ஊடகவியல்’ குறித்தும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உணவு இடைவேளையில் மாட்டிறைச்சி உணவு வழங்கப்படும் என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. சுமார் ஒரு மாத காலத்துக்கு முன்பாகவே நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்கள் தயாரிக்கப்பட்டுவிட்டன. தி.மு.க.வின் ‘தொ.மு.ச.’ கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த பயிலரங்கம். இரு நாள்களுக்கு முன் வேறு நிகழ்ச்சிகள் இருப்பதாகக் கூறி நிர்வாகிகள் அனுமதி மறுத்துவிட்டனர். கடைசியாக, திருவெறும்பூர் அய்.என்.டி.யு.சி. தொழிற்சங்கக் கட்டிடத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதித்தனர். காவல்துறையின் கெடுபிடியால் நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவர்களும் அனுமதி மறுத்தனர். பகுதி முழுதும் காவல்துறை குவிக்கப்பட்டதோடு, நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கு வந்திருந்த மாவட்ட கழக பொறுப்பாளர்கள் புதியவன், குமார், குணாராஜ் ஆகியோரை திருவெறும்பூர் காவல்நிலையத்திற்கு அழைத்துப் போய், மாலை 6 மணியளவில் காவல் நிலையத்திலேயே வைத்திருந்தனர்.

நிகழ்ச்சிக்கு எதிராக பா.ஜ.க.வினரிடமிருந்து புகார் வந்திருப்பதால், நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். திருவெறும்பூரில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி விற்பனைக் கடைகளில் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். கெடுபிடி காரணமாக சில வியாபாரிகள் கடைகளையே மூடிவிட்டனர். தமிழ்நாட்டில் மாட்டிறைச்சி விற்பதற்கு தடையேதும் இல்லாத நிலையிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில மதவாத வன்முறையாளர்கள் மிரட்டலுக்கு தமிழக காவல்துறை அடிபணிந்து கருத்துரிமை, பேச்சுரிமைகளை நசுக்கி வருகிறது.

அரங்கிற்குள் பயிற்சிமுகாம்களை நடத்தவே அனுமதி மறுக்கும் தமிழக காவல்துறை, ஆர்ப்பாட்டங்கள் என்ற பெயரில் பெரியார் படங்களை எரிப்பதற்கும், 144 தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் மதவெறி வன்முறையாளர்கள் தாக்குதல் நோக்கத்தோடு வெடிகுண்டு மற்றும் ஆயுதங்களுடன் நுழைவதற்கும் அனுமதித்துக் கொண்டிருக்கிறது.