மோடி ஆட்சியின் இரண்டாண்டு சாதனைகள் மதவெறி குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதும் அப்பாவிகள் மீது தேச விரோத முத்திரைகள் குத்துவதுமாகவே இருக்கிறது. பொருளாதாரத் துறையிலும் சாதனைகள் ஏதுமில்லை.

‘பார்வையற்றவர்கள் உலகில் ஒற்றைக்கண் கொண்டவரே அரசர்’ என்ற நிலையிலேயே இந்தியாவின் பொருளாதாரம் இருக்கிறது. இப்படி கூறியவர் வேறு யாருமல்ல; ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன். மோடி அறிவித்த பல திட்டங்கள் அறிவிப்புகளோடு முடங்கிப் போய் நிற்கின்றன. இந்து மதத்தின பெயரால் வன்முறைகளை கலவரங்களை நடத்துவோரை பாதுகாப்பதற்கு அரசு எந்திரங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகின்றன.

• மகாராஷ்டிரா மாநிலம் மலேகான் நகரில் கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பில் ரம்ஜான் தொழுகையை முடித்துவிட்டு வந்த 7 அப்பாவி முஸ்லிம்கள் பலியானார்கள். 80 பேர் காயமடைந்தனர். வழக்கம்போல் இஸ்லாமிய ‘தீவிரவாதிகள்’ என்றே குற்றம்சாட்டப்பட்டனர். பிறகு ஹேமந்த்கர்கரே என்ற நேர்மையான அதிகாரி தலைமையில் செயல்பட்ட தீவிரவாத தடுப்புப் படை, குண்டு வைத்தவர்கள் இந்துத்துவ தீவிரவாதிகளே என்பதை கண்டறிந்தது.

பெண் சாமியார் பிரக்யாசிங் தாகூர், இராணுவ அதிகாரி பிரசாந்த், $காந்த் புரோகித் (பார்ப்பனர்), சுவாமி அமர்தாநந்த், தயானந்த் பாண்டே (பார்ப்பனர்), இராணுவ அதிகாரி ரமேஷ் உபாத்யாயா (பார்ப்பனர்) உள்ளிட்ட ‘இந்து-ஆர்.எஸ்.எஸ்.’ தீவிரவாதிகள் 16 பேர் கைது செய்யப்பட்டனர். இருவர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.

பல்வேறு நகரங்களில் இந்த கும்பலே குண்டுகளை வெடிக்கச் செய்து, பழியை முஸ்லிம் அப்பாவிகள் மீது சுமத்தியது என்ற உண்மையை ஹேமந்த் கர்கரே வெளிக் கொணர்ந்தார். உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்த தீவிரவாத தடுப்புப்படை அதிகாரி ஹேமந்த் கர்கரே - மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின்போது மர்மமாக கொல்லப்பட்டார்.

இந்தக் கொலைக்கு ஆர்.எஸ்.எஸ். சதியே காரணம் என்று அதிகாரி கர்கரே மனைவியும், மும்பை நகர காவல்துறை ஆணையரும் பகிரங்கமாக குற்றம்சாட்டினர். இது தொடர்பாக மும்பை நகர காவல் ஆணையர் நூல் ஒன்றையே எழுதி வெளியிட்டார்.

2009ஆம் ஆண்டு தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை பிறகு தேசிய புலனாய்வு நிறுவனத்துக்கு (என்.அய்.ஏ.) மாற்றப்பட்டது. மத்தியில் மோடி ஆட்சி வந்தது. தேசிய புலனாய்வு நிறுவனம், வழக்கு விசாரணையை செயலிழக்கச் செய்யும் முயற்சிகளை மேற்கொண்டது.

புலனாய்வு உயர் அதிகாரி ஒருவர், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வாதாடிய அரசு வழக்கறிஞர் ரோகினி சாலியன் என்பவரை நேரில்

சந்தித்து வழக்கில் தீவிரம் காட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அரசு வழக்கறிஞர், இதை ஊடகங்கள் வழியாக அம்பலப்படுத்தினார். இப்போது தேசிய புலனாய்வு நிறுவனம், 15 பேர் மீது வழக்கையே திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டதாக அறிவித்துவிட்டது. அசிமானந்தா என்ற சாமியார் மட்டும் மாட்டிக் கொண்டார். இந்த குண்டுவெடிப்பு நடத்தியதை அவர் ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்திருக்கிறார். எனவே அவர் மீதே அனைத்து வழக்குகளையும் போட்டு, ஏனைய குற்றவாளிகளை காப்பாற்றி விட்டது மோடி ஆட்சி.

• 7 பேர் கொல்லப்பட்டு 80 பேர் படுகாயமடைந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை ‘இந்துத்துவா’வாதிகள் என்பதற்காக வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்ட மோடி ஆட்சி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தேச விரோத முழக்கங்களை எழுப்பியதாகக் கூறி தேச விரோத சட்டத்தில் கைது செய்து மாணவர்களை பழிவாங்குகிறது. சில தனியார் தொலைக்காட்சிகள், மாணவர்கள் தேச விரோத முழக்கங்களை எழுப்பியதாக ஒளி பரப்பிய வீடியோபதிவுகள், மோசடியாக தயாரிக்கப்பட்டவை. ஒட்டியும் வெட்டியும், பின் குரல் கொடுத்தும் தயாரிக்கப்பட்ட காட்சிகள்.

இந்த மோசடியை மோடி ஆட்சி கண்டு கொள்ளவில்லை; ஊடகங்களும் அடக்கி வாசித்தன. டெல்லியில் நடக்கும் ‘ஆம் ஆத்மி’ ஆட்சி, இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது வீடியோ பதிவுகளை மோசடி செய்ததாக வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. மத்திய அரசோ, இந்த போலி வீடியோ பதிவு அடிப்படையில் மாணவர்களை பழிவாங்கத் துடிக்கிறதே தவிர, மோசடி குறித்து கண்டு கொள்ளவே இல்லை.

• மோசடி வீடியோ பதிவின் கீழ் மாணவர்களை பழி வாங்கும் ‘இந்துத்துவ’ ஆட்சி, மற்றொரு பக்கம் இதற்கு நேர்மாறாக செயல்பட்ட மற்றொரு நிகழ்வை குறிப்பிட வேண்டும். மோடி ஆட்சி பள்ளிகளுக்கு ‘யோகா’ பயிற்றுநர்களை தேர்வு செய்தது. இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த யோகா பயிற்றுநர்கள் ஏராளமாக விண்ணப்பித்திருந்தும் ஒருவர்கூட தேர்வு செய்யப்படவில்லை. இது குறித்து புஷ்பா சர்மா என்ற பத்திரிகையாளர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டார். 

“முஸ்லிம்களிடமிருந்து விண்ணப்பங்கள் வந்திருந்தும் ஒருவர்கூட தேர்வு செய்யப்படவில்லை என்றும் இது அரசு கொள்கையின்படிஎடுத்த முடிவு என்றும்” பதில் வந்தது. இது குறித்து ‘மில்லி கெசட்’ என்ற பத்திரிகையில் அந்த பத்திரிகையாளர் இதை கட்டுரையாக எழுதினார்.

உண்மை அம்பலமானவுடன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டதாகக் கூறப்படும் இந்தத் தகவல் மோசடியானது என்று கூறி, பத்திரிகையாளரை கைது செய்தனர். தகவல் மோசடியானது என்றால் எங்கேயாவது ஒரு முஸ்லிமை யோகா பயிற்சியாளராக நியமித்திருப்பதை எடுத்துக்காட்டியிருக்கலாமே! அப்படி அவர்களால் காட்ட முடியாது. காரணம் ஒரு முஸ்லிம்கூட யோகா பயிற்சியாளராக தேர்வு செய்யப்படவில்லை என்பதே உண்மை. போலி வீடியோ பதிவு மீது மாணவர்களை ஒடுக்கும் ஆட்சி உண்மை தகவலை மோசடி தகவலாக அறிவித்து பத்திரிகையாளரை கைது செய்துள்ளது.

• ஒரிசாவில் தனியார் சுரங்க நிறுவனங்கள் சுற்றுச் சூழலை சீரழித்து வருகின்றன. தொழிலாளர்களை மிக மோசமாக ஒடுக்கி வருகின்றன. இந்த அவலங்களை இலண்டனில் மனித உரிமைக்கான நாடாளுமன்றத்தில் எடுத்துச் சொல்வதற்கு ‘கிரீன் பீஸ்’ என்ற தொண்டு நிறுவனத்தைச் சார்ந்த பிரியா பிள்ளை இலண்டன் பயணமானார். விமானத்தில் ஏறிய அவரை ‘குடியேற்ற உரிமை’ (ஐஅஅபைசயவடிைே) அதிகாரிகள் கீழே இறக்கி விட்டனர். இலண்டனில் இந்தப் பிரச்சினையை பேசுவது ‘தேச விரோதம்’ என்று காரணம் கூறினார்கள்.

அதேபோல் பழங்குடி மக்கள் உரிமைக்காக செயல்பட்டு வருபவர் கிளாட்சன் டங்டங் என்ற மனித உரிமைப் போராளி, ஜார்கண்ட் மனித உரிமை இயக்கத் தலைவர். சுற்றுச் சூழல் கேடுகள் குறித்து இலண்டனில் ‘சூசக்ஸ்’ பல்கலையில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவரை விமான நிலையத்தில் தேச விரோத செயலில் ஈடுபடுவதாகக் கூறி ‘குடியேற்ற உரிமை’ அதிகாரிகள் இலண்டன் போக விடாமல் திருப்பி அனுப்பினர்.

ஆனால், 9000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த விஜய் மல்லையா, இதே விமான நிலைய அதிகாரிகளின் முழுமையான பாதுகாப்புடன் சட்ட விரோதமாக இலண்டனுக்குப் பயணமாக முடிகிறது. ஆட்சியாளர்கள் ஆதரவுடன் இலண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர், எதிர்ப்பு எழுந்தவுடன் ‘திருப்பி அழைக்கும்’ நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். மனித உரிமைக்காக குரல் கொடுக்க வெளிநாடு சென்றால் தேச விரோதம்! 9000 கோடி மக்கள் பணத்தை ஏமாற்றிய மல்லையாக்கள் தாராளமாக எந்த நாட்டுக்கும் பறக்கலாம்; இதுதான் மோடி ஆட்சியின் ‘இராமஇராஜ்ய’ நீதி!