வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (11)

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மை யில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு.

தமிழகம் தனி நாடாகக் கூடாது என்பதற்கு காரணங்களை அடுக்குகிறார், ம.பொ.சி.

அயல்நாட்டு உதவி?: “அமெரிக்கா போன்ற அயல் நாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளலாம்” என்று கூறலாம். இப்போதே, பாரதத்துக்குற்ற நாணய மாற்று சக்தியையும் மீறி உணவுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகிறது, செய்தும், விலைவாசிகளை குறைக்க முடிய வில்லையே! கேட்டவனுக்கெல்லாம், கேட்ட போதெல்லாம் அவனவனுக்குத் தேவைப்படும் அளவுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்க அமெரிக்க நாட்டார் வள்ளல் பெருமக்கள் அல்லர். தாங்கள் உதவும் நாட்டிலிருந்தும், தங்கள் நாட்டிற்கு என்ன ஆதாயம் கிடைக்கும்? என்று அலசி ஆராய்ந்து பார்த்தப் பின்னர் தான் அவர்கள் உதவி புரிவார்கள்......

என்ன இருக்கிறது?: தமிழ் நாட்டில் உலக நாடுகளுக்குத் தேவைப்படுகின்ற மூலப் பொருள்கள் இப்போது என்ன இருக்கிறது? ஏதோ இங்கும் அங்குமாக ஒரு சில இடங்களில் மூலப் பொருள்கள் கிடைக்கலாமென்று யூகிக்கிப்படுகிறது. ஆனால், இப்போதுள்ள நிலையை வைத்துத் தானே நாம் பிரிவினையால் நன்மை தீமைகளை ஆராய முடியும்.

தனியாகப் பிரிந்தால்: தமிழ்நாட்டின் தற்போதைய மக்கள் தொகை மூன்றுகோடி, இவர்களில் தற்காலிக மாக குடியேறி வாழும் வட நாட்டாரோ, பிற அயல் நாட்டாரோ மிக மிகச் சொற்பம். இந்த நிலையில் தமிழ்நாடு தனியாகப் பிரியுமானால், தமிழகத்திற்கு வெளியே இந்தியாவிலும், பர்மா, இலங்கை, மலாயா, சிங்கப்பூர் போன்ற அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் பிரிக்கப்பட்ட தமிழகத்திற்கு விரட்டப்படுவது திண்ணம்......

தமிழகம் அழைத்துக் கொள்ள வேண்டிய மக்களின் எண்ணிக்கை அற்பமன்று; அரை கோடிக்கு மேலிருக்கும். ஒருக்கால், தமிழகத்திலிருந்தும் சிலர் வெளியேற்றப்படலாமென்றால், அத்தகைய ‘அன்னியர்’ எண்ணிக்கை ஆயிரக்கணக்கில்தான் இருக்கும். ஆம், சில ஆயிரக்கணக்கானவர்களை வெளி யேற்றி அரைக்கோடி தமிழர்களை இங்கு அழைத்துக் கொள்ள நேரும். அந்த நிலையில் தமிழகத்தில் அரிசி விலை இன்னும் கூடுமா? குறையுமா?

என்ன அரசியல் ஞானமோ?: உறுதியாகச் சொல்லுகிறேன், எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும் தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால் பயங்கரமான உணவு பஞ்சம் ஏற்படுவது திண்ணம். ஒரு புறம் உணவு விலையைக் குறைப்பதாகச் சொல்லிக் கொண்டு, இன்னொருபுறம் உணவுப் பஞ்சத்தை அதிகரிக்கச் செய்யும் தனி நாடு கேட்பது என்ன அரசியல் ஞானமோ!...

மன்னிக்க முடியாத குற்றம் : “.... நாட்டு மக்கள் எல்லோரும் இன்புற்று வாழ வேண்டுமென்றால் அதற்கு நாட்டைத் துண்டாட தேவை இல்லை.... நாட்டைத் துண்டாடக் கோரிக் கூச்சலிடுவது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும். பிரிவினைக் கோரிக்கை நாடு முழுவதையுமே அழிக்கும் நஞ்சு என்பதை உணருங்கள்.” (‘செங்கோல்’ 22-4-62)

தமிழ்நாடு தனி நாடாக ஆகக் கூடாது என்பதற்கு ம.பொ.சி கூறும் அறிவுரைகள் நியாயமானவைகளா, நாடு பிரிந்தால் அந்த நாட்டை சேர்ந்தவர்களை உலகில் உள்ள எல்லா நாட்டவரும் அடித்துத் துரத்தி விடுவார்களா? உலக வரலாற்றில் பல நாடுகள் பிரிந்துள்ளன. அந்த நாட்டவர்களை ம.பொ.சி கூறுவதுபோல் மற்ற நாட்டினர் அடித்துத் துரத்தினார்களா? நீங்கள் தான் தமிழ் நாடு தனிநாடு வாங்கி விட்டீர்களே உங்கள் நாட்டுக்கே ஓடி விடுங்கள் என்று துரத்தி விடுவார்களா? என்ற கேள்வியைத் தமிழ்த் தேசியம் பேசும் ம.பொ.சி. அன்பர்களுக்கே விட்டு விடுகிறேன். தோழர் சுப.வீரபாண்டியன் ‘பெரியாரின் இடதுசாரி தமிழ் தேசியம்’ என்ற நூலை வெளியிட்டபோது அவர் ம.பொ.சி.யின் சில கருத்துகளை கூறி அவரை வலதுசாரி (மதவாத) தமிழ்த் தேசியர் என்று குறிப்பிட்டிருந்தார். அப்போது பெ.மணியரசனும், இராசேந்திர சோழனும் வானத்துக்கும் பூமிக்கும் எகிறி எகிறி குதித்தார்கள். இப்போதும் அப்படியே தான் உள்ளார்கள். இப்போது நான் கூறுகிறேன் ம.பொ.சி. தமிழ்த் தேசியத் தலைவரல்ல அவர் இந்திய தேசிய வாதிதான் என்பதற்கு அவருடைய எழுத்துகளிலிருந்தே ஆயிரம் பக்கங் களுக்கு மேல் எடுத்துக் காட்ட முடியும்.

ம.பொ.சியின் கொள்கை இந்து - இந்தி- இந்தியர் என்பதே!

22.10.1962 ‘செங்கோல்’ இதழில் தீபாவளி வாழ்த்து கூறிய ம.பொ.சி. “தீபாவளி திருநாள், பாரத மக்களின் மிகப்பெரும்பாலேருக்கு இன்ப மூட்டும் நன்னாள். முப்பது கோடிக்கு மேற்பட்ட மக்கள் எல்லோரும் ‘ஒரு குலம்’ என்றெண்ணி உணர்ச்சி பூர்வமாக ஒன்றுபடும் நன்னாள்”.

“தீபாவளி போன்ற பண்டிகைகள் தோன்றியிரா விடில்; பாரத மக்களிடையே இன்றுள்ள, அற்ப ஒருமைப்பாடும் இருந்திருக்க முடியாது. ஆகவே இதனை ஒரு தேசியத் திருநாளாகவே கருத வேண்டும். வாழ்க பாரதம்” அதோடு விடவில்லை அவர், அக்பர் அரண்மனையில் தீபாவளி கொண்டாடப்பட்டதாம். இப்படியெல்லாம் அவருடைய இந்துத்துவ  ஆராய்ச்சி செல்கிறது.

21-11-62 இல் சென்னை வானொலில் பேசிய ம.பொ.சி, “தமிழ் பெருமக்களே! நாம் தமிழராயினும் பிறந்த நாட்டால் நாம் எல்லோரும் இந்தியர். இந்தியா நம் தாய்த் திரு நாடு, நாம் அதன் புதல்வர்கள். இந்த உண்மையை மதிமாறி துறந்தால், அன்றே நாம் அழிந்தோம். வாழ்க நேரு! வெல்க பாரதம்!” (‘செங்கோல்’ 25.11.62)

8.11.62 ‘செங்கோல்’ தலையங்கத்தில் “நேரு வேண்டாம் என்றால் வேறு யார்?” என்று தலையங்கம் எழுதினார். நேருவை விட்டால் நமக்கு வேறு தலைவர் யாரும் இல்லை என்பதை முழு பக்கம் எழுதி உள்ளார்.

15.5.55 ‘செங்கோல்’ தலையங்கத்தில் “மொழி வேற்றுமை காரணமாக, இந்திய சமூகத்தினரிடையே பிளவு தோன்றக் கூடாது என்கிறார் நேரு, அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். ‘பிளவு தோன்றி னால், பெற்ற விடுதலைக்கு கேடு நேரும்’ என்றும் அதிலும் நமக்கு அய்யமில்லை அங்கீகரிக்கிறோம்.” இப்படி எழுதும் ம.பொ.சிக்கு தமிழரசு கழகம் எதற்கு காங்கிரசிலே இணைந்து விட்டிருக்கலாமே. இவருக்கு ஆசை இருந்தது காங்கிரசிலே தொடர்ந்து இருக்க வேண்டுமென்று. ஆனால் தமிழ்நாடு காங்கிரசுகாரர்கள் இவரை வெளியே துரத்திவிட்டு சேர்க்க மறுத்து விட்டார்கள்.

இந்திய கலாச்சாரத்தை வற்புறுத்தும் ம.பொ.சி, “உணர்ச்சி பூர்வமான தேசிய ஒருமைப்பாடு வளர வேண்டும் இந்திய கலாச்சாரம் என்பது பல்வேறு கலாச்சாரங்களின் கூட்டுப் பொருளாகும். ஆரியக் கலாச்சாரம், திராவிடக் கலாச்சாரம், அராபியர் கலாச்சாரம், ஆகியவற்றின் கலப்பே இந்திய கலாச்சாரம். பிற கலாச்சாரத்தினால், ஒரு கலாச்சாரம் அழிந்து விடுகிற தென்றால் அது கலாச்சாரமே அல்ல....  ஆரியக் கலாச்சாரம், திராவிடக் கலாச்சாரம் உண்டு” என்கிறார் ம.பொ.சி

ஆனால் அவரது கடைசி சீடர் பா.குப்பன் “திராவிடம் ஆரியம் என்பதெல்லாம் பொய் திட்டமிட்ட கட்டுக்கதை” என்கிறார்.

“நாம் தமிழினத்தவராக இருப்பினும் இந்திய சமுதாயத்தினராகவும் இருக்கிறோம். இந்த பிணைப்பு அல்லது இணப்பு எந்த சக்தியாலும் அழிக்க முடியாதது ஆகும்” (8.7.62 அன்று தஞ்சை அரண்மனையில் மத்திய அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்திய கலாச்சார விழாவில் ம.பொ.சி பேசியது. (‘செங்கோல்’ 22.7.62) தேசிய ஒருமைப்பாடும் தமிழின உரிமையும் என்ற தலைப்பில் ம.பொ.சி 4.10.62 ‘செங்கோல்’ இதழில் தலையங்கம் எழுதியுள்ளார்.

“இந்தியா ஒரே நாடு, இதனை, இந்தியாவின் இயற்கை அமைப்பே எடுத்துக் காட்டும் இந்தியாவின் எல்லைகள் வடக்கில் இமயமலை. தெற்கில் குமரி முனை. கிழக்கில் வங்களாக்குடாக் கடல். மேற்கில் அரபிக்கடல். இந்த இயற்கை அமைப்பு இந்தியா ஒரே நாடாக இருப்பதற்கென்றே இறைவன் படைத்ததாகும். அதனால்தான் சேதமில்லாத இந்துஸ்தானம் என்றார் பாரதி. இந்தியா ஒரே நாடு என்ற உணர்ச்சி குமரிமுதல் இமயம் வரை பரந்து விரிந்த பாரத மக்களிடையே தொன்று தொட்டே இருந்து வருகிறது.”

ஆங்கிலேயன் இந்த நாட்டை விட்டு 1947இல் வெளியேறிய போது 562 குறுநில மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்தனர். இந்தியா என்ற ஒரு நாடு வரலாற்றில் என்றுமே ஒரே நாடாக இருந்ததே இல்லை. ஆனால் ம.பொ.சி கூறுகிறார் தொன்றுதொட்டே இந்தியா ஒரு நாடாக இருந்தது என்று.  இது எவ்வளவு பெரிய பொய்? வரலாற்று மோசடி என்பதை தமிழ்த் தேசியம் பேசுவோர் உணரவேண்டும்.

17.1.63 அன்று கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் சிலை அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய ம.பொ.சி.  “நான் ஒரு இந்துவாக இருப்பது குறித்து வருத்தமோ வெட்கமோபடவில்லை. மாறாக மாபெரும் கலாச்சாரப் பாரம்பரியத்தை சார்ந்தவன் என்பதற்காகப் பெருமைப்படுகிறேன். ஒரு இந்துவாக மட்டுமல்லாமல், தேச பக்தியுடைய இந்தியனாகவும் இந்தக் கூட்டத்தில் பேசுகிறேன். நாம் இந்தியர் இந்தியா நம் தாய் நாடு என்பதை மறந்து விடக் கூடாது” என்றார் (‘செங்கோல்’ 27-1-63)

இந்தியைப் பற்றி ம.பொ.சியின் கருத்து: “தனித் தமிழ்நாடு கோருவோர் இந்தியை அடியோடு வெறுக்கலாம். அவர்களின் நிலை வேறு. இந்தியாவின் அய்க்கியத்தை ஏற்பவர்களாகிய நாம் (தமிழரசு கழகத்தினர்) இந்தியை அடியோடு புறக் கணிக்க முடியாது. தமிழக மக்கள் இந்தி பயிலத்தான் வேண்டும். குறைந்தபட்ச தேர்வுக்குரிய மதிப்பெண் பெறவேண்டும் என்ற நிலையில் பாடத்தில் இந்தி இடம் பெறவேண்டும்” (‘செங்கோல்’ 3-3-63)

ம.பொ.சி. இந்து, இந்தி, இந்திய வெறியர் அவர் தமிழ்த் தேசியவாதியே அல்ல. தமிழ் பயிற்று மொழி, தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழிக்காக போராடினால் மட்டும் போதாது. தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் அவர் இந்திய தேசியத்திற்கு ஆதரவாகவே இருந்தார். தமிழின விடுதலைக்கு எதிராகவே இருந்தார். அவர் ஒரு இந்திய தேசியவாதியே ஆவார்.

பெரியார் 1938 முதல் தமிழ்நாடு தமிழருக்கே என்று போராடி வந்தார். அவர் சிறையிலிருந்த போது நீதிகட்சியின் தலைவராக 1938 டிசம்பர் 31ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு நடைபெற்ற நீதிகட்சி செயற்குழுவில், நீங்கள் தமிழ்நாடு தமிழருக்கே என்றால் நாங்கள் எங்கே போவது என்று நீதிக் கட்சியில் இருந்த தெலுங்கர்களும் மலையாளி களும் கேட்டார்கள், அதனால் தான் அந்தக் கோரிக்கை திராவிட நாடு திராவிடருக்கே என்று மாற்றப்பட்டது. திராவிட நாடு என்பது ஒரே நாடல்ல நான்கு நாடுகள் சேர்ந்த ஒரு கூட்டமைப்பு என்று அப்போதே விளக்கப் பட்டது. இன்றைக்கு தமிழ்த் தேசியர்களால் உயர்த்திப் பிடிக்கப்படும் நீதிக்கட்சியை சேர்ந்தவர்களான கி.ஆ.பெ. விசுவநாதம் அப்போது நீதிக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். அவர் மறுப்பு சொல்ல வில்லை. 24, 25-8-1940இல் திருவாரூரில் நடைபெற்ற நீதிகட்சி இரண்டு நாள் மாநாட்டில் திராவிட நாடு பிரிவினை தொடர்பான பல தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

அந்த மாநாட்டில், திராவிட நாடு பிரிக்கப்பட திட்டங்கள் வகுக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் கி.ஆ.பெ. உறுப்பினராக இருந்தார்.

இன்றைக்கு அண்ணல் தங்கோவின் பெயரன் அருள் செல்வனால் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழ்த் தேசிய வாதிகள் மிகப் பெரியத் தமிழ்த் தேசிய வாதியாக உயர்த்திப் பிடிக்கப்படும் அண்ணல் தங்கோ. அந்த மாநாட்டில் முக்கிய தீர்மானத்தை முன்மொழிந்தார்.

“வரவிருக்கின்ற சென்சஸ் கணக்கெடுப்பின் போது திராவிட மக்கள் தங்களை ‘திராவிடர்கள்’ என்று பதிவு செய்ய வேண்டும். மதம் என்ன என்று கேட்டால் “திராவிட சமயம்” என்று சொல்ல வேண்டுமே தவிர இந்து சமயம் என்று சொல்லக் கூடாது” என்ற தீர்மானத்தை முன்மொழிந்தவர் அண்ணல் தங்கோ வழிமொழிந்தவர் வாணியம்                                பாடி விசுவநாதம் ஆவர் (ஆதாரம்: குடிஅரசு 1-9-1940 பக்கம் 12).

(தொடரும்)