மனித உயிர்கள் இங்கே மலிவானவை;அதுவும் ஜாதியில்,பொருளாதாரத்தில் அழுத்தப்பட்டுக் கிடக்கும் மக்களின் உயிர் மதிப்பில்லாதவை. 

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தில் நடந்திருக்கும் நிகழ்வு‘மனிதம்’இந்த சமூகத்தில் மரணித்து விட்டதா என்று கேட்கத் தூண்டுகிறது.

இரண்டு நாள்கள் நடக்கும் இசக்கியம்மனின் கோயில் திருவிழாவுக்காக கிராமத்தில் பல ஊர்களிலிருந்தும் குடும்பத்துடன் கூடியிருக்கிறார்கள். முதல் நாள் இரவு,அந்த ஏழை ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் கோயில் மைதானத்திலேயே கழிக்க அவர்களின் குழந்தைகள் அதற்கு அருகே கம்பி வேலி அமைக்கப்பட்ட ஒரு மைதானத்தில் விளையாடப் போய் விட்டார்கள். அங்கே நிறுத்தபட்டிருந்த ஒரு கார்,இவர்களின் விளையாட்டுக் கருவியானது.

கார்கள் - இந்தக் குழந்தைகளின் நிஜ வாழ்க்கையோடு நெருங்க முடியாது. அது அவர்களுக்கு கனவுலக குதூகலம். கடனைத் திருப்பித் தராதவரிடமிருந்து ஒரு வங்கி நிர்வாகம் பறிமுதல் செய்து,நிறுத்தி வைத்திருந்த கார் அது. முள் வேலியைத் தாண்டிய நான்கு குழந்தைகள். காரைக் கண்ட மகிழ்ச்சியில் உள்ளே ஏறி அமர்ந்து விளையாடப் போனார்கள். அவ்வளவு தான். குளிரூட்டும் சாதனம் பொருத்தப்பட்ட அந்தக் காரின் தானியங்கி கதவு தானாக மூடிக் கொண்டுவிட்டது. உள்ளே மூச்சுத் திணறிய நான்கு குழந்தைகளும் வெளியே வருவதற்கு அலறினர்;கதவையும் திறக்கத் தெரியவில்லை.

கிராம கோயில் திருவிழாவின் ஒலி பெருக்கி இரைச்சலில் அவர்களின் சத்தமும் கரைந்து போய்விட்டது. குழந்தைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வளர்க்கும் வாழ்க்கை முறைக்கு வந்து சேராத கிராமத்துப் பெற்றோர்கள் அவர்கள். எங்கேயாவது விளையாடிவிட்டு,எப்படியாவது வந்து சேருவார்கள் என்ற வழக்கமான நம்பிக்கையில் இருந்தார்கள். கடைசியில் அந்த மரணச் செய்திதான் அவர்களை வந்து சேர்ந்தது.

தானியங்கிக் கதவுகளுடன் உள்ள அந்த காரை இப்படி பொது மைதானத்தில் மூடாமல் திறந்து போட்ட அதிகாரிகளின் அலட்சியம்,இந்த பச்சிளங் குழந்தைகளின் உயிரைப் பறித்துவிட்டது. இது மன்னிக்க முடியாதக் குற்றம். இந்த மக்கள் நம்பும்‘குலசாமி’யும் இந்தக் குழந்தைகளைக் காப்பாற்றவில்லை.

மாநகராட்சியின் அலட்சியத்தால் மூடப்படாத பாதாள சாக்கடைக் குழிகள்;மின்வாரிய அலட்சியத்தால் அறுந்து விழுந்து கிடக்கும் கம்பிகளை மிதித்து பலியாகும் உயிர்கள்;இப்படி மனித உயிர்கள் பலியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த மரணங்களைத் தழுவுவது ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து வறுமையில் உழலும் மக்கள் தான்.

ஜாதியம்;உழைப்புச் சுரண்டல்;தன்னம்பிக்கையை தகர்க்கும் மூடநம்பிக்கை;சுயநல வெறி கொண்டு அலையும் அதிகார வர்க்கங்கள் இவற்றையே பண்புகளாக்கிக் கொண்டிருக்கிறது,இந்த சமுதாய அமைப்பு. தங்களின் எதிர்கால நம்பிக்கைகளை இழந்து தவிக்கும் - ஏதுமறியாத -“விதியை நம்பிக் கிடக்கும் இந்த கிராமத்து மக்களுக்கு யார்தான் ஆறுதல் கூறுதல் முடியும்?”

இவர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றிட அறிவுக்கான வெளிச்சத்தையும் வாழ்க்கைக்கான நம்பிக்கையையும் ஊட்ட வேண்டாமா? “கும்பிடும் குலசாமிகூட காப்பாற்றவில்லையே”என்று கதறுகிறார்,மடிந்து போன ஒரு சிறுவனின் தந்தை.

ஊறிப்போய் கிடக்கும் இந்த மூட நம்பிக்கையிலிருந்து இவர்களை வெளிக் கொண்டு வருவதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்?