திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய 14 நாள் பரப்புரை நிறைவு விழா பொதுக் கூட்டத்தில், பெரியாரியலுக்கு எதிரான மிரட்டல்களை சந்திக்க, பெரியார் இயக்கங்கள் கரம் கோர்த்து களமிறங்கும் என்று தோழர்கள் சூளுரைத்தனர்.

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ என்ற முழக்கத்தை முன் வைத்து, 14 நாள்கள் பரப்புரைப் பயணம் நடத்தியது. பரப்புரைப் பயணத் தின் நிறைவு விழா பொதுக் கூட்டம், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவாக தாம்பரத்தில் 14.4.2015 அன்று நடைபெற்றது.

காஞ்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் நடந்த இப் பொதுக் கூட்டத்துக்கு மு.தினேஷ் குமார் தலைமை தாங்கினார். சு.செங் குட்டுவன் வரவேற்புரையாற்றினார். முன்னதாக சம்பூகன் இசைக் குழு வினரின் இசை நிகழ்ச்சி நடை பெற்றது. தொடர்ந்து சென்னை மாவட்ட கழகச் செயலாளர் உமாபதி, விஜயகுமார், வழக்கறிஞர்கள் துரை. அருண், திருமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு, த.மு.மு.க. பொதுச் செயலாளர் ப. அப்துல்சமது, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் உரை யாற்றினர். பயணத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு சான்றிதழ்கள், கருப்பு ஆடை வழங்கப்பட்டு பாராட்டப் பெற்றனர். பெரியார் மண்ணில் காலூன்ற துடிக்கும் பார்ப்பனிய சக்திகளுக்கு எதிராக ஒன்றுபட்டு போராடுவோம் என்று கூட்டத்தில் பேசிய அனைவரும் உறுதியேற்றனர். பெரியார் திடலில் திராவிடர் கழகம் திட்டமிட்ட பெண்ணுரிமை நிகழ்வான ‘தாலியகற்றுதலுக்கு’ தடைபோட, தமிழக அரசு மதவாத சக்திகளுக்கு ஆதரவாக செயல்பட்டதையும் பெரியார் திடலில் திராவிடர் கழகத் தோழர்கள் மீது தடியடி நடத்தியதையும் கூட்டத்தில் கண்டித்து உரை யாற்றினர். பெரியார் அமைப்புகள் வெவ்வேறு செயல் திட்டங்களை முன்வைத்து செயல்பட்டாலும், பெரியாரியலுக்கு சவால் வரும்போது அதை முறியடிக்க களமிறங்கி நிற்கும் என்று கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.

கூட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் திராவிடர் கழகத் தோழர்கள் பங்கேற்றனர். பெருந் திரளாக மக்கள் கூடியிருந்தனர். கூட்டம் எழுச்சியுடன் நடந்தது.

மாவட்டங்களில் பயணம் மேற்கொண்ட சென்னை கழகத் தோழர்கள், அதை முடித்துக் கொண்டு சென்னை நகரில் மூன்று நாள் பரப்புரை இயக்கங்களை நடத்தினர். அது குறித்த செய்தி தொகுப்பு:

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், ‘பறி போகிறது எங்கள் நிலம்; கொள்ளை போகிறது கனிம வளம்; ஒழிகிறது வேலை வாய்ப்பு; ஓங்கி வளருது ஜாதி வெறி; எனவே எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்” என்று மூன்று நாள் பரப்புரைப் பயணம் நடைபெற்றது.

9.4.2015 மாலை 4.30 மணியளவில் சென்னை ஆரியபுரம் காமராசர் சாலையில் பரப்புரை நடை பெற்றது. மாலை 6.30 மணியளவில் தேனாம் பேட்டை திருவள்ளுவர் சாலையில் நடைபெற்றது. பெயர் சொல்ல விரும்பாத காவல்துறையைச் சார்ந்த அதிகாரி ஒருவர் தேனீர் செலவுக்கு ரூ.200 வழங்கினார். வழக்கறிஞர் துரை அருண் நிகழ்ச்சியில் பங்கேற்று உரை நிகழ்த்தினார். பகுதி தோழர்கள் சதீஷ், பழனி, பிரதீப், பாலா ஆகியோர் பங்கேற்றனர்.

11.4.2015 மாலை 5 மணியளவில் மேற்கு சைதாப் பேட்டை ஜோன்ஸ்ரோடு பேருந்துநிலையம் அருகில் பரப்புரை நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் துரைராஜ், ராஜு ஆகியோர் தோழர்களுக்கு தேநீர் ஏற்பாடு செய்தனர். ரூ.300 நன்கொடை வழங்கினர்.

13.4.2015 மாலை 5.30 மணியளவில் டாக்டர் நடேசன் சாலை இலாயிட்ஸ்சாலை சந்திப்பில் பரப்புரை நடைபெற்றது. வெல்கம் சலூன் நிறுவனர் தயாளன், தோழர்களுக்கு தேநீர் ஏற்பாடு செய்தார். கழக ஆதரவாளர்கள் மாஸ்டர் தங்கப்பன், கி. சமரன், விசி ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மாலை 6.30 மணியளவில் திருவல்லிக் கேணி பிவி. தெருவில் பரப்புரை நடைபெற்றது. இங்கு பரப்புரை நடைபெறும் போது பார்ப்பனர் ஒருவர் அவசர போலீசுக்கு தகவல் தந்து பரப்புரையை தடுக்க முயன்றார். தோழர்கள் அனுமதி பெற்றே இந்த பரப்புரை நடைபெறுகிறது என்று காவல்துறையினரிடம் தெரிவித்து, தொடர்ந்து பரப்புரையை நடத்தினர். பெண் ஒருவர் கழக வெளியீடுகளை வாங்கிக் கொண்டு இதுபோன்ற பரப்புரை தேவை என்று தோழர்களை பாராட்டிச் சென்றார். அன்பு தனசேகர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

தோழர் அருண் பறையடிக்க, நாத்திகன், ஆட்டோ சரவணன் ஆகியோர் ஜாதி ஒழிப்புப் பாடல்களை பாடினர். அனைத்து நிகழ்ச்சிகளையும் உமாபதி ஒருங் கிணைப்பு செய்தார். விழுப்புரம் அய்யனார் உரையாற்றினார்.

மூன்று நாள் நிகழ்வில் பா.ஜான் மண்டேலா, இராவணன், செந்தில், மனோகர், பிரகாசு, பார்த்திபன், அண்ணாமலை, பிரபா, இலட்சுமணன், ஓட்டுநர் அருண் ஆகியோர் பங்கேற்றனர். மூன்று நாள் பரப்புரையில் உண்டியல் வசூல். ரூ.12,500.

தாம்பரம் காவல்துறையின் ‘அதிரடி’ ஆணை - மாடு, ஆடு, கோழி உள்ளிட்ட எந்த இறைச்சி உணவையும் சாப்பிட்டால் கைது செய்வோம்!

பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா பொதுக் கூட்டம் கடந்த மார்ச் 30ஆம் தேதி நடக்க விருந்தது. கடைசி நேரத்தில் கூட் டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. தடையை எதிர்த்து காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர் செங்குட்டுவன், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை. அருண் ஆகியோர் நேர்நின்று வாதாடி, கூட்டத்துக்கான அனுமதியைப் பெற்றனர். ஏப்.14 ஆம் தேதி கூட்டம் நடத்த நீதிமன்றத்தின் அனுமதி பெற்று கூட்டம் நடந்தது. காவல்துறை கூட்டத்தை நடத்த விடாமல் தடுக்க கடும் நெருக்கடிகளை உருவாக்கியது. 22 நிபந்தனைகளை எழுத்துபூர்வமாக காவல்துறை விதித்தது. அதில் ஒன்று, கூட்டத்தின் இறுதியில் மாட்டு இறைச்சியோ அல்லது வேறு எந்த இறைச்சி உணவோ பிரியாணியாக வழங்கக்கூடாது என்பதாகும். தமிழ்நாட்டில் மாட்டிறைச்சிக்கு சட்டப்படி தடை இல்லை. ஆனால், மாட்டிறைச்சிக்கு மட்டுமல்ல, கோழி, ஆடு உள்ளிட்ட எந்த இறைச்சி உணவையும் சாப்பிட அனுமதிக்க மாட்டோம் என்று காவல்துறை உதவி ஆணையாளர் மனோகரன் என்பவர் கையெழுத்திட்டு உத்தரவு பிறப்பித்திருந்தார். இது காவல்துறையின் அதிகார எல்லை மீறலை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக இருந்தது. 

செய்தி: அய்யனார்