‘முன்னோடி-பின்னோடி’ வாதங்களுக்கு மறுப்பு (8)

தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் 19.04.2014 அன்று நடந்த உலகத் தமிழ்க் கழகத்தின் அய்ந்தாம் பொது மாநாட்டில் தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் ஆற்றிய உரையில், சுயமரியாதைத் திருமணம், இந்தி எதிர்ப்புப் போர் பற்றிக் கூறியிருந்த செய்திகள் குறித்த நமது மறுப்பை “புரட்சிப் பெரியார் முழக்க”த்தின் முந்தைய (கடைசியாக 21.8.2014) இதழ்களில் எழுதியிருந்தோம்.

அதன் தொடர்ச்சியாக தோழர் மணியரசன் அவ்வுரையில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கம் முதன்முதலில் எழுப்பியது பற்றி பேசியுள்ளதைக் குறித்தும் சில விளக்கங்களைத் தர விரும்பு கிறோம்.

“முதலில் தோழர் மணியரசன் கூறுவதைப் பார்ப்போம். “1938-ல் சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்புப் பொதுக் கூட்டத்தில் ’தமிழ்நாடு தமிழருக்கே!’ என்ற முழக்கம் எழுப்பப்பட்டது. அந்நிகழ்வு பற்றி தி.மு.க.வின் முதன்மைத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய நாவலர் இரா.நெடுஞ்செழியன் எழுதிய ‘தி.மு.க’ என்ற தலைப்பில் உள்ள நூலில் கூறுவதைப் பாருங்கள்.

இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து தமிழகம் தனியே பிரிய வேண்டும் என்ற கருத்து இந்தி எதிர்ப்பின் விளைவாக 1938-ல் உருவாகியது. இந்தியாவின் தேசிய மொழியாகவும், ஆட்சி மொழியாகவும், பொது மொழியாகவும் ஆக்கிடும் நோக்கத்தில் தமிழகத்தில் கட்டாய இந்தி புகுத்தப்பட்ட நேரத்தில், தமிழார்வம் கொண்ட பேரறிஞர்களும், பொது மக்களும் அந்த கட்டாய இந்தியைத் தீவிரமாக எதிர்க்கும் பணியில் ஈடுபட்டார்கள். இந்தி எதிர்ப்பு தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஓங்கி வளரத் தொடங்கியது.

1937-ஆம் ஆண்டில் ஆச்சாரியார் முதலமைச்சராக இருந்த காலத்தில் தோன்றிய இந்தி எதிர்ப்பு இயக்கம் மக்கள் உள்ளத்தில் தமிழார்வத்தையும், தமிழனின் பண்டைய பெருமைகளையும், அவன் ஆண்டு புகழ் பெற்ற வரலாறுகளையும், தமிழிலக்கியங்களின் சிறப்புகளையும் தூவியது.

வடநாட்டு இந்தி ஏகாதிபத்திய ஆதிக்கம், வடநாட்டு அரசியல் ஆதிக்கத்தையும், பொருளாதார ஆதிக்கத்தையும், வாணிக ஆதிக்கத்தையும் நாளடைவில் தமிழ்ப் பேரறிஞர்களுக்கு உணர்த்திற்று. அதன் விளைவாக 1938 ஆம் ஆண்டு மே திங்களில் சென்னைக் கடற்கரையில் கூட்டப் பெற்ற மாபெரும் இந்தி எதிர்ப்புப் பொதுக் கூட்டத்தில் ‘தமிழ்நாடு தமிழருக்கே ஆக வேண்டும்’ என்ற தீர்மானத்தை முன்மொழிந்தவர் பேராசிரியர் மறைமலையடிகள் ஆவார்கள். அதனை வழிமொழிந்து பேசியவர்கள் பெரியார் இராமசாமி, ச.சோமசுந்தர பாரதியார் ஆவார்கள்.

நாவலர். நெடுஞ்செழியன் அவர்களின் இந்தக் கூற்று நான் கையில் வைத்துள்ள ‘தி.மு.க.’ என்று பெயர் தாங்கிய நூலில் உள்ளது. அந்நூலை நாவலர் நெடுஞ்செழியன் எழுதியுள்ளார். அந்நூல் 1961 ஆம் ஆண்டு முதல் பதிப்பாக வந்துள்ளது. நான் படித்த பகுதி இந்நூலின் 10, 11 பக்கங்களில் உள்ளது. இந்த இடத்தில் இரண்டு கருத்துகளைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். தனித் தமிழ்நாட்டிற்கான முதற்குரல் கொடுத்தவர்கள் தமிழறிஞர்கள். இக்குரல் அறிஞர்கள் குரலாக மட்டும் சுருங்கி விடாமல் அதனை மக்கள் குரலாகப் பரப்பியவர் பெரியார்.” இது தான் தோழர் மணியரசன் உரையில் இருந்து இக்கட்டுரைக்கு நாம் எடுத்துக் கொண்ட பகுதி யாகும்.

முதலில் தோழர் மணியரசன் ஆதாரமாகக் கையாண்டிருக்கும், நாவலர் இரா.நெடுஞ்செழியன் எழுதியுள்ள ‘தி.மு.க.’ என்ற தலைப்பிலான நூல் குறித்தும், அது எழுதப்பட்ட காலம் குறித்தும் பார்ப்போம்.

1949-ல் அண்ணாவும், அவருடன் பல முன்னணி தோழர்களும் பெரியாரிடம் இருந்து பிரிந்து சென்று திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஒரு புதிய அமைப்பைக் கண்டனர். தொடக்கத்தில் எங்களுக்கும் தலைவர் பெரியார் தான்; எனவே தி.மு.க.வுக்கு பொதுச் செயலாளர் மட்டுமே இருப்பார்; தலைவர் நாற்காலி காலியாகவே இருக்கும் என்று கூறினார்கள்.

‘ஆலுக்கு விழுதாக இருப்போமேயன்றி வாழைக்குக் கன்றாக இருக்க மாட்டோம்’ என்றார்கள். அதாவது “பெரியாரின் சமுதாயப் புரட்சிப் பணிகளுக்கு ஆதரவாக (‘ஆலுக்கு விழுதாக’) தி.மு.க. நிற்குமே அன்றி, தங்கள் வளர்ச்சிக்காகத் தங்களை உருவாக்கிய பெரியாரின் இயக்கத்தை அழிப்பவர்களாக (‘வாழைக்குக் கன்றாக’) இருக்க மாட்டோம்” என்றார்கள்.

தி.க.வும், தி.மு.க.வும் ஒரே இலட்சியத்தைக் கொண்ட இரு வேறு இயக்கங்கள்; இலக்கு ஒன்று தான். இயக்கங்கள் தான் இரண்டு – என்பதை “தி.க.வும் தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி” என்று கூறிக் கொண்டார்கள். என்றாலும், மக்களைக் கூறு போட்டு, மேல் கீழாக அடுக்கி, ஜாதிய அடுக்கின் உச்சியில் அமர்ந்து கொண்டு, அக்கட்டமைப்பைத் தங்கள் தன்னலனுக்காக புனிதம், வேதம், கடவுள், புராணம் என்றெல்லாம் புளுகி, அந்த ஜாதியக் கட்டமைப்பைக் காப்பாற்றத் துடிக்கும் ஆரியருக்கு (பார்ப்பனருக்கு) எதிராக ‘திராவிடர்’ என்ற அடையாளத்துக்குள், ஆரியப் பண்பாட்டால் நசுக்கப்படும் ‘சூத்திரர்களை’ ஒன்று திரட்டி நடத்தி வந்த சமுதாயப் புரட்சிக்கு, பண்பாட்டுப் புரட்சிக்கென பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் முன்னிறுத்தி வந்த எதிர்வுகளான ஆரியர், திராவிடர் என்பதைப் புறக்கணித்தனர்.

வடக்கு, தெற்கு என, நிலப்பரப்புகளை எதிர்வு களாகக் காட்டி (வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது) பெரியாரின் பண்பாட்டுப் போரைக் குழப்பியடித்தனர். இப்போக்கைப் பெரியார் கடுமையாக விமர்சித்தார்.

“சும்மா வடக்கு வாழுது, தெற்கு தேயுது என்று கூறித் திரிவது தானா பொதுத் தொண்டு? அடே! பார்ப்பான் வாழ்கின்றான்;–தமிழன் தேய்கின்றான் என்று எடுத்துச் சொல்லி, அதற்குப் பரிகாரம் காணுவது அல்லவா பொதுத் தொண்டாகும்” என்றார் பெரியார். (விடுதலை 27.04.1961)

இன்று வாழும் வடக்குக்கு தங்களை, தங்கள் ஊழல் சொத்தைக் காத்துக் கொள்ள வால் பிடித்து நிற்பது வேறு செய்தி.

“திராவிடர் முன்னேற்றக் கழகம் என்று கூறும் பொழுது அதில் திராவிடர் மட்டுமே அங்கம் பெறலாம் என்று எழுப்புவதாக அமைந்து விடுகிறது. இப்போதுள்ள உலகச் சூழ்நிலைக்கு, காலப் போக்குக்கு இது உகந்ததாக எனக்குப் படவில்லை. நம்முடைய கட்சியின் இலட்சியம் திராவிட நாட்டை செழுமையான பூமியாகப் பேணிக் காப்பதாகும். அத்தகைய திராவிட மண்ணில் திராவிடர் மட்டுமே வாழலாம் என்று வரையறை செய்வது குறுகிய நோக்கமாகும். இங்கே திராவிடமும் வாழலாம்; ஆரியமும் ஆளலாம்” - - 17.09.1949 சென்னை ராபின்சன் பூங்காவில் நடை பெற்ற தி.மு.க. தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் ‘அண்ணா’ பேசியது.

ஆரியப் பண்பாட்டு நிறுவனமான இந்து மதத்தின் முதன்மைக் கடவுளாக நிறுத்தப்படுவது விநாயகர். ஆரிய அரசியல் கட்டமைப்பான இந்தியாவைக் காப்பாற்ற ‘மொழிவழித் தேசியம்’ என்பதை மறுத்து ‘பண்பாட்டு தேசியம்’ எனக் கூறி திசை திருப்பும் பெரும்பான்மை வாதம் பேசும் இந்து மத வெறியர்கள், சிறுபான்மை மக்களுக்கு எதிரான உளவியல் உருவாக்கத்துக்கு இப்போதும் பயன்படும் முதன்மை விழாவும் விநாயகர் ஊர்வலம் தான்.

இந்து மத அடிமைத் தளையிலிருந்து தாழ்த்தப்பட்டோர் விடுதலை பெற புரட்சியாளர் அம்பேத்கர் தேர்ந்தெடுத்து, 1956-ல் தன்னை இணைத் துக் கொண்ட மார்க்கம் புத்த மார்க்கம் ஆகும்.

இரண்டு செய்திகளையும் இணைப்பது போல 1953 ஆம் ஆண்டு புத்தர் பிறந்தநாள் (27.05.1953) அன்று மாலை 6.30 மணிக்கு ‘ என்னை கீழ் ஜாதியாகப் பிறப்பித்ததற்காக உடைக்கிறேன்; என்னைச் சூத்திரன், வேசிமகன் என்று கற்பித்ததற்காக உடைக்கிறேன்’ என்று கூறியவாறே, தங்கள் செலவில் செய்த/வாங்கிய பிள்ளையார் சிலைகளை உடையுங்கள் என்று பெரியார் அறிவித்தார்.

ஆனால் ஆலுக்கு விழுதாக இருப்போம் என்று சொன்ன தி.மு.க., “நாங்கள் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம்; பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டோம்” என்று குதர்க்கம் பேசியது.

அந்த சமயங்களில் தி.மு.க.வே கூட ஆரியராவது திராவிடராவது என்று பேசத் தொடங்கியிருந்த காலம். அதற்குப் பதில் சொல்லும் வகையில் தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் ஆற்றிய சொற்பொழிவில் பெரியார் விளக்கம் சொன்னார். (விடுதலை 07.09.1953) அதாவது “இன்றைய தினம் ஆரியர் – திராவிடர் என்ற பிரிவினை இரத்தப் பரிட்சையின் பேரில் அல்ல; அல்லாமல் கலாச்சார, பழக்கவழக்க, அனுஷ் டானத்தின் படியாகும் என்பதை அனைவரும் உணர வேண்டும்” என்கிறோம்.

“இந்த காங்கிரசுக்காரர்கள், கம்யூனிஸ்டுகள் என்பவர்கள் மாத்திரம் இந்தப்படி ஆரியராவது, திராவிடராவது என்று கேட்பதுடன், பார்ப்பனர்களை அய்யர்கள் என்று சொல்லிக் கொள்வ தோடு, நம்மவர்கள் என்று சொல்லிக் கொள்ளுகிற, நம்மிடமிருந்து பிரிந்து போனவர்களும் இந்தப் படியே, இந்த நாட்டுப் பார்ப்பனர்கள் ஆரியர்கள் அல்ல என்பதாகச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என்ன? சோஷலிஸ்டுகள் எல்லோரும் பார்ப்பன ஆதிக்கத்திலுள்ள கட்சிகள் தான்; இன்னும் கொஞ்ச நாளில் கண்ணீர் துளிகளுக்கும் (தி.மு.க.வுக்கும்) அவனே தலைவனாகி விடுவான்.” என்ற அளவுக்குக் கடுமையாகப் பெரியார் விமர்சிக்கிறார்.

தி,மு.க.வுக்குப் பார்ப்பனத் தலைமை இன்று வரை ஏற்படவில்லை என்றாலும், அதிலிருந்து பிரிந்து போன அண்ணா தி.மு.க.வுக்கு 1980களின் இறுதியில் ஏற்பட்டதை நாமறிவோம்.

அடுத்ததாக, 1953 அக்டோபரில் ஆத்தூரில் நடந்த மாநாட்டில், ஆரியர்கள் தூண்டி விடும் வன்முறைகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள “திராவிடர் கழகத்தவர் அனைவரும் 6 அங்குல நீளத்துக்குக் குறையாத கத்தி வைத்துக் கொள்ளுங்கள்” என தீர்மானித்தது திராவிடர் கழகம்.

தி.மு.க.வோ “கத்தியைத் தீட்டாதே, தம்பி! புத்தியைத் தீட்டு” என்று குறுக்கு சால் ஓட்டியது. யார் யாருக்கு எது மழுங்கியிருக்கிறதோ அதைத் தீட்டிக் கொள்ளட்டும் என்றார் பெரியார்.

‘கடவுளே இல்லை’ என்ற கொள்கை கொண்ட திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து போனவர்கள் “ஒன்றே குலம்; ஒருவனே தேவன்” என்ற திருமூலரின் வரிகளை, ஒரு திரைப்படத்தின் முடிவில் அண்ணா பயன்படுத்த, அதையே தங்கள் கடவுள் கொள்கை என்பது போல் காட்டிக் கொள்ளத் தொடங்கினர் தி.மு.க.வினர்.

அண்ணா எழுதிய ‘வேலைக்காரி’ நாடகம் ‘ஜமீன்தார் வேதாசல முதலியார்’ மனம் திருந்தி பேசும் வசனத்தோடு நிறைவு பெறும். அந்த வசனம்: ‘பணத் திமிரும் ஜாதித் திமிரும் ஒழிய வேண்டும்’ என்றும் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்றும் நாட்டு மக்களுக்கு உரைப்போம். “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” இப்படி முடிக்கப்பட்டது அந்த நாடகம்.

அதற்கு எதிர்வினையாக “கடவுளே இல்லாத கட்சியிலிருந்து பிரிந்த அவன் கண்ட முன்னேற்றம், ஒரு கடவுள் உண்டு என்பது தான்” என்றார் பெரியார்.

(விடுதலை 10.07.1960)