45 அமைச்சர்களுடன் (23 பேர் கேபினட் அமைச்சர்கள்; 22 இணை அமைச்சர்கள்) மோடி பிரதமராக மே 26 அன்று பதவி ஏற்றார். தமிழகத்தைச் சார்ந்த ஒருவர்கூட ‘கேபினட்’அமைச்சராகவில்லை. வெற்றி பெற்ற ஒரே பா.ஜ.க. வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணன் இணை அமைச்சராகியுள்ளார்.

திருச்சியில் படித்து, டெல்லியில் தங்கிவிட்ட நிர்மலா சீதாராமன் (பார்ப்பனர்) தேர்தலில் போட்டியிடாமலேயே இணை அமைச்சராகி விட்டார்.

சுஷ்மா சுவராஜ், மேனகா, நஜிமா ஹெப்துல்லா, ஹர்ஸ்மிரத் கவுர் பதல், உமாபாரதி,ஸ்மிருதி ராணி என 6 பெண்கள் கேபினட் அமைச்சர்களாகி யுள்ளனர்; மேலே குறிப்பிட்ட பெண் இணை அமைச்சர்.

பா.ம.க. வைச் சார்ந்த அன்புமணிக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் இல்லாமலேயே இந்தூரில் மருத்துவக் கல்லூரி தொடங்க,அமைச்சராக இருந்தபோது அன்புமணி அனுமதித்ததற்காக அவர் மீது சி.பி.அய். வழக்கு உள்ளது. அதன் காரணமாகவே பதவி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பதவி ஏற்பு நிகழ்வில் காவி உடை தரித்த ‘சாமியார்கள்’ முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர். ஒருவர் கையில் தண்டத்துடன் அமர்ந்திருந்தார். முகேஷ், அனில் அம்பானி, கவுதம் அதானி, குமார் மங்கலம் பிர்லா, ஆனந்த் மகிந்த்ரா உள்ளிட்ட தொழிலதிபர்கள் விழாவில் பங்கேற்றனர். காங்கிரஸ் ஆட்சியைவிட மோடி ஆட்சி கார்ப்பரேட்டுகளுக்கு நெருக்கமான ஆட்சியாக இருக்கும் என்பதை விழா உணர்த்தியாக‘டைம்ஸ் ஆப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.

உ.பி.யைச் சார்ந்த 9 பேரும், மகாராஷ்டிராவைச் சார்ந்த 6 பேரும், பீகார், மத்திய பிரதேசம்,கருநாட கத்தைச் சார்ந்த தலா 4 பேரும் அமைச்சராகி யுள்ளனர். கேரளா, மேற்கு வங்கம், நாகாலாந்து, மிசோராம், மணிப்பூர், இமாச்சல், உத்தரகாண்ட், சிக்கிம், திரிபுராவைச் சார்ந்த ஒருவருக்குக்கூட அமைச்சரவையில் இடமில்லை. அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கும் அமைச்சரவையில் இடமில்லை.

“என்ன காரணத்தினாலோ, என்னை அமைச்சராக்கவில்லை; அது மோடிக்கு உள்ள தனித்த உரிமை” என்று தனது வலைதளத்தில் புலம்பியுள்ளார் சுப்ரமணியசாமி. 

ஆர்.எஸ்.எஸ். தத்துவத்துக்கு உயிர்ப் பலியான காந்தியின் நினைவிடத்தில் ஆர்.எஸ்.எஸ். வளர்ப்பான மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

ராஜபக்சே - மோடியின் அழைப்பை ஏற்று பதவி ஏற்பு நிகழ்வில் பங்கேற்றார். இனப் படுகொலை செய்த ராஜபக்சே பங்கேற்கக் கூடாது என்று தமிழ்நாட்டில் மூண்டெழுந்த கடும் எதிர்ப்பை மோடி அலட்சியப்படுத்திவிட்டார். மோடிக்கு புகழாரம் சூட்டி வந்த வைகோ.,டெல்லியில் ராஜபக்சே வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானார்.

ராஜபக்சே வருகையை மோடி அரசு தமிழர் பிரச்சினையைத் தீர்க்கப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிக்கை விட்டுள்ளது தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி! ஞானதேசிகன் - ராஜபக்சே வருகையை ஆதரிக்க அதே கட்சியைச் சார்ந்த ஜி.கே. வாசன் எதிர்த்துள்ளார். தமிழர்கள் எதிர்ப்புக் காரணமாக நடிகர்கள் ரஜினி, விஜய் டெல்லி போகவில்லை என்று செய்திகள் கூறுகின்றன.

ராஜபக்சே வருகையை எதிர்த்து, ஏற்கனவே தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை சுட்டிக் காட்டி, தமிழக முதல்வர் பதவியேற்பு விழாவை புறக் கணித்தார். தனது பிரதிநிதியையும் அனுப்பவில்லை. அமைச்சர் பதவியை எதிர்பார்த்த பா.ம.க. எதிர்ப்பை அடக்கி வாசித்தது. ராஜபக்சேயை மட்டும் அழைத்திருந்தால் எதிர்க்கலாம் என்று விஜயகாந்த் போலி சமாதானம் கூறி டெல்லி போனார்!

உ.பி.யில் அமைச்சராகியுள்ள பஸ்வான் - தலித் தலைவர், ராஜ்நாத் சிங் தாக்கூர்,உமாபாரதி லோத் எனும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர், கல்ராஜ் மிஸ்ரா (பார்ப்பனர்), மேனகா (சீக்கியர்), கங்வார் (குர்மி எனும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்) பாலியான் (ஜாட் சமூகம்) - அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 74 வயது நிறைந்த நஜ்மா ஹெப்துல்லா மட்டுமே ஒரே முஸ்லீம் பிரதிநிதி.

மோடியின் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிர்பேந்திரா மிஸ்ரா, ஓய்வு பெற்ற பார்ப்பனர். அய்.எம்.எப். உலக வங்கியுடன் தொடர்பு கொண்டு நிதியமைச்சகத்தில் பணியாற்றியவர். கார்ப்பரேட் நிறுவனங்களுடன் நெருக்கமானவர். தயாநிதி மாறன் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது நிர்வாக செயலாளராக இருந்தவர். ஆம் ஆத்மி கட்சியை கடுமையாக விமர்சித்து கட்டுரைகளை எழுதியவர்.