முதல் நாள் : அறிமுக நிகழ்வு ஆகஸ்ட் 1 சுமதிருபன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது

பெண்கள் பெண்களுக்கான பிரச்சினைகள் என்பது பாலியல் மற்றும் கலாச்சார வன்முறைகள், வர்க்க பேதம், சாதிக்கொடுமைகள், இனப்பாகுபாடுகள் என்கின்ற வகைகளில் தனித்தன்மை பெற்றிருந்தாலும் அவற்றைக் கட்டமைக்கும் அரசியல் மற்றும் ஆதிக்க அமைப்பு முறைகள், மதம், குடும்ப அமைப்புகள் போன்ற சமூக அமைப்புகளைக் கட்டவிழ்ப்பு செய்தல் மிகவும் அவசியமாகிறது. தொடந்து ஐரோப்பா, லண்டன் ஆகிய இடங்களில் நடந்துவந்த இப்பெண்கள் சந்திப்பின் 27வது தொடர் கனடாவின் டொரண்டோ நகரில் நடைபெற்றது.

முதல் நாள் பெண்களுக்கான சுய அறிமுகம், இரண்டாம் நாள் பெண்கள் மட்டுமே பங்கு பெறும் பெண்கள் சந்திப்பு, மூன்றாம் நாள் ஆண்கள் பெண்கள் அனைவரும் சந்திக்கும் கனேடிய இலக்கிய சந்திப்பு, நான்காவது நாள் நாடகங்கள் என சந்திப்புக்கள் நடைபெற்றன. இச்சந்திப்பின் சாதனை என்னவென்றால் பல இளம் தலைமுறையினரும், பல்வேறு துறையினைச் சார்ந்தவர்களும் வேறுபட்ட கருத்து,அரசியல் நிலைபாடுகளைக் கொண்ட பெண்களும் ஒரே தளத்தில் சந்தித்து தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டமைதான்.

இலங்கை, இந்தியா, இங்கிலாந்து, சுவிஸ், கனடா, அமெரிக்கா, என பல்வேறு நாடுகளிலிருந்தும் பல தலைமுறைகளிலிருந்தும் கருத்தொற்றுமையும் கருத்து முரண்களையும் கொண்ட பெண்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இச்சந்திப்பின் முதல் நிகழ்வாக வெள்ளிக்கிழமை மாலை (1-8-2008) ஆறரை மணியளவில் பங்கேற்பாளர்களின் சுய அறிமுகம் நடைபெற்றது. அறிமுகத்தை தொடங்கும் முகமாக சுமதி ரூபன் தனது வரவேற்பைத் தெரிவித்து பெண்கள் சந்திப்பின் நோக்கத்தையும் அவசியத்தையும் குறித்து உரையாற்றினார். அதைத்தொடர்ந்து சுவிஸ் றஞ்சி இது நாள் வரை நடந்து வந்த பெண்கள் சந்திப்புகளைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் செய்து வைத்தார்.

ஒவ்வொரு வருடமும் பெண்கள் சந்திப்பு மலர்களை 1000 பிரதிகள் வரை தங்களது சுய நிதியில் தாங்களே வெளியிடுவதாகவும் 1990 ஆம் ஆண்டுமுதல் இப்பெண்கள் சந்திப்புகள் எந்த ஒரு நிதி நிறுவனத்தையோ அல்லது அமைப்பையோ சாராமல் தனித்து இயங்குவதாகவும் அதேசமயம் பெண்கள் சந்திப்பு மீது ஏற்பட்டு வந்த பல தாக்குதல்களையும் அவதூறுகளையும் தட்டி எறிவதுடன் தொடர்ந்து இச்சந்திப்பு நடைபெற்று வருவதாகவும் கூறினார். சந்திப்பு ஏற்பாடுகள், மலர் மற்றும் புத்தக வெளியீடுகள் தவிரவும் சுனாமியின் போதும் பல சமூக நல திட்டங்களுக்கு பெண்கள் சந்திப்பு தம்மால் இயன்ற வரை உதவி செய்து வருகின்றமை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

கடைசிவரை நிகழ்ச்சி வரை மிகவும் ஈடுபாட்டுடன் பங்கேற்றவரும், வயதில் முதியவருமான குறமகள் என்றழைக்கப்படும் வள்ளி நாயகி ராமலிங்கம், ஆறுமுக நாவலர் முதல் மனுஷ்ய புத்திரன் வரை எல்லா ஆண் எழுத்தாளர்களையும் மறு ஆய்வு செய்யவேண்டும் எனக்கூறி குஷ்பு விவகாரத்தின் போது மனுஷ்யபுத்திரன் பெண்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறியதற்கு கண்டனம் தெரிவித்தார்.

ஜானகி தன்னுடைய கருத்தாக ஒருவர் தன்னை புலப்பெயர் தமிழராகக் கருதும் அதே நேரம் தன்னை ஒரு கனேடியப் பிரஜையாகவும் கருதினால் அதன்மூலம் பாலியல் வன்முறைகளையும் மற்ற அநீதிகளையும் துரிதமாக சமாளிக்க முடியும் என்று கூற அது கனேடியத் தமிழ்ப் பத்திரிக்கைகளின் சார்ப்புத் தன்மை மிக்க அரசியலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. பெண்கள் சந்திப்பைப் பற்றி கலந்தாலோசிக்கையில் மோனிகா அறிவுத்துறையை ஆண்களுக்கும் உணர்வு பூர்வமான விஷயங்களை பெண்களுக்குமென ஒதுக்கிக் கொடுத்திருக்கும் இந்த சமுதாய அமைப்பை மாற்றியமைக்க பெண்களும் அவர்கள் பிரச்சினைக்குக் காரணமான தேசியம், சாதி, பொருளாதாரம் போன்றவற்றைக் கட்டுடைப்பதில் ஈடுபடவேண்டும் என்றும் அது தொடர்பான உரையாடல்களில் ஈடுபடவேண்டும் என்றும் கூறிக் கொண்டார். சர்வதேச அளவில் தமிழ்ப் பெண்களின் பிரச்சினைகளைக் கலந்தாலோசித்து தகுந்த நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டிய ஒரு தளத்திற்கான செயல் திட்டங்களுடன். முதல் நாள் பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சி முடிவுற்றது

இரண்டாம் நாள் : பெண்கள் சந்திப்பு ஆகஸ்ட் 2

இச்சந்திப்பில் சமூக நிறுவனங்க்களில் பங்கேற்கும் யுவனீதா நாதன் போன்றோரிலிருந்து பல்கலைக்கழகத்தில் விரிவுறையாளராகப் பணியாற்றும் பார்வதி கந்தசாமி வரை பல துறைகளையும் வேறுபட்ட கருத்துக்களையும் கொண்ட பெண்கள் பங்கேற்றனர். சுமதி ரூபன் ஆரம்ப உரையாற்ற ஜானகி பாலகிருஷ்ணன் முதல் அமர்வுக்கு தலைமை வகித்தார்.

யுவனீதா நாதன் வன்முறையும் இரண்டாம் தலைமுறையும் என்ற தலைப்பில் இளம் தலைமுறையினர் வன்முறையை எப்படி அணுகுகிறார்கள் என்பதை தங்கள் தகவல் சேகரிப்பில் கிடைத்த முடிவுகள் மூலம் விளக்கினார். எமது சமூகத்தில் பெண்கள் சுயமாக நிற்பதும் தனித்துவம் பேணுவதும் குறைவு அல்லது சுயமாக நிற்பதற்கு ஒரு தயக்கம் எங்கள் தமிழ் சமூகத்தை பொறுத்தவரை குடும்பம் நிறுவனமயமானது. தமிழர் ஒவ்வொருவருக்கும் குடும்பத்தின் சூழல் என்பது தனிமனிதனுக்கு உரிய மதிப்பை மேம்படுத்துவதாக இருக்கின்றது. ஆகவே குடும்பப் பிரச்சினை காரணமாக குடும்பத்திலிருந்து பிரிந்து வாழ்வதை தவிர்த்து பிரச்சினையின் அந்தஸ்தைப் பெற்றுக்கொள்கின்றனர்.

உள்வீட்டுப் பிரச்சினை மூடி மறைக்கப்பட்டு சமூக கௌரவம் காப்பாற்றப்படுகின்றது. தரவுகளை பகுப்பாய்வு செய்கையில் 65 வீதத்தினர் பௌதீக ரீதியிலான துன்புறுத்தலை மட்டும் குடும்ப வன்முறையாக இனம் கண்டு கொண்டுள்ளதாகவும் தமது பிள்ளைகளை திருத்துவதற்காக அடிக்கலாம் என 70 வீதத்தினர் வெளிப்படுத்தியுள்ளதாகவும் மனைவியின் நடத்தையை திருத்துவதும் நிதிரீதியிலான முடிவை எடுப்பதும் கணவனே என 60 வீதத்தினர் உடன்பட்டுள்ளனர் என்றும் இவ்ஆய்வு அறிக்கை கூறுகின்றது. சென்ற தலைமுறையினர் தங்கள் மனைவிமார்களுடன் வன்முறையில் ஈடுபடுவது இளம் தலைமுறையினரிடம் வன்முறைக்குரிய வாழ்க்கை முறையை உருவாக்குவதால் அவர்கள் பாலியல் வன்முறை, சத்தங்களை கண்டால் பயப்படுவது, விலங்குகளைத் துன்புறுத்துவது போன்றவற்றிற்கு ஆளாவதாகக் கூறினார்.

யுவனீதா நாதனைத் தொடர்ந்து இலங்கை ஜனநாயகக் கூட்டமைப்பின் ஒருங்கேற்பாளரான நிர்மலா ராஜசிங்கம் பேசுகையில் எழுபதுகளில் நடந்த பெண்ணியம் முதல் அலை கோட்பாட்டு ரீதியில் வெள்ளை இனப்பெண்களால் அவர்களுக்காகவே உருவாக்கப்பட்டு பெண்களின் தன்னிலை வேறுபாடுகளான சாதி, இனம், வர்க்கம் போன்றவற்றை மறுத்ததாகக் கூறினார். பெண்கள் அதிகார வர்க்கத்தின் ஆதிக்கத்திற்கு நேரடியாக உடன்படுத்தப்படுகிறார்கள் அதற்கு ஒரு உதாரணம் பிரித்தானியாவில் ஆப்பிரிக்கக்-கரீபிய ஆண்களும், ஆசியப் பெண்களும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். பெண்களின் அரசியலை விளிம்புநிலைக்கும் ஆதிக்கத்திற்கும் வைத்துப் பார்க்க வேண்டும். அது ஒரு கிராமப்புறத்திற்கும் பெரு நகரத்திற்கும் உள்ள இடைவெளியைப் போன்றது என்றார்.

காயத்ரி சக்கரவர்த்தி ஸ்பீவாக்கின் “விளிம்புநிலை மக்கள் பேச முடியுமா? என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டிய அவர் விளிம்புநிலை மக்கள் பேசிக் கொண்டுதானிருக்கிறார்கள் அது ஆதிக்க சாதியினரின் காதில ;தான் விழுவதேயில்லை என்று கூறினார். பல்கலாச்சார அமைப்புகள் நம்மிடையே இனக்கலாச்சார அடையாளங்களை பேணிப் பாதுகாக்க வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்குகின்றன, விளிம்பு நிலையின் வித்தியாசங்களைக் கண்டறிவது எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தது அரசியல் கூட்டமைப்பென்பதும் என்ற கருத்து அவரால் வலியுறுத்திக் கூறப்பட்டது.

தமிழர்களிடையே ஒளிந்து திரியும் பிற்போக்கு மற்றும் மூடப்பழக்கவழக்கங்கள் புகலிடத்தில் வெளிப்படையாக நிகழ்ந்தேறுவதாகவும் பூப்படைவதிலிருந்து இறந்தவர்களுக்கு சாந்தி செய்வதுவரை எல்லாவற்றுக்கும் இங்குள்ளவர்கள் கொழுத்த ஐயர்மார்களின் வாலைப்பிடித்து திரிவதாகவும் அவர் கண்டித்தார். அதைத் தொடர்ந்து பெண்கள் ஏன் கூட்டத்திற்கு போவதை அதிகம் விரும்புவதில்லை என்ற கேள்வியை மாலதி மைத்ரி கேட்க அமெரிக்க மேலை நாட்டு குடும்ப முறைகளுக்கும் தமிழ் மக்களின் குடும்ப முறைக்குமான வித்தியாசங்கள் அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்ததொரு விவாதமாக அது முடிந்தது.

அதை அடுத்து பெண் உடலும் வாழ்வியலும் பற்றி பேசிய ஜோதி பிரபாகரன், “தமிழ் சமூகத்தில் வலுவளர் பெண்களின் சவால்கள் என்ன?’ என்பதைப் பற்றி பேசினார். ஊனம்-உடற்குறை என்பவற்றை செயலிலித்தன்மை என்றுதான் முன்பு பார்த்தார்கள். இன்றும் பெற்றோர்கள் சமூக நிகழ்ச்சிகளுக்கு தங்கள் குழந்தைகளை கூட்டி வருவதில்லை. “உனக்கு கீழே வாழ்பவர் கோடி- நினைத்துப் பார்த்து நிம்மதி கொள்” என்கிற கண்ணதாசனின் வரிகளை நினைவு கூறிய அவர் தனது சுய வாழ்க்கையின் சாதனைகளை பகிர்ந்து கொண்டதுடன் தன்னைப் போலுள்ள பெண்களுக்கு நடக்கும் ஏச்சுப் பேச்சுகளைக் கூறி அழகியல் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. தன்னை அழகாக அலங்கரித்துக் கொள்வது, திருமணம் போன்ற விடயங்களில் தான் மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் தங்களை இழிவு படுத்துகின்ற பரிதாபக் கண்ணோட்டத்துடன் பார்த்துவரும் சினிமா போன்ற ஊடகங்களின் பார்வையை வன்மையாகக் கண்டிக்க வேண்டுமென்றும் கூறினார். கண்பார்வை அற்ற அளவில் மட்டுமே பிரச்சினை கொண்ட ஜோதி தன் உள்ளக் கண் கொண்டு தன் மீது தாழ்வான சுய அபிப்பிராயம் கொண்ட பெண்கள் பலரின் கண்களை திறந்து விட்டார். அவரது கணீர் என்ற குரலும் தன்னம்பிக்கையும் அவரை ஒரு முன்மாதிரியாக நிறுத்திவிட்டது.

இடைவேளைக்குப் பின் நடந்த அமர்வில் கலைவாணி ராஜகுமாரன் என்ற தமிழ்நதி; கவிதைப் “பெண்மொழி” என்ற தலைப்பில் தமிழகத்துப் பெண் கவிஞர்களை பேட்டி எடுத்த வீடியோக் காட்சி காண்பிக்கப்படாததால் தமிழ்நதியின் கவிதைப் புத்தகத்தையும் சிறுகதைப்புத்தகத்தையும் வசந்திராஜா சிறு விமர்சனம் செய்திருந்தார். கவிதைகளில் உள்ள அழகியல், பெண்களின் அரசியல், மொழி நடை என்பவற்றை ஆராய்ந்து ஒரு அழகிய விமர்சனத்தை முன் வைத்தார்.

அவரைத் தொடர்ந்து உரையாற்றிய மாலதி மைத்ரி பண்பாட்டு ஆக்கமும் மறு ஆக்கமும் என்ற தலைப்பில் மனு தர்மத்தின் பல அத்தியாயங்களைக் கோடிட்டுக்காட்டி எப்படி அது இன்றைய வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக சினிமா, இலக்கியம் போன்றவற்றிலும் தனிமனித குடும்ப அமைப்பு முறையிலும் கையாளப்படுகிறதென்று விரிவுரையாற்றினார். பௌத்தம், சமணம், மார்க்ஸியம் போன்றவை எப்படி இந்த மனுதர்மத்தால் ஒடுக்கப்பட்டன என்று கூறிய அவர் தமிழ் பண்பாட்டை கட்டமைப்பது எது? தமிழ்கலாச்சாரம் என்பது என்ன? பண்டைய தமிழ்கலாச்சாரம் ஆணாதிக்கத்திலிருந்து வேறுபட்டதல்ல. பரத்தை வழி, பொருள் வழி, போர் வழிப்பிரிவுகளைக் கொண்டதுதான் அது என்று சான்றுரைத்தார்.

மாலதி மைத்ரியைத் தொடர்ந்து உரையாற்றிய விஜி யுத்தத்தில் பெண்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்றும் இந்த யுத்தங்களுக்குள்ளும் கலாசார அடையாளத்தை சுமக்க வேண்டியவர்களாயும் பெண்களே உள்ளனர். இந்த யுத்தத்தின் விளைவாக கணவனை இழந்த பெண்கள் எமது நாடுகளின் வழக்கப்படி சமூக சடங்குகளில் இருந்து ஒதுக்கப்படுவதோடு ஆண்களின் தேவையற்ற தொந்தரவுகளுக்கும் ஆளாகின்றனர்.இவ்வாறு சமூக பொருளாதார கலாசார ரீதியில் ஒதுக்கப்பட்டு சொத்தற்று போசாக்கு சுகாதார வசதிகள் கிடைக்காது பௌதீக உளவியல் தாக்கத்திற்குபெண்கள் அதிகம் உள்ளாகிக் கொண்டே உள்ளனர். அடுத்து இந்த யுத்த சூழலில் இடம் பெறும் பொருளாதாரக் கொள்கைகள், முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் இன்னொரு பக்கத்தில் ஏற்படும் பாதிப்புக்கள் முக்கியத்துவப்படுவதுமில்லை.

இவர்களின் உரையைத் தொடர்ந்து அதன் பின்னூட்டமாக குறமகள் ஆறுமுக நாவலரின் படைப்புகள் மனுதர்மத்தைச் சார்ந்திருப்பதாகவும் அதைப் படித்தால் தமக்கு கோபமேற்படுவதாகக் கூற தமிழ் விடுதலை இயக்கங்களில் பெண்களின் தலை மொட்டையடிப்பது குறித்தும் அதே போலவே குடும்பப் பெண்கள் கணவனை இழக்கும்போது அவர்களை வலுக்கட்டாயமாக இறுக்கிப் பிடித்துக் கொண்டு தாலி அறுக்கும் நிகழ்வு புலம் பெயர் தமிழரிடையேயும் கூட நடந்து வருவதாகவும் பேசப்பட்டது.

ஆண் மனோபாவத்தின் கண்டனக் குரலாக பேசிய தமிழ்நதி (கலைவாணி ராஜகுமாரன்) “மனு விபச்சாரிகள் தீண்டப்படாதவர் என்று சொன்னானால் அது முதலுக்கே மோசம் விளைவிக்கிற முட்டாள்தனம்” என்று கூறினார். இவர்களின் நிகழ்வுக்கு ராஜினி தாசீசியஸ் தலைமை தாங்கி நிகழ்ச்சிகளையும் விவாதங்களையும் ஒழுங்கமைத்தார்.

மூன்றாம் அமர்வுக்கு நெறியாள்கை செய்தவர் நிவேதா. குறமகளின் “பெண் எனும் ஆளுமை” பற்றிய தனது உரையில் சங்கப்பாடல், எரிக் எரிக்ஸன், ஃப்ராய்டு போன்றவர்களை மேற்கோள் காட்டி பெண்கள் மிக சீக்கிரமாகவே முதிர்ச்சியடைந்துவிடுகிறார்கள். “உடம்பால் அழிவர், உயிரால் அழிவர்” என்றதொரு திருமூலர் கூற்றைவைத்துப் பார்க்கையில் “மெல்லியலாள்” எனும் நவீனக் கோட்பாடு பெண்களை தனது உடல் அமைப்பு குறித்த அளவு கடந்த பிரஞ்ஞைக்கு இ,ட்டுச் சென்று தாழ்வு மனப்பான்மையால் ஆகாரக் குறைப்பு (னநைவiபெ) மேற்கொள்ள வைத்து மருத்துவ ரீதியான பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்கிறது என்று சொன்னார். சீதை, நளாயினி போன்ற ராசாத்திமார்களே அவ்வளவு துன்பங்களுக்கு ஆளானபோது சாதாரண பெண்களின் நிலை என்னவாக இருந்திருக்கும் என கேட்ட அவர் அதே சமயம் ஜெர்மானிய சோஸலிஸ பெண்ணியவாதிகள் சர்வதேச பெண்கள் தினத்தை முதன் முதலில் வலியுறுத்திய கிளாரா ஜெட்கின், போலந்து நாட்டைச் சார்ந்த ரோஸா லக்ஸம்பர்க் போன்றவர்களின் சாதனைகளைப் பெண்கள் கருத்திலெடுத்துக் கொள்ளவேண்டுமெனக் கூறினார்.

அவரைத் தொடர்ந்து சுதா குமாரசாமி கலாச்சாரக் கைதிகள் என்னும் பொருள் பட உரையாற்றினார். அவர் தனது உரையில் பண்பாடு கலாச்சாரம் என்பவற்றை பெண்களே காவித்திரிவதாகவும் நாம் எங்கிருக்கின்றோம் நாம் பல்கலாச்சாரங்களில் வாழ்பவர்கள் புலம்பெயர்ந்தும் பெண்களே இன்று கலாச்சார காவிகளாக பாவிக்கப்படுகிறார்கள் என்று கூறினார். பெண்கள் மதம், திருமணம் போன்ற அடையாளங்களுக்குள் தங்களைப் பொருத்திப் பார்க்கும் கட்டாயத்திற்குள் தள்ளப்படுகிறார்கள் என்றும் எந்த ஒரு சமுதாயத்தையும் பற்றி அறிந்துகொள்ள ஒரு தனி மனிதரின் கருத்தை நாடலாகாது. கலாச்சாரம் என்பதை ஒரு பெட்டியில் இருத்தி வைக்க முற்படுவது முட்டாள்தனம். ஆற்று நீர் போல் அது செல்லும் வழியுடன் சென்று தனது வடிவத்தை மாற்றிக் கொள்ளக் கூடியது என்று அவர் கூறினார்.

அவரது உரையைத் தொடர்ந்து றஞ்சி பெண்கள் சந்திப்பு ஒரு மீள்பார்வை என்ற தலைப்பில் 1990ம் ஆண்டிலிருந்து 26வது பெண்கள் சந்திப்புவரை நடந்த நிகழ்வுகளையும் அதில் பங்கு பெற்ற கருத்தாக்கங்கள், விருந்தினர்கள் ஆகியவற்றையும் கணிணி பிம்பங்களாக திரையிலிட்டு விளக்கினார். பெண்கள் சந்திப்பு எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்றும், சந்திப்பின் வளர்ச்சி பற்றியும் அதில் கலந்து கொண்டவர்கள் பற்றியும் கூறியதோடு மட்டுமல்லாமல் இச்சந்திப்பை ஆரம்பிப்பதற்கு ஆண்களின் உதவியோ அல்லது ஆலோசனையோ பெறப்படவில்லையென்றும் முழுக்க முழுக்க பெண்களால் சுயாதீனமாக இப்பெண்கள் சந்திப்பு ஆரம்பிக்கப்பட்டது என்றும் கூறினார்.

பெண்கள் சந்திப்புகளில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் பற்றியும் பெண்ணியம், தலித்தியம் மட்டுமன்றி போர், போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள், கணவனையிழந்த பெண்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பெண்கள் சிறுமிகள் மேல் பிரயோகிக்கப்பட்டுவரும் பாலியல் வன்முறைகள், சுனாமி போன்ற பல பிரச்சினைகளை இதுவரை நடைபெற்ற 26 பெண்கள் சந்திப்புகளிலும் விவாதங்களுக்குட்படுத்தி நாம் கலந்துரையாடியிருக்கின்றோம். பெண்களின் மேல் பிரயோகிக்கப்பட்ட அனைத்து வன்முறைகளுக்கெதிராகவும் பலத்த கண்டனங்களை தெரிவித்தது மட்டுமல்லாமல், அவற்றுக்கு எதிரான பல தீர்மானங்களையும் கண்டனங்களையும்கூட நாம் உரிய நேரத்தில் பல தலைவர்களுக்கும் பெண்கள் அமைப்பினருக்கும்; அனுப்பி வைத்துள்ளோம். தொடர்ந்தும் எமது வேலைதிட்டங்களை நாம் முன்னெடுத்து செய்து வருகின்றோம். என்று கூறிய அவர் உமாவின் ஒத்துழைப்புடன் தான் இந்த பெண்கள் சந்திப்பின் கணணி ஆவணத்தை செய்ததாகவும் கூறினார்.

சந்திப்பில் தனது ஒவிய கண்காட்சியை முன்வைப்பதாக இருந்து முடியாமல் போன காரணத்தால் பார்டிசிபேடரி இன்ஸ்டலேஷன் (Pயசவiஉipயவழசல ஐளெவயடடயவழைn) எனப்படும் நிர்மாணக்கலையை அரங்கில் நிறுவிய மோனிகா இலங்கையில் இதுவரை நடந்த படுகொலைகள் பற்றி ஒரு பட்டியலிட்டு (வெலிகடை, கொக்கட்டிச் சோலை, செம்மணி, பிந்துநுவேவ, கந்தன் கருணை, காத்தான்குடி இஸ்லாமியர் கொலைகள், 1986 டெலோ, வெறுகல், ஜே.வி.பி,யின் 6000க்கும் மேற்பட்ட கொலைகள்) இக்கொலைகளில் மாண்டவர்கள் அனைவருமே தாய்மார்களால் பத்து மாதம் சுமந்து பெறப்பட்டவர்கள். தமிழர்களாயினும், இஸ்லாமியராயினும், சிங்களவராயினும் எல்லார் உடலிலும் ஓடுவது ஒரே ரத்தம்தான். எனவே, பெண்களாகிய நாம் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இவற்றுக்கெதிரான நமது கருத்துக்களை நீண்ட தாள்களில் எழுதி அவரது ஓவியத்துடன் ஒரு நிர்மாணக் கலை வடிவமாக வைப்போம் என்று கூற சபையில் எஞ்சியிருந்த அனைவரும் தமது எதிர்ப்பையும் கருத்தையும் எழுதி கையொப்பமிட்டனர்.

மோனிகாவின் பட்டியல் எல்-டி.டி.டியினருக்கு பாரபட்சமாக இருப்பதாகவும் அவருக்கு நடுநிலை பொருந்திய ஒரு பட்டியலைத் தான் அனுப்பப்போவதாகவும் அதற்கு மோனிகா தனது மின்னஞ்சல் முகவரியை தருமாறும் தமிழ்நதி (கலைவாணி ராஜகுமாரன) கேட்டுக்கொண்டார் .

27 வது பெண்கள் சந்திப்பை பொறுப்பெடுத்து நடத்திய சுமதிரூபனுக்கும் மற்றும் பல உதவிகளை செய்த அனைத்து தோழிகள் தோழர்களுக்கும் நன்றி கூறப்பட்டதுடன் பெண்கள் சந்திப்பு ஆகஸ்ட் 2ம் திகதி முடிவடைந்தது.

மூன்றாம் நாள்: 3 ஆகஸ்ட் 2008 - இந்நாள் கனேடிய இலக்கியச் சந்திப்பு என்ற தலைப்பில் கனேடிய இலக்கிய வட்டத்தினர் வெளி நாடுகளிலிருந்து வந்துள்ள இலக்கிய ஆர்வலர்களின் பேச்சுக்களிலும் உரையாடல்களிலும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஆண்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அதே நேரம் வெலிக்கடை சம்பவம் குறித்த ஒரு கவிதை, ஒரு பேழையில் கத்தியும், உதிரம்(வண்ணம்) தோய்ந்த ஒரு பஞ்சுத்துண்டு, சிறையை உடைக்க முற்படும் ஒருவனின் ஓவியம், ஒரு மரத்தில் தொங்கவிடப்பட்ட முகமூடி, இரு புறமும் வன்முறைக்கு எதிராக எழுதப்பட்ட சந்திப்பினரின் வசனங்கள் போன்றவற்றுடன் மோனிகாவின் நிர்மாணக்கலை அரங்கில் வைக்கப்பட்டிருந்தது.

சுமதி ரூபன் தனது ஆரம்ப உரையுடன் கூட்டத்தை தொடங்கி வைத்தார். பார்வதி கந்தசாமி தலைமையில் முதல் அமர்வு தொடங்கியது. நிகழ்ச்சியின் முதல் வாசிப்பாளராக ஜானகி பாலகிருஷ்ணன் பெண்கள் அரசியலில் பிரசன்னமாகல் என்ற தலைப்பில உரையாற்றினார். அரசியலில் பெண்கள் பங்கேற்க வேண்டிய அவசியம் கனேடிய அரசியலில் பங்கேற்கும் பெண்களின் இடர்பாடுகள் போன்றவை குறித்து பேசினார்.

அவரைத் தொடர்ந்து இலங்கையைச் சேர்ந்த நிவேதா உரையாடும் போது ஒரு பெண் வாசகர் மீது அதீதமான அழுத்தத்தைப் பிரயோகித்து அவளைப் பலவீனமானவளாக்குகின்றன. மேலும், அவள் ஒரு பெண்ணாகவல்லாது ஆணாக அப்பிரதியை அணுகவும் நிர்ப்பந்திக்கின்றன. இச்சந்தர்ப்பத்தில் தான் ஒரு பெண்ணாய் படைப்பொன்றை எதிர்கொள்ளவேண்டியதன் தேவையும், அதன் அசாத்தியமும் புலப்படத் தொடங்குகிறது. பழைய பிரதிகளைக் கலைத்துப்போட்டு அவற்றை மீள்வாசிப்புக்குட்படுத்தவேண்டியது இவ்விடத்தே அவசியமாகின்றது. இந்த மீள்வாசிப்பென்பது என்ன, அதை எவ்வாறு மேற்கொள்வதென்பது ஒரு முக்கியமான, ஆராயப்படவேண்டிய விடயம்.

ளுரளயn ளுஉhiடியழெகக மேற்கொள்ளும் மற்றுமொரு குறிப்பிடத்தக்க அவதானிப்பு, எழுத்தறிவுக்கும் பெண்களின் சுயசார்புக்குமிடையிலான முரண்பாடு. மேலோட்டமான நோக்கில் எழுத்தறிவு அல்லது கல்வியறிவு ஒரு பெண்ணின் தன்னம்பிக்கைக்கும் தற்றுணிவுக்கும் வழிவகுக்கிறதென்ற முடிவை வந்தடைகிறோம் என்றார். ஒஸாமா திரைப்படத்திலிருந்து சில காட்சிகளைக் காட்டி (அதில் தன்னை வைத்துப் பூட்டிக் கொள்ளக்கூடிய அறையின் சாவியைத் தேர்வு செய்யும் உரிமை மட்டுமே ஒரு வயோதிகனுக்கு வலுக்கட்டாயமாக மணந்துவைக்கப்படும் பெண்ணுக்கு அளிக்கப்படுகிறது) ஆணாதிக்க சமுதாயத்தின் நெறி முறைகளை மாற்றியமைக்கும் சுதந்திரம் பெண்களுக்கு வாய்க்காதபோது அதில் பொருந்தி நிற்கக் கூடிய தனது அளவான உரிமைகளை மட்டுமே தேர்வு செய்யவும் அதனளவில் மகிழ்ச்சி கொள்ளவும் பெண்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்றார். இவர் உரையாடிய விதம் எல்லோராலும் பாராட்டப்பட்டது என்பதை இங்கு குறிப்பிட்டேயாகவேண்டும்.

நிவேதாவைத் தொடர்ந்து இரண்டாம் அமர்வுக்கு ஜெபா தலைமை தாங்கினார். “முடிச்சுக்கள் அவிழ்க்கப்படுமா?“ என்ற தலைமையில் பேசிய பார்வதி கந்தசாமி கனடாவில் இன்று வாழும் அகதிகள் கலாச்சாரத்தில் சிக்குறுவதாகவும் வன்னி, யாழ்ப்பாணத்தில் காணப்படாத அளவு ஐயர்மார்கள் புலம்பெயர் சூழலில் தென்படுவதாகவும் அழகுராணிகள் கலாச்சாரம் தொடர்வதுடன் குடும்பம் சார் பாலியல் வன்முறை இங்கும் தொடர்வதாகவும் கூறினார். “போர்னோ“ என்றழைக்கப்படும் பாலியல் படங்களைக் கண்டு களிக்கும் ஆடவர் தமது மனைவிமார்களை அதற்கேற்றவாறு தகவமைத்துக் கொள்ள வற்புறுத்தி வன்புணர்ச்சி செய்வதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்தார் அவர்.

அவரைத் தொடர்ந்து பேசிய நிர்மலா ராஜசிங்கம். காலனீயத்திலிருந்து தனது உரையைத் தொடர்ந்த அவர் பிரித்தானியருக்கு எதிராக எழுந்ததுதான் சிங்கள பௌத்த தேசியவாதம். தேசியத்தின் எல்லைகளை வெறும் வரைபட(phலளiஉயட) எல்லைகளாக மட்டுமல்லாமல் இன(நவாniஉ) ரீதியான ஒன்றாகப் பார்க்கவேண்டும் என்று குறிப்பிட்டார். அத்தகைய வரைபடத்தில் பெண்கள் எப்படி சேர்த்துக் கொள்ளவும் உபயோகப்படுத்தவும் படுகிறார்கள், எளிதில் மக்கள் ஆதரவைப் பெறும் கருவியாக மொழிசார்ந்த தேசியத்தின் செயல்பாடு பற்றி கூறிய அவர் போர் சூழலில் பெண்களின் தன்னிலை எவ்வாறு பாதிக்கப்படுகிறதென்று கூறி ஐPமுகு ஐச் சார்ந்த ஒரு போர்வீரன் பெண்களைப் பலாத்காரம் செய்வது போரில் களைப்படைந்த நேரத்தின் கேளிக்கைகளில் ஒன்று என்ற கூற்று உடைந்த பனைகள் என்ற மனித உரிமைக் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறினார். துருக்கியைச் சார்ந்த பி.கே.கே, எரித்திரிய, கொலம்பிய படைகளில் பாலியல் வேறுபாடுகள் இல்லை. அது போலவே ஒரு போலித்தனமான பாலியல் நடுவுநிலையை டுவவந கடைபிடித்து வருகிறது. அங்குள்ள பெண்கள் சிறிதும் முற்போக்கு சிந்தனைகளற்றவர்கள். அவர்களது கவிதைகளிலேயே அவர்கள் தாங்கள் மரணத்தை மணந்ததாகக் குறிப்பிடுகிறார்கள். இயக்கத்திலிருந்து வெளியேறிய பின் அவர்கள் எளிதில் கலாச்சார அடையாளத்துக்குள் பொருந்தி குடும்ப அமைப்பினுள் ஐக்கியமாகிவிடுகிறார்கள் என்று கூறினார்.

அவரது உரையைத் தொடர்ந்து நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. இக்கூட்டம் முழுவதுமே டுவுவுநு யைதாக்கும் முகமாக அமைந்துள்ளது என்ற குற்றச்சாட்டை தமிழ்நதியும் அவரது கணவரும் முன் வைத்தார்கள். பெண் போராளிகளை அறிவிலிகள் என்று நிர்மலா குறிப்பிட்டதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த குறமகள் அவர்களை பயிற்றுவித்தவர் என்ற வகையில்; தான் அந்த வாதத்தையும் வார்த்தையையும் ஏற்கமுடியாதெனக் கூறினார்.

உணவு இடைவேளை முடியும்வரை விவாதங்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தன. பெண்கள் எந்த இயக்கமும் சாராதவர்களாக தங்களின் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகளை (அது யாராக இருந்தபோதும்) எதிர்கொள்ளும் ஒரு தளமாக இச்சந்திப்பு தொடர வேண்டும் என்று அங்கலாய்த்தவர்கள் அங்கும் இங்கும் புலம்பிக் கொண்டு திரிந்தனர்.

மூன்றாவது அமர்வாக மைதிலியின் தலைமையில் மோனிகா காட்சி அரசியலில் பெண் உடல் என்னும் கட்டுரை வாசித்தார். ஓவியம், புகைப்படம் போன்ற காட்சித் தளங்களின் தகவமைப்புகளை (உழஅpழளவைழைn யனெ கசயஅந) மறு வாசிப்பு செய்வதன் காட்சி அரசியலை அடையாளம் காணலாம் என்று கூறிய அவர் உடையவிழ்ப்பு, நிர்வாணம் போன்றவற்றின் வேறுபாடு ஆண் படைப்பாளிகளுக்கும் பெண்படைப்பாளிகளுக்குமிடையே உள்ள வேறுபாடு போன்றவற்றை ஓவியங்கள் ஊடாக விளக்கினார்.

அதைத் தொடர்ந்து பேசிய மாலதி மைத்ரி “வன்கொடுமையே வாழ்க்கையின் அறமாக“ என்ற தலைப்பில் பல இனங்களில் மரபு ரீதியாக பாலியல் வேட்கைக் கட்டுப்பாட்டிற்காக பெண்களுக்கு இழைக்கப்படும் உடல் ரீதியான வன்முறைகளைக் குறிப்பிட்டு இந்தியாவிலும் மனுவின் பெயரால் நடைபெறும் பெண்ணடிமைத்தனங்களைப் பற்றிக் கூறினார். பெண்படைப்பாளிகளுக்கு ஆண்படைப்பாளிகளே எதிரிகளாக இருப்பதாகவும் பெண் தனது உடல் குறித்து எழுதுவதை ஆண் சமூகம் ஏற்க முடியாமல் கொச்சைப்படுத்துவதையும் மிகவும் வன்மையாக்க் கண்டித்தார். அதே நேரம் ஆண்படைப்பாளிகள் பெண்களின் பெயரில் ஒளிந்து கொள்வதன் அர்த்தம் தான் என்ன என்ற கேள்வியையும் எழுப்பினார். ஆண்கள் பெண்கள் பெயரில் எழுதுவதை தன்னால் சகித்துக் கொள்ள முடியாது என்றார் அவர்.

அவரைத் தொடர்ந்து பேசிய தேவதாஸ் இன்றைய இலங்கையில் தலித்துகளின் நிலைமை முன்பிலிருந்து சிறுதும் மாற்றமடையாமலிருப்பதாகவும் அதே ஆதிக்கசாதி மனப்பான்மை பல்லாயிரக்கான மைல்கள் வந்த பின்னரும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திலும் தலைவிரித்தாடுவதாகவும் கூறினார். இன்றும் தண்ணீர் காவிவர இருபது மைல்தூரம் நடக்க வேண்டிய நிலை தன் தாய் நாட்டில் இருப்பதாகக் கூறிய அவர் தலித்துகளை தீண்டத்தகாதவராய் பார்க்கும் தமிழ்தேசியம் தலித்துக்களுக்கு தேவையில்லை என்றார். அவரிடமும் கேள்விகள் கேட்கப்பட்டன. ஏப்போது நீங்கள் இலங்கை சென்றீhகள். துற்போதுள்ள நிலமை பற்றி உங்களுக்குத் தெரியுமா? கேட்கப்பட்டது.

நிகழ்ச்சியின் கடைசி அமர்வாக கவிஞர் தமிழ்நதி தமிழ் பெண் கவிஞர்களை பேட்டி கண்ட வீடியோ படக்காட்சி காட்டப்பட்டது. ஒலிப்பேழை பிழை, திருத்தம் போன்றவற்றில் ஏற்பட்ட தடங்கலால் மாலதி மைத்ரியின் பேட்டி மட்டுமே திரையிடப்பட்டது.

நான்காம் நாள்: பங்கேற்பாளர்களின் வருகை தாமதமானதாலும் சில சிக்கல்கள் காரணமாகவும் நான்காம் நாள் நாடக நிகழ்வு டொரண்டோ ஃபேர் வியூ ப்ரிவ்யூ தியேட்டரில் ஒரு மணி நேரம் தாமதமாக ஆரம்பமாகியிருந்தது. முதல் நாள் இலக்கியச் சந்திப்பிற்கு வருகை தந்திராத பலர் நாடகத்திற்கு வருகை தந்திருந்தனர். முதலில் சுமதி ரூபனின் “அணங்கு“ என்ற நாடகமும், அதைத் தொடர்ந்து நீரஜா ரமணியின் “கைம்பெண்“ என்ற நவீன நாட்டியமும் இடம் பெற்றன. மூன்றாவதாக நடைபெற்ற பார்வதி கந்தசாமியின் காமதேனு நீ எனக்கு நாடகத்தில் எல்லா வயதினரும் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து சத்யாவின் “பெண் முகம்-கவிதைகளினூடாக“ என்ற கவிதை வாசிப்பு. நிகழ்வைத் தொடர்ந்து நிகழ்ச்சியை நிறைவு செய்யும் நாடகமாக சுமதி சிவமோகனின் “மௌனத்தின் நிழல்கள்“ என்ற நாடகம் அரங்கேறியது. இந்நாடகத்தில் தர்சனா, நிர்மலா பங்கு பற்றியிருந்தனர். இந்த நாடக நிகழ்வுகள் தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் நடந்ததென்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு:- மோனிகா (அமெரிக்கா) றஞ்சி (சுவிஸ்)

மோனிகாவின் தனிப்பட்ட குறிப்பு: பல வருடங்களாக எக்ஸில், ஊடறு, மை மற்றும் பெண்கள் சந்திப்பு மலர்களில் எழுதி வரும் நான் புலம் பெயர் தமிழ் நண்பர்கள் பலருடன் கடந்த பத்தாண்டுகளுக்கு மேல் பழகி வருகிறேன். இது நான் கலந்து கொள்ளும் முதலாவது பெண்கள் சந்திப்பு.

தாய் நாட்டின் துப்பாக்கி குண்டுகளுக்கிடையேயும் அவலமான போர்ச் சூழலிடையேயும் நடந்தேற முடியாத பல கருத்து பரிமாற்றங்களுக்கும் துன்பம் நேர்கையில் ஒருவருக்கொருவர் தோள் கொடுக்கும் வசதி வாய்ப்புகளும் இங்கு அவர்களிடையே நான் காண்கிறேன். இனம், சாதி, மொழி ஆதிக்கங்களிலிருந்து விடுபட்டு சுதந்திரத்தை சுவாசிக்க கற்றுக் கொண்ட நாம் எடுத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை என்பதைப்போல் நம்மை இயக்கங்களிடமோ அல்லது அரசாங்கங்களிடமோ அடையாளப்படுத்திக் கொண்டு அவதூறுகளை அள்ளி வீசித் திரிவதால் அகப்பையில் ஒன்றும் கிட்டப்போவதில்லை. ஏற்கனவே ஆயுதத் தொழிலில் ஆதாயம் கண்டு கொண்டிருக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளும் புலம் பெயர உதவி செய்யும் இடைத்தரகர்களும் நமது பிரச்சினைகளைக் காரணம் காட்டி வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நாம் சிண்டைப் பிடித்துக்கொள்வது அவர்களுக்குத் தான் சாதகமாக அமையும்.

இச்சந்திப்பின் சிறப்பு பற்றி நான் முன்பே கூறியபடி பல தரப்பட்ட குரல்களின் இருப்பு. இச்சந்திப்பை கொச்சைப்படுத்த சில ஆணாதிக்கவாதிகளும் ஆணாதிக்க கருத்துக்களை வரிந்துகட்டிக்கொண்டு நிற்கும் பெண்களும் கொச்சைப்படுத்த முயலுவது வேதனையைத் தருகிறது. பெண்ணியம் என்பது சாதியம், தேசியம், வர்க்கத்திற்கு அப்பாற்பட்டதல்ல. அதனை இந்த எல்லாத் தளங்களிலிருந்தும் ஆராய்வது அவசியம் என்றே நான் கருதுகிறேன்.

மோனிகா

Pin It