கிடைத்தது பிணை

2002ஆம் ஆண்டு குஜராத்தில் நரோடியா பாட்டியாவில் 97 முஸ்லிம்கள் படுகொலையில் குற்றம்சாட்டப்பட்டு 28 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்,மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மாயா கோட்னி. இரண்டு ஆண்டுகாலம்கூட தொடர்ச்சியாக சிறையில் இல்லாத அவரை,இப்போது குஜராத் உயர்நீதிமன்றம், பிணையில் விடுதலை செய்துவிட்டது. ராஜீவ் காந்தி கொலைக் குற்றத்துக்காக தண்டிக்கப்பட் டோருக்கு 25ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு பரோல்கூட கிடைக்காது. 97முஸ்லிம்களை கொலை செய்தவர்கள் என்றால் பிணையில் விடுதலையே கிடைத்து விடும். இதுவே ‘பாரதத்தின் நீதி’!

உலகிலேயே...

உ. பி. யில் பா.ஜ.க. ஓட்டு வங்கியை உருவாக்க மோடியால் கட்சிப் பிரதிநிதியாக அனுப்பி வைக்கப்பட்டவர் அமீத்ஷா! அவர் கட்சிப் பொறுப்பேற்றவுடன் கடந்த ஆண்டு ஆகஸ்டு,செப்டம்பர் மாதங்களில் இந்து-முஸ்லிம் கலவரங்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன. 65பேர் கொல்லப்பட்டனர். 68பேர் படுகாயம டைந்தனர். இதில் சொந்த வீடு,வாசல்களை இழந்து அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம்கள் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை! சொந்த ஊர் திரும்ப முடியவில்லை.

உலக அளவில் மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு,இடம் பெயர்ந்தோர் எண்ணிக்கை -2013ஆம் ஆண்டில் உலகிலேயே உ. பி. யில்தான் அதிகம் என்ற அதிர்ச்சியான தகவல் இப்போது வெளி வந்துள்ளது. அமெரிக்க வெளி யுறவுத் துறை அமெரிக்க நாடாளுமன்றத்தில் சர்வதேச மதச் சுதந்திரம் எனும் தலைப்பில் ஆண்டுதோறும் சமர்ப்பிக்கும் அறிக்கையில், 2013ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இத்தகவல் இடம் பெற்றுள்ளது. உ. பி. யில்வெற்றிகளைக் குவிக்க இந்தியாவுக்கு இப்படி ஒரு உலகப்‘புகழை’உருவாக்கித் தந்துள்ளது-பா.ஜ.க.

ஆர்.எஸ்.எஸ்.இரட்டை வேடம்

காந்தி படுகொலைக்குப் பின் ஆர்.எஸ்.எஸ்.தடை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அன்றைய உள்துறை அமைச்சர் பட்டேலுடன் ஆர்.எஸ்.எஸ்.சமரசம் பேசியதால் தடை நீக்கப்பட்டது. அப்போது ஆர்.எஸ்.எஸ்.கலாச்சார இயக்கம்தான் என்றும் அரசியலில் ஈடுபடாது என்றும் அரசுக்கு உறுதி தந்தது. அந்த உறுதிகள்,இப்போது காற்றில் பறக்கத் தொடங்கிவிட்டன. பா.ஜ.க. வின் புதிய தலைவராக்கப்பட்டுள்ள மோடிக்கு நெருக்கமான அமீத்ஷா,பா.ஜ.க. நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்.முன்னாள் அதிகாரப்பூர்வ பேச்சாளர் ராம்மாதவ் பா.ஜ.க. பொதுச் செயலாளராகவும் மற்றொரு ஆர்எஸ். எஸ். காரர் வினய் சகஸ்ரபுதே துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 8பொதுச் செயலாளர் களில்3பேரும், 11துணைத் தலைவர்களில் இரண்டு பேரும்,மொத்தமுள்ள4இணைச் செயலாளர்களும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பைச் சார்ந்தவர்கள்.

‘இந்து’ஏடு (ஆகஸ்டு17)இத்தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது. ‘தேசத் தந்தை’என்று அழைக்கப்பட்ட காந்தி படுகொலை யில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டு தடை செய்யப்பட்ட பார்ப்பனிய அமைப்பு வெளிப்படையாக அரசியலுக்கு வந்து நிற்கிறது! பார்ப்பனர்கள் இங்கு எதை வேண்டுமானாலும் செய்யலாம்.

வாஸ்து பார்க்கிறார்கள்

சேலத்தில் பெரியார் பல்கலைக் கழகத்திலேயே வாஸ்து நுழைந்துவிட்டது! பல்கலைக் கழகத்தின் நடைபாதையும்,துணைவேந்தர் பங்களாவும் ரூ. 25இலட்சம் செலவில்‘வாஸ்து’ப்படி புதுப்பிக்கப்படுகிறதாம். அதுவரை புதிய துணைவேந்தராக நியமிக்கப் பட்டுள்ள சாமிநாதன் என்பவர் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளாராம். துணை வேந்தர் மாளிகைக்குப் போகாமல் விருந்தினர் மாளிகையிலேயே தங்குவாராம். வாழ்நாள் முழுதும் மூடநம்பிக்கைக்கு எதிராக போராடிய பெரியார் பெயரில் அமைந்துள்ள பல்கலையில் இப்படி ஒரு கேவலம்! வாஸ்து பண்டிதர்களையே துணைவேந்தர்களாக்கி விடலாமே!