நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்தரங்கு நடத்திய மண்டபம் தீட்டுப்பட்டுவிட்டது என்று கூறி கருநாடக பா.ஜ.க.வினர் பசுமாட்டு மூத்திரம் தெளித்து, துளசி செடிகளோடு தீட்டு கழிக்கும் சடங்குகளை நடத்தியுள்ளனர். கருநாடக மாநிலம் கன்வர் மாவட்டத்தில் சிர்சீ எனும் ஊரில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த ஜன.13 அன்று திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜ் தலைமையில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது.

பிரகாஷ் ராஜும் கருத்தரங்கில் பேசியவர்களும் இந்து எதிர்ப்பாளர்கள்; மாட்டுக்கறி சாப்பிடக் கூடியவர்கள்; எனவே ‘புனித காரியங்கள்’ நடக்கும் மண்டபம் தீட்டுப்பட்டுவிட்டது என்று கூறி, மாவட்ட பா.ஜ.க. பெண்கள் பிரிவு தலைவர் ரேக்கா ஹெக்டே என்பவர் தலைமையில் சிரிசி பா.ஜ.க. இளைஞர் பிரிவு தலைவர் விஷால் மராத்தே உள்ளிட்ட பா.ஜ.க.வினர் கடந்த ஜன.15 அன்று திடீரென்று மண்டபத்துக்குள் நுழைந்து, மண்டபம் முழுதும் மாட்டு மூத்திரத்தைத் தெளித்தனர்.

ஜன.13 அன்று மண்டபத்தில் கருத்தரங்கு நடத்திய நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் அவருடன் பேசியவர்கள் இந்து மத எதிர்ப்பாளர்கள்; மாட்டுக் கறி சாப்பிடுகிறவர்கள்; எனவே மண்டபம் தீட்டாகிவிட்டது என்பதால், தீட்டுக் கழிக்கும் சடங்குகளை நடத்துகிறோம் என்று கூறினர். இந்து மதத்தைக் குறை கூறிக் கொண்டு, மாட்டுக்கறி சாப்பிடும் இவர்களால் மண்டபமே தீட்டுப்பட்டுவிட்டது என்று மண்டபம் முழுதும் பசுமாட்டு மூத்திரத்தைத் தெளித்து, ‘தீட்டுக் கழித்து’ பா.ஜ.க.வினர் வெளியேறினார்கள்.

“நான் போகும் இடங்கள் எல்லாம் இந்த தீட்டுக் கழிக்கும் சடங்குகளைத் தொடர்ந்து நடத்துவீர்களா?” என்று பிரகாஷ்ராஜ் தனது டிவிட்டரில் கேலியாகப் பதிவிட்டுள்ளார்.

சுட்டுக் கொல்லப்பட்ட கவுரி லங்கேஷ் அவர்களின் குடும்ப நண்பரான பிரகாஷ்ராஜ், சங்பரிவாரங்களுக்கு எதிராக கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.