‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் 28-09-2014 அன்று ஒளிபரப்பான ‘அக்னிப் பரீட்சை’ நிகழ்ச்சியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பதில்கள்.

பேட்டி கண்டவர் தலைமை செய்தியாளர் மு.குணசேகரன்.

கேள்வி : செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் என்ற ஒரு விண்கலத்தை அனுப்பியிருக்கிறார்கள்;மங்கள்யான் செவ்வாய் கிரகத்திற்கு செல்வது என்பது, விஞ்ஞான வளர்ச்சியில் மேலை நாடுகளோடு போட்டிப் போட்டு கொண்டு இந்தியா வளர்கிறது என்று விஞ்ஞானிகளைப் பாராட்டி பேசி வருகிறார்கள்; செவ்வாய் தோஷம் என்பதை நம்புபவர்களும் இந்தியாவில் தான் அதிகம் பேர் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்; விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிற அளவிற்கு, விஞ்ஞான பூர்வமாக சிந்திக்கும் தன்மை மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா?

பதில் : இல்லை என்பதைத்தான் இவைகளெல்லாம் வெளிப்படுத்துகின்றன; எடுத்துக்காட்டாக, நம் நாட்டில் அறிவியல் அறிவுக்கு ஒன்றும் குறை வில்லை. ஆனால் அறிவியல் மனப்பான்மை இல்லை என்பது தான் நமக்குள்ள குறை. அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடாமல், சோதிடம் என்ற போலி அறிவியலால் ஏற்கனவே இராகு, கேது என்ற இரண்டு கோள்கள் இல்லை என்று சொல்லியாகி விட்டது; அதன் பின்னரும் சோதிடம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சூரியன் என்பது ஒரு கோள் (கிரகம்) அல்ல;அது ஒரு நட்சத்திரம் என்பதும் அறிவியல் பூர்வமாக தெரியும், ஆனால் இன்னும் சூரியனை ஒரு கிரகமாகவே வைத்துக் கொண்டு சோதிடம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சந்திரன் என்பது ஒரு கோள் அல்ல; அது ஒரு துணைக் கோள் என்பதும் தெரியும், ஆனாலும் கோளாக வைத்துக்கொண்டே சோதிடம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதே போல சோதிடம் என்பது முற்றும் முழுதாக, பூமி நடுவில் இருப்பதாகவும் சூரியன் உள்ளிட்ட கோள்கள் பூமியை சுற்றி வருவதாகவும் ஒரு காலத்தில் நம்பப்பட்டது. ஆனால் ஒரு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே இது பொய் என்று மாற்றி, ஜியோ செண்ட்ரிக் (Geo-centric) முறையில் பூமியை மையமாக வைத்து சுழற்சி முறையைக் கணக்கிட்டதற்கு மாறாக, புவிமையக் கோட்பாட்டுக்கு மாறாக,இப்போது ஹீலியோ என்று சொல்லி சூரியனை மையமாக வைத்து ஞாயிறு மையக் கோட்பாடு வந்து விட்டது. கோபர் நிக்கஸ் காலத்தில் வந்து இவ்வளவு காலம் ஆகிவிட்டது. இது இங்கு இன்னும் வந்து சேரவில்லை.

சாதாரண மக்களிடம் மட்டுமல்ல; செவ்வாய் கோளுக்கு மங்கள்யான் அனுப்பியவர்கள் கூட சோதிடத்தை நம்பி, நல்ல நாள் பார்த்து புறப்படும் நாளை வைப்பதும், அதன் தலைவர் திருப்பதி உண்டியலில் போய் காணிக்கை போடுவதும் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது என்பது, அறிவியல் அறிவு இருக்கிறதே தவிர அறிவியல் மனப்பான்மை வளரவில்லை என்பதைத் தான் காட்டுகிறது. அறிவியல் அறிவு எப்போதும் நாட்டை முன்னேற்றி விடாது. அறிவியல் மனப்பான்மையோடு சிந்தித்தாலும் செயல்பட்டாலும் தான், சமூகத்தை முன்நகர்த்தி செல்ல முடியும். அறிவியல் மனப்பான்மை தேவையானது;ஆனால் இப்போது அது நம்மிடையே இல்லை என்பது உண்மை.

கேள்வி : பெரியாரின் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்திருக்கிறீர்கள்; அவர் இறந்து (1973-இல்) இத்தனை ஆண்டு காலம் ஆகிவிட்டது. இன்றைக்கு பெரியாரின் அடிப்படை கொள்கைகளான ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, மூட நம்பிக்கை எதிர்ப்பு இது மாதிரியான விசயங்களில் தமிழ் சமூகத்தில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது? இந்த கொள்கைகள் எந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறது?

பதில்: பெரும்பாலும் கொள்கைகளை முன்னெடுத்து செல்வது இயக்கங்கள்தான்; கட்சிகள் அல்ல. கட்சியை தலைமை ஏற்று நடத்துபவர்களும் அரசியல் தெரிந்தவர்களாக–கொள்கைகள் புரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் நியதி, பொதுவான நியதி. ஆனால் இங்கு தமிழ்நாட்டைப் பொருத்தவரை அல்லது இந்தியாவைப் பொருத்தவரை மக்கள் மெல்ல மெல்ல அறிவியலை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். ஜாதியைப் பற்றிய பார்வை, நேரடியாக விவாதிக்கவில்லை என்றாலும் ஜாதியைக் கடந்து பலவற்றை சிந்திக்கிறார்கள் செய்கிறார்கள்;அதில் தடை ஏதும் இல்லை. ஆனால் கட்சியின் தலைவராக இருப்பவர்கள் ஜாதியை, தங்களுக்கு ஏதாவது பயன்படுத்திக் கொள்ள முடியுமா, அல்லது மத நம்பிக்கையை மக்களிடையே தூண்டிவிட்டு அதனால் ஆதாயம் அடையலாமா என்பதை செய்து கொண்டே வருகிறார்கள். ஆக ஜாதி உணர்வும், மத உணர்வும் மங்காமல் இருப்பது போல தெரியும்; ஆனால் கல்லூரிகளிலோ, பணியாற்றும் இடங்களிலோ சென்று பார்த்தாலே தெரியும், அவர்கள் சாதரணமாக ஜாதியைக் கடந்து செல்கிறார்கள்; மதங்களைக் கடந்து திருமணங்கள் நடக்கின்றன. முன்பெல்லாம் இசுலாமியர்களை தீண்டதகாதவர்களைப் போல் கருதி ஒதுங்கியிருந்த காலங்கள் உண்டு,ஆனால் இப்போது இயல்பாக அவர்களின் நிகழ்வுகளுக்கு போகிறார்கள் - வருகிறார்கள். பொது வாழ்க்கையில் முன்னிலையில் இருப்ப வர்கள் தான் ஜாதி - மத நம்பிக்கைகளைத் தூண்டு கிறார்கள் அல்லது குறையாமல் பார்த்துக் கொள் கிறார்கள் என்று சொல்லலாம். சாதராண மக்களுக்கு அந்த நம்பிக்கையின் அளவு குறைந் திருக்கிறது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

கேள்வி : ஜாதி மறுப்பு என்ற ஒன்றை, ஜாதிகளைக் கடந்து திருமணம் செய்து கொள்வது–திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது என்பதில் மிகப் பெரிய வெற்றியை நாம் (தமிழ்நாடு) பெற்றுவிட்டோம் என்று சொல்ல முடியாது. தேசிய அளவிலான ஒரு புள்ளி விவரத்தை எடுத்துக்கொண்டாலும்,பஞ்சாப்,கேரளத்தை விட மிகக் குறைவான எண்ணிக்கையில் தான் தமிழ்நாட்டில் கலப்பு திருமணங்கள் நடைபெறுகின்றன. தலித்துக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மான கலப்புத் திருமணங்கள் நடைபெறும் போது மிகப்பெரிய எதிர்ப்புகள் வருவதையும், அதனால் சில மரணங்கள் ஏற்படுவதையும் கூட பார்க்கின்றோம். இது நீங்கள் சொல்வதற்கு மாறுபட்டதாக இருக்கிறதே! பெரியார் கொள்கையின் தோல்வியாக இதை பார்க்க முடியாதா?

பதில் : அப்படி பார்க்க முடியாது. முதலில் அந்த புள்ளிவிவரங்கள் சரியானதா என்பதில் சந்தேகம் உள்ளது. ஜாதி கடந்த திருமணங்கள் நடக்கின்றன;அவற்றைத் தடுப்பதற்கான முயற்சியை மூத்தவர்கள், பெற்றோர்கள் எடுக்கிறார்கள். இளைஞர்கள் மத்தியில் ஜாதி கடந்த சிந்தனை வந்துவிட்டது. ஜாதி கடந்து திருமணங்களை இயல்பாக செய்து கொண்டிருக்கிறார்கள். இத்தனைச் சிக்கல்கள் வந்த பின்னாலும், தருமபுரியில் ஏதோ ஜாதிக் கலவரம் என்று சொல்கிறோம், தருமபுரியில் பல திருமணங்கள் நடந்துவிட்டன. தலித்துகளுக்கும் பிற்படுத்தப் பட்டவர்களுக்குமான திருமணங்கள் அதற்குப் பின்னால் ஏராளமாக நடந்திருக்கின்றன; ஆனால் இவ்வளவு கவனத்தை ஈர்க்கவில்லை. ஏனென்றால் எந்த அரசியல் கட்சியும் போய் அதில் தலையிடவில்லை. ஆக இளைஞர்கள் தாண்டிப் போக முயற்சிக்கிறார்கள்–போய் கொண்டிருக்கிறார்கள். முதியவர்களும் சில சுயநலவாதிகளும் அதை தடுப்பதற்கான முயற்சிதான் நமக்கு வெளியே பெரிதாய் தெரிகிறது என்பது தான் உண்மையே தவிர, ஜாதியத்திற்கு எதிரான கருத்துக்கள் இளைஞர்களிடம் இருக்கிறது என்பது தான் உண்மை.

கேள்வி : படிப்பு வந்தால் ஜாதிப் பற்று போய்விடும்–ஜாதி உணர்ச்சி போய் விடும் என்று சொன்ன காலம் உண்டு;படித்தவர்கள் நிறைந்த சமூகமாக இன்றைய தமிழ்ச் சமூகம் மாறியிருக்கிறது;ஆனால் இவ்வளவு பெரிய வளர்ச்சி வந்தும்,இவ்வளவு பேர் வேலைகளுக்குச் சென்று, உயர் கல்வி பயின்ற பிறகும், சமூகத்தில் ஜாதியின் இறுக்கம்- பிடிப்பு–பற்று என்ற ஒன்று மீண்டும் மீண்டும் ஏதேனும் ஒரு வடிவத்தில் உருவெடுத்துக் கொண்டுதான் இருக்கிறது; இந்தப் பிடிப்பு குறைந்த மாதிரி தெரியவில்லையே?

பதில் : பெரியார் காலத்தையும், இந்த காலத்தையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது. பெரியார் காலம் என்பது போராட்டக் காலம்;அவர் ஒவ்வொரு அடிமைத்தனத்தில் இருந்தும் இந்த சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று போராடினார். பெரியார் காலத்தில் முற்றும் முழுதான இந்து சமுதாயத்தில், பார்ப்பனர்களைத் தவிர அனைவரும் அடிமைத்தனத்தில் இருந்தார்கள்; எனவே பெரியாரோடு இணைந்து நின்று அவர்களும் போராடினார்கள். இப்பொழுது இருக்கும் காலம் அறுவடை காலம். பெரியாரின் போராட்டங்களால் விளைந்த விளைவுகளை இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர் பெற்று தந்த இட ஒதுக்கீட்டின் காரணமாகவோ, அல்லது பல காரணங்களால்,உதாரணமாக கிராமத்தில் இருந்த பார்ப்பனர்கள் நகரம் நோக்கி சென்று விட்டார்கள்; அந்த இடத்தில் போய் பிற்படுத்தப் பட்டவர்கள் இப்போது உட்கார்ந்து கொண்டு விட்டார்கள். ஆனால் அவர்களுடைய (பார்ப்பனர்களுடைய) ஆதிக்கம் என்பது மனதளவில்–உளவியலாக இருந்தது; இவர்கள் (பிற்படுத்தப்பட்டவர்கள்) தங்களுடைய ஆள் பலத்தையும் கொண்டு மசில் பவரையும் வைத்துக்கொண்டு இப்போது ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஆக தாங்கள் இருந்த நிலையை மறந்து விட்டார்கள் என்பது ஒன்று, அல்லது மருமகள் மாமியாராக ஆனால் நடந்து கொள்வதைப் போல் தான், இப்போது பிற்படுத்தப்பட்டவர்கள் போக்கு இருக்கிறது என்பது உண்மைதான். தொடர்ந்து இயக்கங்கள் எடுக்கவேண்டிய தேவை இருக்கிறது. தங்கள் கட்சி நலனுக்காக சுயநல சக்திகள்தான் விடாமல் தூண்டிவிட்டு கொண்டிருக்கிறார்கள். வட மாவட்டங்களில் இல்லாமல் இருந்தது;தென் மாவட்டங்களில் மட்டும் இருந்தது மாறி இப்போது வட மாவட்டங்களிலும் பரவுகிறது. ஒரு சில சுயநல சக்திகள் தங்கள் வளர்ச்சிக்காக செய்கிற ஒரு கேவலமான முயற்சியாகத் தான், நான் இதைப் பார்க்கின்றேன்.

கேள்வி : 69சதவீத இட ஒதுக்கீடு என்று வருகிறபோது, இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கேட்டிருக்கின்றது;எந்த அடிப்படையில் இந்த 69 சதவீதத்தை நீங்கள் நிர்ணயித்தீர்கள்? சமூக ரீதியாக- கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கான கணக்கீடு ஏதேனும் வைத்திருக்கிறீர்களா? என்று கேட்கும் போது, சில இயக்கங்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பை ஜாதிவாரியாக நடத்தி அதற்கான தரவுகளைத் தயார்படுத்த வேண்டும் என்கிறார்கள்; தமிழ்நாட்டில் ஜாதி வாரியான கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வீர்களா?

பதில் : தேவை என்று தான் சொல்லவேண்டியிருக்கிறது. காரணம், நமக்குக் கடைசியாக ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடந்தது 1931ஆம் ஆண்டில்தான். 1941இல் இரண்டாம் உலகப் போர் நடந்தது; எனவே அப்போது கணக்கெடுக்க முடியவில்லை. 1951ஆம் ஆண்டில் அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது; அப்போது இருந்த அரசு ஜாதிவாரிக் கணக்கெடுப்பை வேண்டாம் என்று சொல்லிவிட்டது. பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் அப்போதும் அரசிடம் இல்லை. எனவேதான் அரசியல் சட்டம் 340 ஆவது பிரிவு என்ற ஒரு பிரிவு அவர்களுக்காக ஒரு திட்டத்தை தீட்டவேண்டும் - ஆணையம் அமைக்க வேண்டும் என்று சொல்லியிருந்தது. அது ஒன்றரை ஆண்டுகள் கழித்தும் அமைக்கப்படாதது, அம்பேத்கர் அவர்கள் சட்ட அமைச்சர் பதவியில் இருந்து விலகியதற்கான நான்கு காரணங்களில் ஒன்று. பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக ஆணையம் அமைக்கப்படவில்லை, அவர்களின் மேம்பாட்டிற்கான எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும், பதவி விலகக் காரணமாகக் காட்டிய அம்பேத்கரைத்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமான தலைவராக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர் பதவி விலகிய பிறகுதான் காகாகலேல்கர் குழு என்ற குழுவை அமைத்தார்கள். அவர் குழு ஆராய்ந்து அறிக்கைக் கொடுத்தது, சாதகமானதாக இருந்தாலும் கூட, அந்தக் குழுவின் தலைவர், தனக்கு இதில் உடன்பாடில்லை என்று தனிக் கடிதமாக எழுதினார்; அதனால் நின்று போய்விட்டது. என்றாலும்,அக்குழு கொடுத்த பரிந்துரைகளில் ஒன்று, ஜாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்படவேண்டும் என்பது. பரிந்துரை இருக்கிறது, ஏனென்றால் அது தேவையாக இருக்கிறது.

பின்னால் இவ்வளவு வழக்குகள் நடந்து, மண்டல் குழுவுக்காக இந்திரா சகானி வழக்கில், ஒரு அரசியல் அமர்வு உட்கார்ந்த பின்னாலும் கூட, அதற்கு பின்னால் போன ஒரு வழக்கின் போது இரண்டு நீதிபதிகள் உட்கார்ந்துகொண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு இல்லை; எந்த அடிப்படையில் செய்தீர்கள் என்று சொல்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்கிறார்கள். ஒன்பது நீதிபதிகள் அமர்ந்து கொடுத்த தீர்ப்பைக் கூட இரண்டு நீதிபதிகள் அமர்வு கேள்விக்குள்ளாக்குகிறது! இந்த நிலையில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு இருப்பது என்பதுதான், நாம் குறிப்பிட்ட வகுப்பினர்களுக்கு என்ன செய்ய முடியும்,அவர்கள் வளர்ந்திருக்கிறார்களா இல்லையா என்பதை ஆய்வு செய்து, அவ்வப்போது வளர்ந்த பிரிவினரை நீக்குவதற்கும், வளராத பிரிவினரைப் புதிதாக பட்டியலில் சேர்ப்பதற்கும் வாய்ப்பாக இருக்கும். எனவே ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை என்பது தான் எங்கள் கருத்து.                                             

(தொடரும்)