இந்திய தேசியக் கொடியை எரிக்கும் படத்தை தனது முகநூலில் வெளியிட்ட தற்காக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்த தோழர் திலிபன் மகேந்திரனை காவல்துறை கைது செய்து, அவரது கையையும் மூன்று விரல்களையும் இரும்புக் கம்பியால் உடைத்திருக்கிறது. கொடி எரிப்பு அவமதிப்பு என்றால், அதற்கான சட்டப் பிரிவுகளில் வழக்கு தொடரட் டும். ஆனால், காவல்துறை காட்டு மிராண்டித்தனமாக கையை உடைக் கும் அளவுக்கு போயிருக்கிறது. திராவிடர் விடுதலைக் கழகம், காவல் துறையின் இந்த செயலை வன்மை யாகக் கண்டிக்கிறது. கடந்த 6ஆம் தேதி மயிலாடுதுறையில் “ஜாதிக் கொரு சுடுகாடு; இது சுதந்திர நாடா?” என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பொதுக் கூட்டத்தில் கழகப் பொதுச் செய லாளர் விடுதலை இராசேந்திரன் இந்த செயலுக்காக காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துப் பேசினார்.

சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தின் இந்த வன்முறை வெறியைக் கண்டித்து, கடந்த 8ஆம் தேதி காவல் நிலையத்தை முற்றுகை யிடும் போராட்டம் நடந்தது. த.பெ.தி.க. சென்னை மண்டல அமைப்பாளர் கரு. அண்ணாமலை தலைமையில் நடந்த இந்தப் போராட் டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சார்ந்த தோழர்கள் இராவணன், ஏசு, அருள்தாசு, மனோகர், மாரிமுத்து, பார்த்திபன், பிரதீப், ராஜா, பிரபாகரன், செந்தில் (எப்.டி.எல்.), அருண், நந்தா, முழக்கம் உமாபதி உள்ளிட்ட 20க்கும் மேற் பட்ட தோழர்களும், இளம்தமிழகம், தமிழ் தேசிய பேரியக்கம், தமிழ்த் தேச விடுதலை இயக்கம், மே 17 உள்ளிட்ட எட்டு அமைப்புகளைச் சார்ந்த 100 தோழர்கள் பங்கேற்று - கைது ஆனார்கள். பிப்.13ஆம் தேதி சென்னை யில் இதே பிரச்சினைக்காக கண்டன ஆர்ப்பாட்டத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஒருங்கிணைத்து வருகிறது. இதில் கழகத் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இதற்கிடையே திலிபன் மகேந்திரன் கையை உடைத்த காவல்துறையைப் பாராட்டி, இந்து அமைப்பைச் சார்ந்த நாராயணன் என்ற ஆசாமி, சென்னையில் சுவரொட்டிகளை ஒட்டியிருக்கிறார். காவல் நிலைய சித்திரவதைகள் குறித்து ‘விசாரணை’ என்ற திரைப் படம், திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. காவல் நிலையங் களில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு விளக்கிச் சொல்கிறது, இந்த திரைப்படம். இந்த நிலையில் இப்படத்தின் சம்பவங்களை உறுதிப் படுத்துவதாகவே புளியந்தோப்பு காவல்துறையின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.